
மாயமான 41 கேஸ் டைரிகள்... வெளிநாடுகளில் 60-க்கும் அதிகமான சிலைகள்...
‘‘தமிழகத்தின் பல்வேறு கோயில்களிலிருந்து கடந்த பல ஆண்டுகளாக வெளிநாடுகளுக்குக் கடத்திச் செல்லப்பட்ட கோடிக்கணக்கான மதிப்புள்ள புராதன சிலைகளை முழுமையாக மீட்டுக்கொண்டுவருவதில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சுணக்கம் காட்டுகிறார்கள். அதே சமயத்தில் சிறிய அளவிலான கடத்தல் சிலைகளை தமிழகத்தில் பிடித்துவிட்டு, ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டதைப்போல மாயையை உருவாக்குகிறார்கள். இன்னொருபுறம், சிலைக்கடத்தல் வழக்குகள் தொடர்பான 41 கேஸ் டைரிகள் காணாமல் போயிருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மொத்தத்தில் சிலைக்கடத்தல் விவகாரத்தில் மூடி மறைக்கப்படும் விவகாரங்கள் ஏகத்துக்கும் இருக்கின்றன’’ என்கிறார்கள் ஆன்மிகத்தில் நாட்டம்கொண்ட சமூக ஆர்வலர்கள்.

கடந்த 2012 ஜனவரி முதல் 2019 நவம்பர் வரையிலான காலகட்டத்தில், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் உயரதிகாரி, சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவர் ஆகிய பதவிகளில் பொன்.மாணிக்கவேல் இருந்தார். அவர் பதவியிலிருந்தபோது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து ஒன்பது சிலைகள் தமிழகத்துக்கு மீட்டுவரப்பட்டன. மேலும் அமெரிக்காவில் 27, ஆஸ்திரேலியாவில் 6, சிங்கப்பூரில் 18, இங்கிலாந்தில் 10 என 60-க்கும் மேற்பட்ட சிலைகள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அவற்றைத் தமிழகத்துக்குக் கொண்டுவர பொன்.மாணிக்கவேல் டீம் நடவடிக்கை எடுத்துவந்தது. பொன்.மாணிக்கவேலுவுக்குப் பிறகு பதவிக்கு வந்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், இங்கிலாந்திலிருந்து மூன்று சிலைகளை மீட்டிருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் ஆர்.டி.ஐ மூலம் பல்வேறு அதிரவைக்கும் தகவல்களைப் பெற்றிருக்கும் பிரபல வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் நம்மிடம், ‘‘கடந்த சில வருடங்களில் சிலைக் கடத்தல் தொடர்பாகப் பதிவான புகார்களின் 20 கேஸ் டைரிகள் (விசாரணை ஆவணங்கள்) திடீரென காணாமல்போனதாகக் கேள்விப்பட்டேன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, தமிழக காவல்துறையிடம் இது தொடர்பான தகவல்களைக் கேட்டபோதுதான், ‘காணாமல் போனவை 20 கேஸ் டைரிகள் அல்ல... மொத்தம் 41 கேஸ் டைரிகள்’ என்ற தகவல் கிடைக்கப்பெற்று அதிர்ந்துபோனேன். இந்த விவகாரத்தில் மொத்தம் 12 மாவட்டங்களிலுள்ள காவல் நிலையங்களில், வெவ்வேறு காலகட்டங்களில் களவுபோன சிலைகள் குறித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறார்கள். இதன் விவரங்களை நீதிமன்றங்களுக்கும் முறைப்படி தெரிவித்திருக்கிறார்கள். அதன் பிறகு திடீரென, ‘கேஸ் டைரியைக் காணவில்லை’ என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் எஃப்.ஐ.ஆர்-களை குளோஸ் செய்துவிட்டார்கள். இந்த விவரத்தை நீதிமன்றத்துக்கும் தெரிவிக்கவில்லை.

இதைக் கேள்விப்பட்ட நான், ‘போலீஸார் தனிச்சையாகச் சிலைக்கடத்தல் வழக்குகளை முடித்துவைக்கத் தடை விதிக்க வேண்டும். விசாரணை ஆவணங்கள் மாயமாகிவிட்டன என்று கூறி வழக்கை முடித்து வைத்த போலீஸ் அதிகாரிகளின் பெயர்களை வெளியிட வேண்டும். அவர்கள்மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறேன். விசாரணை நடந்துவருகிறது. இதில் 400 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருக்கிறது. இவற்றையெல்லாம் ஆதாரத்துடன் நிரூபிப்பேன்’’ என்றார்.
அவரிடம், ‘‘அமெரிக்காவிலுள்ள சிலைகள் தற்போது என்ன நிலையில் இருக்கின்றன?’’ என்று கேட்டபோது, ‘‘தமிழகத்தைச் சேர்ந்த நடராஜர், சிவன், பெருமாள் உள்ளிட்ட ஐம்பொன் சிலைகள், கற்சிலைகள், தூண், யாழி, பட்டயங்கள், சுவாமி நகைகள் உள்ளிட்ட 175 பொருள்கள் அமெரிக்காவிலுள்ள தனியார் மியூசியங்களிலும், அரசு கஸ்டடியிலும் உள்ளன. 2020, ஜனவரியில் நான் அமெரிக்கா சென்றிருந்தபோது, அங்குள்ள காவல்துறை தலைவரைச் சந்தித்தேன். அங்குள்ள அனைத்துச் சிலைகளைப் பற்றிய விவரங்களை எனக்குக் கொடுத்தார். அதையெல்லாம் குறிப்பிட்டு தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் கடந்த மாதம் கடிதம் எழுதி, உடனே மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டேன். இது தொடர்பாக, எனக்குத் தெரிந்தவர்கள் மூலம் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்திருக்கிறேன்’’ என்றார் விரிவாக.
இந்த விவகாரங்கள் தொடர்பாகப் பேச, தமிழக சிலைக்கடத்தல் பிரிவைக் கவனிக்கும் சி.பி.சி.ஐ.டி-யின் கூடுதல் டி.ஜி.பி-யான அபய்குமார் சிங்கைத் தொடர்புகொண்டோம். ஒரு வாரம் கழித்து தொடர்புகொள்ளச் சொன்னார். அவர் சொன்னபடியே, மீண்டும் தொடர்புகொண்டபோது, ‘சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான பத்திரிகைக் குறிப்பு கொடுத்திருக்கிறோம். போலீஸ் பி.ஆர்.ஓ-விடம் பெற்றுக்கொள்ளுங்கள்’’ என்றார். அவரின் பேச்சிலிருந்தே நமது கேள்விகளை நேரடியாக எதிர்கொள்ள அவர் தயாராக இல்லை என்பது புரிந்தது.
சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த வேறோர் அதிகாரியிடம் பேசியபோது, ‘‘41 ஆவணங்கள் காணாமல்போன விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், எங்களால் அது குறித்துப் பேச முடியாது. இங்கிருப்பவர்கள் நினைப்பதுபோல், வெளிநாடுகளிலுள்ள சிலைகளை கிஃப்ட் பார்சல் மாதிரி தூக்கி வந்துவிட முடியாது. இரு நாடுகள் தொடர்புடைய விவகாரம் என்பதால், நிறைய சட்ட சம்பிரதாயங்கள் உள்ளன. ஒவ்வொன்றாகச் செய்துவருகிறோம். அவை முடிந்ததும், சிலைகள் நிச்சயமாக தமிழகத்துக்கு வந்துசேரும்’’ என்றார்.

அவரே தொடர்ந்து, ‘‘தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் கடந்த 2020 முதல் தற்போதுவரை 17 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 18 குற்றவாளிகளைக் கைதுசெய்து 40 சிலைகளை மீட்டிருக்கிறோம். சமீபத்தில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒரு நிறுவனத்திலிருந்து உலோகச் சிலை, இரண்டு அம்மன் கற்சிலைகள், கிருஷ்ணர் ஓவியங்களைக் கைப்பற்றினோம். திருநெல்வேலியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டிலிருந்த வெண்கல அம்மன் சிலையையும் பறிமுதல் செய்தோம். கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் 74 பழைமை வாய்ந்த சிலைகளை புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து மீட்டிருக்கிறோம். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் காவல் நிலைய எல்லைக்குப்பட்ட பகுதியிலிருந்து உமா பார்வதி, விஷ்ணு ஆகிய இரண்டு சிலைகள் காணாமல் போயின. அவை அமெரிக்காவில் இருப்பதைக் கண்டுபிடித்தோம். இந்த வழக்கு தொடர்பாக, தமிழகத்தில் முதன்முறையாக காணொலிக் காட்சி மூலமாக கும்பகோணம் நீதிமன்றத்திலிருந்து அமெரிக்காவிலுள்ள மேத்யூ போகாடோனாஸ் என்ற சாட்சியை நீதிபதி விசாரணை செய்தார். இந்த சாட்சி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இரண்டு சிலைகள் அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டன. அவற்றை அங்கிருந்து தமிழகம் கொண்டுவரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இதேபோல, வேறு சில சிலைளையும் விரைவில் கொண்டுவருவோம்’’ என்றார்.
சிலைக்கடத்தல் மாஃபியாக்களையும் அவர்களுக்குத் துணைபோனவர்களையும் தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கி, வெளிநாடுகளிலுள்ள சிலைகளை மீட்க வேண்டும் என்பதே ஆன்மிக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு!