அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

அச்சுறுத்தும் கருமுட்டைச் சந்தை! - அலட்சியம் காட்டும் அரசு!

கருமுட்டைச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
கருமுட்டைச் சந்தை

தமிழ்நாட்டில் அதிகாரபூர்வமாக 190 செயற்கை கருத்தரித்தல் மையங்கள் உள்ளன. இவற்றில் பல மையங்கள் தற்காலிக லைசென்ஸ் மட்டுமே வைத்து இயங்குகின்றன.

எந்த வயதிலும், எந்த நிலையிலும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்’ என்கிற கவர்ச்சி வாசகங்களோடு, கருத்தரித்தல் மையங்களின் விளம்பரங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கின்றன. குழந்தையின்மை பிரச்னை இன்றைய இளைய தலைமுறையினரிடையே ஓர் உளவியல் பிரச்னையாக மாறியிருக்கும் நிலையில், சில தனியார் கருத்தரித்தல் மையங்களின் வியாபார நோக்கத்தால், கருமுட்டைக்கான சந்தை பூதாகரமாகியிருக்கிறது. அதையொட்டி, சட்டவிரோதச் செயல்களும் விஸ்வரூபம் எடுத்திருக்கின்றன. சமீபத்தில், ‘ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடமிருந்து ஆறு முறை கருமுட்டை எடுத்து விற்பனை செய்யப்பட்டிருக்கிறது’ என்ற அதிர்ச்சிகரமான செய்தி வெளியானது. அதையொட்டி விசாரணைகளும் தடதடக்கின்றன. கருமுட்டை விற்பனை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் பார்வையும் அழுத்தமாகப் பதிந்திருப்பதால், தமிழ்நாடு அரசுக்கும் நெருக்கடி முற்றியிருக்கிறது. விஸ்வரூபமெடுத்திருக்கும் இந்தப் பிரச்னை தொடர்பாக மருத்துவ வட்டாரங்களில் விசாரித்தோம்.

கிடைத்த தகவல்களெல்லாம் `பகீர்’ ரகம்!

கருமுட்டை விற்பனை... களைகட்டும் கள்ளச்சந்தை!

ஈரோட்டைச் சேர்ந்த அந்த 16 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ஈவிரக்கமற்றது. கடந்த ஜூன் 1-ம் தேதி, ஈரோடு சூரம்பட்டி காவல் நிலையத்தில் அந்தச் சிறுமி அளித்திருந்த புகாரில், “பணத்துக்காகப் பல்வேறு மருத்துவ மனைகளில் என் கருமுட்டையை என் தாய் விற்பனை செய்திருக்கிறார். இதற்காக, என் தாயின் இரண்டாவது கணவர் என்னைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தார்” எனப் பதைபதைக்கும் குற்றச்சாட்டைக் கூறியிருந்தார். இந்தப் புகாரைத் தொடர்ந்து, சிறுமியின் தாய் இந்திராணி, அவருடைய இரண்டாவது கணவர் சையது அலி, புரோக்கர்கள் மாலதி, ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இனப்பெருக்கத் தொழில்நுட்ப ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, ஒருவர் தனது வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கருமுட்டையை தானமாகக் கொடுக்க முடியும். ஆனால், ஈரோடு சிறுமியிடமிருந்து ஆறு முறைக்கு மேல் கருமுட்டையை எடுத்திருக்கிறது இந்தக் கும்பல். சிறுமியிடமிருந்து சட்ட விரோதமாகக் கருமுட்டையை எடுத்த ஈரோடு சுதா மருத்துவமனை, பெருந்துறை ராம் பிரசாத் மருத்துவமனை, நான்கு ஸ்கேன் சென்டர்கள் ஆகியவை சீல் வைக்கப்பட்டிருக்கின்றன.

அச்சுறுத்தும் கருமுட்டைச் சந்தை! -  அலட்சியம் காட்டும் அரசு!

சென்னை அருகிலுள்ள எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் ஸ்ருதி என்பவரிடம், “ஏன் கஷ்டப்படுகிறாய், உனது கருமுட்டையை விற்பனை செய்தால் அதிக பணம் கிடைக்கும்” என்று அவரது தோழி ஐஸ்வர்யாவும், ஐஸ்வர்யா வின் கணவர் சூரஜ்ஜும் பணத்தாசை காட்டி யுள்ளனர். கருமுட்டையை விற்றால் 20,000 ரூபாய் கிடைக்கும் என ஐஸ்வர்யா சொன்ன நிலையில், 40,000 ரூபாய் வரை கிடைக்கும் என்ற தகவல் ஸ்ருதிக்கு தெரியவந்திருக்கிறது. பண விவகாரத்தில் சிக்கல் எழுந்ததால், தனது தோழியிடம், ‘கருமுட்டையை விற்க முடியாது’ என்று சொல்லியிருக்கிறார் ஸ்ருதி. இதனால் ஆத்திரமடைந்த சூரஜ், ஐஸ்வர்யா இருவரும் ஸ்ருதியைத் தங்கள் வீட்டில் அடைத்துவைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அங்கிருந்து தப்பித்த ஸ்ருதி, திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகாரளித்த பிறகே, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. சூரஜ், ஐஸ்வர்யா இருவரும் கைதுசெய்யப்பட்ட நிலையில், கருமுட்டை விற்பனைப் புகார் தொடர்பாக தாம்பரம் தனியார் மருத்துவமனையில் மேல் விசாரணை நடைபெறுகிறது. “கருமுட்டை கள்ளச்சந்தையில் விற்கப்படுவது என்பது தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. இதற்கென பிரத்யேக புரோக்கர்கள் இருக்கிறார்கள். தற்போது வெடித்து வெளிவந்திருப்பது சில சின்னச் சம்பவங்கள் மட்டுமே. வெளியில் தெரியாமல் நடப்பவற்றை நீங்கள் அறிந்தால், உங்களுக்குத் தலைச்சுற்றலே வரும்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

ஏழ்மைதான் டார்கெட்!

செயற்கைக் கருத்தரித்தல் மையத்தில் பணியாற்றும் சிலரிடம் பேசினோம். “தமிழ்நாட்டில் அதிகாரபூர்வமாக 190 செயற்கை கருத்தரித்தல் மையங்கள் உள்ளன. இவற்றில் பல மையங்கள் தற்காலிக லைசென்ஸ் மட்டுமே வைத்து இயங்குகின்றன. ஒவ்வொரு மையத்திலும் சராசரியாக தினமும் 10 பேர் செயற்கைக் கருத்தரித்தல் சிகிச்சைக்காக வருகிறார்கள். சென்னையிலுள்ள பெரிய மையங்களில் இந்த எண்ணிக்கை அதிகம். சிகிச்சைக்கு வருபவர்களுக்கு கருமுட்டை தானம் வழங்க 23 வயது நிரம்பிய பெண்கள் ஏராளமாக வேண்டும். ஆனால், தேவைக் கேற்ப பெண்கள் கிடைப்பதில்லை. இதனால் புரோக்கர்கள் மூலம், 18 வயது இளம்பெண்களைக்கூட அழைத்து வரச் செய்வார்கள். மிக ஏழ்மை நிலை யிலிருக்கும் பெண்கள்தான் இந்த புரோக்கர்களின் ‘டார்கெட்.’

`நீ காசுக்கு ரொம்பக் கஷ்டப்படுறே. உன் கரு முட்டையைக் கொடுத்தால், உனக்கு நிறைய பணம் வரும். குழந்தை இல்லாம கஷ்டப்படுற ஒரு பொண்ணுக்கு உன்னால நல்லது நடக்கும். அது உனக்கு எவ்வளவு பெரிய புண்ணியம்’ என்று பொருளாதாரரீதியாகவும், உளவியல்ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் அந்தப் பெண்களை மூளைச்சலவை செய்துவிடுவார்கள். இதற்குச் சம்மதித்து மருத்துவமனைக்கு வரும் பெண்களிடம், தன் பாதுகாப்புக்காக எல்லா பேப்பர்களிலும் மையங்கள் கையெழுத்து வாங்கிவிடும். அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பதால், இதை யாரும் படித்துப் பார்ப்பதில்லை. அந்தப் பெண்களுக்கு 10 ஹார்மோனல் ஊசிகள் வரை செலுத்தப்படும். அப்போதுதான் ஒரே முயற்சியில் பல கருமுட்டைகள் உருவாகும். மயக்க ஊசி செலுத்தி, அவர்களிடமிருந்து 8 முதல் 10 கருமுட்டைகள் வரை எடுக்கப்படும். அப்படி எடுக்கப்படும் கருமுட்டைகளை ‘க்ரையோலாஜிக்’ முறைப்படி சேமித்துவைத்து, பலருக்கும் பயன்படுத்திக்கொள்வார்கள். ஒவ்வொரு மாதமும் கருமுட்டை உருவாகும் என்பதால், பணத்துக்காகப் பலமுறை கருமுட்டையை விற்ற பெண்கள்கூட இருக்கிறார்கள். இதனால், பலவித பாதிப்புகளுக்கு ஆளாகும் அந்தப் பெண்களுக்கு, அடிப்படை இன்ஷூரன்ஸ் உட்பட எந்த மருத்துவப் பாதுகாப்பையும் கருத்தரித்தல் மையங்கள் செய்துகொடுப்பதில்லை.

மாலதி - இந்திராணி
மாலதி - இந்திராணி

கருமுட்டைக்கு 25,000 ரூபாய்!

குழந்தைப்பேற்றுக்காகச் சிகிச்சைக்கு வருபவர் களிடம், கருமுட்டைக்கு இரண்டு லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்தப் பணத்தில், கரு முட்டையை விற்கும் பெண்களுக்கு 25,000 ரூபாய் மட்டுமே செல்கிறது. புரோக்கர்களுக்குச் சில ஆயிரங்களையும், சுகாதாரத்துறை அதிகாரி களுக்குக் கணிசமான தொகையையும் கொடுத்து விட்டு, மீதிப் பணத்தையெல்லாம் கருத்தரித்தல் மையங்களே எடுத்துக்கொள்கின்றன. ஒருசில மருத்துவமனைகளில், அதிக கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்பதற்காக, முதல் செயற்கைக் கருவுறுதல் ‘சக்சஸ்’ ஆகாதபடி வேண்டுமென்றே செய்துவிடுவார்கள். அதேபோல, சட்டவிரோத மாகக் கருக்கலைப்பு செய்ய வரும் இளம் பெண் களிடம், `உனக்குக் கருக்கலைப்பை இலவச மாகச் செய்கிறோம். பதிலுக்கு நீ எங்களுக்குக் கருமுட்டையைத் தர வேண்டும்’ என்று டீல் பேசி முடிக்கப்படுகின்றன. கருமுட்டையை விற்கும் பெண்களுக்கு உடனே உடல்ரீதியாக ஏதாவது பிரச்னை வந்தால், கருமுட்டையை விற்ற மையங்களில் மட்டுமே அவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். வேறு மருத்துவ மனைகளுக்குச் சிகிச்சைக்காகச் சென்றால், விஷயம் லீக் ஆகிவிடும் என்பதற்காக இந்தக் கட்டுப்பாட்டை கருத்தரித்தல் மையங்களே செய்திருக்கின்றன.

மத்திய அரசு, `இனப்பெருக்க உதவி தொழில் நுட்ப ஒழுங்குபடுத்துதல் சட்டம்’, 2021-ல் கொண்டுவந்தது. அதன்படி, கருமுட்டையை 23 முதல் 35 வயதுள்ள பெண்களிடமிருந்து மட்டுமே தானமாகப் பெற முடியும். 23 வயதுக்குக் கீழுள்ளவர்களிடமிருந்து கருமுட்டை எடுப்பதும், விற்பதும் சட்டவிரோதம். கருமுட்டை தானம் வழங்கும் பெண்ணுக்கு ஓர் ஆண்டுக்கான மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டு, அவரின் சம்மதக் கடிதம் பெற வேண்டும். கருமுட்டை விற்பனை குறித்து விளம்பரம் செய்தாலோ, கருமுட்டையை விற்பனை செய்தாலோ அதற்குச் சிறைத் தண்டனையும் அபராதமும் உண்டு. சட்டம் கடுமையாக இருந்தாலும், அதைச் செயல் படுத்தும் அதிகாரிகள் ஊழல் பெருச்சாளிகளாக இருப்பதால், பல கோடி ரூபாய் புழங்கும் இந்தக் கருமுட்டைச் சந்தையை யாராலும் தடுக்க முடியவில்லை” என்றனர் விரிவாக.

சையது அலி
சையது அலி

“வலி உயிர் போயிடும்... வறுமைக்காகத் தாங்கிக்கிறோம்!’’

ஒரு பெண்ணிடமிருந்து கருமுட்டையை எடுப்பது வலி நிறைந்தது மட்டுமல்ல, அவர்களின் மொத்த உடல்நலத்தையும் பெரிதாக பாதிக்கக் கூடியது. மூன்று முறை தனது கருமுட்டையை விற்பனை செய்த திருச்சி பெண் ஒருவரிடம் பேசினோம். “கொரோனாவால, எங்க வீட்டுல கடன் தொல்லை அதிகமாகிடுச்சு. பண நெருக்கடி யால, என் கருமுட்டையை விற்கப் போனேன். நிறைய ஊசி போட்டாங்க. வலி உயிர் போயிடுச்சு. இரண்டு நாள் கருத்தரித்தல் மையத்துலேயே இருந்தேன். மயக்க ஊசி போட்டு கருமுட்டையை எடுத்தாங்க. 25,000 ரூபாய் கிடைச்சுது. என்னைக் கூட்டிட்டுப்போன புரோக்கருக்கு தனியா 5,000 ரூபாய் கொடுத்தாங்க. ஆஸ்பத்திரியிலருந்து வீட்டுக்கு வந்த அடுத்த மூணு நாள் ஒண்ணுமே செய்ய முடியலை. கொரோனா கால கஷ்டத்தால, இதுவரைக்கும் மூணு வெவ்வேற இடங்கள்ல கருமுட்டைகளை கொடுத்துருக்கேன். அந்த மையங்கள்ல என்னைப்போல நிறைய பெண் களைப் பார்த்திருக்கேன்” என்றார் பாவமாக.

“கருமுட்டையை விற்பனை செய்வது சட்ட விரோதம் என்பது தெரியுமா?” என்றோம். அதற்கு, “தெரியாதுங்க. கருமுட்டையை விற்றால், குழந்தை பிறப்பதில் எதிர்காலத்தில் எங்களுக்குச் சிக்கல் வரும்னு மட்டும் கேள்விப்பட்டோம். குடும்ப வறுமைக்காக அவ்வளவு வலியையும் தாங்கிக்கிட்டு ரிஸ்க் எடுக்கிறோம்” என்றார்.

இந்தக் கருமுட்டை விற்பனை விவகாரத்தில், ஈரோட்டைச் சேர்ந்த சுதா மருத்துவமனை உட்பட ஆறு இடங்கள் சீல் வைக்கப்பட்டிருக் கின்றன. சுதா மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றச் சொல்லி சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், அரசின் மேல்முறையீட் டில் அந்த உத்தரவை ரத்துசெய்திருக் கிறார் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி. இந்தச் சூழலில், சுதா மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து, இந்திய மருத்துவச் சங்கத்தின் ஈரோடு கிளை சார்பில், ஆகஸ்ட் 6-ம் தேதி 250 தனியார் மருத்துவமனைகளும், 800 மருத்துவர்களும் வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டனர். கருமுட்டை விற்பனை விவகாரம் சூடாகிக்கொண்டே செல்லும் நிலையில், மிகுந்த அலட்சியப் போக்குடன் அரசு நடந்துகொள்வதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

அலட்சியம் காட்டும் அரசு!

மாநிலம் முழுவதுமுள்ள சுகாதாரத்துறை இணை இயக்குநர்களுக்கு, செயற்கைக் கருத் தரித்தல் மையங்களில் பின்பற்றவேண்டிய வழிமுறை குறித்தும், சட்டங்கள் குறித்தும் சமீபத்தில் அவசர அவசரமாக வகுப்பு எடுக்கப்பட்டிருக்கிறது. நம்மிடம் பேசிய சுகாதாரத்துறை உயரதிகாரி ஒருவர், “எந்தச் சட்டப் புரிதலும் அதிகாரிகளிடம் இல்லை. செயற்கைக் கருத்தரித்தல் மையங்களில் என்ன நடக்கிறது என்பதை சுகாதாரத்துறை கண்காணிப்பதும் இல்லை. இந்த விவகாரத்தில் அரசு அலட்சியப் போக்குடன் நடந்துகொள்கிறது. இந்தந்த மருத்துவமனைகளில் கருமுட்டை விற்கப்படுகிறது என்பது ஊருக்கே தெரிகிறது. ஆனால், அரசு அதிகாரிகளுக்குத் தெரியவில்லை என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பேசினோம். “இந்த விவகாரத்தில் சட்ட விதிமுறைகளை மீறிய அனைத்து மருத்துவமனைகளையும் உடனடியாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மருத்துவத்துறை சார்பில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துச் செயற்கைக் கருத்தரித்தல் மையங் களும் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. 38 மாவட்டங்களிலுள்ள மருத்துவத்துறை இணை இயக்குநர்களின் கருத்தரங்கம் நடைபெற்றிருக்கிறது. அதில், செயற்கைக் கருத்தரித்தல் மையங் களில் நடைபெறும் முறைகேடு களைத் தடுக்கவும், கண்காணிக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, கூடுதல் பயிற்சி வழங்கப் பட்டுள்ளது. அரசு சார்பில் சென்னை, திருச்சி ஆகிய இரண்டு இடங்களில் செயற்கைக் கருத்தரித் தல் மையங்கள் தொடங்குவதற்கான பூர்வாங்கப் பணிகளும் நடக்கின்றன. சட்டத்துக்குப் புறம்பான செயல் களில், எந்த மருத்துவமனை ஈடுபட் டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ஈரோடு சிறுமி பாதிக்கப்பட்ட விவகாரம் புகாராகிப் பெரிதானதால், இந்தக் கருமுட்டை விற்பனை விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. நடவடிக்கை எடுப்பதாக அரசும் பரபரப்பு காட்டுகிறது. ஆனால், அந்தச் சம்பவம் வெளிவந்திருக்கவில்லையென்றால், அரசு என்ன செய்திருக்கும்?

கருமுட்டை விற்பனையே சட்ட விரோத மானது. இதில், பாலியல் குற்றங்கள், பண மோசடி, மிரட்டல்கள் எனக் கருமுட்டை விற்பனை தொடர்பாக மேலும் சட்டவிரோதச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் வரையிலாக, கருமுட்டை விற்கும் பெண்களின் உடல்நலன் பாதிக்கப்படுகிறது. தெற்காசியாவின் மருத்துவத் தலைநகராகத் தமிழ்நாடு மாறிவரும் சூழலில், மருத்துவத்துறையில் நிகழும் இதுபோன்ற சட்டவிரோதச் செயல்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கே பெரும் கேடாக அமையும். தமிழ்நாடு அரசு உடனடியாக கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!