அரசியல்
அலசல்
Published:Updated:

பொது சிவில் சட்டம் முதல் சீன அத்துமீறல் வரை... அனலடித்த குளிர்காலக் கூட்டத்தொடர்!

நாடாளுமன்றம்
பிரீமியம் ஸ்டோரி
News
நாடாளுமன்றம்

, ‘தெளிவற்ற இந்தியில் கேள்வியெழுப்பிய உறுப்பினருக்கு, தெளிவற்ற இந்தியில் பதிலளிக்கிறேன்’ என்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

டிசம்பர் 7-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், டிசம்பர் 29-ம் தேதிவரை நடைபெறுகிறது. முன்னதாக, ‘நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். உடனே, ‘முழு ஒத்துழைப்பு வழங்க நாங்கள் தயார்’ என்று அறிவித்தார், காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே. அதனால், கடந்த ஆண்டு கொத்துக் கொத்தாக எம்.பி-க்களை சஸ்பெண்ட் செய்யும் அளவுக்கு அமளி நடக்கவில்லை என்றாலும், இந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் அரசியல் அனல் அடிக்கத்தான் செய்தது.

அங்கே நடந்த சில தெறிப்பான நிகழ்வுகள், ஒரு தொகுப்பாக இங்கே...

மாநிலங்களவைக்குப் புதிய தலைவர்!

வெங்கைய நாயுடு ஓய்வுபெற்றதை அடுத்து குடியரசுத் துணைத் தலைவராக ஜக்தீப் தன்கர் தேர்வுசெய்யப்பட்டார். ஆகஸ்ட் 11-ம் தேதியே அவர் பதவியேற்றுவிட்டார் என்றாலும், மாநிலங்களவை கூடிய டிசம்பர் 7-ம் தேதியே மாநிலங்களவைத் தலைவராக அவர் பதவியேற்றார்.

மோடி
மோடி

சாதி, மதம் குறிப்பிடக் கூடாது!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைந்தது பற்றி காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஆர்.ரெட்டி மக்களவையில் கேள்வி எழுப்பினார். அதற்கு தன் வழக்கமான கிண்டல் தொனியில், ‘தெளிவற்ற இந்தியில் கேள்வியெழுப்பிய உறுப்பினருக்கு, தெளிவற்ற இந்தியில் பதிலளிக்கிறேன்’ என்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ‘நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்பதால், எனது இந்திப் புலமையை அமைச்சர் விமர்சிக்கிறார்” என்றார் ஏ.ஆர்.ரெட்டி. அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, ‘அவையில் எந்த உறுப்பினரும் சாதியையோ, மதத்தையோ ஒருபோதும் குறிப்பிடக் கூடாது’ என்று எச்சரித்தார்.

ரூ.10 லட்சம் கோடி ஸ்வாஹா!

விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்‌ஷி போன்ற பெரும் தொழிலதிபர்கள் பல்லாயிரம் கோடி ரூபாயை வங்கிக் கடனாக வாங்கிவிட்டுக் கம்பிநீட்டிவிட்டார்கள். இத்தகைய கடன்களை அரசு தள்ளுபடி செய்துவிட்டது என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள். இந்தக் கூட்டத்தொடரிலும் இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டது. ஆனால், ‘கடன்களைத் தள்ளுபடி செய்யவில்லை. ரைட் ஆஃப்தான் செய்திருக்கிறோம்’ என்று நாடாளுமன்றத்தில் விளக்கினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். “என்ன பெயர் வைத்தால் என்ன... அந்த 8.5 லட்சம் கோடி ரூபாய் திரும்பி வருமா... வராதா?!” என்பதே எதிர்க்கட்சிகளின் கேள்வி.

வைகோ கோபம்!

பா.ஜ.க எம்.பி கிரோடி லால் மீனா, டிசம்பர் 9-ம் தேதி மாநிலங்களவையில் பொது சிவில் சட்டம் தொடர்பாக தனிநபர் மசோதாவை அறிமுகம் செய்தார். “நாடு முழுவதும் செயல்படுத்தும் வகையில் ஒரு பொது சிவில் சட்டத்தை உருவாக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும்” என இந்த மசோதா வலியுறுத்துகிறது. இந்த மசோதாவைக் கடுமையாக விமர்சித்தார், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ. அவர் பேசியபோது ஆளும் தரப்பிலிருந்து ஏராளமான குறுக்கீடுகள். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த வைகோ, “தேசபக்தி, உங்களுடைய ஏகபோக உரிமை அல்ல. உங்கள் அதிகப்படியான பெரும்பான்மையால் அனைத்தையும் அழித்துவிட முடியாது. இது போன்ற விவகாரத்தை எதிர்கொள்ளவேண்டியிருப்பதால் இந்த நாள் ஓர் அவமானகரமான, துயரமான நாளாகும்” என்றார் கோபமாக.

அமலாக்கத்துறை 3,000 ரெய்டுகள்!

அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமாருக்கு மூன்றாவது முறையாகப் பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்ட விவகாரம் உச்ச நீதிமன்றத்தால் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கும் நிலையில், ‘புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது’ என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங், “கடந்த எட்டாண்டுகளில் எதிர்க்கட்சியினருக்கு எதிராக 3,000 ரெய்டுகளை அமலாக்கத்துறை நடத்தியிருக்கிறது. அவர்களில், 23 பேர் மட்டுமே (0.5 சதவிகிதம்) தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், ரூ.2,000 கோடியை விழுங்கிவிட்டு தலைமறைவான நிரவ் மோடி விவகாரத்தில் அமலாக்கத்துறை ஏன் வாய் மூடியிருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஆளுங்கட்சி எம்.பி-க்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது.

பழைய ஓய்வூதியம் கிடையாது!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்களும், மாநில அரசு ஊழியர்களும் போராடிவருகிறார்கள். இது குறித்த கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கரத். “பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவது தொடர்பான ஆலோசனை எதுவும் மத்திய அரசிடம் இல்லை” என்று கைவிரித்தார்.

பொது சிவில் சட்டம் முதல் சீன அத்துமீறல் வரை... அனலடித்த குளிர்காலக் கூட்டத்தொடர்!

‘இமேஜைப் பாதுகாக்க பிரதமர் மௌனம்!’

அருணாசலப் பிரதேசத்தையொட்டிய இந்திய - சீன எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்கள் மோதிக்கொண்ட சம்பவம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. `இந்தச் சம்பவம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. மேலும், ‘பிரதமர் மோடி தனது இமேஜைக் காப்பாற்றிக்கொள்வதற்காக மௌனம் காக்கிறார்’ என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மக்களவை சபாநாயகர் நிராகரித்தார். டிசம்பர் 9-ம் தேதி நிகழ்ந்த அந்தச் சம்பவம் குறித்து, டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.

பிரதமர் மோடி வழக்கம்போல, அவை நடவடிக்கையை முழுமையாக கவனிக்கவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. அதே நேரத்தில் ராகுல் காந்தியோ, ‘பாரத் ஜோடோ’ யாத்திரை காரணமாக அவைக்கு வருவதையே தவிர்த்துவிட்டார்!