
சுற்றுலா வரும்போது புகைப்படங்கள் எடுப்பது போக, அந்தச் சுவர்கள், பாரம்பர்ய கட்டடங்களின் பின்னணியில் நின்று புகைப்படங்கள் எடுப்பதற்கென்றே குவிய ஆரம்பித்தனர்.
விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!
சுற்றுலாவின் இனிமையான தருணங்களைப் புகைப்படமாக்கி, அதன் மூலம் அந்த நினைவுகளை மீட்டெடுப்பது அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காகவே சுற்றுலாப்பயணிகள் ஒரு நகரத்துக்கு விரும்பி வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம்… அந்த நகரம் புதுச்சேரி.
இரவோ, பகலோ புதுச்சேரியின் பிரெஞ்சு டவுனில் இருக்கும் வீதிகளில் எப்போது சென்றாலும், சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்களாக நின்றுகொண்டு இளம்பெண்களும் இளைஞர்களும் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் அழகிய காட்சியைக் காண முடியும். “ச்சீஸ்ஸ்ஸ்..” என்ற செல்ஃபிக்கான குரல்களும், “ஸ்மைல் ப்ளீஸ்” என்ற குரல்களும் இந்த வீதிகளில் நாள் முழுக்கக் கேட்டுக்கொண்டேயிருக்கும். கையில் கேமராக்களுடன் அங்கு திரிபவர்கள், யாரையாவது புகைப்படம் எடுத்துக்கொண்டிருப்பார்கள்; அல்லது புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். புதுமண ஜோடிகளை அங்கு அழைத்துவரும் போட்டோகிராபர்கள் லைட்டிங் சகிதமாக அங்கு ஒரு மினி படப்பிடிப்பையே நடத்திக்கொண்டிருப்பார்கள். திரைப்படங்கள், விளம்பரங்கள், மாடல் படப்பிடிப்பு என திறந்தவெளி ஸ்டூடியோவாகவே மாறிவிட்டன அந்த வீதிகள்.

அப்படி என்ன இருக்கிறது அங்கு?
சுமார் 300 ஆண்டுகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரி, 1954-ம் ஆண்டு விடுதலை பெற்றது. பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியைவிட்டு வெளியேறி சுமார் 60 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனாலும் அவர்கள் விட்டுச் சென்ற மொழி, கலாசாரம், உணவு, உடை, விளையாட்டு போன்றவை இன்றும் புதுச்சேரி மக்களின் வாழ்வுடன் ஒன்றிக்கிடக்கின்றன. மது வகைகளைத் தாண்டி, சுற்றுலாப்பயணிகளை இன்றும் வசீகரித்துக்கொண்டிருப்பவை இவை. குறிப்பாக, கடற்கரையை ஒட்டிய நகரப் பகுதியில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு கம்பீரமாக நின்றுகொண்டிருக்கும் பாரம்பர்யக் கட்டடங்கள். பிரான்சுவா மார்த்தேன், புஸ்ஸி, லா தெ லொரிஸ்தோன், துய்மா, ரொமேன் ரொலான், துய்ப்ளெக்ஸ், லெபூர்தொனே என முன்னாள் பிரெஞ்சு கவர்னர்களின் பெயர்களில் நீண்டு அகன்றிருக்கும் வீதிகளில், இருபுறமும் பிரெஞ்சு கட்டடக் கலையைத் தாங்கி நிற்கும் கட்டடங்களும், கிறிஸ்தவ தேவாலயங்களும் உங்களை பிரான்ஸ் தேசத்தில் நிறுத்தும். `ஒயிட் டவுன்’ என்று இந்த இடம் அழைக்கப்பட்டாலும், அது பிரெஞ்சுக்காரர்கள் வகுத்திருந்த நிற வேறுபாட்டை அடையாளப்படுத்துவதால், தற்போது ‘பிரெஞ்சு டவுன்’ என்றும் அழைக்கப்படுகிறது.

மஞ்சள் நிறத்தில் அமைந்திருக்கும் அந்தக் கட்டடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் பெரிய பெரிய கண்ணாடி ஜன்னல்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கதவுகள், அதனருகில் நிறுத்தப்பட்டிருக்கும் சைக்கிள்கள் என ஒவ்வொரு வீதியும் உங்களைக் காட்சி மழையில் நனையவைக்கும். பிரெஞ்சு தூதரகம், பிரெஞ்சு ஆய்வகம், அலையான்ஸ் பிரான்சேஸ் உள்ளிட்ட பிரெஞ்சு அரசின் கட்டடங்கள் மட்டும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். அரவிந்தர் ஆசிரமம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கட்டடங்கள் வெளிர் சாம்பல் நிறத்தில் இருக்கும். இந்த வண்ணச்சுவர்கள்தான் சுற்றுலாப்பயணிகளை காந்தமாக இழுக்கின்றன. இந்தச் சுவர்களில் நின்று தனியாக செல்ஃபிக்களும், குடும்பமாக புகைப்படங்களும் எடுத்துக்கொள்வதில் பலரும் ஆர்வம்காட்ட ஆரம்பித்தனர். `எதிர் நீச்சல்', `மான் கராத்தே', `நானும் ரௌடிதான்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் மஞ்சள் மற்றும் சாம்பல் நிறச் சுவர்கள் எட்டிப்பார்க்க, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என்று தென்னிந்தியா முழுவதிலிமிருந்து இளைஞர்களும் இளம்பெண்களும் இனிப்பைக் கண்ட எறும்புகளாக புதுச்சேரியை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தனர்.

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #puducherry #pondicherrywhitetown #whitetown என்ற ஹேஷ்டேக்குகளுடன் மஞ்சள் மற்றும் சாம்பல் நிறச் சுவர்களின் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் குவிகின்றன. சுற்றுலா வரும்போது புகைப்படங்கள் எடுப்பது போக, அந்தச் சுவர்கள், பாரம்பர்ய கட்டடங்களின் பின்னணியில் நின்று புகைப்படங்கள் எடுப்பதற்கென்றே குவிய ஆரம்பித்தனர்.
சுற்றுலாப்பயணிகளின் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் புரிந்துகொண்ட தனியார் உணவகங்களும், விடுதிகளும் மஞ்சள் நிறங்களுக்கு மாறியதுடன், அங்கு செல்ஃபி எடுத்துக்கொள்வதற்காகவே ஓர் இடத்தைத் தனியாக ஒதுக்க ஆரம்பித்திருக்கின்றன. சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாய் இங்கு அரசின் முக்கிய வருமானங்களில் ஒன்று என்பதால், புதுச்சேரி அரசின் கட்டடங்களும் மஞ்சள் வண்ணத்தில் மூழ்கி கம்பீரம் காட்ட ஆரம்பித்திருக்கின்றன. அரசும், தனியார் நிறுவனங்களும் புதிதாக எழுப்பும் கட்டடங்களுக்கு மஞ்சள் வண்ணத்தையே தேர்வுசெய்வதால், மஞ்சள் நகரமாக மாறியிருக்கிறது புதுச்சேரி.
மஞ்சள் நகரத்துக்குக் கிளம்பிட்டீங்களா..?