
தமிழகம் முழுவதும் எங்கு மனை மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டாலும், ஒரு ஏக்கருக்கு 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை அமைச்சர் மூர்த்தி தரப்புக்கு லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கிறது.
தமிழ்நாடு அரசின் கஜானாவை நிரப்புவதில் மிக முக்கியமான துறை, பத்திரப்பதிவுத்துறை. ஒவ்வொரு நிதியாண்டிலும் அரசு நிர்ணயிக்கும் இலக்குகளையெல்லாம் சர்வ சாதாரணமாக எட்டக்கூடிய வருவாய் கொழிக்கும் துறையும் இதுதான். “வருமானத்தைப்போலவே முறைகேடுகளும் இந்தத் துறையில் கொடிகட்டிப் பறக்கின்றன” என்று குவிகின்றன புகார்கள். இதனால், “அரசுக்குக் கோடிகளில் இழப்பு ஏற்படுவது ஒருபுறம் என்றால்... அமைச்சர் தரப்புப் புள்ளிகள், அதிகாரிகள் எனத் தனிநபர்களின் பாக்கெட்டுகளுக்கும் பல கோடிகள் கை மாறுகின்றன” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ‘பத்திரப்பதிவு, புதியமனை மதிப்பு நிர்ணயம், அதிகாரிகள் இடமாற்றம் என அனைத்திலும் லஞ்சமும் ஊழலும் கரைபுரண்டு ஓடும் துறையாகப் பத்திரப்பதிவுத்துறை இருக்கிறது’ என விவகாரங்கள் விஸ்வரூபமெடுக்கின்றன.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், கடலூர், தஞ்சாவூர், வேலூர் ஆகிய ஒன்பது மண்டல அலுவலகங்களும், 54 பதிவு மாவட்ட அலுவலகங்களும், 576 சார்பதிவாளர் அலுவலகங்களும் செயல்பட்டுவருகின்றன. ஒரு வசூல் நெட்வொர்க், இந்த ஒன்பது மண்டல அலுவலகங்கள் மற்றும் 54 பதிவு மாவட்டங்களுக்கும் தலா ஒருவர், நான்கு சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஒருவர் என ஏறத்தாழ 200 பேரைக் களமிறக்கி வைத்திருக்கிறது. இவர்களை வழிநடத்துவதே ‘துறையின் தலை தரப்பு ஆட்கள்தான்’ என்று கண்ணீர் வடிக்கிறார்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர். என்னதான் நடக்கிறது பத்திரப்பதிவுத்துறையில்... விசாரணையில் இறங்கினோம்!

லஞ்ச மதிப்பு நிர்ணயக் குழு... கலெக்ஷனில் அமைச்சரின் பி.ஏ!
மனைப்பிரிவுகளுக்கான புதிய லே-அவுட் உருவாக்கும்போது, அதற்குச் சந்தை மதிப்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். ‘கைடுலைன் வேல்யூ’ எனப்படும் இந்த வழிகாட்டி மதிப்பு, சர்வே எண்கள் அடிப்படையிலும் பகுதிகளின், தெருக்களின் மதிப்பின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகின்றன.
முன்பு, இந்த வழிகாட்டி மதிப்பை சார்பதிவாளரின் பரிந்துரை அடிப்படையில், மாவட்டப் பதிவாளர் முடிவுசெய்வார். இந்த அதிகாரத்தை, பதிவாளர்கள் தவறாகப் பயன்படுத்தி (ஒருவருக்குச் சாதகமாக) மனைகளுக்குக் குறைவான வழிகாட்டி மதிப்பை நிர்ணயித்து, அரசுக்குப் பெரும் வருவாய் இழப்புகளை ஏற்படுத்திவருவதாகப் புகார்கள் எழுந்தன. தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின்னர், மனைப் பிரிவுகளுக்கு மதிப்பு நிர்ணயம் செய்ய மாவட்டப் பதிவாளர்களுக்கு இருந்த அதிகாரம் மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக, `மனை மதிப்பு நிர்ணயக்குழு’ என்ற புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் முடிவுகளில் திருப்தி ஏற்படவில்லையென்றால், சம்பந்தப்பட்ட நபர், மேல்முறையீடு செய்ய ஏதுவாக ‘மனை மதிப்பு நிர்ணய மேல்முறையீட்டுக்குழு’ ஒன்றும் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த நடைமுறைகள் அமலுக்கு வந்த பிறகுதான் பதிவுத்துறையில் முறைகேடுகள் பன்மடங்கு அதிகரித்திருப்பதாகக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர்கள்.

இந்த முறைகேடுகள் குறித்து, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்புத் தலைவர் ஹென்றி நம்மிடம் பேசும்போது, “தமிழகம் முழுவதும் எங்கு மனை மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டாலும், ஒரு ஏக்கருக்கு 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை அமைச்சர் மூர்த்தி தரப்புக்கு லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கிறது. சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகாவுக்கு உட்பட்ட 2.5 ஏக்கர் நிலத்துக்கு மனை மதிப்பு நிர்ணயம் செய்ய, எங்கள் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் விண்ணப்பித்தார். ஆனால், மனை மதிப்பு நிர்ணயக்குழு நிலத்தை மதிப்பீடு செய்தும்கூட, ஆவணங்கள் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை. இது குறித்து சார்பதிவாளர் அலுவலகத்தில் விளக்கம் கேட்கச் சென்றபோது, அங்கிருந்த புரோக்கர் ஒருவர் ஒரு செல்போன் நம்பரைக் கொடுத்து அதில் பேசச் சொல்லியிருக்கிறார்.
அந்த எண்ணில் பேசியவர், தன்னை அமைச்சரின் பி.ஏ என்று அறிமுகம் செய்ததோடு, 2.5 ஏக்கருக்கு 6 லட்ச ரூபாய் பணம் கேட்டிருக்கிறார். அந்த நம்பர் அமைச்சர் மூர்த்தியின் பொலிட்டிக்கல் பி.ஏ-வான முருகேசனுடையது. இது குறித்து மாவட்டப் பதிவாளரிடம் முறையிட்டபோது, ‘பேசாமல் கேட்டதைக் கொடுங்கள்’ என்று கூறியிருக்கிறார். அமைச்சர் அலுவலகத்திலிருந்து ‘ஃபைலை மூவ் செய்யுங்கள்’ என்று பதிவாளர்களுக்கு மெசேஜ் வந்தால்தான், ஆவணங்கள் பதிவே செய்யப்படுகின்றன. இதே நிலைமைதான் எல்லா சார்பதிவாளர் அலுவலகத்திலும் இருக்கிறது. மேலும், எல்லா மாவட்டங்களிலும் மனை மதிப்பு நிர்ணயத்துக்கு, அமைச்சர் மூர்த்தி தரப்பு அறிவுறுத்தலின் பெயரில்தான் லஞ்சம் வாங்கப்படுவதும் தெளிவாகிறது. இது குறித்த அனைத்து அழைப்பு விவரங்களும் ஆதாரங்களாக என்னிடம் இருக்கின்றன.
ஏற்கெனவே, மனை மதிப்பு நிர்ணயத்துக்கு சார்பதிவாளர், மாவட்டப் பதிவாளர் என எல்லாத் தரப்புக்கும் லஞ்சம் கொடுத்தால்தான் வேலையே நடக்கும். தற்போது புதிய நடைமுறையாக அமைச்சர் தரப்புக்கும் லஞ்சம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. 10 ஏக்கருக்குக் குறைவான நில மதிப்பு நிர்ணயத்துக்கு, ஏக்கருக்கு 3 லட்ச ரூபாயும், 10 ஏக்கருக்கு மேல் ஒவ்வொரு ஏக்கருக்கும் 2.5 லட்ச ரூபாயும் லஞ்சமாக அவர்களுக்கு அழவேண்டியிருக்கிறது. இப்படியொரு பகல் கொள்ளையை எங்காவது பார்க்க முடியுமா..?” என்றார் கொதிப்புடன்.
“அமைச்சர் அலுவலகத்திலிருந்து மிரட்டுகிறார்கள்!”
தொடர்ந்து பேசிய ஹென்றி, “லஞ்சம் எதுவும் கொடுக்க முடியாது என்று சொல்பவர்களுக்கு, சட்டவிதிகளுக்கு மாறாக மனையின் மதிப்பை அதிகமாகக் கூட்டிப் பழிவாங்குகிறார்கள். உதாரணமாக, கும்பகோணம் பதிவு மாவட்டத்தில், ஒருவருடைய 68 சென்ட் நிலத்துக்கு அநியாய மதிப்பை நிர்ணயித்திருக்கிறார்கள். அந்தக் கிராமத்தின் உச்சபட்ச மதிப்பே சதுர அடிக்கு 550 ரூபாய்தான். ஆனால், லஞ்சம் கொடுக்க மறுத்ததால், சதுர அடிக்கு 1,110 ரூபாயாக உயர்த்தி மனை மதிப்பை நிர்ணயித்திருக்கிறார்கள். இதனால், அவ்வளவு அதிக விலைக்கு அந்த இடத்தை விற்க முடியாமல் போவதோடு, அரசுக்குக் கூடுதல் வரி செலுத்தவேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து, மேல்முறையீட்டு அதிகாரியான டி.ஐ.ஜி-யிடம் சென்றால், ‘எங்களால் ஒன்றும் செய்ய முடியாது’ என்று கைவிரிக்கிறார். சமீபத்தில் ஒரு மண்டல டி.ஐ.ஜி பெரும் அச்சத்தோடு ‘அமைச்சர் அலுவலகத்திலிருந்து என்னை மிரட்டுகிறார்கள்’ என்று வெளிப்படையாகவே எங்களிடம் கூறினார்.
இது ரியல் எஸ்டேட் உரிமையாளர்களின் பிரச்னை மட்டுமல்ல. சாதாரண மக்களும் இதில் பாதிக்கப்படுகிறார்கள். உதாரணமாக, ஒரு தனிநபர் தனது 24 சென்ட் நிலத்தை மனைப் பிரிவாக மாற்ற நினைத்தால், அதற்கும் அமைச்சர் தரப்புப் புள்ளிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. மேலும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் பிடுங்கப்படும் லஞ்சத் தொகை கடைசியில் மனையை விலை கொடுத்து வாங்கும் சாதாரண மக்களின் தலையில்தான் விடியும்” என்றார் ஆதங்கத்துடன்.
கோடிகளில் கொள்ளை... பங்கு போடும் நெட்வொர்க்!
இது குறித்து நேர்மையான சில பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் நம்மிடம் பேசும்போது, “முறைகேடுகளைத் தடுக்க நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதாகவும், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கூறிவருகிறார் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி. ஆனால், எவ்வளவு வெளிப்படையான பத்திரப்பதிவாக இருந்தாலும், பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதைத் தடுக்க முடியவில்லை என்பதுதான் நிதர்சனம்.
உதாரணமாக, மதுரை மண்டலத்தில் ஒவ்வொரு பதிவு மாவட்டத்திலும், பதிவாளருக்கும் சார்பதிவாளருக்கும் லஞ்சம் வாங்கித் தரும் புரோக்கர்களாக ஒருசில பத்திர எழுத்தாளர்களே இருக்கின்றனர். பதிவுசெய்யப்படும் சொத்துகளின் மதிப்புக்கேற்ப 10,000 முதல் ஒரு லட்ச ரூபாய் வரை லஞ்சப் பேரம் நடைபெறுகிறது. இந்த லஞ்சப் பணத்தை கலெக்ஷன் ஏஜென்ட்டுகளாகச் செயல்படும் வசூல் நெட்வொர்க்கைச் சேர்ந்தவர்கள் பத்திரப்பதிவு நடைபெறும் நாள்களில் வசூலிக்கிறார்கள். கோடிகளில் குவியும் இந்தத் தொகை, மாதம்தோறும் பங்கு பிரிக்கப்பட்டு, வசூல் நெட்வொர்க் புள்ளிகள், பதிவுத்துறை உயரதிகாரிகள் எனப் பட்டுவாடா செய்யப்படுகிறது. இதில் ஒரு ரிஜிஸ்ட்ரேஷன்கூட மிஸ் ஆகாது. ஒவ்வொரு மண்டலத்திலும் எவ்வளவு விளைநிலங்கள், தரிசு நிலங்கள், கட்டுமானத்துக்குத் தயாரான நிலங்கள், கட்டடங்கள் இருக்கின்றன என்ற மொத்த டேட்டாக்களையும் வசூல் நெட்வொர்க்கைச் சேர்ந்தவர்கள் தங்கள் விரல்நுனியில் வைத்திருக்கிறார்கள். பெருநகரங்களை ஒட்டி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் எந்தக் கட்டடம் அல்லது நிலத்தைப் பதிவுசெய்யச் சென்றாலும், ஸ்டாம்ப் செலவைக் குறைக்க வழிகாட்டி, மதிப்பில் பாதிக்குப் பாதி குறைத்துத்தரும் வேலைகள் நடக்கின்றன. குறிப்பிட்ட ஒரு தொகையை வசூல் நெட்வொர்க்கைச் சேர்ந்தவர்களுக்கு லஞ்சமாக வழங்கினால் போதும். இந்தப் பணத்தை கலெக்ட் செய்ய சில சார்பதிவாளர்களே ஆன் டூட்டியில் உலவுகிறார்கள்” என்றனர் ஆற்றாமையுடன்.
இது குறித்து மாவட்டப் பதிவாளர்கள் சிலரிடம் விசாரித்தோம். “பத்திரப்பதிவு தொடர்பாக எந்த ஆவணம் அலுவலகத்துக்கு வந்தாலும், உடனே அதை போட்டோ எடுத்து, வசூல் நெட்வொர்க் புள்ளிகள் பார்வைக்கு அனுப்பிவிட வேண்டும் என்பது வாய்மொழி உத்தரவாகக் கடைப்பிடிக்கப் படுகிறது. முன்பெல்லாம் சார்பதிவாளர்கள், மாவட்டப் பதிவாளர்களே பத்திரப்பதிவு தொடர்பான முடிவுகளை எடுக்க முடியும். ஆனால், தற்போது வசூல் நெட்வொர்க் புள்ளிகள் ஒவ்வொரு ஃபைலையும் கண்காணிக்கிறார்கள். இதனால், எங்கள் மேசைகளில் இருக்கும் ஃபைலின் நம்பரைக் குறிப்பிட்டு, ‘இதை இன்னைக்கு மூவ் பண்ணுங்க’ என்று எங்களுக்கு ஆர்டர் போடுகிறார்கள். அலுவலகத்திலிருக்கும் கம்ப்யூட்டர் தரவுகள், பதிவுத்துறை இணையதளத்தின் லாகின் ஐடி என அனைத்து டேட்டாக்களும் இவர்களுக்குத் தெரியும். இவர்கள் மூலம் ஒரு ஃபைல் மூவ் ஆகிறது என்றால், அதில் 5 முதல் 10 சதவிகிதம் என லட்சக்கணக்கில் கமிஷன் பெறுகிறார்கள். இவர்களை மீறிச் செயல்படும் அதிகாரிகளை டிரான்ஸ்ஃபர், சஸ்பெண்ட் எனத் தூக்கியடிக்கிறார்கள். இவர்களின் டார்ச்சர் தாங்க முடியாமல், சமீபத்தில்கூட ஒரு டி.ஐ.ஜி லாங் லீவில் சென்றுவிட்டார்” என்றனர்.
டாப் 30 பதிவு அலுவலகங்களில் போஸ்ட்டிங்... 2 கோடி ரூபாய் ரேட் கார்டு!
சீட்டுக் குலுக்கி விளையாடுவதுபோல, தங்களுக்கு ஒத்துவராதவர்களுக்கு ட்ரான்ஸ்ஃபர் போடுவது... பதறி அடித்துக்கொண்டு அவர்கள், ‘சம்பந்தப்பட்டவரை’ நேரில் வந்து கவனித்தவுடன், டிரான்ஸ்ஃபரை ரத்துசெய்வது என்று தங்களின் சில்லறைச் செலவுகளுக்காக வசூல் நெட்வொர்க் புள்ளிகள் அதிகாரிகளைப் பந்தாடுகிறார்கள். ‘கேட்ட இடத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்க 20 லட்சம், விரும்பாத ட்ரான்ஸ்ஃபரை ரத்துசெய்ய 10 லட்சம்’ என்று பக்கா டேரிஃப் போட்டு வேலை செய்வதாகச் சொல்கிறார்கள் துறை வட்டாரத்தில். “இந்த இடமாறுதல் விஷயங்களை நெல்லையைப் பூர்வீகமாகக்கொண்ட அமைச்சரின் மற்றொரு உதவியாளராக இருக்கும் அரசு அதிகாரி ஒருவர்தான் கவனித்துக்கொள்கிறார்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய பதிவுத்துறை ஐ.ஜி அலுவலகத்தினர் சிலர், ``தமிழ்நாட்டின் ஒன்பது மண்டலங்களில் சென்னை மண்டலமும், கோவை மண்டலமும்தான் செல்வாக்குமிக்கவை. சென்னை மண்டலத்தின் டாப் 30 சார்பதிவாளர் அலுவலகங்களில் போஸ்ட்டிங் வாங்க எப்போதுமே கடும் போட்டி நிகழும். இதற்காக 2 கோடி ரூபாய் வரைக்கும்கூட ரேட் கார்டு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கடந்த அ.தி.மு.க ஆட்சியைவிட இது மூன்று மடங்கு அதிகம். இந்தப் பேரத்தை அதிகரிக்க, பல அலுவலகங்களில் சார்பதிவாளர்களே நியமிக்கப்படவில்லை. அங்கெல்லாம் கிளார்க் மூலமே பத்திரப்பதிவுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
ஏ, பி, சி அலுவலகங்கள்... லகானை வைத்திருக்கும் அதிகாரி!
பத்திரப்பதிவுத்துறை தன்வசம் வந்ததும் அமைச்சர் பி.மூர்த்தி செய்த முதல் காரியமே, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வருவாய் அதிகமுள்ள பகுதிகளில் பணியாற்றிய மாவட்டப் பதிவாளர், சார்பதிவாளர் பட்டியலைக் கையிலெடுத்ததுதான். உடனே, வருவாய் அடிப்படையில் சார்பதிவாளர் அலுவலகங்கள் ஏ, பி, சி என மூன்று கேட்டகிரிகளாகப் பிரிக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது. இதில், ஏ பிரிவில் சுமார் 100 அலுவலகங்களும், பி பிரிவில் 150 அலுவலகங்களும், சி பிரிவில் மீதமுள்ள அலுவலகங்களும் வருகின்றன. இவற்றில் ஏ பிரிவைக் குறிவைத்த வசூல் நெட்வொர்க் புள்ளிகள், கடந்தகாலங்களில் பல கோடி ரூபாய் முறைகேடாகச் சம்பாதித்த அதிகாரிகளைக் கட்டம்கட்டத் தொடங்கினர். அவர்களை மிரட்டிப் பணியவைத்து, பெருமளவு பணம் கறக்கப்பட்டது.
இந்த மொத்தக் காரியங்களையும் ஒருங்கிணைத்து, கண்காணித்து வழிநடத்துவதற்கான ‘லகான்’ கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த கூடுதல் அதிகாரி ஒருவரின் கையில் இருக்கிறது. அடிக்கடி அவர் சர்ச்சைகளில் சிக்கினாலும், தன் அரசியல் செல்வாக்கு, பணபலம் ஆகியவற்றால் தப்பித்து வசூல் நெட்வொர்க் புள்ளிகளுக்குச் சேவை செய்துகொண்டிருக்கிறார்” என்றனர்.

“ஆதாரத்தைக் கொடுங்கள், நடவடிக்கை எடுக்கிறேன்!”
வரிசைகட்டும் இது போன்ற பத்திரப்பதிவுத்துறை மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகள் குறித்தும், துறை அமைச்சர் மூர்த்தியிடம் விளக்கம் கேட்டோம். “இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, போலிப் பத்திரப்பதிவுகளை உடனடி ரத்துசெய்ய வழிவகை செய்திருக்கிறோம். பதிவுத்துறையில் மேற்கொண்ட சீர்திருத்தங்களால், கடந்த ஆண்டைவிட கிட்டத்தட்ட 2,000 கோடிக்கு மேல் வருவாய் அதிகரித்திருக்கிறது. அதேநேரத்தில், முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள்மீது எந்தத் தயக்கமும் இல்லாமல் நடவடிக்கை எடுத்துக்கொண்டேதான் இருக்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் மட்டும் 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். அதன் காரணமாக ஏற்பட்ட காலியிடத்தை நிரப்பவும் நடவடிக்கை எடுத்துவருகிறோம். மனை மதிப்பு நிர்ணயத்துக்கு ஒரு ஏக்கருக்கு 3 லட்சம் ரூபாயை என் உதவியாளர் முருகேசனோ அல்லது வேறு யாருமோ லஞ்சம் பெற்றார்கள் என்பதற்கான ஆதாரத்தை வைத்திருப்போர் என்னிடம் கொடுங்கள். சம்பந்தப்பட்ட நபர் யாராக இருந்தாலும், அவர்மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார்.
குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் அமைச்சரின் பி.ஏ முருகேசனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “பத்திரப்பதிவுத்துறையில் பணிகள் அனைத்தும் சட்டவிதிகளுக்கு உட்பட்டுத்தான் நடக்கின்றன. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சிலர் தவறான கருத்தைப் பரப்புகிறார்கள்” என்றார் சுருக்கமாக.
கடந்த டிசம்பர் 1-ம் தேதி மனை மதிப்பு நிர்ணயம் செய்ய, திருச்சி மாவட்டப் பதிவாளர் ராஜாவுக்கு ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்ட சார்பதிவாளர் பாஸ்கரனை, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள். மற்ற துறைகளில் 5,000 - 10,000 ரூபாய்களில் லஞ்சம் வாங்குகிறார்கள் என்றால் பத்திரப்பதிவுத்துறையிலோ குறைந்த லஞ்சமே லட்சத்தில்தான் தொடங்குகிறது. கூட்டிக்கழித்துப் பார்த்தால், ஆண்டுக்குத் தலைசுற்றவைக்கும் அளவுக்குக் கோடிகளில் புரள்கின்றன பத்திரப்பதிவுத்துறையின் லஞ்ச ஊழல் கணக்குகள்.
என்ன செய்யப்போகிறார் முதல்வர்?