
ஜோஷிமத்தில் அடிக்கடி ஏற்பட்டுவரும் நிலச்சரிவுகளுக்குக் காரணமே, கட்டடப் பணிகளை வரையறையின்றி மேற்கொள்வதும் வளர்ச்சிப் பெருந்திட்டங்களும்தான்.
சூழல் செயற்பாட்டாளர்களை அழிவுச் செய்திகளைக் கூறுபவர்களாகத்தான் (Doomsayer) இந்த உலகம் எப்போதும் பார்க்கிறது. ‘வளர்ச்சிக்கு எதிரானவர்கள்’ என்று முத்திரை குத்திக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. ஆனால், ‘செயற்பாட்டாளர்கள் அழிவுச் செய்திகளைச் சொல்பவர்கள் அல்ல, அப்படியான எச்சரிக்கைகள் மூலமாக உலகைக் காப்பாற்ற நினைப்பவர்கள். உலகின் மீதான அதீத அக்கறை கொண்டிருப்பவர்கள்’ என்பதற்கு நிகழ்கால உதாரணமாக உலகின் முன் நின்றுகொண்டிருக்கிறது ஜோஷிமத்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப் புதைந்துகொண்டுவரும் இந்த அழகிய மலைநகரத்தின் காட்சிகள் நம்மைப் பதைபதைக்க வைக்கின்றன. ஹாலிவுட் திரைப்படங்களின் பேரழிவுக் காட்சிகள் நம் கண்முன்னே நம் மண்ணில் நிகழ்கின்றன. அங்கிருக்கும் 4,500 கட்டடங்களில் 670-க்கும் மேற்பட்டவற்றில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. கோயில் மற்றும் ரோப் கார்களும் இவற்றுள் அடக்கம். பல வீதிகள் பிளந்து கிடக்கின்றன. இரண்டு ஹோட்டல்கள் இப்போது ஒன்றன் மீது ஒன்றாக சாய்ந்து கொண்டிருக்கின்றன. தெளிவாகத் தெரியாத காரணங்களால் வயல்களிலிருந்து தண்ணீர் வெளியேறிவருகிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுத் தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். பேரிடர் மீட்புக் குழுக்கள் வந்துள்ளன. ஹெலிகாப்டர்கள் கோரப்பட்டுள்ளன. “உயிர்களைக் காப்பாற்றுவதே எங்களின் முன்னுரிமைப் பணி” என்கிறார் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி. உரிய நேரத்தில் இயற்கையை முறையாகக் காக்கத் தவறினால் அதன் சீற்றத்திலிருந்து உயிர்களைக் காப்பதற்கு அரசு போராட வேண்டியிருக்கும் என்பதுதான் ஜோஷிமத் தரும் செய்தி.
ஜோஷிமத் துயரம் பற்றிச் செயற்பாட்டாளர்கள் மட்டுமல்ல, அரசு நியமித்த குழுகூட எச்சரித்திருந்தது. ஆனால் அந்த எச்சரிக்கைகளைக் காற்றில் பறக்க விட்டதற்கான விலையாக இன்று சுற்றுலாப் பயணிகளும் யாத்ரிகர்களும் விரும்பிச் செல்லும் நகரமான ஜோஷிமத்தை இழந்துகொண்டிருக்கிறோம்.
இமயமலைப் பகுதியில், குறிப்பாக ஜோஷிமத்தில் ஏன் நிலம் உள்ளிறங்கிக் கொண்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்காக அன்றைய கார்வால் மாவட்டத்தின் ஆட்சியர் எம்.சி.மிஸ்ரா தலைமையில் 18 நபர்கள் கொண்ட குழுவை 1976-ல் அரசு அமைத்திருக்கிறது. அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கை, இப்போது நடைபெற்றுக்கொண்டிருப்பதை பல வருடங்களுக்கு முன்பே கணித்திருந்தது என்பது ஆச்சரியம்தான். பல ஆயிரமாண்டுகள் முன்பாக ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக உருவான கழிவுகளின் மேல் உருவான நகரம்தான் ஜோஷிமத் என்பதை அந்தக் குழு திட்டவட்டமாகச் சொன்னது. அதாவது மணலும் கல்லும் புதைந்து உருவான ஒரு பகுதியின் மீது ஜோஷிமத் அமைந்திருப்பதால், அங்கு கட்டடப் பணிகள் எதுவும் மேற்கொள்ளக் கூடாது என்பதுதான் அந்த அறிக்கை சொன்ன முக்கியமான விஷயம்.

ஜோஷிமத்தில் அடிக்கடி ஏற்பட்டுவரும் நிலச்சரிவுகளுக்குக் காரணமே, கட்டடப் பணிகளை வரையறையின்றி மேற்கொள்வதும் வளர்ச்சிப் பெருந்திட்டங்களும்தான். ‘பாறைகளைத் தகர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் வெடிப்புகள், கடும் போக்குவரத்து நெருக்கடிகள் ஆகியவை ஏற்படுத்தும் சலசலப்புகள் இயற்கையின் இயல்புகளில் சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தும்’ என்றும் அந்த அறிக்கை சொல்லியிருந்தது. முறையான நீர் வடிகால் அமைப்புகள் இல்லாததும் நிலச்சரிவுகளுக்குக் காரணம்.
அந்த அறிக்கை பரிந்துரைத்த மிக முக்கியமான தடுப்பு நடவடிக்கை, பெரும் கட்டுமானங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்பதுதான். ‘மண்ணின் சுமை தாங்கும் திறன் மற்றும் இடத்தின் நிலைத்தன்மையை ஆராய்ந்த பின்னரே கட்டுமானத்தை அனுமதிக்க வேண்டும்’ என்றும் அந்த அறிக்கை வலியுறுத்தியிருந்தது. ‘நிலச்சரிவுப் பகுதியில் மரங்களை வெட்ட வேண்டாம். விறகுக்காக மரங்களை வெட்டுவது ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். உள்ளூர் மக்களுக்கு மாற்று எரிபொருள் ஆதாரங்களை வழங்குவது அவசியம். மண், நீர்வளங்களைப் பாதுகாக்க இப்பகுதியில், குறிப்பாக மார்வாரி, ஜோஷிமத் இடையே மரக்கன்று நடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றும்கூட அறிவுறுத்தியுள்ளது.
‘மலைச்சரிவுகளில் விவசாயம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இப்பகுதியில் நீர்க்கசிவு அதிகமாக உள்ளது. எனவே, எதிர்காலத்தில் மேலும் நிலச்சரிவு ஏற்படாமல் தடுக்க, வடிகால் அமைத்து மழைநீர் கசிவதைத் தடுக்க வேண்டும். சாலைகளில் தண்ணீர் தேங்காதபடி சீரமைக்க வேண்டும். எந்தப் பள்ளத்திலும் தண்ணீர் தேங்க அனுமதிக்கக் கூடாது. பாதுகாப்பான பகுதிகளுக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல வடிகால்கள் அமைக்க வேண்டும். ஆற்றங்கரை அரிப்பைத் தடுக்க, கரையோரங்களில் பாதிப்பு ஏற்படும் இடங்களில் சிமென்ட் கட்டைகள் வைக்க வேண்டும்’ என்றும் எச்சரித்தது.
அரசு நியமித்த குழுவின் இவ்வளவு விரிவான எச்சரிக்கையை யாரும் பொருட்படுத்தாத நிலையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது? பல ஆண்டுகளாக ஜோஷிமத், பல்லாயிரக்கணக்கான யாத்ரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பரபரப்பான நுழைவாயிலாக மாறியது. சுமார் 45 கி.மீ தொலைவில் உள்ள பத்ரிநாத் புனிதத்தலத்திற்கு யாத்ரிகர்கள் இந்த நகரின் வழியாகத்தான் சென்றுகொண்டிருந்தார்கள். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மலையேற்றம், பனிச்சறுக்கு செய்கிறார்கள். ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் ஜோஷிமத்தில் பெருகிவிட்டன.

தவிர, ஜோஷிமத் நகரைச் சுற்றிப் பல நீர்மின் திட்டங்கள், சாலைகள், சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தபோவன் விஷ்ணுகாட் நீர்மின் திட்டமும், சார்தாம் திட்டத்தின் வாயிலாக நெடுஞ்சாலை நடவடிக்கைகளும் முக்கியமான பிரச்னைகளாகவே இருந்து வருகின்றன. அதன் சுரங்கப்பாதை ‘ஜோஷிமத்திற்குக் கீழே புவியியல் ரீதியாக பலவீனமான பகுதி முழுவதும் செல்கிறது’ என்கிறார்கள் புவியியலாளர்கள்.
2009 டிசம்பரில், ஜோஷிமத்தில் இருந்த ஒரு நீர்நிலையை நீர்மின் திட்டம் ஒன்றுக்காகத் துளையிட்டதன் காரணமாக, தினசரி (சரி செய்யப்படும் வரை) சுமார் 7 கோடி லிட்டர் நிலத்தடி நீர் வெளியேறியது. இது 30 லட்சம் மக்களுக்கான ஆதாரமாக இருந்திருக்கலாம் என்று புவியியலாளர்கள் குறிப்பிட்டனர். உத்தரகாண்டில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் 200 பேர் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் போன பின்னர், 2021-ல் அங்கிருந்த நீர்மின் திட்டத்தை இணைத்த இரண்டு சுரங்கங்களில் ஒன்று மூடப்பட்டது.

நிலம் பல்வேறு காரணங்களுக்காகப் புதையத் தொடங்கலாம். ஆனால் நிலத்தடி நீரை அதிகமாகப் பிரித்தெடுத்தல் மற்றும் நீர்நிலைகளை வடிகட்டுதல் போன்ற மனித நடவடிக்கைகளாலும் நிலம் புதைகிறது. இந்தோனேஷிய தலைநகரமான ஜகார்த்தா உலகின் வேறு எந்த நகரையும்விட வேகமாக மூழ்குவதற்கு மனித நடவடிக்கைகள் காரணமாக இருக்கலாம் என்று புவியியலாளர்கள் நம்புகின்றனர். உத்தரகாண்டில் மட்டும் நைனிடால் உள்ளிட்ட 500 நகரங்கள் ஜோஷிமத்தின் நிலையைச் சந்திக்கும் என்று ஆய்வுகள் தற்போது சொல்கின்றன. ஜோஷிமத் முதல் ரிஷிகேஷ் வரையிலான 247 கி.மீ நீள சாலையில் கடந்த மழைக்காலத்தில் 309 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாக நிபுணர் குழு ஒன்று சொல்கிறது. என்றாலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் வட மாநிலங்களின் இமயமலைப் பகுதிகளில் சுமார் 11,000 கி.மீ நீளத்துக்குச் சாலைகள் போடப்பட்டிருக்கின்றன. எங்குமே நிலத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்யவில்லை.
ஜோஷிமத்தின் துயருக்கு மனிதச் செயல்பாடுகளே முக்கிய காரணம் என்று இப்போது கிட்டத்தட்ட அனைத்துத் தரப்பும் சொல்கின்றன. இதற்கு அரசின் எதிர்வினை என்ன?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ, செயற்கைக்கோள் படங்களின் மூலம் அதிர்ச்சியான ஒரு விஷயத்தைக் கண்டறிந்து சொன்னது. கடந்த டிசம்பர் 27 முதல் வெறும் 12 நாள்களில் சுமார் 5 செ.மீ அளவுக்கு வேகமாக ஜோஷிமத் புதைவதாக அது எச்சரித்தது. ஆனால், இது தொடர்பான அறிக்கையை வலைதளத்திலிருந்து நீக்க உத்தரவிட்டது அரசு. மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துவதால் இது நீக்கப்பட்டதாக அரசு சொல்கிறது. நிபுணர்கள் மீடியாக்களிடம் பேசத் தடை விதித்துள்ளது அரசு.
“ஜோஷிமத்தைப் போலவே, இமாசலப் பிரதேசத்தின் சில பகுதிகளும் படிப்படியாகப் புதைந்துவருகின்றன. போதுமான தொழில்நுட்பத்துடன் இந்தப் பகுதிகளை மீட்க எங்களால் திட்டமிட முடியவில்லை” என்கிறார் இமாசலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு.

ஜோஷிமத் என்பது மூழ்கிக் கிடக்கும் பனிப்பாறையில் நமக்குக் காணக் கிடைக்கும் ஒரு சிறு முனைதான். இந்தியாவில் இன்னும் நிறைய ஜோஷிமத்கள் இருக்கின்றன. ஜோஷிமத்தில் இப்போது அரசு காட்டி வரும் அக்கறையைப் பிற பகுதிகளுக்கும் காட்ட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.
ஆனால், அதைவிட முக்கியமான ஒன்று இருக்கிறது. ஜோஷிமத்தில் தொடக்கத்தில் அரசு காட்டிய அலட்சியத்தை இனியும் எல்லா இடங்களிலும் அரசு தொடர்ந்தால், நாம் கொடுக்க வேண்டிய விலை இன்னும் பல ஜோஷிமத்களாக இருக்கலாம். இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்களாக இருக்கலாம். ஜோஷிமத் என்பது வெறும் நிலம் மட்டுமல்ல, நம் அலட்சியத்தின் அடையாளம்.