அலசல்
Published:Updated:

‘ஏ ப்ளஸ்’ ரௌடிகள் எஸ்கேப்! - கைது நடவடிக்கைகள் கண்துடைப்பா?

கைது நடவடிக்கைகள் கண்துடைப்பா?
பிரீமியம் ஸ்டோரி
News
கைது நடவடிக்கைகள் கண்துடைப்பா?

இந்த ‘ஸ்டார்மிங் ஆபரேஷன்’ நடந்து கொண்டிருக்கும்போதே, சென்னை எம்.ஜி.ஆர் நகரில் காளி என்கிற ரெளடி வெட்டிக் கொல்லப்பட்டார்.

`தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே சட்டம், ஒழுங்கு நிலைமை மோசமாகிவிடும்’ என்ற கருத்து பொதுவாக இருக்கிறது. அதற்குக் கடந்தகாலச் சம்பவங்களும் துணை செய்கின்றன. ‘தினகரன்’ பத்திரிகை எரிப்பு, நில அபகரிப்பு மோசடிக் குற்றச்சாட்டுகள், கந்துவட்டி வசூல், மதுரை பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டியின் அட்டகாசங்கள் எனத் தலைவிரித்தாடிய சட்டம், ஒழுங்குப் பிரச்னையால், 2006-11 தி.மு.க ஆட்சியே திக்கித் திணறியது. அது போன்ற சம்பவங்கள் தன் தலைமையிலான ஆட்சியில் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், சமீபத்திய வன்முறைச் சம்பவங்கள் ஸ்டாலினுக்குள் கவலையை ஏற்படுத்தியிருக்கின்றன. சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும்போதே, செப்டம்பர் 10-ம் தேதி வாணியம்பாடியில், மனிதநேய ஜனநாயகக் கட்சிப் பிரமுகர் வசீம் அக்ரம் கொல்லப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாகச் சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மோசமாகி விட்டதாகக் குற்றம்சாட்டினார். ‘இந்தச் சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என முதல்வர் உறுதியளித்த அடுத்த பத்து நாள்களிலேயே, திண்டுக்கல் செட்டிநாயக்கன் பட்டியில் நிர்மலா தேவி என்கிற பெண் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார். நெல்லையில் மூன்று நாள்களில் நிகழ்ந்த ஐந்து கொலைச் சம்பவங்கள் தமிழகத்தை தகிக்கவைத்தன.

 ‘ஏ ப்ளஸ்’ ரௌடிகள் எஸ்கேப்! - கைது நடவடிக்கைகள் கண்துடைப்பா?

‘ஸ்டார்மிங் ஆபரேஷன்’ வெறும் கண்துடைப்பா?

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., ‘அமைதியான சூழல் ஏற்படவில்லை யென்றால் பொருளாதார வளர்ச்சி இருக்காது. சட்டம், ஒழுங்கில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்’ என்று அறிக்கை அளிக்கும் அளவிலிருக்கிறது நிலைமை. கைமீறிச் செல்லும் சட்டம், ஒழுங்குப் பிரச்னையால், சமீபத்தில் சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி சைலேந்திர பாபு மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், ரெளடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தடதடத்தது போலீஸ் வட்டாரம். இந்த ‘ஸ்டார்மிங் ஆபரேஷ’னுக்கு அதிகாரிகள் மத்தியில் வைக்கப்பட்ட பெயர் ‘ஆபரேஷன் டிஸ் ஆர்ம்.’

செப்டம்பர் 23-ம் தேதி இரவில் தொடங்கிய இந்த ஆபரேஷனில், 3,325 பேர் கைது செய்யப்பட்டிருக் கிறார்கள். நாட்டுத் துப்பாக்கிகள், கத்தி, அரிவாள்கள் என ஆயிரக்கணக்கில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைநகரான சென்னையில் 2,439 ரௌடிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களில் 257 ரௌடிகள் கைதுசெய்யப்பட்டனர். காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை பரபரப்பைக் கிளப்பியிருந்தாலும், மற்றொரு பக்கம் விமர்சனங்களையும் உருவாக்கியிருக்கிறது.

“இந்த ‘ஸ்டார்மிங் ஆபரேஷன்’ நடந்து கொண்டிருக்கும்போதே, சென்னை எம்.ஜி.ஆர் நகரில் காளி என்கிற ரெளடி வெட்டிக் கொல்லப்பட்டார். போலீஸ் மீது ரெளடிகளுக்கு பயமில்லாததையே இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. தமிழகம் முழுக்க இருக்கும் ஆபத்தான முக்கிய ஏ ப்ளஸ் குற்றவாளிகளில் பலரும் இன்னும் கைதுசெய்யப்படவில்லை. லோக்கலில் சின்னத் தகராறுகளில் ஈடுபட்டவர்கள், வெளியூருக்குத் தப்பிச் செல்ல பஸ்ஸுக்குக் காசு இல்லாதவர்கள், சோற்றுக்கே வழியில்லாத தாத்தாவாகிவிட்ட தாதாக்கள், `நானும் ரௌடிதான்’ என்று வாலன்டீயராக ஜீப்பில் ஏறியவர்களையெல்லாம் ரெளடிகளாக்கிக் கணக்கு எழுதிவிட்டு, சுமார் 300 ஏ ப்ளஸ் ரெளடிகளை எஸ்கேப் ஆகவிட்டிருக்கிறது காவல்துறை. ‘டேய்... ஸ்டேஷன் பக்கம் வந்துட்டுப் போ... ஆபரேஷன் ஒண்ணு நடக்குது’ என்று லோக்கல் ரௌடிகளைக் கூப்பிட்ட கதையெல்லாம் நடந்திருக்கிறது. ஆட்சி மேலிடத்தைத் திருப்திப்படுத்த இந்தக் கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்” என்று நேர்மையான காவல்துறை அதிகாரிகள் சிலரே குற்றம்சாட்டுகிறார்கள்.

ஏ ப்ளஸ் ரெளடிகளுக்கு ஏன் சலுகை?

தமிழகம் முழுவதும் போலீஸ் நடவடிக்கையிலிருந்து தப்பிய ‘ஏ ப்ளஸ்’ ரெளடிகள் பற்றி நம்மிடம் சில விஷயங்களை அந்த அதிகாரிகள் பகிர்ந்துகொண்டனர். “ரெளடிகளின் குற்றச் சரித்திரத்தை அடிப்படையாகவைத்து, ஏ ப்ளஸ், ஏ, பி, சி என நான்கு வகையாக ரெளடிகளை போலீஸார் பிரிப்பது வழக்கம். தொடர்ந்து கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களும், ஒரு ரெளடிக் கூட்டத்துக்குத் தலையாக இருப்பவர்களும்தான் இந்த ஏ ப்ளஸ் ரெளடிகள். இவர்களைக் களையெடுத்தாலே, சட்டம், ஒழுங்கு முக்கால்வாசி கட்டுக்குள் வந்துவிடும். ஆனால், அரசியல், அதிகார வட்டத்துக்கு இந்த ஏ ப்ளஸ் ரெளடிகள் தேவைப்படுவதால், அவர்கள்மீது யாரும் கைவைப்பதில்லை. ‘ஸ்டார்மிங் ஆபரேஷன்’ நடவடிக்கையில், சென்னையைச் சேர்ந்த பல ஏ ப்ளஸ் ரெளடிகளில் சங்கிலி கணேசன், ஆற்காடு சுரேஷ் மட்டும் கைதுசெய்யப்பட்டிருப்பதே இந்தச் சலுகைக்கான சாட்சி.

 ‘ஏ ப்ளஸ்’ ரௌடிகள் எஸ்கேப்! - கைது நடவடிக்கைகள் கண்துடைப்பா?

சென்னையின் பிரபல ஏ ப்ளஸ் ரௌடியான ‘சீசிங்’ ராஜா மீது ஆள் கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எட்டு முறைக்கு மேல் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கும் இவர், தமிழகம் முழுவதும் தன் அடியாட்கள் மூலமாகக் கொலை ‘அசைன்மென்ட்டுகளை’ அரங்கேற்றுகிறார். சிட்லபாக்கம் காவல் நிலைய குற்றச் சரித்திரப் பதிவேட்டிலிருக்கும் இவரை போலீஸ் தொடவேயில்லை. ரௌடிகள் சிடி மணி, காக்கா தோப்பு பாலாஜி இருவரும் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டுவிட்டனர். அவர்கள்மீது வெடிகுண்டு வீசிக் கொல்ல முயன்ற வழக்கில் தேடப்பட்டுவரும் ரௌடி சம்பவ செந்திலும் இந்த ஆபரேஷனிலிருந்து தப்பிவிட்டார். எண்ணூரைச் சேர்ந்த தனசேகரன் மீது ஏழு கொலை வழக்குகள் உட்பட 54 வழக்குகள் உள்ளன. தனசேகரனுக்கும், வியாசர்பாடியைச் சேர்ந்த பிரபல ரௌடி பாம் சரவணனுக்கும் இடையே நீண்டகாலமாக முன்விரோதம் இருக்கிறது. தனசேகரன் வீட்டில் வெடிகுண்டு வீசி அவரைக் கொலை செய்யவும் பாம் சரவணன் டீம் முயன்றது. அண்டை மாநிலத்தில் இருந்தபடி தன் ஆட்களை ஆபரேட் செய்கிறார் எண்ணூர் தனசேகரன். அதேபோல, பாம் சரவணனும் தலைமறைவாக இருக்கிறார். இவர்கள் இருவருமே சென்னை காக்கிகளால் கைதுசெய்யப்படவில்லை. அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த பிரபல டான் தரின் டிரைவர் தினேஷ், வடமாநிலங்களில் பதுங்கியிருந்து காஞ்சிபுரத்தைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இவரோடு சேர்த்து காதர், தியாகு ஆகிய ஏ ப்ளஸ் ரெளடிகளும் போலீஸ் நடவடிக்கையிலிருந்து தப்பிவிட்டனர்.

ரெளடிப் பட்டியலில் தி.மு.க ஒன்றியச் செயலாளர்!

நாகப்பட்டினம் மாவட்டத்தில், ‘ஸ்டார்மிங் ஆபரேஷன்’ நடவடிக்கையால் 17 ரௌடிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முக்கிய ரௌடிகளான கபிரியேல், வெள்ளப்பள்ளம் வினோத், பார்த்திபன் ஆகியோர் ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 220 பேர் நன்னடத்தை பிணைப் பத்திரம் கொடுத்து வெளியில் உள்ளனர். இதில் பா.ஜ.க பிரமுகர் அகோரம், காடுவெட்டியார் பேரவைத் தலைவர் வி.ஜி.கே மணி ஆகியோரும் அடக்கம். பிணைப் பத்திரம் கொடுத்தவர்களை ஒரு வருடத்துக்கு போலீஸ் கைதுசெய்ய முடியாது என்பதால், இவர்கள்மீது காவல்துறை கைவைக்கவில்லை. ஆனால், மயிலாடுதுறை தி.மு.க வடக்கு ஒன்றியச் செயலாளர் இளையபெருமாள் மீது கொலை, ஆள் கடத்தல், மணல் கொள்ளை மற்றும் சாராய வழக்குகள் உள்ளன. ரெளடிப் பட்டியலில் இவர் பெயரும் உள்ளது. இருந்தும் இவர் கைதுசெய்யப்பட வில்லை. இதற்காக ஆய்வாளர் ஒருவருக்கு இளையபெருமாள் தரப்பு பெரும் தொகையைப் படியளந்திருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டவர்களும், சிறிய ரௌடிகளும்தான் கணக்குக்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களின் பெயர்கள் போலீஸாருக்கே பரிச்சயம் இல்லை என்பதுதான் வேடிக்கை. புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க இலக்கிய அணியின் துணைத் தலைவர் கவிதைப்பித்தன். தி.மு.க-வில் சீனியரான இவரின் மகன்கள் கவிவேந்தன், இசைவேந்தன் இருவர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன. ஆனால், இசைவேந்தனை மட்டும் கைதுசெய்த காவல்துறை, கவிவேந்தனை விட்டுவிட்டது.

 ‘ஏ ப்ளஸ்’ ரௌடிகள் எஸ்கேப்! - கைது நடவடிக்கைகள் கண்துடைப்பா?

டெல்டாவில் சிக்காத ரெளடிகள்... திருச்சியில் அதிகரிக்கும் கோஷ்டி மோதல்!

தஞ்சாவூர் மாவட்டத்தில், ஏ ப்ளஸ் ரௌடிகளில் ஒருவரைக்கூட போலீஸார் கைதுசெய்யாதது பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. முனியாண்டவர் காலனியைச் சேர்ந்த மார்டின், தமிழகம் முழுவதும் ‘சம்பவம்’ செய்வதில் கைதேர்ந்தவர். அதேபோல, புதிய பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்த சுரேந்தரும் ஒரு கூலிப்படையை வைத்துக்கொண்டு டெல்டாவையே கதிகலங்கவைக்கிறார். முக்கிய ஏ ப்ளஸ் ரெளடிகளான இவர்கள் இருவரும் கைதுசெய்யப்படவில்லை. அதேபோல, சூரக்கோட்டை ராஜா என்கிற ராஜாராமன், பள்ளியூர் குட்டி என்கிற சிதம்பரம், கரம்பயம் ஆனந்த், கும்பகோணம் பெரியவன் முருகன், எலுமிச்சங்காபாளையம் மூர்த்தி, தஞ்சாவூர் வடக்குவாசல் பகுதியைச் சேர்ந்த சங்கர், சாமிநாதன் என ஏ ப்ளஸ் பட்டியலிலிருந்த பல ரெளடிகளும் தப்பிவிட்டார்கள்.

திருச்சி திருவானைக்காவல் பாரதி நகரைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற ஏ ப்ளஸ் ரெளடியும், ரங்கம், சமயபுரம், மணப்பாறை, திருவெறும்பூர் பகுதிகளிலுள்ள முக்கிய ரெளடிகள் பலரும் கொஞ்சமும் அச்சமின்றி சுதந்திரமாகச் சுற்றுகிறார்கள். செப்டம்பர் 13-ம் தேதி ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே நிஷாந்த் என்பவரும், செப்டம்பர் 16-ம் தேதி பொன்மலைப்பட்டி கடைவீதியிலுள்ள டாஸ்மாக் கடையில் சின்ராஜ் என்பவரும் பழிவாங்கும் விதமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

அண்ணனின் நினைவுநாளுக்கு வராதசுபாஷ் பண்ணையார்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தையே கட்டுக்குள் வைத்திருந்த ‘ஏ’ ப்ளஸ் ரௌடிகளான வசூர் ராஜா திருச்சி மத்தியச் சிறையிலும், காட்பாடி ஜானி கடலூர் மத்தியச் சிறையிலும் அடைக்கப்பட்டு நீண்ட நாள்களாகின்றன. ஆனாலும், இருவரின் ஆட்களும் வெளியே ‘அசைன்மென்ட்’களைக் கச்சிதமாக முடிக்கிறார்கள். இந்த நெட்வொர்க்கை போலீஸால் உடைக்க முடியவில்லை. ஜூலை 29-ம் தேதி அதிகாலை, நேதாஜி மார்க்கெட்டுக்குள் வழக்கம்போல் மாமூல் வேட்டையைத் தொடர்ந்த வசூர் ராஜாவின் கும்பல், பணம் தர மறுத்த பாலு என்ற வியாபாரியை வெட்டியது. ரத்தம் சொட்டச் சொட்ட அந்த வியாபாரி, அருகிலிருந்த காவல் நிலையத்துக்குள் புகுந்து உயிரைக் காப்பாற்றிக்கொண்டார். இந்தச் சம்பவம், வசூர் ராஜாவின் நெட்வொர்க்கை உடைக்க முடியவில்லை என்பதற்கு ஓர் உதாரணம்.

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியனின் கொலை வழக்கில், தூத்துக்குடி சுபாஷ் பண்ணையார் உட்பட பல்வேறு நபர்கள்மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக நிர்மலாதேவி என்பவர் சமீபத்தில் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இதனால், அரண்டுபோன சுபாஷ் பண்ணையார், தன் அண்ணனின் நினைவுநாளுக்குக்கூட அஞ்சலி செலுத்த அம்மன்புரத்துக்கு வரவில்லை. இந்தச் சம்பவத்தால், தென்மாவட்டத்தில் பதற்றம் அதிகரித்திருக்கிறது.

கொலை நகரமான திண்டுக்கல்!

ஆகஸ்ட் முதல் வாரத்தில், திண்டுக்கல்லில் தொடங்கிய கொலைப்படலம் முடிவுறாமல் தொடர்கிறது. ஃபர்னிச்சர் கடை உரிமையாளர் மணிகண்டன், பேகம்பூர் பகுதியைச் சேர்ந்த முகமது இப்ராஹிம், ஏ.வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த ஜெரால்டு தங்கராஜ், அனுமந்தராயன் கோட்டையைச் சேர்ந்த ஸ்டீபன் எனக் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் திண்டுக்கல் நகரில் எட்டுக் கொலைகள் நடந்துள்ளன. மாவட்டம் முழுவதையும் கணக்கிட்டால் 15 கொலைகள் நடந்திருக்கின்றன. தொடர்ந்து பழிக்குப் பழி கொலைகள் நடக்கின்றன. ‘எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்’ என்பது ஊரறிந்த பழமொழி. ஆனால் காவல்துறை, தலையை விட்டுவிட்டு வால்களைப் பிடித்துக்கொண்டிருக்கிறது” என்றனர் அந்த அதிகாரிகள்.

எதிர்வரும் நகராட்சி, மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தல் வேலைகளுக்கு இந்த ‘ஏ ப்ளஸ்’ பட்டியலில் உள்ள பல ரெளடிகள் தேவைப்படுவதால் ‘ஸ்டார்மிங் ஆபரேஷன்’ நடவடிக்கையிலிருந்து அவர்கள் தப்பவைக்கப்பட்டதாகக் காவல்துறையிலேயே ஒரு தரப்பு குற்றம்சாட்டுகிறது. இந்த விமர்சனங்களுக்குக் காவல்துறையின் பதில் என்ன? சட்டம், ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபுவிடம் பேசினோம்.

 ‘ஏ ப்ளஸ்’ ரௌடிகள் எஸ்கேப்! - கைது நடவடிக்கைகள் கண்துடைப்பா?

“தமிழகம் முழுவதும் பிடிபட்டுள்ள மொத்த ரௌடிகளில், சுமார் 100 பேர் ‘ஏ ப்ளஸ்’ பட்டியலில் உள்ளவர்கள்தான். இவர்கள் அவ்வப்போது தங்களது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இந்தப் பட்டியலில் உள்ளவர்களைத் தேடும் பணி, இந்த ஆபரேஷனுக்கு முன்பிருந்தே தனிப்படை, உளவுப்பிரிவு மூலமாகத் தொடங்கிவிட்டது. விரைவில் மொத்த ஏ ப்ளஸ் லிஸ்ட்டில் உள்ளவர்களையும் பிடித்துவிடுவோம். இந்த ஆபரேஷனில் 3,325 பேர் கைதுசெய்யப்பட்டு, அதில் 2,526 பேர் தாங்கள் எந்தக் குற்றத்திலும் இனி ஈடுபட மாட்டோம் என நன்னடத்தை உறுதிமொழிப் பத்திரம் எழுதிக் கொடுத்திருக் கிறார்கள். அடுத்த ஒரு வருட காலத்தில், அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக்கப்படுவார்கள். ரௌடிகளுக்கு எதிரான இது போன்ற நடவடிக்கைகள் தொடரும்’’ என்றார்.

கொரோனா காலகட்டத்தில் நீதிமன்றங்கள் செயல்படாததால், ரௌடிகளின் வழக்கு விசாரணையை நடத்த முடியவில்லை. மேலும், சிறையிலிருந்த பலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். குற்றச் செயல்கள் அதிகரிக்க அதுவும் ஒரு காரணம் என்கிறது போலீஸ் தரப்பு. “ஒரே நாளில் மொத்தக் குற்றங்களையும் குற்றவாளிகளையும் ஒழித்துவிட முடியாது. அதுவொரு நீண்ட ப்ராசஸ். இந்த ஆபரேஷன் ஆரம்பகட்ட நடவடிக்கைதான். உங்கள் புத்தகம் அச்சாகி வெளிவருவதற்குள்கூட முக்கிய ‘ஏ ப்ளஸ்’ ரௌடிகள் கைதுசெய்யப் பட்டிருக்கலாம்!” என்று நம்பிக்கையோடு சொல்கிறது போலீஸ் வட்டாரம்.

இந்த ‘ஸ்டார்மிங் ஆபரேஷன்’ வெறும் கண்துடைப்பாக அல்லாமல், முதல்வர் ஸ்டாலின் எதிர்பார்க்கும்படி, தமிழகத்தின் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் முயற்சியாக அமைய வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு!