
இந்தியாவின் ஒட்டுமொத்த வரி வருவாயில் வருமான வரியைவிட ஜி.எஸ்.டி மிக அதிகம். அந்த ஜி.எஸ்.டி-யில் எல்லோரின் பங்களிப்பும் இருக்கிறது.
ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகவே ஆக, பணக்காரர்கள் கையில் இன்னும் இன்னும் பணம் குவியச் செய்யும் பொருளாதார நடைமுறை சரியானதா? இப்படிப்பட்ட சமநிலையற்ற சமுதாயம் ஆபத்தானது. ஏழைகளுக்கு எதிர்காலத்தின்மீது நம்பிக்கை ஏற்படுத்துவது அரசின் பொறுப்பு அல்லவா?
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஆண்டுதோறும் உலகப் பொருளாதார அமைப்பின் மாநாடு நடைபெறும். பல நாடுகளின் தலைவர்கள் கூடி, முக்கியமான பொருளாதார முடிவுகளை எடுப்பார்கள். இந்த மாநாட்டை ஒட்டி, ஆக்ஸ்ஃபாம் அமைப்பு ஒரு பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடும். உலகெங்கும் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு குறித்த இந்த அறிக்கை எழுப்பும் கேள்விகளே மேலே சொன்னவை.
விண்ணை முட்டும் கட்டடங்கள் ஒரு பக்கமும் குடிசைகள் இன்னொரு பக்கமும் இருக்கும் சமநிலையற்ற சமூகம், பல நாடுகளில் உண்டு. இந்த இரண்டுவித மக்களுக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த அவலம் குறித்து விவரிக்கும் ஆக்ஸ்ஃபாம் அறிக்கை, இந்தியாவின் ஏற்றத்தாழ்வு குறித்தும் தனியாக ஓர் அறிக்கையில் நிறைய பேசுகிறது.
அடித்தட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு ரூபாய் சம்பாதிக்கும் நேரத்தில், பெரும் பணக்காரர் ஒருவரால் 17 லட்ச ரூபாய் சம்பாதித்துவிட முடிகிறது. உலகிலேயே மிக அதிகமாக ஏழைகள் இருப்பதும், உலகிலேயே மிக வேகமாகப் பெரும் பணக்காரர்கள் உருவானதும் ஒரே நாட்டில்தான் என்பது வேதனை தரும் உண்மை. அந்த நாடு இந்தியா. 22 கோடியே 89 லட்சம் ஏழைகள் வறுமைக்கோட்டுக்குக் கீழே இந்தியாவில் இருக்கிறார்கள். 2020-ம் ஆண்டில் 102 பில்லியனர்கள் இந்தியாவில் இருந்தார்கள். 2022-ல் இந்த எண்ணிக்கை வேகமாக உயர்ந்து 166 ஆகியிருக்கிறது.
இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு, 54.12 லட்சம் கோடி ரூபாய். இந்தியாவின் வெறும் 5% பணக்காரர்களிடம், நாட்டின் 60% சொத்து குவிந்திருக்கிறது. அடித்தட்டில் இருக்கும் 50% மக்களிடம் இருக்கும் சொத்துகள் வெறும் 3% மட்டுமே!
இந்த ஏற்றத்தாழ்வுக்கு என்ன காரணம்? அடித்தட்டுக் குடும்பத்தினர் அன்றாடத் தேவைகளையே சமாளிக்க முடியாமல் தவிக்கிறார்கள். இன்னொரு பக்கம் பெரும் பணக்காரர்களுக்கு நிறைய பணம் சென்று சேர்வதைப் போலவே வியாபார ஒப்பந்தங்களும், அரசுத் திட்டங்களும், அரசின் கொள்கை முடிவுகளும் வடிவமைக்கப்படுகின்றன.

பசி, வேலையிழப்பு, விலைவாசி உயர்வு, சுகாதார நெருக்கடிகள் என்று ஏழைகளை இன்னும் இன்னும் வாட்டும் பிரச்னைகள் நாட்டில் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்தியாவில் பட்டினிப் பிரச்னையைச் சந்திக்கும் ஏழைகளின் எண்ணிக்கை 2018-ல் 19 கோடியாக இருந்தது. 2022-ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 35 கோடியாக உயர்ந்திருக்கிறது. ஐந்து வயதுக்குள் மரணமடையும் குழந்தைகளில் 65% குழந்தைகள் மரணத்துக்குக் காரணம், ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காததுதான்! உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசே கொடுத்துள்ள புள்ளிவிவரம் இது.
அடித்தட்டுக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் சம்பாத்தியத்தில் 53% பணத்தை உணவுக்காகவே செலவழிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அடிப்படைத் தேவைகளுக்கே வழியின்றித் தவிப்பதால், அவர்களால் ஒரு கட்டத்தைத் தாண்டி உயர முடிவதில்லை. திடீர் மருத்துவச் செலவுகளும் அவர்களைத் திகைக்க வைத்துவிடும். 2022 மார்ச்சில் வெளியான உலக வங்கி அறிக்கையின்படி, 17% அடித்தட்டுக் குடும்பங்கள் திடீர் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் கடனாளி ஆகித் தவிக்கின்றன.
இந்தியாவில் ஏழில் ஒரு குடும்பம் ஆண் துணை இல்லாமல் பெண்ணால் நிர்வாகம் செய்யப்படுகிறது. தெற்கு ஆசியாவிலேயே இந்தியாவில்தான் இப்படிப்பட்ட பெண் குடும்பத்தலைவிகளைக் கொண்ட குடும்பங்களில் வறுமை அதிகம். இந்தக் குடும்பங்களில் சுமார் நான்கு கோடி ஏழைகள் வாழ்கிறார்கள். எவ்வளவோ மாற்றங்கள் வந்துவிட்ட இந்தக் காலத்திலும், முறையான மாதாந்திர சம்பளம் வாங்கும் வேலைகள் இன்னமும் போதுமான அளவு பெண்களுக்குக் கிடைக்கவில்லை. பணிக்குச் செல்லும் ஆண்களில் 60% பேர் முறையான மாதச் சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள் என்றால், பணிபுரியும் பெண்களில் 19% பேர் மட்டுமே மாதச் சம்பளம் வாங்கும் வேலைகளில் இருக்கிறார்கள்.
ஏழைகளின் நிலை இப்படி என்றால், பணவீக்கம், பொருளாதார மந்தநிலை, கொரோனா ஊரடங்கு என்று எந்தப் பிரச்னை வந்தாலும், பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு உயர்ந்துகொண்டே போகிறது. ஆனால், வரி செலுத்துவது என்ற விஷயம் வரும்போது மட்டும், ஏழைகளைக் கேடயம் மாதிரி முன்னால் அனுப்பிவிட்டு பின்னால் ஒளிந்துகொள்கிறார்கள் இந்தப் பெரும் பணக்காரர்கள்.
கொரோனாத் தடுப்பூசி அறிமுகமானபோது, ‘வருமான வரி கட்டுபவர்களுக்கு முதலில் தடுப்பூசி போட வேண்டும். அவர்கள் இறந்துவிட்டால் நாட்டுக்கே இழப்பு' என்று உரிமை கோரினார், தொழிலதிபர் கிரண் மஜும்தார். சர்ச்சை எழுந்தபோது, ‘‘சும்மா நகைச்சுவைக்காகச் சொன்னேன்'' என்று பின்வாங்கினார். ‘வருமான வரி கட்டுகிறவர்கள்தான் மேலான குடிமக்கள். அவர்களுக்கு எல்லாவற்றிலும் முதல் மரியாதை வழங்க வேண்டும். அவர்களால்தான் இந்த அரசாங்கமே இயங்குகிறது' என்று மேல்தட்டு நம்பிக்கை ஒன்று இருக்கிறது.
நிஜம் என்ன தெரியுமா? இந்தியாவின் ஒட்டுமொத்த வரி வருவாயில் வருமான வரியைவிட ஜி.எஸ்.டி மிக அதிகம். அந்த ஜி.எஸ்.டி-யில் எல்லோரின் பங்களிப்பும் இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத, கட்டுகிறவர்களுக்கே பல சமயங்களில் தெரியாத வரி இது. கிராமத்துக் கடை ஒன்றில் சோப்பு வாங்கும் ஏழைகூட, அதன்மூலம் வரி செலுத்துகிறார். பெரும் பணக்காரர்களுக்குக் குறைவாகவும், ஏழைகளுக்கு அதிகமாகவும் வரி விதிக்கும் ஏற்றத்தாழ்வான நடைமுறையே இங்கு இருக்கிறது.
கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு பெருநிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரியை 30% என்ற அளவிலிருந்து 22% ஆகக் குறைத்தது. புதிதாக ஆரம்பிக்கப்படும் நிறுவனங்களுக்கு 15% மட்டுமே கார்ப்பரேட் வரி என்று கூடுதல் சலுகையை அளித்தது. இதனால் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1.84 லட்சம் கோடி அளவுக்கு மத்திய அரசின் வரி வருமானம் குறைந்தது. இன்னொரு பக்கம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிவிலக்கு மற்றும் ஊக்கத்தொகை என்று கடந்த 2020-21 நிதியாண்டில் மட்டும் தரப்பட்ட சலுகை 1,03,285.54 கோடி ரூபாய். கார்ப்பரேட்களுக்கு இப்படி வரிச்சலுகைகள் கொடுத்தால் அவர்கள் புதிய தொழில்களைத் தொடங்குவார்கள், அதன்மூலம் பொருளாதாரம் மேம்படும், வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று அரசு நினைத்தது. இது நல்ல விஷயம்தான்.

ஆனால் சிக்கல் என்னவென்றால், இதனால் ஏற்பட்ட வருமான இழப்பை ஈடுகட்டுவதற்காக மற்ற விஷயங்களில் கைவைத்தது மத்திய அரசு. ஸ்காலர்ஷிப், கல்வி, சுகாதாரம், சமூக நலத்திட்டங்கள் போன்றவற்றுக்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டன. பல பொருள்களின் ஜி.எஸ்.டி உயர்த்தப்பட்டது. கொரோனாக் கொடுந்துயர் காலத்திலும் இரக்கமற்ற வகையில் பெட்ரோல் மற்றும் டீசல்மீதான கலால் வரிகள் உயர்த்தப்பட்டன. அடித்தட்டு மக்களும் நடுத்தர வர்க்கமும் இதனால் பாதிக்கப்படுகின்றன.
கடந்த 2021-22 நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜி.எஸ்.டி 14.83 லட்சம் கோடி ரூபாய். இதில் 64% ஜி.எஸ்.டி கட்டியவர்கள் 50 சதவிகிதமாக இருக்கும் அடித்தட்டு மக்கள். 33% ஜி.எஸ்.டி கட்டியது 40% நடுத்தர மக்கள். அதிக வருமானம் சம்பாதிக்கும் டாப் 10 சதவிகித பணக்காரர்கள் செலுத்திய ஜி.எஸ்.டி வெறும் 3% மட்டுமே! இந்தப் பாரபட்சமும் சேர்ந்துதான், ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்கிறது.
இதற்கு என்னதான் தீர்வு? ஆக்ஸ்ஃபாம் அறிக்கை சில பரிந்துரைகளைச் சொல்கிறது.
* அரசியலிலும் அரசின் கொள்கை முடிவுகளிலும் செல்வாக்கு செலுத்த முடிவதால்தான், பெரும் பணக்காரர்கள் மேலும் மேலும் சொத்து சேர்க்க முடிகிறது. அவர்களின் ஒட்டுமொத்தச் சொத்து மதிப்பின்மீது கூடுதல் வரி விதிக்க வேண்டும்.
* அடித்தட்டு மக்களின் வரிச்சுமையைக் குறைக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி-யைக் குறைத்தால், அடித்தட்டுக் குடும்பங்களின் செலவு குறையும். பதிலாக, ஆடம்பரப் பொருள்களின் வரியை அதிகரிக்கலாம்.
* அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தி, அடித்தட்டுக் குடும்பங்களின் மருத்துவச் செலவைக் குறைக்க வேண்டும்.
* தரமான கல்வி வாய்ப்பை அடித்தட்டு மக்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். ஸ்காலர்ஷிப் எளிதாக அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.
* குறைந்தபட்சக் கூலி என்பது, ஒரு குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்வதாக இருக்க வேண்டும். அதைச் சட்டப்படி உறுதி செய்ய வேண்டும்.
இதையெல்லாம் செய்வதற்கான விவாதத்தை நாம் தொடங்க வேண்டியது அவசியம்.
***

அரசும் இதையே சொல்கிறது!
ஆக்ஸ்ஃபாம் என்ற தனியார் அமைப்பின் அறிக்கை என இதைப் புறக்கணிக்க முடியாது. 2022 மே மாதம், பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் சார்பில் ‘The State of Inequality in India' என்ற அறிக்கை வெளியிடப்பட்டது. அதுவும் இந்த ஏற்றத்தாழ்வு குறித்துக் கவலை தெரிவித்தது. சுகாதாரம், கல்வி, குடும்பச் செலவுகள், தொழிலாளர் சூழல் என எல்லாவற்றிலும் ஏற்றத்தாழ்வு இருப்பதாகக் குறிப்பிட்ட அந்த அறிக்கை, 100 நாள் திட்டம் போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றது. வருமான இடைவெளியைக் குறைக்க, அடித்தட்டுக் குடும்பங்களுக்கு அடிப்படை வருமானமாக அரசு மாதா மாதம் ஒரு தொகை கொடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.
வருமானம் சொத்தாக மாறுகிறது!
பெருநிறுவனங்களுக்கு வரிச்சலுகை கொடுத்தால், அவர்கள் வேலைவாய்ப்பை அதிகரிப்பார்கள் என்று அரசு நினைக்கிறது. ஆனால், பெரும்பாலான தருணங்களில் அப்படி நடப்பதில்லை. முகேஷ் அம்பானிக்கு மும்பையில் 27 மாடியில் ஒரு சொகுசு வீடு இருக்கிறது. உலகின் காஸ்ட்லியான குடியிருப்பு என இது கருதப்படுகிறது. இது இருந்தாலும், துபாயின் பால்ம் ஜுமைரா தீவுப்பகுதியில் சமீபத்தில் ரூ. 1,349 கோடியில் ஒரு வீடு வாங்கியுள்ளார் முகேஷ். அவரின் மகன் ஆனந்த் அம்பானி எட்டு மாதங்களுக்கு முன்பு இதே துபாயில் ரூ. 647 கோடியில் ஒரு வீடு வாங்கியுள்ளார். இப்படி வருமானத்தைச் சொத்துகளாக மாற்றுவதில்தான் சிலர் குறியாக இருக்கிறார்கள்.

வரி கிடைத்தால்...
* இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்புக்கு 1% வரி விதித்தால், பழங்குடியினர் சுகாதாரத் திட்டத்துக்கு ஓராண்டு செலவு செய்யலாம். அல்லது ஆரம்பப்பள்ளிகளில் காலியிடங்களை நிரப்பி 13 ஆண்டுகள் சம்பளம் கொடுக்கலாம். 5% வரி விதித்தால் கிடைக்கும் ரூ. 1.4 லட்சம் கோடியை வைத்து, விடுபட்ட அத்தனை குழந்தைகளையும் பள்ளிக்கு வரவழைத்துக் கல்வி கொடுக்கலாம்.
* இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களுக்கு 2% வரி விதித்தால், அரசுப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை மூன்றரை ஆண்டுகளுக்குச் செயல்படுத்தலாம்.