அரசியல்
Published:Updated:

புதையும் ‘பூகோள சொர்க்கம்’ ஜோஷிமத்! - நீலகிரி, கொடைக்கானலுக்கு எச்சரிக்கையா?

ஜோஷிமத்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோஷிமத்

ஜோஷிமத்

இமயமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் இயற்கை சூழ்ந்த ஜோஷிமத் நகர் கொஞ்சம் கொஞ்சமாக புதைந்துகொண்டிருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் நடக்கும் இந்த நிகழ்வுக்கான காரணங்கள், ஒரு வகையில் நம் தமிழ்நாட்டின் கோடை வாசஸ்தலங்களுக்கும் ஓர் எச்சரிக்கை என்பதால், இந்த நிகழ்வை நாம் கூர்ந்து கவனிக்கவேண்டிய தேவை எழுந்திருக்கிறது.

புதையும் ‘பூகோள சொர்க்கம்’ ஜோஷிமத்! - நீலகிரி, கொடைக்கானலுக்கு எச்சரிக்கையா?
புதையும் ‘பூகோள சொர்க்கம்’ ஜோஷிமத்! - நீலகிரி, கொடைக்கானலுக்கு எச்சரிக்கையா?

பூலோக சொர்க்கம்!

உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 6,150 அடி உயரத்தில் அமைந்திருக்கும் நகரம் ஜோஷிமத். ‘பூகோள சொர்க்கம்’, ‘தேவபூமி’ என்றெல்லாம் புகழப்படும் இந்த நகரைச் சுற்றித்தான் புகழ்பெற்ற ஆன்மிகத்தலங்களான பத்ரிநாத், கேதர்நாத், ஆதிசங்கரரால் நிறுவப்பட்டதாக நம்பப்படும் மடம் ஆகியவை அமைந்திருக்கின்றன. நிலச்சரிவையும், நிலநடுக்கத்தையும் தொடர்ச்சியாகச் சந்தித்துவரும் ஜோஷிமத் நகரம், கொஞ்சம் கொஞ்சமாக பூமிக்குள் புதைந்துவருகிறது. அந்த நகரில் இருக்கும் பல சாலைகள் மட்டுமின்றி, வீடுகளும் பாளம் பாளமாக வெடித்திருக்கின்றன. இத்தகைய சூழலில், இந்த நகரை ‘நிலச்சரிவு அழிவு மண்டலம்’ என்று அறிவித்திருக்கும் அரசு, அங்கிருந்து மக்களை வெளியேற்றி, பாதுகாப்பான முகாம்களில் தங்கவைத்திருக்கிறது.

“சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மலைப்பிரதேசத்தில் சாலைகள் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக மலையைக் குடையும் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, தபோவன் - விஷ்ணுகாட் நீர்மின் நிலையப் பணிகள், சர்தாம் சாலைப் பணிகள் ஆகியவற்றுக்காக வரைமுறையின்றி மலையைக் குடைகிறார்கள். பத்ரிநாத், கேதர்நாத் ஆகிய தலங்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கில் ஆன்மிகச் சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். அவர்களின் வசதிக்காக, பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மலைப்பகுதியில் போக்குவரத்தை எளிமையாக்க வேண்டும், விரைந்து பயணிக்க வேண்டும் என்பதற்காக விதிகளையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, நெடுஞ்சாலைகள், குகைப்பாதைகள், ரயில்பாதைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஜோஷிமத் நகரின் தற்போதைய நிலைக்கு இதுதான் காரணம்” என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் குற்றச்சாட்டு.

எச்சரிக்கையை மதிக்காத அரசு!

‘வளர்ச்சிப் பணிகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஆபத்தான நிலையை ஜோஷிமத் நகரம் எதிர்கொள்ளும்’ என்று 1964-ம் ஆண்டிலேயே நிபுணர்குழு எச்சரித்திருந்தது. எம்.சி.மிஸ்ரா தலைமையிலான 18 பேர்கொண்ட நிபுணர்குழு அளித்த அறிக்கையில், ஜோஷிமத் நகரில் வளர்ச்சிப் பணிகளை எந்த அளவுக்கு மேற்கொள்ள வேண்டும், என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்தக் கூடாது, எந்தெந்த இடங்களில் குடியிருப்புகளை அனுமதிக்கக் கூடாது என்று பல பரிந்துரைகளை அளித்திருந்தது. அதுபோல, பல நிபுணர் குழுக்கள் பாதுகாப்புப் பரிந்துரைகளை வழங்கியிருக்கின்றன.

அவை அனைத்தையும் புறம்தள்ளிவிட்டு வரைமுறையின்றி, அங்கு தொடர்ச்சியாகக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப் பட்டதால், நிலச்சரிவுகளும் நிலநடுக்கச் சம்பவங்களும் தொடர்கதையாகி விட்டன. 2013-ம் ஆண்டு கேதார்நாத்தின் பனிச்சிகரம் ஒன்று உடைந்து விழுந்து வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில், ஏராளமான கிராமங்கள் அழிந்தன. சுமார் 5,000 பேர் வரை உயிரிழந்தனர். அதேபோல, 2021-ம் ஆண்டு ரிஷி கங்கையில் ஏற்பட்ட திடீர் வெள்ளமும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இப்படிப் பல பேரிடர்களைப் பார்த்த பிறகும், பிரச்னையின் தீவிரத்தை ஆட்சியாளர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

புதையும் ‘பூகோள சொர்க்கம்’ ஜோஷிமத்! - நீலகிரி, கொடைக்கானலுக்கு எச்சரிக்கையா?

தமிழ்நாட்டுக்கும் எச்சரிக்கை!

“சாலைகள், கட்டடங்கள் என வசதிகள் பெருகிய காரணத்தால், ஜோஷிமத் நகரின் மக்கள்தொகையும் கணிசமாக அதிகரித்தது. 1976-ம் ஆண்டு சில ஆயிரம் பேர் மட்டுமே வசித்துவந்த அந்த நகரில், தற்போது 25,000 பேர் வசிக்கிறார்கள். சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்துவிட்டது. 2017-ம் ஆண்டில் 2.4 லட்சம் பேராக இருந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை இப்போது 6 லட்சத்தைத் தாண்டிவிட்டது. இப்படி அதீதமாகத் தூக்கிப்பிடிக்கப்பட்ட நகர் இப்போது பூமிக்குள் புதைந்துகொண்டிருக்கிறது. இந்தக் காரணங்களெல்லாம் தமிழ்நாட்டிலுள்ள கோடை வாசஸ்தலங்களுக்கும் அப்படியே பொருந்தும் என்பதால், தமிழ்நாடு அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய கோத்தகிரியைச் சேர்ந்த தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயற்பாட்டாளர் கே.ஜே.ராஜூ, “ஊட்டி, குன்னூர், கோத்தகிரி என நீலகிரி மலை முழுவதும் விதிமுறைகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டுவருகின்றன. கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, வால்பாறை, மேகமலை, கொல்லிமலை உட்பட தமிழ்நாட்டின் அனைத்து மலைகளிலும் இதுதான் நிலைமை. இதன் காரணமாக, நீலகிரியில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இதேபோலத்தான், கேரளாவின் மூணாறில் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த துயரமும் நிகழ்ந்தது. இன்று ஜோஷிமத்துக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை, நாளை தமிழ்நாட்டுக்கும் ஏற்படக் கூடாது என்றால், இப்போதாவது நாம் விழித்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

புதையும் ‘பூகோள சொர்க்கம்’ ஜோஷிமத்! - நீலகிரி, கொடைக்கானலுக்கு எச்சரிக்கையா?

`கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்ற கதையாக ஜோஷிமத் நகரின் தற்போதைய நிலையை ஆராய நிபுணர் குழுவை அமைத்திருக்கிறது அந்த மாநில அரசு. ஜோஷிமத் நகரின் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தவறுகளைத் திருத்திக்கொள்ள ஆட்சியாளர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி!