சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

நெற்றிச்சூடி முதல் மிஞ்சி வரை! - தமிழர் ஆபரண அழகு

தமிழர் ஆபரண அழகு
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழர் ஆபரண அழகு

என் சேகரிப்புல இருக்கிற பெண்கள் ஆபரணங்கள்ல பலவற்றை இன்னைக்கு எந்த எந்திரத்தைவெச்சும் செய்ய முடியாது. அவ்வளவு வேலைப்பாடு.

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

விலங்குநிலையிலிருந்து விடுபட்ட தருணத்திலேயே அணிகலன்களை அணியப்பழகிவிட்டான் மனிதன். வெட்கமறிந்து மானத்தை மறைத்துக்கொள்ள இலைகளாலும் மலர்களாலும் மாலைகள், கண்ணிகள் தொடுத்து கழுத்திலும் இடுப்பிலும் அணியத் தொடங்கினான். பிற்காலத்தில் விலங்குகளை வேட்டையாடி, அவற்றின் தோலால் உடல் மறைக்கப் பழகிய பிறகு, முன்பு அணிந்த மலர்ச்சரடுகளை அலங்காரப் பொருளாக மாற்றிக்கொண்டான்.

அகநானூறு தொடங்கி சிலப்பதிகாரம் வரை சங்க இலக்கியங்கள் பலவும் ஆண்களும் பெண்களும் அணிந்த பல ஆபரணங்களைக் குறிப்பிட்டுப் பாடுகின்றன. குறிப்பாக, இலக்கியங்கள் பெண்களைச் சுட்டும்போது ‘மாணிழை மகளிர்', ‘வாலிழை மகளிர்' `குறுந்தொடி மகளிர்' என்று அணிகலன்களை வைத்தே குறிப்பிடுகின்றன. `மாசறு பொன்னே', `வலம்புரி முத்தே' என்று கண்ணகியின் அழகை வர்ணிக்க அணிகலன்களையே இளங்கோவடிகள் பயன்படுத்துகிறார்.

அக்காலத் தமிழ்ப்பெண்கள் தலையில் நெற்றிச்சூடி முதல் கால் விரல்களில் மிஞ்சி வரை ஏராளமான ஆபரணங்களை அணிந்திருந்தார்கள். வணிகம் தழைத்து முதலாளித்துவ வாழ்க்கைமுறை துளிர்த்த பிறகு, அணிகலன்கள் வாழ்க்கைத்தரத்தின் அடையாளமாகவும் சொத்தாகவும் மாறிவிட்டன.

அக்கால ஆபரணங்கள் கலையழகு மிக்கவை. இன்றுபோல் அன்று எந்திரங்கள் இல்லை. முழுக்க கைவேலைதான். நாள் கணக்கில், மாதக்கணக்கில் அமர்ந்து மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கலைநுட்பம் ததும்ப கலைஞர்கள் செய்வார்கள். பல ஆபரணங்கள் எவ்விதப் பதிவுமின்றி அழிந்துவிட்டன.

நெற்றிச்சூடி முதல் மிஞ்சி வரை! - தமிழர் ஆபரண அழகு

அவற்றில் பலவற்றைச் சிதைவும் சிதறலுமாக சேகரித்து பத்திரப்படுத்திவைத்திருக்கிறார், கலைப்பொருள் சேகரிப்பாளர் ராஜராஜன். இந்தியாவின் பிரதான பழம்பொருள் சேகரிப்பாளரான இவர், கி.மு.600-ல் சந்திரகுப்த மௌரியர் வெளியிட்ட இந்தியாவின் முதல் நாணயம் முதல் பிந்துசாரர், அசோகர், சேர சோழ பாண்டியர்கள் வெளியிட்டவை வரை ஆயிரக்கணக்கான அபூர்வ நாணயங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார். இந்தியாவை ஆண்ட 21 முகலாய மன்னர்களின் நாணயங்களும் இவரிடம் உள்ளன. ஜஹாங்கீர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரத்தில், அவர் மனைவி நூர்ஜஹான் ஆட்சிசெய்தார். அக்காலகட்டத்தில் ஒரு நாணயத்தை வெளியிட்டார். ஜஹாங்கீர் குணமாகி வந்த பிறகு, `தன் மனைவி வெளியிட்ட நாணயங்கள் அனைத்தையும் அரசவையில் ஒப்படைக்க வேண்டும். மீறி வைத்திருப்பவர்கள் சிரச்சேதம் செய்யப்படுவார்கள்' என்று அறிவித்தார். அந்த நாணயம் ஒன்றையும் தன் சேகரிப்பில் வைத்திருக்கிறார் ராஜராஜன். இவை தவிர, அரிய மரச்சிற்பங்கள், உலோக புழங்கு பொருள்கள், அரசர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், பழைமையான ஓவியங்கள், மண்பாண்டங்கள், புத்தகங்கள் என மிகப்பெரும் பழம்பொருள் களஞ்சியமாகத் தன் வீட்டை வைத்திருக்கிறார் ராஜராஜன்.

நெற்றிச்சூடி முதல் மிஞ்சி வரை! - தமிழர் ஆபரண அழகு

``எல்லாம் என் அயப்பாவும் (தாத்தா) அப்பாவும் சேர்த்துவைத்த சொத்து. நானும் நிறைய பொருள்களைச் சேகரிச்சிருக்கேன். அந்தக் காலத்துல எங்கப்பா ஊரு ஊரா வண்டிமாடு கட்டிக்கிட்டுப் போய் பழைய பொருள்களை வாங்கிச் சேகரிப்பார். நாங்க வாழுற பகுதி பாண்டிய நாட்டுக்கும் சேர நாட்டுக்குமான வணிகப்பாதை. அதனால இந்தப் பகுதியில் நிறைய வரலாற்றுப் பொருள்கள், நாணயங்கள் கிடைக்கும். அப்படி வாங்கிப் பாதுகாத்துவெச்ச சொத்துகள்தான் இதெல்லாம். என்கிட்ட இருக்கிற பழம் பொருள்கள்ல இந்த ஆபரணங்கள் ரொம்பவே முக்கியமானவை. அரசர் குடும்பங்கள்ல பயன்படுத்தினது, ஜமீன் வீட்டுப் பெண்களுடையது, சாதாரணப் பெண்கள் பயன்படுத்தினதுன்னு எல்லாமே இருக்கு.

ஆபரணங்கள்னா பெண்களுக்குத்தான்னு ஒரு நினைப்பிருக்கு. வீரக்கழல், கண்டை, சதங்கை, அரையணி, அரைஞாண், பவள வடம், தொடி, கங்கணம், வீரவளை, கடகம், மோதிரம், கொலுசு, காப்பு, பதக்கம், வகுவலயம், கழுத்தணி, வன்னசரம், முத்துவடம், கடுக்கண், குண்டலம்னு ஆண்களுக்கும் நிறைய ஆபரணங்கள் இருந்திருக்கு. பாண்டிய மன்னன் அணிஞ்சிருந்த ஆபரணங்கள் பத்தி சங்க காலத்துல பாண்டிய நாட்டுக்கு வந்த தாலமிங்கிற யாத்ரீகர் எழுதியிருக்கார்.

நெற்றிச்சூடி முதல் மிஞ்சி வரை! - தமிழர் ஆபரண அழகு

என் சேகரிப்புல இருக்கிற பெண்கள் ஆபரணங்கள்ல பலவற்றை இன்னைக்கு எந்த எந்திரத்தைவெச்சும் செய்ய முடியாது. அவ்வளவு வேலைப்பாடு. உலோகம் இல்லாத காலங்கள்ல முத்துகளுக்கும் கற்களுக்கும் பெரிய மதிப்பு இருந்திருக்கு. அதன் பிறகு வெள்ளிக்குப் பெரிய மவுசு. என் சேகரிப்புல இருக்கிற பல ஆபரணங்கள் வெள்ளியால் செய்யப்பட்டவை. தங்க ஆபரணங்கள் பிற்காலத்துலதான் வந்திருக்கு. இன்னைக்கு ஆபரணங்கள் சேமிப்பா, பொருளாதாரமா பார்க்கப்படுது. ஆனா அதன் உண்மையான தாத்பர்யம் ஆரோக்கியமும் அழகும்தான்...'' - சிலிர்த்துப் பேசுகிறார் ராஜராஜன்.

ராஜராஜனின் சேகரிப்பிலுள்ள பெண்களின் ஆபரணங்கள் சிலவற்றை அடுத்தடுத்த பக்கங்களில் பார்க்கலாம்:

நெற்றிச்சூடி முதல் மிஞ்சி வரை! - தமிழர் ஆபரண அழகு

கழுத்தணிகள்

பெண்களின் அழகைக் கூட்டும் ஆபரணங்களில் கழுத்தணிகள் முக்கியமானவை. சங்கிலிகள், ஆரங்கள், கொத்துகள், கொடிகள், அட்டிகைகள், சரங்கள், மாலைகள் எனப் பல கழுத்தணிகள் பற்றி நம் இலக்கியங்கள் பாடுகின்றன. பெண்கள் தங்கள் வாழ்க்கைத்தரத்துக்கேற்ப கழுத்தணிகளைப் பயன்படுத்தினார்கள். மாலைகளில் கொத்தமல்லி மாலை, மிளகு மாலை, நெல்லிக்காய் மாலை, மருதங்காய் மாலை, சுண்டைக்காய் மாலை, கடுகுமணி மாலை, மாங்காய் மாலை, மாதுளங்காய் மாலை என வடிவத்துக்கேற்ப பல உண்டு. விலையுயர்ந்த கற்களைக் கழுத்தணிகளில் பொருத்தி பெண்கள் அலங்கரித்துக்கொண்டதாக சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல இலக்கியங்கள் பேசுகின்றன. சரத்திலும் அரும்புச்சரம், மலர்ச்சரம், கண்டசரம் என நிறைய வகைகள் இருக்கின்றன. ராஜராஜன் பழைமையான ஒரு வெள்ளி ஆரம் வைத்திருக்கிறார். தவிர, சேதமடைந்த சரங்கள், மாலைகள், அட்டிகைகள் சிலவும் அவரது சேகரிப்பில் உள்ளன. மரகதப் பச்சைக்கற்களால் ஆன மாலை ஒன்றையும் பாதுகாத்துவருகிறார்.

நெற்றிச்சூடி முதல் மிஞ்சி வரை! - தமிழர் ஆபரண அழகு

பொட்டுத்தீட்டி

அக்காலத்தில் வெளிநாடுகளுக்கு வணிகம் செய்யச் செய்யும் கணவன்மார்கள், ஊர் திரும்பும்போது தம் மனைவியருக்கு அபூர்வமான பொருள்களை வாங்கி வந்து பரிசளிப்பதுண்டு. அப்படி காதல் ததும்ப, யாரோ ஒரு கணவன் பரிசளித்த அபூர்வ பொட்டுத்தீட்டிகள் இவை. கையடக்க அளவில் இருக்கும் இந்தப் பொட்டுத் தீட்டியின் மேற்பரப்பைத் திறந்தால் நீளமான ஒரு உலோகக்குச்சி வெளிப்படும். அதைவைத்து நெற்றியில் பொட்டு தீட்டலாம். இத்துனூண்டு உலோகக் குச்சியைக்கூட பார்த்துப் பார்த்துச் செதுக்கியிருக்கிறார்கள் அக்காலக் கைவினைஞர்கள். பொட்டுக்குடுவை வண்ணக்கற்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதைப் பார்க்க வியப்பாக இருக்கிறது. இன்று பொட்டு வண்ணங்களில் ஏராளமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அக்காலத்தில் மஞ்சள், சந்தனம், நல்லெண்ணெய் கலந்த இயற்கையான வண்ணங்களையே பொட்டிடப் பயன்படுத்தினார்கள். ராஜராஜன் சேகரிப்பில் இரண்டு அழகிய பொட்டுத்தீட்டிகள் உள்ளன.

நெற்றிச்சூடி முதல் மிஞ்சி வரை! - தமிழர் ஆபரண அழகு

குங்குமச்சிமிழ்

காதல் மனைவிக்கு ஆண்கள் தரும் பரிசு பெரும்பாலும் குங்குமச்சிமிழ்தான். அக்காலப் பெண்கள் பயன்படுத்திய வெள்ளி குங்குமச்சிமிழ்கள், முத்துக்கள் பதித்த அழகான வேலைப்பாடுகள் செய்யப்பட்ட குங்குமச்சிமிழ்கள் என 20-க்கும் மேற்பட்ட குங்குமச்சிமிழ்கள் ராஜராஜனின் சேகரிப்பில் இருக்கின்றன.

நெற்றிச்சூடி முதல் மிஞ்சி வரை! - தமிழர் ஆபரண அழகு

தண்டை

தமிழர் வாழ்வில் கலந்த மிகப் பழைமையான அணிகலன் இது. இதை, சிலம்பு என்றும் சொல்வார்கள். பெண்கள் மட்டுமின்றி அரசர்களும் இதை அணிவதுண்டு. பெரும்பாலும் வெள்ளியால் செய்யப்படும். அக்காலத்தில் திருமணமான பெண்கள் சலங்கைகள் கொண்ட தண்டையை அணிவது வழக்கம். ராஜராஜனிடம் நிறைய தண்டைகள் இருக்கின்றன. பல, பயன்படுத்தும் நிலையில் இருக்கின்றன.

நெற்றிச்சூடி முதல் மிஞ்சி வரை! - தமிழர் ஆபரண அழகு

தாலி

தாலி ஒரு பண்பாட்டு அணிகலன். தாலியின் வடிவத்தையும் அதில் பொறிக்கப்பட்டுள்ள சின்னங்களையும் கொண்டே அந்தக் குடும்பத்தின் வேரைக் கண்டறிந்துவிட முடியும். பெருந்தாலி, சிறுந்தாலி, தொங்கு தாலி, பொட்டுத்தாலி, சங்குத்தாலி, தொப்புத்தாலி, உருண்டைத்தாலி, கருந்தாலி, ஜாகத்தாலி, இருதாலி என நிறைய வகைகள் இதில் உண்டு. ராஜராஜனின் சேகரிப்பில் அக்கால அரச குடும்பங்கள், தனவந்தர்கள் வீட்டுப் பெண்கள் அணியும் பத்துக்கும் மேற்பட்ட தாலிகள் உள்ளன. அனைத்தும் மிகப்பெரிய டாலர் வடிவில் இருக்கின்றன. கூத்துகளில் கலைஞர்கள் அணியும் கழுத்திரு டாலர்களும் ராஜராஜன் சேகரிப்பில் இருக்கின்றன.

நெற்றிச்சூடி முதல் மிஞ்சி வரை! - தமிழர் ஆபரண அழகு

காதணிகள்

பழந்தமிழ்ப் பெண்கள் வயதுக்கேற்றவாறு காதணிகளை அணிந்தார்கள். தோடு, கொப்பு, ஓலை, குழை, இலை, குவளை, கொந்திளவோலை, கன்னப்பூ, முருகு, விசிறி முருகு, சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல் என சங்க இலக்கியங்கள் நிறைய காதணி வகைகள் குறித்துப் பேசுகின்றன. ராஜராஜன் அக்காலப் பெண்கள் பயன்படுத்திய நீள மற்றும் குமிழ் வடிவத் தொங்கலுடன்கூடிய அபூர்வ காதணிகளை சேகரித்து வைத்திருக்கிறார். தவிர, 25-க்கும் மேற்பட்ட விதவிதமான காதணிகளையும் பாதுகாக்கிறார். வெள்ளியில் உருவாக்கி பாலிஷ் செய்யப்பட்ட இந்தக் காதணிகள் நுட்பமான வேலைப்பாடுகளுடன் உள்ளன. வயதான பெண்கள் அணியும் தண்டட்டிகளும் ராஜராஜனிடம் உள்ளன.

நெற்றிச்சூடி முதல் மிஞ்சி வரை! - தமிழர் ஆபரண அழகு

மூக்கணிகள்

பழந்தமிழ் இலக்கியங்களில் மூக்கணிகள் பற்றி எந்தச் செய்திகளும் இல்லை. சேர, சோழ, பாண்டிய சிற்பங்களிலும் மூக்கணிகள் இடம்பெறவில்லை. 17-ம் நூற்றாண்டுக்குப் பிறகான ஓவியங்கள், சிற்பங்களில்தான் பெண்கள் மூக்கணிகள் பயன்படுத்தியிருக்கிறார்கள். மூக்குக்கும் பெருங்குடல், சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. மூக்கின் வர்மப் புள்ளிகள் தூண்டப்படும்போது குடல் தொடர்பான பிரச்னைகள் தீரும் என்கிறார்கள் அக்குபங்சர் மருத்துவர்கள். ராஜராஜன் சேகரிப்பில் முதலை வடிவ மூக்குத்தி, அன்னபட்சி வடிவ மூக்குத்தி, மயில் வடிவ மூக்குத்திகள் உள்ளன. மூக்கணிகளில்கூட கலைஞர்கள் இத்தனை கலைநுட்பத்தைப் பயன்படுத்தி அழகுக்கு அழகூட்டியிருக்கிறார்கள். இந்தவகை மூக்கணிகளை இன்று எங்கும் காண முடியாது. நூற்றுக்கும் மேற்பட்ட மூக்குத்திகளை வைத்திருக்கிறார் ராஜராஜன். தலைமுடியோடு மூக்குத்தியை இணைக்கும் மொன்னப்பதட்டு என்ற அணிகலன் இன்று வழக்கொழிந்துவிட்டது. அதுவும் ராஜராஜன் சேகரிப்பில் உள்ளது.

நெற்றிச்சூடி முதல் மிஞ்சி வரை! - தமிழர் ஆபரண அழகு

வண்ணப்பொட்டுக் குப்பி

பெண்கள் தாங்கள் அணியும் உடைக்கேற்ப பொட்டுகள் அணிவார்கள். அக்காலப் பெண்கள் அதற்கெனப் பயன்படுத்திய அழகிய குப்பிகள் இவை. பூ வடிவில் இருக்கும் ஒரு குப்பியின் மேலிருக்கும் மூடியைத் திறந்தால் பளீரென மலர்கிறது. நான்கு அறைகள் உள்ளே இருக்கின்றன. இது ராஜராஜனின் அப்பா காளிராஜனின் சேகரிப்பு.

நெற்றிச்சூடி முதல் மிஞ்சி வரை! - தமிழர் ஆபரண அழகு

வளையல்கள்

முற்காலத்தில் மண்ணால் வளையல் செய்தவர்கள் தமிழர்கள். ராஜராஜனிடம் ஏராளமான பழங்கால வளையல் சேகரிப்புகள் உள்ளன. போர்க்களத்துக்கு பெண்கள் அணிந்து செல்லும் வளையல் வியப்பூட்டுகிறது. சாதாரண நேரங்களில் கைகளுக்கு ஆபரணமாக அலங்கரிக்கும் இந்த வளையல், போரில் ஆயுதமாகிவிடுகிறது. நுண்ணிய வேலைப்பாடுகளுடன் அமைந்த இன்னொரு ஜோடி வளையல்களில் யாளி முகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பெரிய மோதிரம் போலிருக்கும் ஒரு வளையலில் பச்சைக்கல் பதிக்கப்பட்டுள்ளது.

நெற்றிச்சூடி முதல் மிஞ்சி வரை! - தமிழர் ஆபரண அழகு

சயனைடு குப்பி

இது மிகவும் அபூர்வ பொருள். இந்தக் குப்பி மகாராணிகள் வசம் எப்போதும் இருக்குமாம். சில ராணிகள் வளையல் வடிவில் இதை அணிந்திருப்பார்களாம். யுத்தங்களால் நிறைந்த அக்காலகட்டத்தில், அரசன் வீர மரணம் எய்தி நாடு எதிரிகளிடம் பிடிபடும் சூழல் வந்தால் ராணிகள் இதிலிருக்கும் சயனடை அருந்தி மரணம் எய்துவார்களாம். டப்பா வடிவ குப்பி, வளையல் வடிவக் குப்பி இரண்டும் இருக்கின்றன.

நெற்றிச்சூடி முதல் மிஞ்சி வரை! - தமிழர் ஆபரண அழகு

நெற்றிச்சூடி

பெண்களை தேவதைகளாக்கும் அணிகலன். தலைமுடியோடு பிணைத்து நடுநெற்றியில் விழுமாறு இதை அணிவார்கள். அக்காலப் பெண்கள் தாழம்பூ, தாமரைப்பூ, சொருகுப்பூ, சாமந்திப் பூ, அடுக்குமல்லிப் பூ, இலை, அரசிலை, பதுமம், சரம், பூரப்பாளை, கோதை, வலம்புரி என பலவகை நெற்றிச்சூடிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ராஜராஜனிடம் 50-க்கும் மேற்பட்ட நெற்றிச்சூடிகள் உள்ளன.

நெற்றிச்சூடி முதல் மிஞ்சி வரை! - தமிழர் ஆபரண அழகு

அஞ்சனக் குடுவை

அக்காலப் பெண்கள் கண் மைகளை வைத்துக்கொள்ளப் பயன்படுத்திய டப்பாக்கள்தான் அஞ்சனக்குடுவைகள். மீன், கிளி, புறாவென ஏராளமான வடிவங்களில் இந்த அஞ்சனக்குடுவைகள் இருக்கின்றன. தூய பருத்தித்துணியை விளக்கெண்ணெயில் ஊறவைத்து நல்ல விளக்கில் காட்டி எரிப்பார்கள். அப்போது வெளிப்படும் புகையை ஒரு கொட்டாங்கச்சியில் தேக்கி, சேகரித்து இந்த அஞ்சனக்குடுவையில் பாதுகாத்து வைத்துக்கொள்வார்கள். இதுதான் அக்காலக் கண்மை. அடர் கருமை தருவதோடு கண்களைத் தாக்கவரும் கிருமிகளை அழிக்கும் தன்மையும் இந்தக் கண்மைக்கு உண்டாம். ராஜராஜன் 25-க்கும் மேற்பட்ட வெவ்வேறு வடிவ அஞ்சனக்குடுவைகளைச் சேகரத்தில் வைத்திருக்கிறார். கிளி வடிவில் திறந்து மூடும் வகையிலான அஞ்சனக்குடுவை பேரழகாக இருக்கிறது.

நெற்றிச்சூடி முதல் மிஞ்சி வரை! - தமிழர் ஆபரண அழகு

தாம்பூலப் பெட்டிகள்

அக்காலப் பெண்களின் உதட்டைச் சிவப்பாக்க இன்று இருப்பதுபோல ரசாயனங்கள் ஏதுமில்லை அப்போது தாம்பூலம்தான். அண்டை நாட்டு மன்னர்கள் நட்புரீதியாகச் சந்தித்து உரையாடும்போது, ராணிக்கு தாம்பூலப் பெட்டிகளைப் பரிசாகத் தருவது வழக்கமாம். அப்படி யாரோ ஒரு ராணிக்கோ, ஜமீன்தாரினிக்கோ வழங்கப்பட்ட தாம்பூலப் பெட்டிகள் இவை. மிக நுட்ப வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு பெட்டி, மயில் வடிவிலான ஒரு பெட்டியென நிறைய தாம்பூலப் பெட்டிகள் ராஜராஜனின் சேகரிப்பில் இருக்கின்றன.

நெற்றிச்சூடி முதல் மிஞ்சி வரை! - தமிழர் ஆபரண அழகு

மோதிரங்கள்

நூற்றுக்கணக்கான பழங்கால மோதிரங்களைப் பாதுகாக்கிறார் ராஜராஜன். பவளம், செவ்வந்திக் கல், புஷ்பராகம், மரகதம், கோமேதகம், ரத்தினம், சந்திர, சூரியக் கல், வைடூரியம் போன்ற கற்கள் பொருத்தப்பட்ட பழைமையான மோதிரங்களும் உள்ளன. தூய பவளம் பொருத்தப்பட்ட ஒரு மோதிரத்தை பொக்கிஷம்போல பாதுகாக்கிறார். அக்காலத்தில் பயன்படுத்திய உலோக, சட்ட மோதிரங்களும் நிறைய உள்ளன.

நெற்றிச்சூடி முதல் மிஞ்சி வரை! - தமிழர் ஆபரண அழகு

மிஞ்சி

காலாழி, தாழ், செறி, நல்லணி, பாம்பாழி, பில்லணை, பீலி, முஞ்சி, மெட்டி என கால் விரல்களில் பெண்கள் அணியும் மிஞ்சியில் பலவகைகள் உண்டு. பெரும்பாலும் எல்லா வகைகளுமே ராஜராஜன் சேகரிப்பில் இருக்கின்றன. மிஞ்சி, மருத்துவ காரணங்களுக்காக அணியப்படும் அணிகலன். கோபுரங்கள் வைத்த அழகிய மிஞ்சிகள், வெள்ளிக்கம்பிகளைச் சுற்றி கைகளாலேயே முறுக்கி உருவாக்கப்பட்ட மிஞ்சிகள் என, பார்க்க வியப்பூட்டும் பல இருக்கின்றன.

நெற்றிச்சூடி முதல் மிஞ்சி வரை! - தமிழர் ஆபரண அழகு

வாசனைத் திரவியக் குடுவை

ராணிகளின் ஒப்பனையறையில் ஆளுயரக் கண்ணாடியை ஒட்டி இந்தக் குடுவை தொங்கிக்கொண்டிருக்கும். இதற்குள் புனுகு போன்ற விலையுயர்ந்த வாசனைத் திரவியம் இருக்கும். குளியல் முடிந்ததும் ராணிகள் இந்தக் குடுவையைக் கவிழ்த்து உடம்பில் பூசிக்கொள்வார்கள். ராஜராஜனிடம் இருக்கும் இந்தக் குடுவைகளின் வேலைப்பாடு வியக்கவைக்கிறது. தங்க முலாம் பூசி, வெள்ளி இழைகளை ஒன்றோடு ஒன்று கோத்து, நடுவில் நீலக்கல் பொருத்தி, சுற்றிலும் வண்ணக்கற்கள் அடுக்கி பேரழகுடன் செய்யப்பட்ட இந்தக் குடுவை ஏதோ ஒரு மகாராணி பயன்படுத்தியதாக இருக்கலாம் என்கிறார் ராஜராஜன். லட்சக்கணக்கில் இதற்கு விலை வந்தும் தர சம்மதிக்கவில்லையாம் அவர்.

ராஜராஜனின் சேகரிப்பில் இருக்கும் இன்னொரு வாசனைத் திரவியக் குடுவை வித்தியாசமானது. கைகளால் தாங்கியிருக்கும் உலக உருண்டையின் மேல் ஒரு தேவதை அமர்ந்திருக்கிறாள். இரண்டு பாகங்களையும் ஒரு லாக் இணைக்கிறது. இது, தன் காதலிக்கு யாரோ ஒரு தனவந்தக் காதலன் பரிசளித்தது என்கிறார் ராஜராஜன்.

நெற்றிச்சூடி முதல் மிஞ்சி வரை! - தமிழர் ஆபரண அழகு

மயிர்கோதி

பெண்கள் தலைமுடியின் சிக்கெடுக்கப் பயன்படுத்தும் ஒருவித சீப்பு. சிக்குவாரி, சிணுக்கோலி என்றும் இதைச் சொல்வார்கள். ராஜராஜன் 50-க்கும் மேற்பட்ட மயிர்கோதிகளை வைத்திருக்கிறார். தோதகத்தி மரத்தில் மானின் உருவம் செதுக்கி செய்யப்பட்ட எடை குறைவான ஒரு சிக்குவாரி அற்புதமாக இருக்கிறது.

`மீன், யாளி உருவங்கள் வார்க்கப்பட்ட சிக்குவாரிகள் பாண்டிய மகாராணிகள் பயன்படுத்தியதாக இருக்கலாம்' என்கிறார் ராஜராஜன்.

நெற்றிச்சூடி முதல் மிஞ்சி வரை! - தமிழர் ஆபரண அழகு

சீப்பு

அக்காலத்தில் வாழ்க்கைத்தரத்துக்கேற்ப உலோகங்கள், மான்கொம்பு, யானைத்தந்தமென பல்வேறு பொருள்களில் சீப்புகள் செய்து பயன்படுத்தியுள்ளார்கள். ஒரு காதல் கணவன், காமுறும் மயிலின் உருவைச் செதுக்கி வெள்ளியில் தன் மனைவிக்குப் பரிசளித்த சீப்பு இது. ராஜராஜனின் தாத்தா மிகவும் பெருமை வாய்ந்த கலைப்பொருளாக இதைச் சேகரித்துப் பாதுகாத்திருக்கிறார்.