அலசல்
Published:Updated:

ஹைவே ஹோட்டல்களில் சோதனை... நாடகமா... உண்மையான அக்கறையா?

ஹைவே ஹோட்டல்களில் சோதனை
பிரீமியம் ஸ்டோரி
News
ஹைவே ஹோட்டல்களில் சோதனை

சம்பந்தப்பட்ட ஹோட்டல்களுக்கு நோட்டீஸ் கொடுத்து, ‘10 நாள்களுக்குள் இவற்றையெல்லாம் மாற்றிக்கொள்ளுங்கள்

நெடுந்தூரப் பயணங்களின்போது பயணிகள் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கும், பசியாறுவதற்கும் குறிப்பிட்ட சில ஹோட்டல்களில் பேருந்துகளை நிறுத்துவார்கள். அப்படி அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படும் ஹைவே ஹோட்டல்கள் சுகாதாரமாக இல்லை என்பது மட்டுமின்றி, பர்ஸையும் பதம்பார்த்துவிடுகின்றன. அப்படி சில ஹோட்டல்கள் குறித்து ஜூ.வி-யில் நாம் எழுதிய கட்டுரையின் எதிரொலியாக விக்கிரவாண்டி, மாமண்டூர் உள்ளிட்ட இடங்களில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 12.12.2021 தேதியிட்ட ஜூ.வி-யில் ‘தரமற்ற உணவு... மூன்று மடங்கு விலை... அடாவடி ஹோட்டல்களுக்கு துணைபோகும் அரசு போக்குவரத்துக்கழகம்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதையடுத்து, டிசம்பர் 18-ம் தேதி விக்கிரவாண்டி, மாமண்டூர் உள்ளிட்ட இடங்களிலுள்ள ஹோட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின்போது உடனிருந்த போக்குவரத்துக்கழகப் பணியாளர்கள் தரப்பில் பேசியபோது, ‘‘செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூரில் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான இடத்தில்தான் தனியார் ஹோட்டல் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அங்கிருந்த ஹோட்டலிலும், விக்கிரவாண்டி அருகேயிருக்கும் பயணவழி ஹோட்டல்கள் மற்றும் விழுப்புரம் - ஒலக்கூர் வரை நெடுஞ்சாலை ஓரமாக இருக்கும் ஹோட்டல்களிலும் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, போக்குவரத்துக்கழகத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்ட ஹோட்டல்கள் ஹில்டா, அரிஸ்டோ, உதயா, ஜே.ஜே.கிளாசிக், ஜே.கிளாசிக், அண்ணா ஆகிய ஆறு பயணவழி ஹோட்டல்களில் இந்தச் சோதனை நடைபெற்றுள்ளது.

ஹைவே ஹோட்டல்களில் சோதனை... நாடகமா... உண்மையான அக்கறையா?

இந்தச் சோதனையில், செயற்கை நிறமூட்டிய சுமார் எட்டு கிலோ ஸ்நாக்ஸ்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாத சுமார் 20 கிலோ உணவுப் பொருள்கள், நாள்கள் கடந்த புளித்த இட்லி மாவு மற்றும் புரோட்டா சுமார் 40 கிலோ, அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் 12 கிலோ உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து அழித்திருக்கிறார்கள். ‘இனி இப்படி நடைபெறக் கூடாது’ என்று அந்த ஹோட்டல்களுக்கு நோட்டீஸ் அளித்திருப்பதோடு, ‘பொதுமக்கள் தங்களுடைய புகார்களை 9444042322 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் தெரிவிக்கலாம்’ என்று மேற்கண்ட ஆறு ஹோட்டல்களிலும் நோட்டீஸாக ஒட்டியுள்ளனர்’’ என்றார்கள்.

சோதனை குறித்து விழுப்புரம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மருத்துவர் சுகந்தனிடம் பேசினோம். ‘‘சம்பந்தப்பட்ட ஹோட்டல்களுக்கு நோட்டீஸ் கொடுத்து, ‘10 நாள்களுக்குள் இவற்றையெல்லாம் மாற்றிக்கொள்ளுங்கள்’ என்று உத்தரவிட்டிருக்கிறோம். அதை மீறும்போதுதான் அபராதம் விதிப்பது போன்ற அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாங்கள் ஒட்டியுள்ள வாட்ஸ்அப் எண்ணுக்கு பொதுமக்கள் புகார் அளித்தால், அடுத்த 48 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். உணவுப்பொருள்களின் விலைப்பட்டியலை ஒவ்வொரு ஹோட்டலிலும் ஒட்டிவைக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறோம். ‘கழிப்பிடங்கள் சரியில்லை’ எனப் புகார் இருந்தது. அதை நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள்தான் பார்க்க வேண்டும்’’ என்றார்.

ஆனால், ``இவையெல்லாம் நாடகம்’’ என்கிறார் தமிழ்நாடு மாநில போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளன (சி.ஐ.டி.யூ) பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார்... “இதெல்லாம் வெறும் நாடகம் என்பது எல்லோருக்குமே தெரியும். கணக்கு காட்டுவதற்காக இல்லாமல், இது போன்ற சோதனைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, விதிமுறைகளை மீறும் ஹோட்டல்கள்மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அது உண்மையான நடவடிக்கையாக இருக்க முடியும். இந்த ஹோட்டல்களில் உணவின் தரம் குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்யத்தான் அதிகாரிகள் சம்பளம் வாங்குகிறார்கள். அப்படியிருக்கும்போது, அவர்கள்தான் தங்கள் பணியைத் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். அதைவிடுத்து, புகார் வந்தால்தான் செல்வோம்; செய்தி வெளியானால்தான் ஆய்வு மேற்கொள்வோம் என்பதெல்லாம் ஊரை ஏமாற்றும் வேலை. பயணிகளின் ஆரோக்கியம் மற்றும் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இதைவிடக் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்” என்றார் ஆதங்கத்துடன்.

ஹைவே ஹோட்டல்களில் சோதனை... நாடகமா... உண்மையான அக்கறையா?

அதேசமயம், “மேற்கண்ட சோதனைகள் தொடரும்” என்று எச்சரித்திருக்கும் போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நம்மிடம், “ஹைவேக்களில் உள்ள சில பயணவழி ஹோட்டல்கள், போக்குவரத்துக்கழகங்களுக்குப் பணம் செலுத்துகின்றன. அதனால்தான், அந்த குறிப்பிட்ட ஹோட்டல்களில் நிறுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு தயாரிக்கப்படும் உணவு தரமானதாகவும், விலை நியாயமானதாகவும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் டெண்டரே கொடுக்கப்படுகிறது. போக்குவரத்துக்கழகத்துக்கு வருவாய் கிடைக்கிறது என்பதற்காகத் தரம் மற்றும் விலையில் சமரசம் செய்துகொள்ள முடியாது. தற்போது மேற்கொள்ளப்பட்ட சோதனைகளை அடுத்தடுத்து தொடரும். தவறு செய்யும் ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவற்றின் டெண்டர் கேன்சல் செய்யப்படும். இது பற்றி அனைத்துப் போக்குவரத்துக்கழக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

பயணிகளின் மனதையும் வயிற்றையும் குளிர்விப்பாரா அமைச்சர் என்பது போகப் போகத் தெரியும்!