அலசல்
சமூகம்
Published:Updated:

சீர்திருத்தக்கூடமா... சித்ரவதைக்கூடமா? - என்ன நடக்கிறது கூர்நோக்கு இல்லங்களில்?

கூர்நோக்கு இல்லம்
பிரீமியம் ஸ்டோரி
News
கூர்நோக்கு இல்லம்

தமிழ்நாட்டிலுள்ள கூர்நோக்கு இல்லங்களில் கண்காணிப்பு கேமரா வசதி இல்லை. இதனால், உள்ளே என்ன நடக்கிறது என்பதை யாராலும் தெரிந்துகொள்ள முடிவதில்லை.

“18 வயதுக்குட்பட்ட சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், சட்டப்படி அவர்களை மாவட்ட சிறார் கூர்நோக்கு இல்லங்களில் தங்கவைத்து, வருங்காலங்களில் அவர்கள் தீய செயல்களில் ஈடுபட்டுவிடாமல் நல்வழிப்படுத்த பயிற்சி தரப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் செயல்படும் கூர்நோக்கு இல்லங்கள் இதற்கு நேரெதிராகச் செயல்பட்டுவருகின்றன. சமீபத்தில் செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் 17 வயது சிறுவன் கோகுல் அங்கிருக்கும் காவலர்களாலும் அலுவலர்களாலும் அடித்தே கொல்லப்பட்டிருப்பதே இதற்கு சாட்சி” என்று கொதிக்கிறார் மக்கள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளர் ஆசீர்.

சீர்திருத்தக்கூடமா... சித்ரவதைக்கூடமா? - என்ன நடக்கிறது கூர்நோக்கு இல்லங்களில்?

இது குறித்து ஆசீரிடம் பேசினோம். “தாம்பரம், கன்னடபாளையம் பகுதியைச் சேர்ந்த இறந்துபோன சிறுவன் கோகுல், ரயில்வே தண்டவாளங்களின் அருகே கிடந்த பேட்டரிகளைத் திருடியதாக, செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டான். இந்த நிலையில், அங்கு சட்டவிரோதமாக நடைபெற்ற எதையோ அவன் தெரிந்துகொண்டதாலேயே, கொலை செய்யும் எண்ணத்தில் அங்கிருந்த காவலர்களும் அலுவலர்களும் சிறுவன் கோகுல்யைத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து சிறுவனின் தாய் பிரியா காவல்துறையில் புகாரளித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனால் நாங்கள் எம்.எல்.ஏ-க்கள் ஜவாஹிருல்லா, ஆளூர் ஷாநவாஸ் ஆகியோரிடம் விவகாரத்தைக் கொண்டு சென்றோம். இருவரும் கடந்த 12-ம் தேதி முதல்வரைச் சந்தித்துப் பேசிய பிறகே, கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். தற்போது தேசிய குழந்தைகள் நல ஆணையமும் இந்தப் பிரச்னையில் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுவருகிறது.

சீர்திருத்தக்கூடமா... சித்ரவதைக்கூடமா? - என்ன நடக்கிறது கூர்நோக்கு இல்லங்களில்?

இதே செங்கல்பட்டு கூர்நோக்கு மையத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சூப்பிரண்டன்ட் ஒருவர் சிறார்களைத் தாக்கிய விவகாரத்தில் வேலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். திருட்டு, அடிதடி உள்ளிட்ட குற்றங்களுக்காகச் சீர்திருத்த இல்லங்களில் சேர்க்கப்படும் சிறார்களை அங்கிருப்பவர்கள் அடித்து உதைப்பதும், பலர் தப்பிச் செல்வதும், உள்ளே இருப்பவர்கள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்வதும், வெளியில் வந்த பின்பும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. மேலும், சென்னை, கடலூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், வேலூர், மதுரை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இயங்கிவரும் கூர்நோக்கு மையங் களிலும் சிறார்கள் பல்வேறுவிதங்களில் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். இதனால், அறியாத வயதில் செய்த தவறுகளிலிருந்து திருந்தவேண்டியவர்கள் குற்றவாளி போல நடத்தப்பட்டு, குற்றவாளியாகவே மாறிவிடுகிறார்கள். எனவே, கூர்நோக்கு இல்லங்களில் முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அங்கு நடைபெறும் சட்டவிரோதச் செயல்கள் களையப்படவேண்டும்” என்றார் விரிவாக.

பிரியா
பிரியா

இது குறித்து கல்வியாளர் ஆயிஷா நடராஜனிடம் பேசினோம். “தமிழ்நாட்டிலுள்ள கூர்நோக்கு இல்லங்களில் கண்காணிப்பு கேமரா வசதி இல்லை. இதனால், உள்ளே என்ன நடக்கிறது என்பதை யாராலும் தெரிந்துகொள்ள முடிவதில்லை. சிறார்களுக்கு உரிமை மீறல் பிரச்னைகள் ஏதும் நடந்தால், அதைத் தடுப்பதற்கென எந்தக் குழுவும் இல்லை. சித்ரவதைகளுக்கு உட்பட்டால் 1098 என்ற தொலைபேசி எண்ணுக்குப் புகார் தெரிவிக்க முடியும். ஆனால், இது குறித்த விழிப்புணர்வு இல்லை. இந்தச் சிறார்களைக் குற்றவாளிகளாக நடத்துவதே முதல் குற்றம். அவர்கள் சீர்திருத்தப்படவேண்டியவர்களே தவிர, குற்றவாளிகள் அல்ல. கூர்நோக்கு இல்ல சட்டத்தின்படி, குழந்தைகளின் சீர்திருத்த காலகட்டம் முடிந்த பின்னர் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்ற விவரங்களை அரசு வெளியிட வேண்டும். அரசு இதைக் கண்காணிக்க தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும். மேலும், மாவட்டம்தோறும் கண்காணிப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

ஆசீர், ஆயிஷா நடராஜன், கீதா ஜீவன்
ஆசீர், ஆயிஷா நடராஜன், கீதா ஜீவன்

அரசின் கூர்நோக்கு இல்லங்களில் சிறார்களுக்கு நடக்கும் உரிமை மீறல்கள் குறித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் விளக்கம் கேட்டோம். அவர், “செங்கல்பட்டு கூர்நோக்கு இல்ல விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு பேர்மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம். கூர்நோக்கு இல்லங்களை அரசு கவனமாகக் கையாண்டுவருகிறது. அது மட்டுமல்லாமல் சிறார்களின் ஆற்றுப்படுத்துநர்களுக்கான கவுன்சலிங்கும் முறையாக நடக்கிறது. கைத்தொழில், இசை, ஓவியம், விளையாட்டு, யோகா உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கான கல்வி உதவிகளை அரசு வழங்குகிறது. கூர்நோக்கு இல்லங்களில் சேர்க்கப்படும் சிறார்களை எப்படிக் கையாள வேண்டும் என அங்கிருக்கும் காவலர்களுக்கும் அலுவலர்களுக்கும் தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம்” என்றார்.

சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டையில் நடந்த அரசு விழாவுக்குச் செல்லும்போது வழியில் காரை நிறுத்தி, கூட்ரோடு பகுதியிலுள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தைப் பார்வையிட்டார். அப்போது அங்கு பணியில் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். அதன் பின்னர், சிறார் கூர்நோக்கு இல்லங்களை மறுசீரமைக்க அரசுத் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இதுவரை கூர்நோக்கு இல்லங்கள் மறுசீரமைக்கப்படவில்லை. சிறார்களின் உரிமை மீறல் பிரச்னையிலும் எந்த நன்மையும் நிகழவில்லை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

சீர்திருத்தக்கூடங்கள் சித்ரவதைக்கூடங்களாக மாறிவிடக் கூடாது!