அலசல்
Published:Updated:

எடப்பாடி வழியில் ஸ்டாலின் அரசு... சத்துணவு முட்டையில் ஊழல்?

எடப்பாடி வழியில் ஸ்டாலின் அரசு...
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி வழியில் ஸ்டாலின் அரசு...

தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளைக் கடந்துவிட்ட சூழலிலும், அ.தி.மு.க ஆட்சியின் முட்டை கொள்முதல் ஊழல் குறித்து இதுவரை எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.

`எதிர்க்கட்சியாக இருந்தபோது, ‘முட்டை ஊழல்’ பற்றிக் குமுறிய தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கள்ள மெளனத்தோடு அதை அப்படியே தொடர்கிறது’ என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது!

“சத்துணவு திட்டத்துக்கான முட்டை கொள்முதலில், கடந்த ஐந்தாண்டுகளில் 500 கோடி ரூபாய் வரை மெகா ஊழல் நடந்திருக்கிறது. சந்தை விலையைவிட அதிக விலைக்கு வாங்குவதால் கிடைக்கும் பணம், அமைச்சருக்கு மட்டுமல்லாமல் உயரதிகாரிகள் பலருக்கும் கோடிக்கணக்கில் கமிஷனாகச் செல்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முட்டை ஊழல் குறித்து விசாரணை நடத்துவோம்” என்று அ.தி.மு.க ஆட்சியாளர்கள்மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தவர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, நாமக்கல் பிரசாரக் கூட்டத்தில் முழங்கியிருந்தார் ஸ்டாலின்.

எடப்பாடி வழியில் ஸ்டாலின் அரசு... சத்துணவு முட்டையில் ஊழல்?

இந்த நிலையில், ‘தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளைக் கடந்துவிட்ட சூழலிலும், அ.தி.மு.க ஆட்சியின் முட்டை கொள்முதல் ஊழல் குறித்து இதுவரை எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், சர்ச்சையில் சிக்கிய அதே நிறுவனங்களுடன் `தொடர்புடைய’ நிறுவனங்களிடமிருந்தே 2021-2022 ஆண்டுக்கான முட்டை கொள்முதலும் செய்யப்பட்டிருப்பதும் ஆர்.டி.ஐ மூலம் அம்பலமாகியிருக்கிறது. நடப்பாண்டு ‘பொங்கல் பரிசுத்தொகுப்பில்’ தரமில்லாத பொருள்களை வழங்கியதாக அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனத்துக்கும் தி.மு.க அரசு, முட்டை டெண்டரை வழங்கியிருக்கிறது’ என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் சமூகநலத்துறை அதிகாரிகள் சிலர்.

எடப்பாடி வழியில் ஸ்டாலின் அரசு... சத்துணவு முட்டையில் ஊழல்?

இது குறித்து நம்மிடம் பேசிய அறப்போர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், “சொர்ணபூமி என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், தமிழ்நாட்டின் நான்கு மண்டலங்களுக்கும் முட்டைகளை வழங்குகிறது. ஏற்கெனவே அ.தி.மு.க ஆட்சியில் முட்டை ஊழலில் சிக்கிய கிறிஸ்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்தான், சொர்ணபூமி நிறுவனத்துக்கும் எம்.டி-யாக இருந்தார் என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

முட்டையின் விலை என்பது நாளுக்கு நாள் ஏறி இறங்கக்கூடியது. ஆனால், இவர்கள் வேண்டுமென்றே முட்டையின் சந்தை விலை அதிகமாக இருக்கும்போது கொள்முதல் விலையை நிர்ணயம் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இதனால், முட்டையின் சந்தை விலை குறையும்போதும், கூடுதல் விலைக்கே அரசு கொள்முதல் செய்கிறது. முட்டை ஊழல் புகாரில் சிக்கிய கிறிஸ்டி நிறுவனத்தின் மீது ஆதாரபூர்வமாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஆட்சி மாறியும், காட்சிகள் மாறவில்லை...” என்றார் விரக்தியுடன்.

எடப்பாடி வழியில் ஸ்டாலின் அரசு... சத்துணவு முட்டையில் ஊழல்?

இது தொடர்பாக ஆர்.டி.ஐ மூலம் தகவல்களைப் பெற்ற யுவராஜ் ராமலிங்கத்திடம் பேசியபோது, “சில்லறை விலையில் மளிகைக் கடைகளிலேயே முட்டையின் விலை 5 முதல் 6 ரூபாய் வரைதான் விற்ப னையாகிறது. இதில் போக்குவரத்து உட்பட அனைத்துச் செலவுகளும் அடக்கம். ஆனால், அரசுக்குக் கோடிக்கணக்கில் முட்டை களை வழங்கும் நிறுவனங்கள் சராசரியாக 5 ரூபாய்க்கும் மேல் விலைவைப்பது எப்படி... நாளொன்றுக்கு ஒரு முட்டைக்கு 50 பைசா கூடுதல் விலைவைத்தால், ஏறத்தாழ 50 லட்சம் முட்டைகள் கொள்முதல் செய்யப்படும் போது, நாள் ஒன்றுக்கு 25 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. இப்படிப் பள்ளிகளில் முட்டை வழங்கப்படும் 220 நாள்களுக்குக் கணக்கிட்டால், ஆண்டுக்கு 55 கோடி ரூபாய்... இவையெல்லாம் என்ன ஆகின என்பதை முதல்வர்தான் தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

ஜெயராமன், யுவராஜ்
ஜெயராமன், யுவராஜ்

இதையடுத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் முட்டை கொள்முதல் குறித்துக் கேட்டபோது, “கொள்முதல் நடைமுறைகள் அனைத்தையும் துறையின்கீழ் இயங்கும் கமிட்டிதான் கவனித்துக்கொள்கிறது. எனக்கு எதுவும் தெரியாது. நான் அதில் தலையிடுவதுமில்லை. மாவட்ட அளவில் முட்டை கொள்முதல் செய்யும்போது, அதிகப்படியான செலவு ஏற்படும் என்று தணிக்கைக்குழு குறிப்பிட்டிருக்கிறது. இதையடுத்து, நடைமுறையில் இருக்கும் மண்டல அளவிலான முட்டை கொள்முதலில் பண்ணை உரிமையாளர்களையும் பங்கேற்கவைக்க வேண்டும் என்று முயற்சி மேற்கொண்டு, வெளிப்படையான டெண்டரை நடத்தியிருக்கிறோம்.

நாமக்கல் முட்டை விலையின் சராசரியை வைத்துத்தான் ஓராண்டுக்கான முட்டை கொள்முதலுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 5 ரூபாய் 26 பைசா என்பது போக்குவரத்துக்கான செலவையும் சேர்த்துத்தான். பொங்கல் பரிசுத்தொகுப்பில் தரமற்ற பொருளை வழங்கிய நேச்சுரல் ஃபுட் கமர்ஷியல்ஸ் நிறுவனம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்றார் சுருக்கமாக.

யார் செய்தாலும், முறைகேடு முறைகேடுதான்!

கீதா ஜீவன்
கீதா ஜீவன்

மண்டலவாரியான கொள்முதல் நிலவரம்!

நீண்டகாலமாக இருந்த மாவட்ட அளவிலான கொள்முதல் முறையை ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு 2012-ம் ஆண்டில் மாற்றி, மாநில அளவில் ஒரே நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கும் முறையைக் கொண்டுவந்தது. அதில் நடந்த ஊழலைத் தொடர்ந்து, 2018-ல் மாநில அளவிலிருந்து மண்டல அளவிலான கொள்முதலுக்கு மாற்றினார் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதில் நடந்த முறைகேடுகளைச் சுட்டிக்காட்டிய மு.க.ஸ்டாலின் ஆட்சியில், முட்டை கொள்முதல் விலை இங்கே...

மண்டலம் - 1 கொள்முதல் விலை ரூபாய் 5.24

நேச்சுரல் ஃபுட் கமர்ஷியல்ஸ் பிரைவேட் லிமிடெட்.

கிசான் எக்கனாமிக்ஸ் பிரைவேட் லிமிடேட்.

சொர்ணபூமி என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்.

மண்டலம் - 2 கொள்முதல் ரூபாய் 5.23

தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி.

சொர்ணபூமி என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்.

கிசான் எக்கனாமிக்ஸ் பிரைவேட் லிமிடேட்.

மண்டலம் - 3 கொள்முதல் விலை ரூபாய் 5.23

சொர்ணபூமி என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்.

சசி ஆனந்த் போல்ட்ரி ஃபார்ம்.

நேச்சுரல் ஃபுட் கமர்ஷியல்ஸ் பிரைவேட் லிமிடெட்.

மண்டலம் - 4 கொள்முதல் விலை ரூபாய் 5.26

சஷ்டிகுமார் போல்ட்ரி ஃபார்ம்.

சசி ஆனந்த் போல்ட்ரி ஃபார்ம்.

சொர்ணபூமி என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்.