
துறைகளிலுள்ள பிரிவுகள், சிறப்புத் திட்டங்கள் அடிப்படையில் தரவுகள் பிரிக்கப்பட்டு, இதுவரை 104 சிஎம் டேஷ்போர்டு களை உருவாக்கியிருக்கிறோம். இவை அனைத்தும் ஒரேயொரு வெப்சைட்டில் கிடைக்கும்.
முதல்வர் ஸ்டாலினின் கனவுத் திட்டமான ‘சிஎம் டேஷ்போர்டு’ தொடங்கப்பட்டு, சரியாக ஒரு வருடம் நிறைவடைந்திருக்கிறது. அரசின் நிர்வாகத்திறனை மேம்படுத்தவும், திட்டங்களைக் கண்காணிக்கவும் உருவாக்கப்பட்டதுதான் ‘சிஎம் டேஷ்போர்டு.’ “குஜராத், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்தத் திட்டம் செயலில் இருந்தாலும், அங்கெல்லாம் ‘கண்காணிப்பு’ எதுவும் இல்லை. அந்தந்த மாநில அரசின் சாதனை விளம்பர வெப்சைட்டுகளாக மட்டுமே அவை இருக்கின்றன. ஆனால், “தமிழ்நாடு அரசு உருவாக்கியிருக்கும் ‘சிஸ்டமே’ வேறு...” என்கிறார்கள் சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். இந்த ஒரு வருட காலத்தில், ‘சிஎம் டேஷ்போர்டு’ அப்படி என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அறிய விசாரணையில் இறங்கினோம்...
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திருச்சியில் நடைபெற்ற தி.மு.க மாநாட்டில், அரசின் நிர்வாகத்திறனை மேம்படுத்த, ஏழு அம்சத் திட்டத்தை முன்வைத்தார் ஸ்டாலின். தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், அந்தத் திட்டத்தின் கீழ் அரசின் நிர்வாகத்திறன் மேம்படுத்தப்படும் என வாக்குறுதியும் அளித்தார். அதன்படிதான், ‘சிஎம் டேஷ்போர்டு’ முறை உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் 38 துறைகள், 200 இயக்குநரகங்கள் வழியாகச் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அவற்றின் அன்றாடப் பணிகளைக் கோட்டையிலிருந்தபடியே கண்காணிக்க முடியும். இதற்காக, தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் பிரத்யேக ‘சாஃப்ட்வேர்’ உருவாக்கப்பட்டு, தரவுகள் தினம்தோறும் ‘அப்டேட்’ செய்யப்படுகின்றன. முதல்வர், தலைமைச் செயலாளர், முதல்வரின் தனிச் செயலாளர்கள், 38 துறைகளின் அமைச்சர்கள், செயலாளர்கள், இயக்குநர்கள் மட்டுமே ‘சிஎம் டேஷ்போர்டு’ செயல்பாடுகளைப் பார்க்க முடியும். பொதுமக்களின் பார்வைக்கு இன்னும் வரவில்லை.

‘சிஎம் டேஷ்போர்டு’ டீமிலுள்ள அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “துறைகளிலுள்ள பிரிவுகள், சிறப்புத் திட்டங்கள் அடிப்படையில் தரவுகள் பிரிக்கப்பட்டு, இதுவரை 104 சிஎம் டேஷ்போர்டு களை உருவாக்கியிருக்கிறோம். இவை அனைத்தும் ஒரேயொரு வெப்சைட்டில் கிடைக்கும். அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே அதைப் பார்க்க முடியும். டெண்டர் பணிகளைக் கண்காணிப்பதற்கு 13 வகையான அளவீடுகள் சிஎம் டேஷ்போர்டில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. துறைவாரியாக என்னென்ன டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன, அவற்றின் மதிப்பீடு, காலவரையறை எவ்வளவு என்பதெல்லாம் ஒரு ‘க்ளிக்’கிலேயே தெரிந்துவிடும். டெண்டர் விடுவதில் தொடங்கி, அது கையெழுத்தாகும் வரை தரவுகள் வகைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றன. ஒப்பந்ததாரரின் பணிகளும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
உதாரணத்துக்கு, ஒரு நகராட்சியில் கழிப்பறைகள் கட்டப்படுகின்றன என்றால், அதற்கான டெண்டர் விடப்பட்டதா, டெக்னிக்கல் பிட் சரிபார்ப்புப் பணிகள் முடிந்துவிட்டனவா, ஒப்பந்ததாரர் எவ்வளவு சதவிகிதப் பணிகளை முடித்திருக்கிறார், அவருக்கு ‘பில்’ செட்டில் செய்யப்பட்டுவிட்டதா என்பது வரை ‘சிஎம் டேஷ்போர்டி’ல் கண்காணிக்க முடியும். பணிகள் தாமதமானால், எங்கே, யாரால் தாமதமாகிறது என்பதைக் கண்டறிந்து, உடனடியாகப் பிரச்னைகளைச் சரிசெய்ய முடிகிறது. அவ்வப்போது, அந்தத் திட்டப் பணிகளின் புகைப்படங்களையும் பதிவேற்றச் சொல்கிறோம். இதனால் ஒப்பந்ததாரர், பணிகளின் உண்மையான நிலைமையை மாற்றிச் சொல்லிவிட முடியாது.
விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்திலுள்ள ஒரு பேருந்து ஓடவில்லை என்றாலும்கூட, சிஎம் டேஷ்போர்டில் தெரிந்துவிடும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மட்டும், மகளிர் இலவசப் பேருந்து திட்டத்தில் 14.22 கோடி டிக்கெட்டுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஒரு திட்டத்தில் எத்தனை பேர் பயனடைந்திருக்கிறார்கள் என்பதைத் துல்லியமாகத் தரவுகளுடன் தெரிந்துகொள்ள முடிகிறது. மேலும், பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பங்கள் எந்தெந்த மாவட்டங்களில் அதிகப்படியாகத் தேங்கியிருக்கின்றன, எந்த அதிகாரி அதை ‘க்ளியர்’ செய்யாமல் தாமதப்படுத்துகிறார் என்பது வரை கண்காணிக்க முடிகிறது. முதன்முறையாக, அதிகாரிகள் தரப்பினர் கண்காணிப்பு வளையத் துக்குள் வருவதால், அரசின் நிர்வாகத்திறன் வேகமாகியிருக்கிறது. மேலதிகாரிகளின் ஆய்வுக் கூட்டங்களில், ‘அந்த பேப்பர் இல்லை, இந்த ஆவணம் இல்லை. அதனால் தாமதமாகிறது’ என்றெல்லாம் இனி காரணம் சொல்ல முடியாது. முதல்வரும், முதல்வர் அலுவலகமும் கண்டிப்புடன் நடந்துகொள்வதால், கேட்ட தரவுகள் உடனுக்குடன் கிடைக்கின்றன. ஒரு பெரிய செயல்முறை மாற்றம் அரசின் நிர்வாகத்திறனில் ஏற்பட்டிருக்கிறது” என்றனர்.
சிஎம் டேஷ்போர்டு நிர்வாகத்தை, தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆலோசகரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான டேவிதார் தலைமையிலான 30 பேர்கொண்ட டீம்தான் நிர்வகிக்கிறது. அவரிடம் பேசினோம். “2023-ம் ஆண்டுக்குள் 200 டேஷ்போர்டுகளை உருவாக்குவதே எங்களின் இலக்கு. முதல்வர் எங்களுக்கு முழுச் சுதந்திரம் அளித்திருப்பதால், பணிகள் எளிதாகியிருக்கின்றன. ஒரு தாலுகா அலுவலகத்தில், 28 விதமான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் ஆன் லைன் மூலமாகவே வழங்குவதற்கும் திட்டத்தை ஆய்வுசெய்துவருகிறோம்” என்றார் சுருக்கமாக.
வரும் ஜனவரியிலிருந்து, ‘கலெக்டர்ஸ் வியூவ்’ என்றொரு பகுதி சிஎம் டேஷ்போர்டில் புதிதாக உருவாக்கப்படவிருக்கிறது. 25 துறைகளின் செயல்பாடுகளை இனி மாவட்ட ஆட்சியர்களும் நேரடியாகப் பார்க்க முடியும். தங்கள் மாவட்டத்தில், எங்கே பிரச்னை நிலவுகிறது என்பதை அவர்களாலும் கண்காணிக்க முடியும். தவிர, மாவட்ட ஆட்சியர்களுக்கான ‘ரேங்க்கிங்’ முறையும் விரைவில் அமல்படுத்தப்படவிருக்கிறது என்பதால், சரியாகச் செயல்படாத மாவட்ட ஆட்சியர்கள் ‘கட்டம்’ கட்டப்படுவார்கள் என்கிறது கோட்டை வட்டாரம்.
கணிப்பொறியும் மென்பொருளும் துல்லியமாகவும் சிறப்பாகவும் வேலை செய்யுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவற்றைக் கையாளவிருக்கும் அமைச்சர்களும் அதிகாரிகளும் அப்படிச் செயல்படுவார்களா..?