சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

அவதாரம் - பகல் வேஷக்காரர்கள்

அவதாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
அவதாரம்

பலவேஷக்காரர்களை ஆந்திராவில் `புடக ஜங்காளம்' என்கிறார்கள். தமிழகத்தில் `சங்கம பண்டாரம்' என்று பட்டியலிடப்பட்டுள்ளார்கள்.

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

முகம் முழுவதும் வண்ணப்பொடி பூசி ராமராகவும் லட்சுமணராகவும் ஆஞ்சநேயராகவும் தர்மராகவும் உருமாறி, தெருக்களில் உங்களைக் கடந்துபோகும் மனிதர்களை சற்று கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? தோளில் தொங்கும் ஆர்மோனியம் அதிர, ராம சீதா பாடல்களை சுதி சிதறாமல் பாடி, கடைகளிலும் வீடுகளிலும் கையேந்தி நிற்கும் அவர்கள் யார்..? எங்கிருந்து வருகிறார்கள்..?

தேர்ந்த ஒரு கூத்துக்கலைஞனின் உடல்மொழியோடு அடியெடுத்து நடக்கும் இவர்கள், பலவேஷக்காரர்கள். பகல் வேஷக்காரர்கள் என்றும் இவர்களை அழைப்பது உண்டு. அதிகாலை எழுந்து, குழுவாகக் கிளம்பி கிராமத்துக் கோயிலொன்றில் அரிதாரம் பூசி, ஆளுக்கொரு திசையில் நடந்து பாட்டும் கூத்துமாடி யாசகம் பெறும் இந்த மக்களின் பூர்வீகம், ஆந்திரா. இந்தியாவில் பழைமையான வாழ்க்கைமுறையோடு மிஞ்சியிருக்கும் நாடோடி சமூகங்களில் பலவேஷக்காரர் சமூகமும் ஒன்று.

இந்தியாவில் 860-க்கும் மேற்பட்ட நாடோடி சமூகங்கள் உண்டு. இசை, கூத்து, நடனம், கைவினைக்கலை எனப் பல்வேறு தொழிற்பண்பாடுகளைக் கொண்டு, ஊர் ஊராக அலைந்து நிழல் கண்ட இடத்தில் தங்கி, கிடைத்த உணவை உண்டு வாழும் இந்தப் பழங்குடிச் சமூகங்களில் பல கல்வி, வேலைவாய்ப்புகளைப் பெற்று அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிட்டன. இருப்பிடங்களை அமைத்து ஒரே இடத்தில் தங்கி, பிற மக்களைப்போல வாழப் பழகிவிட்டன. ஆனால், சில சமூகங்கள் இன்னும் தங்கள் பழங்குடித்தன்மையை மாற்றிக் கொள்ளவில்லை. இன்றளவும் யாசகம் ஒன்றையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கின்றன. பலவேஷக்காரர் சமூகமும் அப்படியான நிலையைத்தான் கொண்டிருக்கிறது.

அவதாரம் - பகல் வேஷக்காரர்கள்

பலவேஷக்காரர்களை ஆந்திராவில் `புடக ஜங்காளம்' என்கிறார்கள். தமிழகத்தில் `சங்கம பண்டாரம்' என்று பட்டியலிடப்பட்டுள்ளார்கள். தியேட்டர்களில் இருந்து சினிமா ஓ.டி.டி வழி வீட்டுக்கு வந்த மாதிரி, வேஷம் கட்டிக்கொண்டு வீடுகளுக்கே வந்து புராணக் காட்சிகளை நடித்துக்காட்டும் கலைஞர்கள் இவர்கள். ஆந்திர வாழ்வியல் மரபில் இந்தக் கலைஞர்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறார்கள். தமிழகத்தில் கூத்துக்கலை போல ஆந்திராவில் பலவேடக் கலை. காலப்போக்கில் மாற்றங்களை எதிர்கொள்ள முடியாமல் தவித்த இந்தக் கலைஞர்கள், படிப்படியாக அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தார்கள். நிறைய பேர் கர்நாடகத்தில் நிலை கொண்டுள்ளார்கள். அங்கு `பேட புடக ஜங்கம்' என்று இந்தக் கலைஞர்களுக்குப் பெயர். தெலுங்கோடு, அந்தந்தப் பகுதியின் வட்டார மொழியும் கலந்து பேசும் இம்மக்கள், மதுரை நாயக்கர்கள் தமிழகம் வந்து ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த காலத்தில் தமிழகத்துக்கு வந்தார்கள். சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, தஞ்சாவூர், சேலம், திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஆங்காங்கே பொதுவிடங்களிலும் பிற மக்களின் தொந்தரவில்லாத ஒதுக்குப்புறங்களிலும் கூடாரம் அமைத்துத் தங்கி தொழில் செய்கிறார்கள்.

பலவேஷக்காரர்களின் இடப்பெயர்வு, பிற நாடோடி சமூகங்களைவிட வித்தியாசமானது. குழந்தைகளை இவர்கள் பெயரும் பகுதிகளுக்கு அழைத்து வருவதில்லை. ஆந்திராவில் உறவுகளிடம் விட்டுவிட்டு கணவன்-மனைவி மட்டுமே வருகிறார்கள்.

அவதாரம் - பகல் வேஷக்காரர்கள்

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில், திருவள்ளுவர் தெரு, ஜி.எஸ்.டி ரோடு, பெருமாள் கோயில் தெரு, செல்லியம்மன் கோயில் தெரு போன்ற இடங்களில் 100-க்கும் மேற்பட்ட பலவேஷக்காரர்கள் வசிக்கிறார்கள். செல்லியம்மன் கோயில் தெருவில் ரயில் நிலையத்தை ஒட்டிய புதர்கள் அடர்ந்த ஒரு வெளியில் 25 குடும்பங்கள் குடியிருக்கின்றன. சுற்றிலும் கழிவுநீர் ஓடும் அந்த இடத்தில், துணிகளாலும் கைவிடப்பட்ட பேனர்களாலும் கட்டப்பட்ட கூடாரங்களுக்குள் தம்பதிகளாகத் தங்கியிருக்கிறார்கள். அதிகாலை 8 மணிக்கெல்லாம் இந்தக் கூடாரங்கள் காலியாகிவிடுகின்றன. ஆண்கள் பலவேஷம் தரிக்க, பெண்கள் சாலை சிக்னல்களில் நோட்டுப் புத்தகங்கள், பேனா விற்க கிளம்பிவிடுகிறார்கள்.

``ஆதியிலிருந்தே எங்க தொழிலுக்குப் பெண்கள் வரமாட்டாங்க. வரக்கூடாதுன்னு கட்டுப்பாடு இருக்கு. இதெல்லாம் தெய்வக்கட்டுப்பாடுகள். தெய்வாம்சம் உள்ள தொழில்... சுத்தபத்தமா செய்யணும். வேற வேற தொழில்கள் செய்ய உடம்புல தெம்பிருக்கு. ஆனா, கடவுள்கிட்ட இருந்து வாங்கிட்டு வந்த வரம்... வழிவழியா எங்களை வழிநடத்துது. அதனால விட்டு விலகாம இன்னைக்கும் கையேந்தி நிக்குறோம். சினிமாவுக்கெல்லாம் மூலமா இருந்தது எங்க கலைதான். பகல் வேஷம்ங்கிறது ஆந்திராவுல கூத்து மாதிரி தனிக்கலையாவே இருந்துச்சு. அரங்கத்தையே வீட்டு வாசல்களுக்குக் கொண்டு போயிருவோம். எப்பவும் ஊர் வீட்டு ஊர் போகும்போது குழுவாத்தான் போவோம். அந்தக்குழுவுல ராமர், சீதை, ஆஞ்சநேயர், வாலி, சுக்ரீவன், ராவணன், சூர்ப்பனகைன்னு ராமாயாணப் பாத்திரங்களும் இருக்கும். கிருஷ்ணர், தர்மர், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்னு பாரதக் கதாபாத்திரங்களும் இருக்கும். பெண் வேடத்தையும் ஆண்கள்தான் போடுவோம். ஒருத்தர் ஆஞ்சநேயர் வேஷம் போட்டாருன்னா... கடைசிக்காலம் தொட்டு அவரு அதுதான் போடுவார்.

அவதாரம் - பகல் வேஷக்காரர்கள்

அந்தக் காலத்துல மொத்தமா எல்லாரும் ஒரே கிராமத்துக்குப் போய் தங்கிடுவோம். ஒரு வாரம், பத்து நாள்னு தங்கி வீடு வீடாப் போய் கூத்தாடுவோம். ஜால்ரா, ஆர்மோனியம், கஞ்சிரா, மிருதங்கம், கட்டைன்னு ஆளுக்கொரு வாத்தியம் வெச்சுக்கிட்டு ராம சீதா பாட்டுகளைப் பாடுவோம். பெரும்பாலும் வசனம் இருக்காது. நெல்லோ, காசோ, தானியமோ, வஸ்திரமோ மக்கள் தருவாங்க. அதை வெச்சுதான் ஜீவனம் பண்ணினோம். காலப்போக்குல கலைக்கு மரியாதை குறைஞ்சதால, இப்போ யாசகம் கேக்குற நிலைக்கு வந்துட்டோம்'' என்கிறார் மணி. இவர்தான் ஊரப்பாக்கம் பலவேஷக்காரர்களுக்குத் தலைவர். இவர் சொல்லுக்கு எல்லோரும் கட்டுப்படுகிறார்கள்.

ஊரப்பாக்கம் பலவேஷக்காரர்கள், சென்னை தாண்டி திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் வரை சென்று தொழில் செய்கிறார்கள். அவரவர்களுக்கென்று ஊர்களை ஒதுக்கீடு செய்துகொள்கிறார்கள். அந்த ஊருக்கு மற்றவர்கள் செல்வதில்லை. ஒரு ஊருக்கு ஒருமுறை போய்விட்டால், அடுத்த ஒரு மாதம் அங்கு செல்ல மாட்டார்கள். கோயில் திருவிழாக்காலங்களில் அந்தந்த ஊரிலேயே தங்கி வேடம் போடுவார்கள். அந்தக் காலங்களில் மட்டும் வருமானம் அதிகமாக இருக்கும்.

``சனிக்கிழமை ஆஞ்சநேயர்களுக்கு வருமானம் கொஞ்சம் அதிகமா இருக்கும். வெள்ளிக்கிழமைகள்ல சிவன், கிருஷ்ணன், ராமர், சீதாவுக்கு கொஞ்சம் கூடுதலா காசு கிடைக்கும். சில வீடுகள்ல கையெடுத்துக் கும்பிட்டு ஆசி வாங்கிட்டு காசோ, வஸ்திரமோ, தானியமோ தருவாங்க. சில வீடுகள்ல தேங்காய் பழமெல்லாம்கூட வச்சு ஆரத்தியெல்லாம் காட்டுவாங்க. சில வீடுகள்ல `வந்திருச்சுங்க பாரு தரித்திரங்க... போங்கய்யா... போய் வேற வீடு பாருங்க'ன்னு திட்டுவாங்க. எங்க மேல இருக்கிற தெய்வ உருவுக்குக்கூட மரியாதை தர மாட்டாங்க...'' என்று வருந்துகிறார் துர்க்கேஷ். பீமன் வேடக்காரர்.

அவதாரம் - பகல் வேஷக்காரர்கள்

பலவேஷக்காரர்களின் வாழ்க்கைமுறை பிற நாடோடி சமூகங்களிலிருந்து வேறுபட்டது. தொழிலில் பெண்களைத் தவிர்த்தாலும் குடும்ப அமைப்பில் பெண்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். சிவன்-பார்வதி பிரதான தெய்வங்களாக இருந்தாலும் ஜமுளம்மா, அங்காளம்மா, மாரியம்மா எனப் பெண் தெய்வங்களே இவர்களின் வழிபாட்டில் பிரதான இடம் பெறுகின்றன. முன்பெல்லாம் 14-15 வயதில் திருமணம் முடிந்துவிடும். இப்போது சற்று நிலை மாறியிருக்கிறது. ஆனாலும் கல்வி இவர்களுக்கு இன்னும் வாய்க்கவில்லை. இந்தத் தலைமுறைப் பிள்ளைகள் கொஞ்சம் பேர் பள்ளிக்குச் செல்கிறார்கள்.

``ஆந்திராவுல இருந்து கர்நாடகாவுக்கு எங்காளுங்க நிறைய பேர் இடம் பெயர்ந்து போயிட்டாங்க. அங்கெல்லாம் எங்க மக்களுக்கு நிலபுலம், வீடெல்லாம்கூட இருக்கு. ஆனா, அதை வச்சு விவசாயம் செய்யமுடியாது. எல்லாம் வானம் பாத்த பூமி. எத்தனை ஏக்கர் நிலமிருந்தாலும் இந்தப் பலவேஷம்தான் எங்களுக்கு உயிர்த்தொழில். நாங்க தொழிலுக்குப் போற ஊர்களுக்குப் பிள்ளைகளை அழைச்சுட்டுப் போகமாட்டோம். இருக்கிற வயதானவங்ககிட்ட விட்டுட்டு புருஷன்-பொஞ்சாதியாத்தான் போவோம். முன்னெல்லாம் பெரியவங்க பிள்ளைகளுக்குத் தொழில் கத்துக்கொடுத்துத் தயார்படுத்துவாங்க. இப்ப காலத்துக்கு ஏத்த மாதிரி பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப ஆரம்பிச்சிருக்கோம். ஆனாலும் இதுநாள் வரைக்கும் ஒரு அரசாங்க வேலைக்கோ, அதிகாரி வேலைக்கோ எங்காளுங்கோ யாரும் போயி உக்கார முடியலே'' என்கிறார் சுங்கப்பா. லட்சுமணன் வேடம் தரிப்பவர்.

அவதாரம் - பகல் வேஷக்காரர்கள்

பலவேஷக்காரர் சமூகத்தில் ஜம்பண்ணா என்ற பெயர் குடும்பத்தில் ஒருவருக்காவது வைத்துவிடுவது வழக்கமாம். ஊரப்பாக்கத்திலிருக்கும் அவர்கள் குடியிருப்பில் நின்று `ஜம்பண்ணா' என்றால் பத்துப் பேராவது தலையுயர்த்திப் பார்க்கிறார்கள். அதனால் `அர்ஜுனன் ஜம்பண்ணா', `சிவன் ஜம்பண்ணா', `வாலி ஜம்பண்ணா' என்று அவர்கள் போடும் வேடத்தை முன்னிட்டு அழைக்கிறார்கள்.

அவதாரம் - பகல் வேஷக்காரர்கள்

இருப்பதிலேயே மூத்த ஜம்பண்ணாவுக்கு வயது 60. நடக்க முடியாத அளவுக்கு உடல் பிரச்னைகள். ஆனாலும் வேஷம் தரிப்பதை அவர் நிறுத்தவில்லை. சிவன் வேஷமென்றால் இவர்தான். சாதாரண கோலத்தில் நடக்கவே தடுமாறும் ஜம்பண்ணா, சிவன் வேஷம் போட்டுவிட்டால் நிஜமாகவே சிவனாகிவிடுகிறார். ``10 வயசுல இருந்து வேஷம் கட்டுறேன். 50 வருஷமா இதுதான் எனக்கு வாழ்க்கை. காலையில ஏழு மணிக்கு இங்கிருந்து கிளம்புனா கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டுன்னு கால்போன போக்குல போவேன். எங்காவது ஒரு கோயில்ல உக்காந்து வேஷம் கட்டிக்குவேன். இந்த கலர் பவுடரைப் போட்டுக்கிட்டு வெயில்ல நடக்க முடியாது. திகுதிகுன்னு எரியும். அதனால அதிகபட்சம் 11 மணிக்கெல்லாம் கலைச்சாகணும். வேஷம் போடுறது ஒரு சிரமம்னா, கலைக்கிறது அதைவிட சிரமம். தேங்காய் எண்ணெய் போட்டுத் தேய்ச்சு துளித்துளியா அழிச்சு எடுக்கணும். மதியத்துக்கு மேல வீட்டுக்கு வந்துடுவேன். இன்னைக்கு வரைக்கும் இந்த சிவன்தான் பசியாத்துறார்...'' என்று கைகூப்புகிறார் சிவன் ஜம்பண்ணா.

அவதாரம் - பகல் வேஷக்காரர்கள்

முதலில் முகத்தில் தேங்காய் எண்ணெய் தேய்த்துக்கொள்கிறார்கள். மேலே வண்ணப்பொடியைப் பூசி அதற்கு மேல் பவுடர் பூசுகிறார்கள். ஆஞ்சநேயருக்கு எக்ஸ்ட்ராவாக தனி உபகரணங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஆயுதம் இருக்கிறது. உடை இலக்கணமும் உண்டு. நாமம், திருநீறு என்று வேறுபாடுகளும் உண்டு. ஆனாலும் எல்லாக் குரல்களும் ராமா சீதாவைத்தான் பாடுகின்றன. லட்சுமணன் வேடம் போடும் சுங்கப்பா 15 வருடங்களாக தெருவுலாப் போகிறார்.

``என் மனைவி சிக்னல்ல புத்தகங்கள் விக்குறா. நான் தினமும் வேஷம் போட்டுக்கிட்டு யாசகத்துக்குப் போவேன். வாரத்துல ஒருநாள் ஆம்பிளைங்க வேலைக்குப் போகமாட்டோம். நடந்து நடந்து காலு கையெல்லாம் குடைச்சல் எடுத்திடும். அதனால முழுமையா ஓய்வு எடுப்போம். குலத்தொழிலைவிட மனசில்லை. `காலு கையெல்லாம் நல்லாத்தானே இருக்கு... உடம்பை வளைச்சு வேலை செய்யாம சாமி வேஷம் போட்டுக்கிட்டுப் பிச்சையெடுக் கிறியே'ன்னு சில பேர் திட்டுவாங்க. இது எங்களுக்கு விதிக்கப்பட்ட கடமை... காலையில 7 மணிக்குக் கிளம்பினா மத்தியானம் பன்னெண்டு மணிக்குள்ள 200 ரூபா கிடைக்கும். ஆடி மாதத்துல மக்கள் ஆன்மிகப் பற்றோட இருப்பாங்க. அதேமாதிரி யுகாதி, தீபாவளி சமயங்கள்லயும் 1,500 ரூவா வரைக்கும் கிடைக்கும். எப்பாவது திருவிழாக்கள்ல கூத்தாடக் கூப்பிடுவாங்க. அதுக்குப் போனா 2,000 ரூபாய் தருவாங்க... இப்படி கிடைக்கிறத வச்சுப் பிழைச்சுக்கிட்டிருக்கோம். நாலு மாசத்துக்கு ஒருமுறை ஊருக்குப் போயி புள்ளை குட்டிகளைப் பாத்துட்டு வருவோம்...'' என்கிறார் சுங்கப்பா.

அவதாரம் - பகல் வேஷக்காரர்கள்

சந்தோஷ் இந்தத் தொழிலுக்கு நான்காவது தலைமுறை. இவர் பெண் வேடங்கள் மட்டுமே போடுபவர்.

``சீதை, திரௌபதி, மோகினி வேடம் போடுவேன். சில நேரங்கள்ல கூட்டமாப் போனா சூர்ப்பனகைக்கு ஆளிருக்காது. அப்போ அந்த வேடமும் போடுவேன். ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு நிறமிருக்கு. ராமருக்கு ஊதா நிறம். கிருஷ்ணருக்கும் ஊதாதான். கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். எல்லாருகிட்டயுமே தனித்தனியா மேக்கப் செட் இருக்கும். எல்லாமே ரொம்பப் பவரான பவுடருங்க... வெயில்ல பட்டா எரிய ஆரம்பிச்சிரும். தொடர்ந்து பயன்படுத்துறதால முகத்தோல் மரத்துப்போகும். உடைகள் எல்லாம் எங்க கைத்தையல்தான்...'' என்கிறார் சந்தோஷ்.

அவதாரம் - பகல் வேஷக்காரர்கள்

மூத்தவர்களான அம்பண்ணாவும் ராமச்சந்திரனும் இசைக்கலைஞர்கள். அம்பண்ணா ஆர்மோனியம் ஸ்பெஷலிஸ்ட். ராமச்சந்திரன் தபேலா. இவர்கள் குழுவோடு சேர்ந்து செல்வார்கள். இவர்களுக்கு இணையாக இசையும் பாட்டும் கனகம்பீரமாகப் பொழிகிறது, சிவகுமாரிடம். சிவகுமார் அர்ஜுனன் வேடம் போடுபவர். மிகச்சிறப்பாகப் பாடுகிறார்; கம்பீரமாகக் கூத்தாடுகிறார்; மிகச்சிறப்பாக ஆர்மோனியம் இசைக்கிறார். இவரை தமிழகத்தின் வடமாவட்டங்களில் உள்ள கூத்துக்குழுக்கள் ஆர்மோனியம் வாசிக்க அழைப்பதுண்டு. கூத்தாடவும் செல்கிறார்.

பலவேஷக்காரர்கள் நாடோடிகளாகப் பிரிந்து வாழ்ந்தாலும் சமூகக் கட்டமைப்பு உறுதியாக இருக்கிறது. தங்களுக்காக இருக்கும் கொண்டான்-கொடுத்தான் பிரச்னைகள் அனைத்தையும் தங்களுக்குள்ளாகப் பேசித் தீர்த்துக்கொள்கிறார்கள். பெரியவர்களின் வார்த்தைகளுக்கு இளையவர்கள் அப்படிக் கட்டுப்படுகிறார்கள்.

அவதாரம் - பகல் வேஷக்காரர்கள்

``எங்க சமூகத்துல பெரியவங்க சொல்றதுதான் வேதவாக்கு. எந்தப் பிரச்னையிருந்தாலும் சமூகத்துல இருக்கிற பெரியவர்கள் சந்திச்சுக் கூடிப்பேசி சரி பண்ணிடுவோம். எங்களுக்குள்ள மொத்தம் ஆறு பிரிவுகள் இருக்கு. மோத்து, மெரியாலி, பார்த்திகி, இடவளி, சிறுவாட்டி, ஈபுத்தி. இதுல பாத்திகியும் இடவளியும் அண்ணன் தம்பி முறை வரும். பெண்ணெடுத்துப் பெண் கொடுக்க மாட்டோம். மத்த சமூகங்களுக்குள்ள எடுத்துக் குடுத்துக்குவோம். அதே மாதிரி சாமி வேடம் போடுறதால கட்டுக்கோப்பா இருப்போம். மது, சூதுக்கு எங்க குடியிருப்புகளுக்குள்ள இடமில்லை...'' என்கிறார் துர்க்கேஷ்.

இந்தத் தலைமுறையில் சிலர் தங்கள் மரபுத் தொழிலிலிருந்து விடுபட்டு வேறு தொழில்களில் இறங்கியிருக்கிறார்கள். டூவீலர்களில் வாகனங்களின் சீட் கவர்களைக் கொண்டு சென்று ஊர் ஊராக விற்கிறார்கள். அவர்களும்கூட வாரத்தில் ஒருநாளோ இருநாளோ வேஷம் கட்டுகிறார்கள்.

அவதாரம் - பகல் வேஷக்காரர்கள்

ஊருக்குள் கடவுள்களாக உலவும் இந்த மக்கள் வாழ்க்கை இன்னும் யாசகம் பெறுவதாகவே இருக்கிறது. வாழ்நாள் முழுவதும் ராம சீதை நாமங்களையே உச்சரித்துக்கொண்டிருக்கும் இந்த மக்களுக்கு இருக்க நல்ல குடிலில்லை... கதையில் மலையைச் சுமந்துவந்த ஆஞ்சநேயர், இங்கு நிஜத்தில் வழியில் கிடைக்கும் விறகுகளை அள்ளிக்கட்டித் தோளில் சுமந்து வருகிறார். அதை வைத்துத்தான் அன்றைக்கு அடுப்பெரிக்க வேண்டும்!