அலசல்
அரசியல்
Published:Updated:

உடையும் கொடநாடு மர்மம்!

கொடநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
கொடநாடு

5 டாக்குமென்ட்ஸ்... 2 கன்டெய்னர்ஸ்... அறை எண் 302

தோண்டத் தோண்ட மர்மங்கள் வரிசைகட்டும் விபரீத விவகாரமாக இருக்கிறது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு. இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்திருக்கும் நிலையில், ஆகஸ்ட் 25-ம் தேதியிட்ட ஜூ.வி இதழில், `கொடநாடு க்ளைமாக்ஸ்: மர்ம சான்ட்ரோ, துபாய் போன் கால், சேலத்து சந்திப்பு’ என்கிற தலைப்பில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நாம் சேகரித்து அளித்திருந்த செய்தியைப் படித்துவிட்டு, சில அ.தி.மு.க சீனியர்கள் நம்மைத் தொடர்புகொண்டனர். “கொடநாட்டில் கொள்ளையடித்த டாக்குமென்ட்ஸ் சேலம் சென்று சேர்ந்த பிறகு, மிகப்பெரிய அரசியல் சதுரங்கமே நடந்திருக்கிறது. தீவிரமாக விசாரியுங்கள், பெரிய நியூஸ் கிடைக்கும்” என்றனர். இதைவைத்துக் களமிறங்கியது ஜூ.வி டீம்.

கொடநாடு டாக்குமென்ட்ஸை வைத்து ஒரு ‘தலைமையை’ மொத்தமாக அரசியலிலிருந்து ஓரங்கட்டிவிட்டு, மற்றொரு தலைமையை வாய் திறக்கவிடாமல் செய்துவிட்ட ‘அந்த’ முக்கியப் புள்ளியின் காரியங்கள் எல்லாமே ‘தெறி’ ரகம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, தன்னுடைய சிறைத் தண்டனையை அனுபவிப்பதற்காக பிப்ரவரி 14, 2017-ல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்றார். சசிகலாவால் எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்கப்பட்டது ஆட்சி. சில மாதங்களில், ஏப்ரல் 24-ம் தேதி அதிகாலை கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. கொள்ளையடித்தவற்றில் ஆவணங்களை மட்டும் எடுத்துக்கொண்டு புறப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், கோவையில் சயானை இறக்கிவிட்டுவிட்டு தான் மட்டும் சேலத்துக்குச் சென்றிருக்கிறார். அங்கு பஞ்சாமிர்தத் தலைவருக்கு நெருக்கமான தரப்பிடம் ஆவணங்களை ஒப்படைத்த சில தினங்களிலேயே, மர்மமான கார் விபத்தில் கனகராஜ் இறந்தார். இது குறித்த சந்தேகங்கள், விசாரணைகள் தொடரும் நிலையில், கனகராஜ் ஒப்படைத்த டாக்குமென்ட்ஸ் என்னவாகின... அதைவைத்து, அந்த பஞ்சாமிர்தத் தலைவர் என்ன செய்தார் என்பதை விசாரித்தோம்...

சசிகலா
சசிகலா

‘யுத்தத் தலைவர்’ மௌனமான பின்னணி!

பெயர் குறிப்பிட வேண்டாமென்கிற கோரிக்கையுடன் விவரமறிந்த சில அ.தி.மு.க தலைவர்கள், காவல்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் பேசினர். “கனகராஜ் ஒப்படைத்த ஆவணங்களில் பலரது குடுமிப்பிடிகள் வசமாகச் சிக்கியிருந்தன. அவற்றில் ‘யுத்தத் தலைவர்’ தொடர்புடைய சில ஆவணங்கள் முக்கியமானவை. மார்ச் 2016 காலகட்டத்தில், அந்தத் தலைவர் தலைமைக்குத் தெரியாமல் சொத்துகளை வாங்கிக் குவித்ததாகத் தோட்டத்துக்குத் தகவல் போனது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய தோட்டம், பலமாகக் கண்டித்ததோடு, துபாயில் அவர் விலைக்கு வாங்கியிருந்த 500 கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்டார் ஹோட்டலை எழுதி வாங்கியது. அதேபோல, அப்போதைய இரண்டு சீனியர் அமைச்சர்களிடமிருந்த இதே போன்ற சொத்துகளும் எழுதி வாங்கப்பட்டன. இவர்களிடமிருந்து மன்னிப்புக் கடிதமும் தோட்டத்தால் எழுதி வாங்கப்பட்டது. இந்தக் கடிதங்கள், ஆவணங்கள் கனகராஜ் மூலமாகத் தன் கைக்கு வந்தவுடன், தன் விளையாட்டை ஆரம்பித்தார் அந்தப் பஞ்சாமிர்தத் தலைவர்.

‘அம்மாவுக்கும் கட்சிக்கும் துரோகம் இழைத்துவிட்டதாக நீங்களே எழுதிக் கொடுத்திருக்கீங்க. எங்கெங்கே சொத்துகள் உங்க பெயர்ல இருந்தது என்கிற விவரமெல்லாம் இந்த மன்னிப்புக் கடிதத்துல இருக்கு. இந்த விஷயம் வெளியில போனா... உங்க அரசியல் வாழ்வே சூன்யமாகிடும்’ என்று யுத்தத் தலைவருக்கு மறைமுக மிரட்டல் விடுத்தார் பஞ்சாமிர்தத் தலைவர். அரண்டுபோன யுத்தத் தலைவர், பஞ்சாமிர்தத் தலைவரிடம் சரண்டரானார். அ.தி.மு.க-வில் ஒவ்வொருமுறை தான் வீழ்த்தப்படும்போதும், பஞ்சாமிர்தத் தரப்புக்கு எதிராக எதுவும் பேசாமல், இன்றுவரை யுத்தத் தலைவர் மௌனம் காப்பதற்கு இந்தக் கடிதமும் ஒரு முக்கியமான காரணம்.

அறை எண் 302

யுத்தத் தரப்பை அடக்கியாயிற்று. அடுத்ததாக சசிகலாவை ஓரங்கட்ட முடிவெடுத்தார் அந்தப் பஞ்சாமிர்தத் தலைவர். கனகராஜ் ஒப்படைத்த ஆவணங்களில், சசிகலா தொடர்புடைய ஐந்து ஆவணங்கள் மட்டும் தனியாகப் பிரிக்கப்பட்டன. அக்டோபர் 2017-ல் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவர் ம.நடராசன் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்ப்பதற்காக ஐந்து நாள்கள் பரோல் சசிகலாவுக்கு கிடைத்தது. சென்னை தி.நகர் ஹபிபுல்லா சாலையிலுள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் வீட்டில்தான் சசிகலா தங்கினார். அப்போது, சில பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. பரோல் முடிந்து அக்டோபர் 12-ம் தேதி சசிகலா சிறை சென்ற பிறகு, வருமான வரித்துறை இந்தப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரித்தது. யாரும் எதிர்பாராதவிதமாக, நவம்பர் 9, 2017-ல் சசிகலா தொடர்புடைய 187 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது வருமான வரித்துறை. கிருஷ்ணபிரியாவின் வீட்டையும் சோதனையிட்டனர். அப்போது, அவரின் மொபைலிலிருந்து ஒரு போட்டோவை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.

பெயர், முகவரி எதுவும் இல்லாமல் வெறும் சில எண்களை மட்டும் குறிப்பிட்டு, அவை ‘செட்டில் ஆகிவிட்டது’, ‘ஆகவில்லை’ என்பது மட்டும் ஒரு பேப்பரில் குறிக்கப்பட்டிருந்தன. அதை கிருஷ்ணபிரியா போட்டோ எடுத்து வைத்திருந்திருக்கிறார். இதைவைத்து விசாரித்ததில், வருமான வரித்துறைக்கு எந்தத் துப்பும் துலங்கவில்லை. இந்தச் சூழலில்தான், நவம்பர் 17-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ஒரு மர்ம போன் கால் வந்தது. ‘ரூம் நம்பர் 302, சி.ஐ.டி நகரிலிருக்கும் ஷில்லி நிவாஸ் அப்பார்ட்மென்ட். இந்த முகவரிக்குச் செல்லுங்கள். சசிகலா தொடர்புடைய 2,000 கோடி ரூபாய் டாக்குமென்ட்ஸ் கிடைக்கும்’ என்று சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்தது மர்மக் குரல். அதன்படி நவம்பர் 18-ம் தேதி, மூன்று அதிகாரிகள் அந்த 302-ம் எண் அறைக்குச் சென்றனர்.

கிருஷ்ணபிரியா
கிருஷ்ணபிரியா

சிக்கிய ஐந்து டாக்குமென்ட்ஸ்!

அந்த அறை, கேரளாவைச் சேர்ந்த செபாஸ்டீன் என்பவரின் பெயரில் புக் செய்யப்பட்டிருந்தது. அறையிலிருந்து 1,911 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஐந்து டாக்குமென்ட்ஸை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். சொத்துகளை வாங்கியதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நான்கும், கடன் வழங்கியதற்கான பத்திரம் ஒன்றும் அதில் அடக்கம். இந்த அறை, போலியாகத் தன் பெயரில் புக் செய்யப்பட்டதாக செபாஸ்டீன் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கூறிவிட்டார். கைப்பற்றப்பட்ட அந்த ஆவணங்களில், இந்தச் சொத்துகள் யார் பெயரில் வாங்கப்பட்டன என்கிற விவரம் ஏதும் இல்லை. இதனால், சொத்துகளை விற்றவர்களை வருமான வரித்துறை விசாரித்தது. புதுச்சேரி, சென்னை பெரம்பூரைச் சேர்ந்த தொழிலதிபர்களை விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

நவம்பர் 8, 2016-ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்தபோது, பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தவர்கள் டிசம்பர் 31-ம் தேதிக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்துகொள்ள கால அவகாசம் வழங்கியது. இதைப் பயன்படுத்திக்கொண்ட சசிகலா, தன்னிடமிருந்த 1,674.5 கோடி ரூபாய் பழைய ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி சென்னை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், மதுரை, புதுச்சேரி ஆகிய இடங்களில் சொத்துகளை வாங்கியிருக்கிறார். இதற்காக, வாங்குபவரின் பெயர் இல்லாமலேயே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை சசிகலாவின் வழக்கறிஞர் நாமக்கல் செந்தில்தான் செய்ததாக, இந்தச் சொத்துகளை விற்றவர்கள் வருமான வரித்துறையிடம் வாக்குமூலம் அளித்தனர். இதைத் தொடர்ந்து 1,674.5 கோடி ரூபாய் பெறுமானமுள்ள இந்தச் சொத்துகள் அனைத்தும் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டன. இதை எதிர்த்து, அந்தந்தச் சொத்துகளின் உரிமையாளர்கள் நீதிமன்றத்துக்குச் சென்று விளக்கமளித்திருப்பது தனிக்கதை.

இந்த விவகாரத்தில் வசமாக சசிகலா சிக்கிக்கொண்டார். அவர் தொடர்புடைய ஐந்து ஆவணங்களை அறை எண் 302-ல் வைத்து, வருமான வரித்துறைக்குத் தகவல் அளித்ததே அந்த பஞ்சாமிர்தத் தலைவர்தான். இதற்காக செபாஸ்டீன் பெயரில் போலியாக ரூம் எடுத்துத் தந்தது ஒரு தங்கமான பிரமுகர். பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதால், இந்த வழக்கை எதிர்கொண்டு வருவது சசிகலாவுக்கு லேசுப்பட்ட காரியமல்ல. கொடநாட்டில் கொள்ளையடிக்கப் பட்ட ஆவணங்களைவைத்து யுத்தத் தலைவரை அமைதியாக்கி, சசிகலாவையும் அரசியலிலிருந்து ஓரங்கட்டிவிட்டார் அந்தக் கில்லாடி பஞ்சாமிர்தத் தலைவர்” என்கிறார்கள் அவர்கள்.

உடையும் கொடநாடு மர்மம்!

இரண்டு கன்டெய்னர்களில் ஸ்வீட் பாக்ஸ்கள்!

2017-ம் ஆண்டு இந்த விவகாரமெல்லாம் நடந்த சமயத்தில், இன்னொரு சம்பவமும் சத்தமில்லாமல் நடந்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சமயத்தில் மேற்கு மண்டலப் பொறுப்பிலிருந்த முக்கிய காவல்துறை அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசினார். “சசிகலா தொடர்புடைய இடங்களில் மெகா ரெய்டு நடப்பதற்கு முன்னதாக, கொடநாட்டிலிருந்து இரண்டு கன்டெய்னர்கள் நிறைய அட்டைப் பெட்டிகளில் ஸ்வீட் பாக்ஸ்கள் எடுத்துவரப்பட்டன. திருப்பூர் வழியாக அவை பெங்களூருக்குக் கொண்டு செல்லப்பட்டன. இந்த ஸ்வீட் பாக்ஸ்களில் ஒரு பகுதி மத்தியிலிருந்த சிலருக்கும் பங்கு பிரிக்கப்பட்டது. நாக்பூருக்கும் சில பாக்ஸ்கள் அனுப்பிவைக்கப்பட்டன. மீதி ஸ்வீட் பாக்ஸ்கள் அனைத்தையும் அந்தப் பஞ்சாமிர்தத் தலைவரும், சில முன்னாள் மாண்புமிகுக்களும் பங்குபோட்டுக் கொண்டார்கள். இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டால் பல பூதங்கள் கிளம்பும்” என்றார்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அடுத்தடுத்து மர்மங்கள் உடைவதால், பஞ்சமிர்தத் தலைவருக்கு நெருக்கடி முற்றுகிறது. இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அந்தத் தலைவரை வசமாகச் சிக்கவைக்க தி.மு.க தரப்பு வேகமெடுக்கிறது. நிலைகுலைந்து போயிருக்கும் அந்தத் தலைவர், சமீபத்தில் டெல்லியைத் தொடர்புகொண்டாராம். ‘வழக்கை எப்படியாவது சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றிவிடுங்கள். உங்கள் கண்காணிப்பில் இருந்தால் எனக்குக் குடைச்சல் இருக்காது’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு டெல்லியில், “கொலை வழக்கையெல்லாம் எங்களிடம் கொண்டு வராதீர்கள். தவிர, மாநில அரசு அல்லது நீதிமன்றம் கேட்டுக்கொண்டால் மட்டுமே எங்களால் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட முடியும். இந்த விவகாரத்தில் எங்களால் எதுவும் செய்ய முடியாது” என்று கைவிரித்துவிட்டார்களாம். கொடநாடு வழக்கு தொடர்பாக மேலும் சில பூதங்கள் கிளம்பும் என்கிற தகவலால் அரண்டுகிடக்கிறார் அந்த பஞ்சாமிர்தத் தலைவர். பிடி மேலும் இறுகுகிறது!

*****

சபேசன் ஐ.டி வழக்கு: ஆதாரங்களைக் கேட்கும் லஞ்ச ஒழிப்புத்துறை!

உடையும் கொடநாடு மர்மம்!

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் சபேசன், வினோத் ஆகியோரின் இடங்களில் வருமான வரித்துறை சோதனையிட்டது. சபேசனின் இடத்திலிருந்து ஒரு டைரியும் கைப்பற்றப்பட்டது. அருண்ராஜ் என்கிற வருமான வரித்துறை அதிகாரி இந்த விவகாரத்தை விசாரித்துவந்த நிலையில், வேலுமணித் தரப்புக்கு நெருக்கடியாகியிருக்கிறது. இதனால், அ.தி.மு.க தரப்பின் அழுத்தம் காரணமாக அந்த அதிகாரி மாற்றப்பட்டதாகச் சொல்கிறார்கள். அருண்ராஜ் இடத்தில் ரூபினி என்பவர் அமர்த்தப்பட்டிருக்கிறார். கர்நாடகாவில் சசிகலாவுக்கு எதிராகச் சிறையில் வழக்கு பதிந்த போலீஸ் டி.ஐ.ஜி ரூபாவின் சகோதரிதான் இந்த ரூபினி. இவர்தான் இப்போது சபேசன் வழக்கை விசாரித்துவருகிறார். தற்போது, வேலுமணிக்கு எதிராக ஆதாரங்களைத் திரட்டிவரும் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், சபேசன் தொடர்புடைய ஆதாரங்களை வருமான வரித்துறையிடம் கேட்டிருக்கிறார்களாம். கொடநாடு வழக்கு வேகமெடுக்கும் நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை மற்றொரு பக்கம் தோண்டுவதால், வேலுமணி தரப்பு அப்செட் என்கிறது விவரமறிந்த வட்டாரம்!

உடையும் கொடநாடு மர்மம்!

எடப்பாடிக்குச் சிக்கல்!

கொடநாடு வழக்கில், எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரை விசாரிக்கக் கோரி குற்றம்சாட்டப்பட்டுள்ள தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள். இவர்களின் கோரிக்கையை நீலகிரி நீதிமன்றம் ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, இந்தப் புதிய மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் ஆகியிருக்கிறது. விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதியளித்தால், எடப்பாடிக்குச் சிக்கல்தான்!