
தமிழகத்தில் சுமார் 37,500 அரசுப்பள்ளிகள் செயல்படுகின்றன. பல பள்ளிகளில் போதிய கட்டடங்கள் இல்லை. கழிவறை, குடிநீர் வசதிகளும் போதிய அளவுக்கு இல்லை
1958-ம் ஆண்டு. அரசுப்பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்துகொண்டிருந்தது. பொதுக்கல்வி இயக்குநராக இருந்த நெ.து.சுந்தரவடிவேலு, பல பள்ளிகள் வகுப்பறைக் கட்டடம் இல்லாமல் மரத்தடியில் செயல்படுவதையும் அத்தியாவசியக் கற்பித்தல் பொருள்களே இல்லாமல் ஆசிரியர்கள் தவிப்பதையும் சுட்டிக்காட்டிப் பேசினார். பொறுமையாக அதைக் கேட்டுக்கொண்டிருந்த காமராஜர், ‘‘ஏன் தவிக்கணும்னேன்... மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட பள்ளிக்கூடம்தானே... மக்கள்கிட்ட கையேந்துவோம்னேன்... முதல்ல என்னென்ன தேவைன்னு பட்டியல் ரெடி பண்ணுங்க... மக்கள்கிட்ட கேப்போம்’’ என்றார். உடனடியாக, பள்ளி சீரமைப்பு இயக்கம் என்ற ஓர் அமைப்பு தொடங்கப்பட்டது. மக்களைத் திரட்டி 160 இடங்களில் கூட்டங்கள் நடத்தி, பள்ளி மேம்பாட்டுக்குப் பங்களிப்பு செய்யுமாறு கோரினார்கள் கல்வித்துறை அதிகாரிகள். நிலம் தொடங்கி ஆசிரியர்கள் அமரும் நாற்காலிகள் வரை மகள் வீட்டுக்குச் சீதனப்பொருள்கள் தருவதுபோல அள்ளி வழங்கினார்கள் மக்கள். சுமார் 25,000 அரசுப் பள்ளிகள் பயன்பெற்றன.
காமராஜர் பள்ளி சீரமைப்பு இயக்கத்தைத் தொடங்கியபோது, தமிழகத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 60 கோடி ரூபாய். 2022-ல் தமிழகத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய். சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளைக் கடந்த சூழலில் தமிழக அரசு, பள்ளிக்கூடங்களை மேம்படுத்துவதற்கு நிதி தருமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது. அதற்கென ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என எவரும் அரசுப்பள்ளிகளை மேம்படுத்த நிதியளிக்கலாம், பள்ளிகளைத் தத்தெடுத்தும் கொள்ளலாம். கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் சமூகப் பொறுப்பு நிதியைப் பள்ளிகளுக்குத் தரலாம். இந்த பவுண்டேஷனுக்குத் தொழிலதிபர் வேணு சீனிவாசனைத் தலைவராகவும், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷாவைத் துணைத்தலைவராகவும் நியமித்துள்ளது அரசு. நிதித்துறை கூடுதல் செயலாளர் அருண் சுந்தர் தயாளனும் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமாரும் இந்த பவுண்டேஷனின் உறுப்பினர்கள். இந்தத் திட்டத்தின் தூதுவராக செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கெனத் தொடங்கப்பட்ட இணையதளத்தில் (https://nammaschool.tnschools.gov.in) தமிழகம் முழுவதும் இருக்கும் அரசுப்பள்ளிகளின் தேவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலின் தன் சொந்த நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தை தொழிலதிபர் வேணு சீனிவாசனிடம் வழங்கி இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைக்க, ஒரே நாளில் 50 கோடி ரூபாய்க்கு மேல் நிதி சேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுமார் 37,500 அரசுப்பள்ளிகள் செயல்படுகின்றன. பல பள்ளிகளில் போதிய கட்டடங்கள் இல்லை. கழிவறை, குடிநீர் வசதிகளும் போதிய அளவுக்கு இல்லை. துப்புரவுப் பணியாளர் உட்பட ஊழியர்கள் பற்றாக்குறையும் கணிசமாக இருக்கிறது. பல பள்ளிகளில் ஆய்வக வசதிகள் இல்லை. கொரோனா காலத்தில் 5 லட்சம் மாணவர்களுக்கு மேல் புதிதாக அரசுப்பள்ளியில் இணைந்தார்கள். அதற்கேற்ப ஆசிரியர்கள் இல்லை. இந்தச்சூழலில் மக்கள் பங்களிப்போடு பள்ளிகளை மேம்படுத்தும் அரசின் நோக்கத்தைக் குறைசொல்ல இயலாது. ஆனால், ‘இவ்வளவு வளர்ச்சிக்குப் பிறகும், நிர்வாகத்தில், நிதி ஒதுக்கீடுகளில் கல்வியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மக்களிடம் வாங்கித்தான் செயல்படுத்த வேண்டுமா’ என்ற கேள்வியை ஆசிரியர்களே முன்வைக்கிறார்கள். தவிர, பள்ளிகளுக்காக மக்களின் பங்களிப்பைப் பெறும் இந்தத் திட்டத்துக்கு ஒரு தொழிலதிபரைத் தலைவராக நியமித்தது குறித்தும் கேள்வி எழுப்புகிறார்கள்.
‘‘அரசுப் பள்ளிகளைத் தொண்டு நிறுவனங்களின் கையில் அரசு தரப்போகிறது என்று ஏற்கெனவே செய்திகள் பரவுகின்றன. இந்தச்சூழலில் பள்ளிகளுக்காக நிதி திரட்டும் குழுவுக்கு ஒரு தொழிலதிபரைத் தலைவராக நியமித்திருப்பது அச்சத்தை உருவாக்குகிறது. சென்னை எழும்பூரில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியின் பராமரிப்பைச் சில ஆண்டுகளுக்குமுன், திரைப்படத் துறையில் புகழ்பெற்ற ஒரு குடும்பத்திடம் வழங்கினார்கள். இப்போது பள்ளி வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அங்கு ஆசிரியர்களோ அதிகாரிகளோ சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. தலைமையாசிரியரும் கூட பராமரிப்பாளர்களைச் சார்ந்தே இயங்க வேண்டியிருக்கிறது. ஒரு புரவலரிடமிருந்து நிதி பெறுவது வேறு. ஒரு புரவலரை உருவாக்கி முதல்வரே அவரிடம் நிதி கொடுப்பது என்பது வேறு’’ என்கிறார் தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் ஆர்.பெருமாள்சாமி.
‘‘பள்ளிக்கு மக்கள் பங்களிப்பு செய்யும் திட்டம் அன்பழகன் கல்வி அமைச்சராக இருந்தபோதும் செங்கோட்டையன் கல்வி அமைச்சராக இருந்தபோதும் செயல்பாட்டில் இருந்ததுதான். பெரும்பாலும் உதவி செய்ய விரும்புவோர் அதிகாரிகளின் அனுமதி பெற்று நேரடியாக பள்ளிக்குச் செய்வார்கள். தலைமையாசிரியர் அந்தப் பணியைக் கண்காணிப்பார். ஆனால், இந்தத் திட்டத்தில் பள்ளி நிர்வாகத்துக்கு என்ன பங்களிப்பு இருக்கும் என்று தெரியவில்லை. பள்ளி மேலாண்மைக்குழு மிகச்சிறப்பான திட்டம். ஆனால் அந்தக் குழுவில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பெரும்பாலும் அரசியல் கட்சியினர். கல்வி என்பது முழுமையாக அரசின் கரங்களில் இருக்கவேண்டும். முடிவெடுக்கும் அதிகாரம் தனியார் கைக்குச் செல்வதுதான் பதற்றத்தைத் தருகிறது...’’ என்கிறார் பெருமாள்சாமி.
அரசுக் கல்வி நிறுவனங்களில் கொடையாளர்கள், தனியார், சமூகப் பங்களிப்பை ஊக்குவிப்பதை மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை முதன்மை அம்சமாகக் கொண்டுள்ளது. புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளாத தமிழக அரசு, வேறொரு வடிவத்தில் அதையே செய்கிறது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 41-வது பிரிவு, பொருளாதாரம் வளர வளர கல்வியை அரசு உரிமையாக வழங்கவேண்டும் என்கிறது. இவ்வளவு வளர்ச்சிக்குப் பிறகும் இன்னும்கூட தனியாரிடம் அரசுப்பள்ளிக் குழந்தைகளைக் கையேந்த வைப்பது நியாயமா என்ற கேள்வியும் விவாதிக்கப்பட வேண்டும்.
‘‘தமிழகத்தில் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் திட்டங்களின் பெயர்கள்தான் வேறு வேறாக உள்ளனவே தவிர, அனைத்தும் தேசியக் கல்விக் கொள்கைகளின் கூறுகள்தான். சொல்லப் போனால், பிற மாநிலங்களைவிட தமிழகம்தான் அக்கொள்கையைத் தீவிரமாகச் செயல் படுத்துகிறது. சுதந்திரமடைத்து 75 ஆண்டுகள் ஆனபிறகும்கூட கனவான்களுடைய தயவில்தான் படிக்கவேண்டும் என்பதே நம் பிள்ளைகளின் தலையெழுத்து. இவரால்தான் நாம் படிக்கிறோம், இவரால்தான் நாம் சாப்பிடுகிறோம் என்று யாரோ ஒருவரைப் பள்ளியில் நிறுத்தி, கைதட்டச் சொல்வார்கள்.
கல்வியைவிட இந்த அரசு செலவுசெய்ய வேறென்ன இருக்கிறது? இந்த நிதிச் சேகரிப்பை ஏன் கல்வித்துறையோ முதல்வரோ முன்னின்று செய்யக்கூடாது? இந்த மிகப்பெரிய பொறுப்புக்கு ஏன் தனியார் நிறுவனத்தினர் தேவைப் படுகிறார்கள்? கல்வி கொடுக்கவேண்டிய பொறுப்பிலிருந்து அரசு கொஞ்ச கொஞ்சமாக விலகிக்கொள்வதே இதன் வெளிப்பாடு’’ என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
தனியார் பள்ளிகளைவிட நான்கு மடங்கு அதிகமாக தமிழகத்தில் அரசுப்பள்ளிகள் உள்ளன. ஆனால் தனியார் பள்ளிகளில்தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள். பெரும்பாலான தனியார் பள்ளிகளில் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள்கூட இல்லை. ஆனாலும் மக்கள் நம்புகிறார்கள். தமிழக அரசின் அரசாணைப்படி, 20 மாணவர்களுக்கு ஒரு சிறுநீர்க் கழிவறையும், 50 மாணவர்களுக்கு ஒரு மலக் கழிவறையும் இருக்க வேண்டும். 2019-ல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, தமிழகத்தில் 2,391 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இருக்கும் பல பள்ளிகளில் அதைப் பராமரிக்க ஊழியர்கள் இல்லை.
17,000-க்கும் மேல் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் ஆசிரியர் சங்கங்கள் சொல்கின்றன. பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, தகுதிவாய்ந்த ஆசிரியர்களை நியமித்து, அரசுப்பள்ளிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கவேண்டிய அரசு, நிதி கொடுங்கள் என்று தனியாரை நோக்கிக் கைகாட்டுவது நியாயமில்லை என்கிறார்கள் கல்வியாளர்கள்.
‘‘அரசுப்பள்ளிகள் படிப்படியாக தனியார் கைக்குச் சென்றுவிடுமோ என்ற அச்சத்தைத்தான் இதுமாதிரியான திட்டங்கள் உருவாக்குகின்றன. பள்ளி மேலாண்மைக்குழு உண்மையில் நல்ல திட்டம். ஆனால், பெரும்பாலும் அதில் அரசியல்வாதிகள்தான் ஏதோ ஒரு வழியில் வந்து ஆளுமை செலுத்துகிறார்கள். அரசின் நோக்கம் நிறைவேறவில்லை’’ என்கிறார் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் மணிமேகலை.

‘‘பொதுவாக பள்ளிக்கு ஒதுக்கப்படும் நிதி, முழுமையாக வந்து சேர்ந்தாலே பல பிரச்னைகள் தீர்ந்துவிடும். பெரும்பாலும் அப்படி வருவதில்லை. உதாரணத்துக்கு விளையாட்டுப் பொருள்கள் வாங்குவதற்காக 5,000 ரூபாய் ஒதுக்கப்பட்டது. குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தில்தான் வாங்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். அந்த நிறுவனம் தந்த பொருள்கள் 2,000 ரூபாய்கூட வராது. நாங்கள் வலியுறுத்தி பணமாகப் பெற்று அதே 5,000 ரூபாய்க்கு அதைவிட அதிகமான, தரமான பொருள்களை வாங்கினோம். நம்ம ஸ்கூல் திட்ட நிதி பள்ளிக்கு எப்படி வந்து சேரும் என்ற கேள்வியும் எங்களுக்கு இருக்கிறது’’ என்கிறார் மணிமேகலை.
கல்வியாளர் வசந்திதேவி இந்தத் திட்டம் பற்றி மிகுந்த நம்பிக்கையோடு பேசினார்.
‘‘கார்ப்பரேட்களின் கையில் அரசுப் பள்ளிகளின் மொத்த அதிகாரமும் சென்றுவிடும் என்பதே இத்திட்டம் குறித்த அச்சம். ஆனால் அப்படி நடக்காது என அரசு உறுதியளித்திருக்கிறது. பள்ளிக்கல்வித் துறையின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இதுகுறித்து சமீபத்தில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதிலும் இதை உறுதி செய்தார்கள். இத்திட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளில் மாற்றம் செய்வதற்கான எந்த அதிகாரமும், நியமிக்கப்பட்டிருக்கும் அரசு சாரா நபர்களிடம் அளிக்கப்படமாட்டாது. கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியை இதுவரையில் நாம் எந்தத் திட்டத்துக்காகவும் சரியான முறையில் பயன்படுத்தவில்லை. அவற்றை பள்ளிகளின் வளர்ச்சிக்குத் திருப்பிவிடுவது நல்ல விஷயம்.
தனிப்பட்ட முறையில் இல்லாமல் ஒன்றிணைந்து நிதி திரட்டுவதன்மூலம் எங்கு தேவை இருக்கிறது என்பதை அறிந்து அதற்காகப் பயன்படுத்தமுடியும். இதில் ஆசிரியர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை’’ என்கிறார் வசந்திதேவி.
1966-ல் கோத்தாரி கல்விக்குழு தேசத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 6% கல்விக்காக ஒதுக்கவேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால் இன்றுவரை அது கனவாகவே இருக்கிறது. ஆளும் அரசுகள் ஆண்டுக்காண்டு கல்விக்காக ஒதுக்கும் நிதியைக் குறைத்துக்கொண்டே போகின்றன.
நன்றாகப் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களைத் தனியார் பள்ளியில் சேர்த்துப் பெருந்தொகையைச் செலவு செய்வது, 25% ஒதுக்கீட்டில் மாணவர்களைத் தனியார் பள்ளிகளில் சேர்த்து கல்விக்கட்டணம் கட்டுவது என எதிர்மறையான திசை நோக்கியே அரசுகள் இயங்கிக் கொண்டி ருக்கின்றன. தொண்டு நிறுவனங்களையும் தனியாரையும் சாராமல் முழு நிதியையும் அரசே ஒதுக்கி அரசுப்பள்ளியை மேம்படுத்த வேண்டும். தீப்பெட்டியிலிருந்து மெழுகுவத்தி வரைக்கும் வாங்கும் அத்தனை பொருள்கள் வழியாகவும் கல்விக்கென சாமானியன் தருகிற வரி அதற்கானதுதான். அரசுப் பள்ளிகளுக்காகக் கையேந்தி, அங்கு படிக்கும் பிள்ளைகளின் சுய மரியாதையை அரசே சிதைக்கக் கூடாது.