கட்டுரைகள்
Published:Updated:

ரிமோட் வாக்குப்பதிவு... இந்தியாவின் தேர்தல் பிரச்னைகளுக்கு இது தீர்வா?

ரிமோட் வாக்குப்பதிவு
பிரீமியம் ஸ்டோரி
News
ரிமோட் வாக்குப்பதிவு

‘எந்த ஒரு வாக்காளரும் தேர்தல் நடைமுறையில் விடுபடக் கூடாது' என்ற இலக்குடன், உள்நாட்டு புலம்பெயர்ந்தோர் குறித்த கமிட்டி ஒன்றைத் தேர்தல் ஆணையம் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தது

இந்தியாவின் எந்தத் தேர்தலை எடுத்துக்கொண்டாலும், அதில் மூன்றில் ஒருவர் வாக்களிப்பதில்லை. 70% வாக்குப்பதிவு என்றால், அதுவே அதிகம் பேர் வாக்களித்த தேர்தலாகக் கருதப்படுகிறது. வெறும் 10 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த எம்.எல்.ஏ-க்கள் பலர் உண்டு. ஒருவேளை இன்னும் 15 பேர் கூடுதலாக வாக்களித்திருந்தால் முடிவே மாறியிருக்குமோ என்ற சந்தேகம் பலருக்கு எழும்.

வேலை, தொழில் என்று பல்வேறு காரணங்களுக்காக, சொந்த ஊரிலிருந்து புலம்பெயர்ந்திருக்கும் பலர் தேர்தல்களில் வாக்களிக்க முடிவதில்லை. அவர்கள் சென்று தங்கியிருக்கும் ஊர்களிலும், தங்களை வாக்காளர்களாகப் பதிவுசெய்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. வாக்குப்பதிவு குறைவதற்கு முதன்மையான காரணம் இதுதான்.

வேலை நிமித்தமாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், அங்கிருந்தே ஆன்லைன் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யலாமா என்று ஒருபக்கம் ஆலோசித்து வருகிறது இந்தியத் தேர்தல் ஆணையம். இன்னொரு பக்கம் இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்திருக்கும் பலரும், அங்கிருந்தே தங்கள் சொந்தத் தொகுதியில் வாக்களிக்கவும் ஏற்பாடுகள் நடந்துவந்தன.

அதற்காக இப்போது ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்யவிருக்கிறது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, சொந்த ஊரிலிருந்து அதே மாநிலத்துக்குள்ளும், வேறு மாநிலங்களிலும் புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் 45.36 கோடிப் பேர். இந்த 11 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கலாம். தேர்தல் நாளில் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று ஜனநாயகக் கடமையாற்ற இவர்களுக்கு வசதி இல்லாமல் இருக்கலாம். விடுமுறை போதாமல் இருக்கலாம். காரணங்கள் எதுவாக இருப்பினும், அவர்கள் அங்கிருந்தே தங்கள் சொந்தத் தொகுதியில் வாக்களிக்க வசதி செய்துதர முனைகிறது தேர்தல் ஆணையம்.

இதற்காக Multi-Constituency Remote Electronic Voting Machine (RVM) எனப்படும் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தேர்தல் ஆணையம் பரிசோதனை முறையில் உருவாக்கியிருக்கிறது. இதன் செயல்பாடு குறித்து விளக்குவதற்காக, 57 அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளை ஜனவரி 16-ம் தேதி அழைத்திருக்கிறது. அதன் செயல்பாட்டைப் பார்த்துவிட்டு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துகளை ஜனவரி 31-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்.

ரிமோட் வாக்குப்பதிவு... இந்தியாவின் தேர்தல் பிரச்னைகளுக்கு இது தீர்வா?

‘எந்த ஒரு வாக்காளரும் தேர்தல் நடைமுறையில் விடுபடக் கூடாது' என்ற இலக்குடன், உள்நாட்டு புலம்பெயர்ந்தோர் குறித்த கமிட்டி ஒன்றைத் தேர்தல் ஆணையம் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தது. அந்த கமிட்டி 2016-ம் ஆண்டில் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதில் தெரிவிக்கப்பட்ட யோசனைகள் எதுவும் ஏற்கத்தக்கதாக இல்லை. தேர்தல் நடைமுறையின் ரகசியத்தை மீறுவதாக அவை இருந்தன. சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட நடைமுறைகளும் சொல்லப்படவில்லை.

இதைத் தொடர்ந்து பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட். எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து, தேர்தல் ஆணையம் இந்தப் புது இயந்திரத்தை உருவாக்கியிருக்கிறது. வழக்கமான வாக்குப்பதிவு இயந்திரத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமே இது!

புலம்பெயர்ந்து வாழ்வோர் மற்றும் தேர்தல் நாளில் சொந்த ஊர் திரும்பி வாக்களிக்க முடியாதவர்கள் போன்றோர் முன்கூட்டியே ஆன்லைன் மூலமோ அல்லது அருகிலுள்ள தேர்தல் அலுவலர் அலுவலகத்திலோ, ‘நான் வெளியூர் அல்லது வெளிமாநிலத்தில் இருந்தபடி சொந்தத் தொகுதியில் வாக்களிக்க விரும்புகிறேன்' என்று பதிவு செய்துகொள்ள வேண்டும். அப்படிப் பதிவு செய்துகொள்பவர்களுக்காக, ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்கொண்ட தனி வாக்குப்பதிவு மையம் ஏற்படுத்தப்படும். ஒரே வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் 72 தொகுதிகளுக்கு வாக்களிக்க முடியும் என்பது இதன் சிறப்பு. இயந்திரத்தில் வேட்பாளர்கள் மற்றும் சின்னங்கள் ஒட்டப்படாது. ஒவ்வொரு வாக்காளருக்கும் ஏற்றபடி அது மாறும். வழக்கமான சோதனை நடைமுறைகளை முடித்துவிட்டு, வாக்காளர் தனது வாக்கைச் செலுத்தலாம். ஒவ்வொரு தொகுதிக்குமான வாக்குகள் தனித்தனியாக வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் சேமிக்கப்படும்.

ரிமோட் வாக்குப்பதிவு... இந்தியாவின் தேர்தல் பிரச்னைகளுக்கு இது தீர்வா?

ஒருவேளை இதைப் பயன்படுத்துவது என்ற முடிவு ஒருமித்து எடுக்கப்பட்டால், இந்த நடைமுறைக்கு ஏற்றபடி தேர்தல் சட்டத்திலும் திருத்தங்கள் செய்யப்படவேண்டியிருக்கும்.

கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், பல்வேறு அரசியல் கட்சிகள் அதற்குள்ளாகவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.

* புலம்பெயர்ந்தவர் என்பதற்கான வரையறை என்ன... யார் யாரையெல்லாம் இப்படி வாக்களிக்க அனுமதிப்பது... அது தொடர்பான முடிவை எடுப்பது யார்?

* வாக்காளரை எப்படி உறுதி செய்வது... உதாரணமாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு புலம்பெயர் தொழிலாளி, தமிழகத்திலிருந்து வாக்களிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் பிரதிநிதித்துவம் இல்லை. பூத் ஏஜென்ட்டாக இங்கு யார் இருப்பார்... தேசியக் கட்சிகளைத் தவிர மாநிலக் கட்சிகள் அனைத்தும் இது போன்ற தருணத்தில் பலவீனப்பட்டுவிடும்.

* தன் தொகுதியில் இருக்கும் வாக்காளர்களை நெருங்கி ஒரு வேட்பாளர் பிரசாரம் செய்துவிட முடியும். வாக்குறுதிகளை அளிக்க முடியும். எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் புலம்பெயர் வாக்காளரை அவர் எப்படித் தொடர்பு கொள்வார்... செல்வாக்குள்ள, வசதி படைத்த வேட்பாளர்களும், பெரிய கட்சிகளின் வேட்பாளர்களும் எப்படியோ அவர்களைத் தொடர்புகொள்ளலாம். சிறிய கட்சிகள் மற்றும் எளிய வேட்பாளர்களுக்கு இது சாத்தியமில்லை. தேர்தல் களத்தின் சமநிலை இதனால் பாதிக்கப்படும்.

* ஏற்கெனவே வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படும் நிலையில், இந்த நடைமுறையையும் சந்தேகத்துடனேயே அரசியல் கட்சிகள் பார்க்கின்றன. தொழில்நுட்ப ரீதியாக இதன் செயல்பாடுகளின் நம்பகத்தன்மையை எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கின்றன. தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது என்பதை நிரூபிக்காவிட்டால், இது போன்ற புதுமைகள் வெறுமனே பேச்சளவில் மட்டுமே நின்றுவிடும்.