
இதில் ஓர் ஆறுதல் என்னவென்றால், இந்தியாவைத் தாண்டி அதிகமான விலையில் விற்பனையாகிவரும் நாடுகளும் உண்டு என்பதுதான்.
இந்தியாவில் ஒரு ரூபாய்க்கு என்ன கிடைக்கும்? 2K கிட்ஸுக்கு ஒரு ரூபாய் நாணயமே தெரிந்திருக்காது. ஆனால், தென்னமெரிக்காவில் உள்ள வெனிசுலா போன்ற நாடுகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோலே கிடைக்கும். இதே வெனிசுலாவில்தான் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நம் ஊரில் இலவச ரேஷன் அரிசி மாதிரி, அரசாங்க மானியமாக இலவச பெட்ரோல் வழங்கிக்கொண்டிருந்தார்கள். கம்பெனிக்குக் கட்டுப்படியாகவில்லை என்பதாலும், அண்டை நாடுகள் மூலம் பெட்ரோல் திருட்டு ஆபத்தைத் தடுக்கவும், அதன் பிறகு 1 ரூபாய்க்கு பெட்ரோலை விற்றது வெனிசுலா. சுமார் நான்கைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் 50 பைசா விலையேற்றம் கண்டிருக்கிறது அந்நாட்டில்.
ஆனால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 6 ரூபாய் விலை ஏறியிருக்கிறது இந்தியாவில். கடந்த மூன்று ஆண்டுகளில் பெட்ரோலின் விலை 148 முறையும், டீசலின் விலை 140 முறையும் இந்தியாவில் அதிகரித்துள்ளது.
உலகிலேயே கச்சா எண்ணெயின் சொர்க்க பூமி என்று அறியப்படுபவை வளைகுடா நாடுகள். ஈரான், ஈராக், குவைத், சவூதி என்று கேட்கும்போதே முதலில் நினைவுக்கு வருவது இந்த நாடுகளின் எண்ணெய் வளம்தான். ஆனால், சவூதி அரேபியாவைவிட அதிகமான எண்ணெய்க் கிணறுகளைக் கொண்டது வெனிசுலா. அதுதான் இப்போது உலகிலேயே பெட்ரோல் விலை குறைந்த நாடு. அதாவது, 50 ரூபாய்க்கு ஒரு பெரிய எஸ்யூவியின் டேங்க்கையே நிரப்பிவிடலாம் பாஸ்!

உலகளவில் எண்ணெய் வளம் நிறைந்த நாடுகளில் 4–வது இடத்தில் ஈரான், குறைந்த பெட்ரோல் விலை விற்பனையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல், இப்போது ரூ.4.82க்கு விலை ஏறியிருக்கிறது. 3-வதாக அங்கோலா, 4–வதாக அல்ஜீரியா, 5–வதாக குவைத் என்று எடுக்கப்பட்ட இந்தப் பட்டியலில் டாப்–10–ல் சரியாக இருப்பது மலேசியா. உங்கள் ஆர்வம் புரிகிறது… இதில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்? 110–வது இடத்தில் இருக்கிறது இந்தியா. இந்தக் கட்டுரை எழுதும் நாளில் தலைநகர் டெல்லியில் 105.85 ரூபாய்க்கு பெட்ரோலும், 93.53 ரூபாய்க்கு டீசலும் விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன. நீங்கள் படிக்கும்போது எம்புட்டு ஏறும் என்பது அரசாங்கத்துக்கே தெரியாது.
இதில் ஓர் ஆறுதல் என்னவென்றால், இந்தியாவைத் தாண்டி அதிகமான விலையில் விற்பனையாகிவரும் நாடுகளும் உண்டு என்பதுதான். இந்தியாவுக்கு அடுத்த நாடாக மாசிட்டோனியா மற்றும் ஜிம்பாப்வே இருக்கின்றன. பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, டென்மார்க் உள்ளிட்ட பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல் விலை கிட்டத்தட்ட ரூ. 135-க்கும் அதிகம். 167 நாடுகள் கொண்ட பட்டியலில் கடைசி இடத்தில் 186 ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டிருப்பது ஹாங்காங்.
பெட்ரோல் நம் நாட்டில் அதிக விலையில் விற்கப்படுவதற்கு முக்கியக் காரணம் வரிகள். பொதுவாக, சந்தையில் தேவைக்கேற்ப மற்றும் இருப்புக்கு ஏற்றவாறுதான் ஒரு பொருளின் விலை அமையும். ஆனால், பெட்ரோலைப் பொறுத்தவரை அப்படி இல்லாததுதான் விஷயம். சில நாடுகளில் விலையில் அரசின் கட்டுப்பாடு உண்டு. சில நாடுகளில் பெட்ரோல் விலை நிர்ணயம் செய்வது, அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. சந்தை நிலவரத்தின் அடிப்படையில்தான் விலை அமல்படுத்தப்படுகிறது. இந்தியா இந்தப் பட்டியலில் இருப்பதால், தினமும் பெட்ரோல் விலை மாற்றத்துக்கு உட்படுகிறது. எரிபொருள் விலை குறைய வேண்டும் என்றால், ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வந்தால் மட்டுமே இது சாத்தியம்! அப்படி வந்தால் நமக்கு எம்புட்டு லாபம் என்பதைப் பாருங்க!

ஜி.எஸ்.டி-க்குள் பெட்ரோல் விலை வந்தால்..?
கச்சா எண்ணெய்தான் பெட்ரோலின் மூலப்பொருள். உலகில் WTI (West Texas Intermediate) மற்றும் Brent என இரண்டு கச்சா எண்ணெய்தான் பெட்ரோல் தயாரிப்புக்கு முக்கியமான மூலப்பொருள்கள். WTI என்பது டெக்ஸாஸ் போன்ற வட அமெரிக்க நாடுகளில் இருந்து எடுக்கப்படுவது. Brent என்பது நார்வே, ஷெட்லேண்ட் தீவு போன்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து உருவாவது. இந்தியா போன்ற நாடுகளுக்கு Brent கச்சா எண்ணெய்தான் பெரும்பாலும் மூலம். Brent–டைவிட WTI–யின் பேரல் விலை எப்போதுமே சில டாலர் அதிகமாகவே இருக்கும்.
இன்றைய தேதியில் ஒரு பீப்பாய் (பேரல்) Brent கச்சா எண்ணெயின் அமெரிக்க டாலர் மதிப்பு 85.40 டாலர். இந்திய மதிப்பின் விலை 6,405 ரூபாய். ஒரு பேரல் என்பது 159 லிட்டர். அதாவது, ஒரு லிட்டர் கச்சா எண்ணெயின் விலை ரூ.40.28 காசு. அதை ஒரு லிட்டர் பெட்ரோலாகச் சுத்திகரிப்பதற்குச் சுமார் 4.10 ரூபாய் ஆகும் என்று வைத்துக்கொள்வோம். இதில் டீலர் கமிஷனாக 4.20 ரூபாய் ஆகலாம். இதைக் கூட்டினால், 48.58 ரூபாய். அதாவது, வரியே இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை இந்த 48.58 ரூபாய். இதற்கு 5%, 12%, 18% சதவிகிதத்தை விடுங்கள்… அதிகபட்சமான 28% ஜி.எஸ்.டி வரி போட்டால்கூட, ரூபாய் 13.60 தான் வரும். ஆக, மொத்தமாக சுமார் 62 ரூபாய்தான் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை வரும் என்பதுதான் உண்மை.

2020–21 நிதியாண்டில் மட்டும் எரிபொருள் மீது விதிக்கப்பட்ட வரிகளில் மட்டுமே சுமார் 2,93,000 கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு வருமானம் வந்திருப்பதை எப்படி பாஸ் விட முடியும்? மத்திய, மாநில அரசுகள் எல்லாமே பெட்ரோலை நம்பியே ஆள்கின்றன. இது ஜி.எஸ்.டி-யில் எடுபடாது என்பதுதான் உண்மை.