சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

புனல் பரந்து பொன் கொழிக்கும் காவிரி!

மேட்டூர்
பிரீமியம் ஸ்டோரி
News
மேட்டூர்

ஆற்றினால் உருவாகும் தீவுக்கு அரங்கம் என்று பெயர். ஆற்றிடைக்குறை நிலம். அதுதான் முதல் அரங்கம் எனப்பொருள்படும் ஆதிரங்கம்.

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

“ஆறு காண்பதில் தங்களுக்கு ஏனோ தீராத விருப்பம்?” என்று அண்மையில் ஒருவர் வினா எழுப்பியிருந்தார். எளிமையான கேள்விதான் அது என்றாலும் ஆழ்ந்து எண்ணிப் பார்க்க வைத்துவிட்டது. ஆம், நாம் அடிக்கடி ஆறுகளைத்தாம் பார்க்கச் செல்கிறோம். ஆற்றில் வெள்ளம் என்ற செய்தி தோன்றினால்கூட நின்று காண்கிறோம். செல்லும் வழியில் ஓர் ஆற்றுப்படுகையில் செந்தண்ணீர் கலங்கலாக ஓடுவதைப் பார்த்துவிட்டால் இனம்புரியாத மனநிறைவு. ஆறுகளின்மீது நமக்குப் பன்னெடுங்காலப் பற்று.

கொங்கு நாட்டைச் சேர்ந்த எனக்குக் காவிரி ஆற்றங்கரை வாழ்வு தலையில் எழுதப்பட்டிருக்கிறது. வாழ்வின் முன்பின் காலங்கள் அங்குமிங்கும் அலைக்கழித்தாலும் காவிரிக்கு அருகிலோ அல்லது அதன் துணையாற்றங்கரையிலோ வாழும்படிதான் நேர்ந்தது. அதனால் இச்சிறுவாழ்வு காவிரியோடு பின்னிப் பிணைந்தது. மேட்டூர் அணை நிரம்பினால் அளவில்லாத மகிழ்ச்சி. அணை திறக்கப்பட்டால் கூண்டுப்பறவை சிறகை விரித்ததுபோன்ற களிப்பு. ஆறு ஏரி குளங்களை அண்டி வாழ்பவர் யாரெனினும் நான் கூறுகின்ற நன்னிலைகள் புரியும்.

காவிரியைத் தலைமுதல் அடிவரை காணவேண்டும் என்பது என் நெடுநாள் அவா. ஆற்றின் முதற்சொட்டு திரள்கின்ற தலைக்காவிரி தொடங்கி அதன் கடைசித் திவலை கடலில் கலக்கின்ற காவிரிப் பூம்பட்டினம் வரைக்கும் கரையொட்டிச் சென்று காணவேண்டும். கரைகளில் உள்ள படித்துறைதோறும் கால் நனைக்கவேண்டும். ஓரிடத்திற்குச் செல்வதும் காண்பதும் வண்டிகள் சாலைகள் பெருகிவிட்ட இக்காலத்தில் எல்லார்க்கும் இயலும்தான். நூறாண்டுகட்கு முன்பு அவ்வாறு செல்வது அருஞ்செயல். அங்கங்கே வண்டி பிடித்து இடையிடையே தங்கித்தான் செல்ல வேண்டும். காவிரியை அப்போதும் அப்படிக் கண்டார்கள். ‘நடந்தாய் வாழி காவேரி' என்று நாத்தழும்பேற வாழ்த்தினார்கள்.

மேட்டூர் அணை
மேட்டூர் அணை

எல்லாக் காலத்திலும் ஆற்றினைக் காண வாய்க்கும்தான். நீரோட்டம் இல்லாதபோது ஒரு நதியைக் காண்பது ஏமாற்றமாக முடியலாம். ஆறு என்பது நீரும் மீனும் ஈரமும் நகர்வும் உயிர்ப்புமாம். ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும்போது ஆற்றினைக் காணாதிருத்தல் நலம். அதனால்தான் எப்போது காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டாலும் அதனைத் தேடிச் சென்று கண்டு வருகிறேன். தலைக்காவிரியிலிருந்து பவானி எனப்படுகின்ற பூவானி ஆறு கலக்கும் கூடுதுறை வரைக்கும் பன்முறை கண்டாயிற்று. இவ்வாண்டின் வெள்ளக் காலத்தில் எஞ்சிய பகுதிகளைப் பூம்பட்டினம் வரைக்கும் போய்ப் பார்க்கும் படலம். காவிரியை அதன் தலைமுதல் கால்வரை கண்ட நிறைவு.

தலைக்காவிரியிலிருந்தே தொடங்குவோம். பெருமலைத்தொடர்களின் பல்லடுக்கக் குவியல் அது. பழைய தலைக்காவிரி என்பது சிறிய குளக்கட்டுமானம். ‘மலரே குறிஞ்சி மலரே’ பாடலில் இடம்பெற்றிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவ்வளவு எளிமையாக இருந்த இடம் அது. இன்று அப்பகுதியினை நன்கு எடுப்பித்துக் கட்டிவிட்டார்கள். பளபளப்புக் கற்கள் பாவப்பட்டு வானுயர்ந்த நுழைவாயிலோடு விளங்குகிறது. சுற்றிலுமுள்ள மலைத்தொடர்களில் அப்பகுதியே உச்சி எனக் கொள்ளத்தக்கது. அங்கே எந்நேரமும் முகில் படிவதும் நீர்த்திரள்வதுமாக இருக்கும். வெண்மேகம் சூழ அதன் சிகரத்தில் நின்றிருப்பது ஒரு கொடுப்பனை. அங்குக் கட்டப்பட்டுள்ள குளத்திலிருந்து ததும்பி வழிவதுதான் காவிரியின் முதல் நீர். அங்கிருந்து மலைச்சரிவுகளில் வடிந்து வடிந்து இறங்குகிறது. பேருருப் பிறப்புகளின் தோற்றம் மீச்சிறு வடிவமே. சிற்றோடைத்தடம் போட்டு மலையிறங்கத் தொடங்கும் அதுவே பிற்பாடு வழிநடையில் பெருகி மாநிலத்தின் உயிர்களுக்கு அமுதூட்டும் தாய்.

குடகு மலைகளிலிருந்து படிப்படியாக இறங்கி இறங்கி வருகையில் நூற்றுக்கணக்கான சிற்றோடைகள் சேர்கின்றன. அவை யாவும் ஒன்றாய்க் கலந்து நடந்து ஆறாகத் திரள்கின்றன. ஏமாவதி, இலக்குமணதீர்த்தம் ஆகிய இரண்டு துணையாறுகள் கலந்ததும் காவிரி பேரழகு பெற்றுவிடுகிறாள். மலை இறங்கி மண்ணில் நடக்கிறாள்.

கிருஷ்ணராஜசாகரம் அணை
கிருஷ்ணராஜசாகரம் அணை

காவிரியின் முதற்பேரழகு கடைவிரிக்கப்பட்டிருப்பது கண்ணம்பாடி கிருஷ்ணராஜசாகரம் அணையில்தான். காட்டாறாக இண்டு இடுக்குகளுக்குள் புகுந்து வரும் காவிரி அவ்விடத்தில் கடலாகத் தேங்குகிறது. எழுபது எண்பதுகளின் திரைப்படங்களைக் காட்சிவளப்படுத்திய அழகிய பூங்காவும் நீரூற்றுகளும் பன்னிற விளக்கமைப்புகளும் உண்டு. அவ்விடத்திலிருந்து தடைதாண்டி நகரும் காவிரி உடனே இரண்டு கிளையாகப் பிரிந்து மீண்டும் கூடுகிறது.

ஆற்றினால் உருவாகும் தீவுக்கு அரங்கம் என்று பெயர். ஆற்றிடைக்குறை நிலம். அதுதான் முதல் அரங்கம் எனப்பொருள்படும் ஆதிரங்கம். காவிரியின் முதல் அரங்கத்தில் எண்ணற்ற வரலாற்று நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. அங்கேதான் திப்புசுல்தானின் தலைநகரம் சீரங்கப்பட்டணம் அமைந்துள்ளது. அம்மன்னனின் கோட்டையும் அரண்மனையும் இருந்தன. திப்பு சுல்தானை வீழ்த்துவதற்கு ஆங்கிலப் படைகள் காவிரியைத்தான் சூழ்ந்து கடந்தன. சீரங்கப்பட்டணம் சென்றால் மிகுந்த கவனத்தோடு காவிரியில் நீராடுவதற்கு இறங்க வேண்டும். ஓரடித் தண்ணீர்தான் செல்கிறது என்றாலும் நூறடிக்கு இழுக்கும் வலுவோடுதான் நகரும். அரங்கநாதன் திட்டு என்கின்ற பறவைகள் புகலிடமும் அங்குண்டு. அங்குள்ள வானளாவிய மரங்களில் கண்டந்தாவும் பெருநாரைகளும் கொக்குகளும் பெருங்கோழியினங்களும் கூடுகட்டிக் கூவிக்கொண்டிருக்கும். பாறைகள் தோறும் முதலைகள் வெய்யில் காயும்.

ஒகேனக்கல்
ஒகேனக்கல்

சீரங்கப்பட்டணத்தின் தென்காவிரியில் பழைமை மாறாத படித்துறைகள் உள்ளன. பார்த்தவுடனேயே உங்களுக்குத் தெரிந்துவிடும். காதல் ஓவியத்தில், கண்ணுக்கு நூறு நிலவா பாடலில், பசும்பொன்னில் எனப் பாரதிராஜா படங்களில் இடம்பெற்ற நீர்த்துறைகளும் படிக்கட்டுகளும். வெள்ளம் பெருகியோடும்போதுகூட அவ்விடம் அமைதியின் மென்னகர்வால் சூழப்பட்டதுபோல் நிறைந்திருக்கும். முதல் அரங்கத்திற்குள்ளேயே அரங்கநாதற்கு அழகிய திருக்கோவில் உண்டு. திப்பு சுல்தானின் நூலகம் இருந்து எரிந்த மாமாளிகையின் இடிவுகளைக் காணலாம்.

மீண்டும் இணையும் காவிரி திடுதிடுவென்று பள்ளத்தாக்கில் பாய்ந்து வருகிறது. திருமுக்கூடல் நரசிபுரம் என்னுமிடத்தில் மேற்குத் தொடர்மலையிலிருந்து இன்னொரு வெள்ளத்தைச் சேர்த்தெடுத்துவரும் கப்பினி ஆற்றோடு கலக்கிறது. செய்திகளில் கபினி ஆறு என்று சொல்வார்கள். அது தவறு. கப்பினி என்றே சொல்ல வேண்டும். காவிரியில் எவ்விடத்தில் வேண்டுமானாலும் நீராடலாம் என்று நினைத்துவிடாதீர். கடல் தலைவனைக் காண வேண்டும் என்று கடிவிருப்பில் நூறு குதிரைகளின் இழுப்புத் திறனோடு பாய்வது கருநாடகக் காவிரி. திருமுக்கூடலில் காவிரியில் இறங்குவதைப் பற்றிய கற்பனைகூடக் கூடாது. இங்கே ஒன்றைத் தவறாமல் குறிப்பிட வேண்டும். கருநாடகம் என்ற பெயரே காவிரியால் ஏற்பட்டதுதான். கருமை நாடு அகம். கருமை என்பதற்கு வளமை என்ற பொருள். காவிரியால் வளங்கொழிக்கும் அகநாடு அது.

தழைக்காடு வருவதற்குள் இடையில் ஒரு கற்கட்டணை இருக்கிறது. அங்கேதான் பல பாடற்காட்சிகள் படமாக்கப்பட்டன. கல்நீட்டங்களிடையே வெண்ணீர்த் திவலைகளாய்த் தண்ணீர் தெறிக்கின்ற இடம். அதனைத் தாண்டி வந்துவிட்டால் புகழ்பெற்ற தழைக்காடு. காவிரி வெள்ளத்தில் எங்கேயும் நம்பிக் குளித்துவிடமுடியாது. ஒரேயொரு இடம்தான் விதிவிலக்கு – அது தழைக்காடு. `முதல் மரியாதை’ திரைப்படத்தில் பரிசல் துறையாகக் காட்டப்படுமே, அவ்விடம்தான் தழைக்காடு. எல்லாரும் கண்டிருப்பர் என்ற அடையாளத்திற்காகவே திரைப்படங்களைச் சொல்கிறேனே தவிர, அவ்விடம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. காவிரிக் கரையோரத்தில் எவ்விடம்தான் வரலாற்றை விட்டு விலகி நடந்தது? பல நூற்றாண்டுகள் அப்பகுதிகளைப் பேரரசர்களாகவும் சிற்றரசர்களாகவும் ஆண்ட கங்கர்களின் தலைநகரம். சோழனிடம் பிணக்குற்றுச் சென்ற இராமனுசர் எடுப்பித்த கீர்த்தி நாராயணப் பெருமாள் கோவில் அங்குள்ளது. ஆற்றிலிருந்து ஒதுங்கிச் சேர்ந்த மணல் திட்டு மலைபோல் குவிந்திருக்கும். தழைக்காட்டுப் பகுதியிலுள்ள ஆற்றுக்குள் இறங்கி அக்கரை வரைக்கும் நடந்தே செல்லலாம். ஆற்றுக்குள் மாட்டு வண்டியை இறக்கி ஓட்டிச் சென்றிருக்கிறார்கள். மணல் புதையாது. தண்ணீரும் இழுக்காது. தேங்கியதுபோலும் நகரும் அடக்கக் காவிரி.

மேட்டூர்
மேட்டூர்

தழைக்காடு தாண்டியதும் வருவது கொள்ளேகாலம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்த வட்டம். இன்றைக்கும் இங்குள்ள உழவர்கள் பலர் கொங்குப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள். கொள்ளேகாலத்தைத் தாண்டியதும் இரண்டு கிளையாகப் பிரிகிறது ஆறு. இங்கே இன்னோர் அரங்கம். இன்னொரு பெருமாள் கோவில். அதனை மத்திய அரங்கம் என்று அழைக்கிறார்கள். காவிரி இரண்டு பிரிவாகப் பிரிந்து பரசுக்கி, ககனசுக்கி என்று அருவியாக வழிந்திறங்குகிறது. அவ்விரண்டும்தான் சிவசமுத்திரம் அருவியென அறியப்படும். பெருவெள்ளக் காலத்தில் அவ்விரண்டு அருவிகளையும் காணக் கண்கள் போதா. மலையை அடித்துப் புரட்டும் பேரொலியோடு வெள்ளியுருகி வழிவதுபோல் பொங்கி இறங்கும்.

சிவசமுத்திரம் அருவிக்கும் ஒகேனக்கல் அருவிக்கும் இடையில் பாயும் காவிரிதான் காட்டுக்குள் பாய்ந்து வருவது. காட்டுத் தடத்தில் ஆழமான பாறைக் குடைவுகளை உருவாக்கியிருக்கிறது. ‘ஆடு தாண்டும் காவிரி’ எனப்படுகின்ற ‘மேகதாட்டு’ப் பகுதியில் பன்னிரண்டு அடிகளே அகலம். ஆற்றினை ஆடு தாண்டும். காட்டுக்குள் வரும் காவிரிக்குத்தான் பேருயிர்ப்பு சேர்கிறது எனலாம். ஒகேனக்கல் என்ற இடத்திற்கு வருகையில் ஆற்றுத்தடம் அரிபட்டுக் குழிந்துவிட்டது. அங்கே அருவியாக மீண்டும் விழுகிறது. புகைக்கல் என்று பொருள்படுவது ஒகேனக்கல். ஆறு இறங்குமிடம் நீர்ப்புகையெழுந்து கண்மறைப்பது. அங்கிருந்து தென்மேற்காகச் சிறுதொலைவு கடந்து மேட்டூர் நீர்த்தேக்கத்தை அடைகிறது. முற்காலத்தில் சீதாமலை, பாலமலை ஆகிய இருமலைகளுக்கிடையே காவிரி புகுந்து வந்தது. அவ்விருமலைகளுக்கிடையே கட்டப்பட்டதுதான் மேட்டூர் அணை.

மேட்டூர் அணையை நீங்கி நடக்கும் காவிரி கூடுதுறை என்னுமிடத்தில் பூவானி ஆற்றினைச் சேர்த்துக்கொள்கிறது. காவிரியின் துணையாறுகளில் பூவானிதான் பெரியது. நீலமலைத் தொடர்களில் திரண்டு மோயாறு உள்ளிட்ட பல சிற்றாறுகளைச் சேர்த்துக்கொண்டு மதிப்புடைய துணையாய்ச் சேர்கிறது பூவானி.

கொடுமுடி
கொடுமுடி

மேட்டூரிலிருந்து கொடுமுடிவரைக்கும் காவிரியின் பாய்ச்சல் தெற்குத் திக்காய் இருக்கிறது. வழியில் சில தடுப்பணைகள், நீர்மின் திட்டக் குறுக்கணைகள் உள்ளன. சேலம் மாவட்டத்திலுள்ள ஆலைகள் பலவற்றுக்கும் காவிரியிலிருந்தே நீர் செல்லும். அதற்குச் சிறிதும் குறைவைக்காதபடி வழியோர நகரங்களின் கழிவுகளும் தொடர்ந்து கலக்கின்றன. சில ஆண்டுகளாய் ஆண்டுதோறும் ஏற்படும் பெருவெள்ளத்தால் தனைச் சேரும் கழிவுகளைக் கழுவிக்கொண்டு உயிர்த்திருக்கிறாள் காவிரியாள்.

காவிரியின் குறுக்கே மின்னெடுப்புக்காகக் கட்டப்பட்டுள்ள குறுக்கணைகளில் கொடுமுடிக்கு முன்புள்ள சோழசிராமணி என்ற ஊரிலுள்ள அணை பேரழகுடையது. தண்ணீரைத் திறக்கும் இழுவைக் கதவுகளும் ஆற்றைக் கடக்கும் பாலமும் அடுத்தடுத்து இருப்பது. நம் காலடியே பேராறு ஒன்று பெருஞ்சிலிர்ப்போடு சீறிப் பாயும் காட்சியைக் காணலாம். அதுகாறும் தெற்காகப் பாயும் காவிரி, கொடுமுடியருகே கிழக்காகத் திரும்புகிறது. இந்தத் திருப்பத்தைக் கண்ணெதிரே காணலாம். கொடுமுடிப் படித்துறையில் வருங்காவிரி இடப்புறத்தும் போகுங்காவிரி வலப்புறத்தும் ஓடும். ‘செங்குணக்கு ஒழுகும்’ என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. குணக்கு என்றால் கிழக்கு. செங்குணக்கு என்றால் நேர்கிழக்கு.

அடுத்து இரண்டு துணையாறுகள் கலக்கின்றன. ஒன்று நொய்யல், இன்னொன்று ஆன்பொருநை எனப்படுகின்ற அமராவதி. திருமணிமுத்தாறும் காவிரியோடு வடக்கிலிருந்து வந்து கலக்கிறது. கரூரைத் தாண்டியதும் காவிரியின் வளர்ச்சி முழுநிறைவடைகிறது. மலைத்தடத்தில் ஆடு தாண்டும் காவிரியாய் இருந்தது குளித்தலைக்கு அருகே அகன்ற காவிரி ஆகிறது. இருகரைகளுக்கிடையே ஏறத்தாழ ஒன்றரை கிலோமீட்டர்த் தொலைவு. பழைய வரைபடங்களை எழுதிய ஆங்கிலேயர்கள் இவ்விடத்துக் காவிரியை ‘கிரேட் காவேரி’ என்று குறிப்பிடுகிறார்கள். குளித்தலை தொடங்கி முக்கொம்பு வரைக்குமுள்ள காவிரிப் பேராறு. இருகரைகளையும் தொட்டுவருமளவுக்கு வெள்ளம் வந்தால் ஊழியைப்போல் இருக்கும். வழியெங்கும் புகழ்பெற்ற நீர்த்துறைகள் பல இருக்கின்றன.

கல்லணை
கல்லணை

திருச்சிராப்பள்ளிக்கு முன்பாக இரண்டாகப் பிரியும் காவிரி மூன்றாம் தீவினை அமைக்கிறது. அதுதான் பாதரங்கம் எனப்படுகின்ற திருவரங்கம். ஆற்றிடைக்குறை நிலத்தின் வடக்காகச் செல்லும் பெரும்பிரிவு கொள்ளிடம். வெள்ளத்தை எல்லாம் கொள்ளும் பெருவழித்தடம். தெற்காக நகர்வதுதான் மூத்த பொன்னியாம் காவிரி.

அந்தக் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டிருப்பது கல்லணை. ஓர் ஆற்றினை வரலாற்றுக் காலம் நெடுக எப்படிக் கையாள்வது என்று காட்டிச் சென்றவர்கள் காவிரியாற்று மன்னர்களாம் சோழர்கள். உள்ளங்கைதான் கல்லணை என்று கொண்டால் அதன் ஐந்து விரல்களும் கல்லணையிலிருந்து பிரிந்து செல்லும் ஆறுகளும் கால்வாய்களுமாம். பெருவிரலாய்க் கொள்ளிடப் பிரிவு. சுட்டுவிரலாய்க் காவிரி. நடுவிரலாய் வெண்ணாறு. மோதிரம் மற்றும் சுண்டுவிரல்களாய் இரண்டு கால்வாய்கள். பறவைப் பார்வையில் எடுக்கப்பட்ட கல்லணைக் காட்சித் துண்டுகள் இணையமெங்கும் இறைந்து கிடக்கின்றன. அந்தப் பேரழகைத் தவறவிடாது தேடிப் பாருங்கள். அதனால்தான் ஆங்கிலேயர்கள் கல்லணையை ‘கிராண்ட் அணைக்கட்டு’ என்றே வழங்கினார்கள். அதனை அவர்களால் வெறும் ‘ஸ்டோன் அணைக்கட்டு’ என்று பார்க்க முடியவில்லை.

அண்மைப் பயணத்தில் நான் கல்லணையில் காலார அலைந்தேன். நான் சென்றபோது வெள்ளத்தின் சீற்றம் சிறிது தணிந்திருந்தது என்றாலும் அணை நிரம்பித் ததும்பியபடியே இருந்தது. காவிரியில் திறந்துவிடப்பட்ட நீர்ச்சீற்றம் இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. கொள்ளிடப் பிரிவில் கொட்டிக்கிடந்த நுண்மணலை மேவிச் சென்ற பச்சைத் தண்ணீரில் பாய்ந்து குளிக்கலாம் என்று தோன்றிற்று. ஆனால் அணையருகில் வெளியேறும் நீரோட்டத்தில் முடிந்தவரை கால்நனைப்பதைக்கூடத் தவிர்க்கவேண்டும்.

தலைக்காவிரி  - காவிரிப் பூம்பட்டினம்
தலைக்காவிரி - காவிரிப் பூம்பட்டினம்

கல்லணையிலிருந்து காவிரிப்பூம்பட்டினம் செல்கின்ற பெருவழி சோழர்கள் நடந்து களைத்தது. சங்கச் சோழர்களின் ஆட்சியைப் பரப்பியபடி மாட்சிமை பெற்றது. நீங்கள் செல்லும் வழி காவிரியின் கரையோரத்தது. அந்தத் தடத்தில் பகலிலும் சென்றேன். நள்ளிரவிலும் சென்றேன். நள்ளிரவில் செல்கையில்தான் காவிரியாள் நம் காதருகே நுழைந்து எதையோ சொல்லிச் செல்கிறாள். அதனைப் பொருளுணர்ந்து பெறும் புலமைதான் நமக்கு இல்லை.

ஐயாறுகள் பாய்கின்ற ஊராம் திருவையாற்றில் தியாகையர் நினைவிடத்தருகே ஒரு படித்துறை இருக்கிறது. இதற்கும் மேல் ஓரடி வெள்ளம் உயர்ந்தாலும் கரைமீறிவிடும் என்னுமாறு அங்கே காவிரி பொங்கியோடிற்று. அந்தப் படித்துறையில் பரிதி சாயும் வேளையில் நீரைக் குடைந்து குடைந்து குதித்துக் குளித்தேன். உள்ளூரார் பலரும் வருவதும் நீராடி நகர்வதுமாய் இருந்தனர். இவ்வாண்டு இவ்வெள்ளம் முன்னாடியே வந்துவிட்டது என்றார்கள்.

கல்லணையிலிருந்து செல்கின்ற காவிரியும் அதன் கிளையாறுகளும் உலகின் மிகச்சிறந்த வேளாண்மை மண்டலத்தை உருவாக்குகின்றன. வானளாவிய மரங்களுக்கிடையே வீடுகளும் பள்ளிகளும் உள்ளூர் அரசுக் கொட்டகைகளும் காணப்படுகின்றன. எம்மூர்ப் பகுதியில் வீட்டுச் சுவரை ஒரு மரக்கிளைத்துணுக்கு முட்டி நின்றாலே வெட்டு வெட்டு என்று கதறுகின்ற அண்டை வீட்டாரே உள்ளனர். அங்கே வாழ்வும் வளமும் நீராலும் நீர்வளர்க்கும் இயற்கையாலும் ஒருங்கமைந்திருக்கின்றன.

கும்பகோணத்திலுள்ள கோவில் ஒவ்வொன்றிலும் காவிரி வளர்த்த கலைச்செப்பம் தென்படுகின்றது. பெருவேந்தர்களின் அழியாப் புகழைத் தாங்கி நிற்கிறது தாராசுரக் கோவில். மயிலாடுதுறையில் காவிரியைப் பார்க்கையில் வாரி வழங்கிய வள்ளல் ஒருவர் நொடிப்புற்றுச் செல்வதுபோல் தோன்றியது. உலகெங்கும் தேடினாலும் தன்னீர்மை முழுவதையும் மக்கள் பயன்படும்படி பரவச் செய்து பயன்நல்கும் ஒரே ஆறாகக் காவிரி இருக்கக்கூடும். அதன் பாசனப்பெருமை வெறும் வயற்காட்டுக் கணக்கீடுகளால் அளக்கப்படுவதன்று. பன்னெடுங்காலம் நின்று வழங்கிய நீடிப்பினால் அளக்கப்படவேண்டியது.

காவிரிப் பூம்பட்டினத்தில் காவிரியின் கடல் கலப்பினைக் கண்டேன். ஏறத்தாழ 770 கிலோமீட்டர் தொலைவு ஓடிவந்த பேராறு மிகுந்த களிப்புடன் கடல் தலைவனைக் கலக்கிறாள். மனநிறைவுடன் அவ்விடத்தின் காவிரி நீரைக் கையள்ளிக் குடித்தேன். தலைக்காவிரியில், சீரங்கப்பட்டணத்தில், தழைக்காட்டில், கூடுதுறையில், கொடுமுடியில், குளிர்தண்டலையில், திருவையாற்றில் பருகிய நீரின் மாறாத சுவை. அவ்விடத்தில்தான் பல்லாயிரம் மக்கள் கூடிய இந்திரவிழா நடைபெற்றதா? கடலை அளந்த நூறு கலங்கள் நங்கூரமிட்டு நின்ற சோழப் பெருவேந்தர்களின் துறைமுகப்பட்டினம் இயங்கியதா? நம்ப முடியவில்லை. என்ன செய்வது? வரலாற்றுப் பாத்திரத்தை நிறைவேற்றியவுடன் ஒவ்வொரு நகரமும் தனது ஒளிமயமான பொற்காலத்தை இழந்துவிடுவதுண்டு. அந்தப் பட்டியலில் காவிரி கடல்புகும் பட்டினமாம் புகாரும் இடம்பெற்றுவிட்டது.

இந்தப் பயணத்தில் நான் ஊன்றிக் கவனித்த இரண்டு செய்திகளைச் சொல்ல வேண்டும். காவிரியாறு நீர்ப்பெருக்கு உடையதாக இருக்கும்போது எவ்விடத்திலும் மெதுவாகச் செல்வதில்லை. அதன் வெள்ளம் விரைந்து நகர்கிறது. காவிரியின் வெள்ளம் பிற பேராறுகளோடு ஒப்பிடுகையில் மிகுந்த விரைவுடையது. ஆடி வரும் காவிரி, ஓடி வரும் காவிரி, பொங்கி வரும் காவேரி என எல்லாத் தொடர்களும் அதனை உணர்த்துகின்றன. மகாநதியிலோ கோதாவரியிலோ கழிமுக மாவட்டங்களில் அவற்றின் விரைவு பெரிதாக இல்லை. தேங்கி நின்று நகர்கின்றன. காவிரி சீறிக்கொண்டு நகர்கிறது. அதன் படுகைப் பகுதிகள் பெரும்பாலான நாள்களில் வெள்ளமின்றிக் காய்ந்துவிடுகின்றன. அந்த விரைவினை அளந்தெடுத்த முற்கால மன்னர்கள் அதே விரைவில் பணியாற்றி ஆற்று வளத்தைப் பயன்படுத்த வேண்டியவர்கள் ஆனார்கள்.

இன்னொன்று - ஆற்று வெள்ளத்தில் நுண்மையான மண்வளம் கலந்து வருகிறது. கலப்பில்லாத தூய தண்ணீர் என்று சொல்ல முடியாது. பொன்னிறமான வெள்ளம். அதன் பொருட்டே பொன்னி எனப்பட்டாள் என்பார்கள். அந்த மண்துகள் கரைந்த தண்ணீர் விளைநிலங்களை மேலும் மேலும் வளமாக்குகிறது. முப்போக வேளாண்மை நடக்கும்போதும் வயல்வளத்தில் குறைவதில்லை. தொடர்ந்து வளமையேற்றம் நிகழ்கிறது. மண்ணின் விளவாற்றல் கூடுகிறது. இதுதான் காவிரி தருகின்ற பெரும்பயன்.

அதனால்தான் ஓயாது நில்லாது மக்களை வாழ்விக்கின்ற காவிரி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் உயிர்த்திருக்கிறது. அதன் உயிர்ப்பும் அது ஊட்டும் உயர்பண்புகளும் அதனை அண்டி வாழும் நமக்குள்ளும் என்றும் வாழட்டும்.