கட்டுரைகள்
Published:Updated:

`மண்ணும் நமசிவாயம் மலையும் நமசிவாயம்’ - திருவண்ணாமலை தரிசனம்

திருவண்ணாமலை தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
News
திருவண்ணாமலை தரிசனம்

ஒரு தலம் - 6

மண்ணில் கொண்டாடப்பட்ட முதல் விழா கார்த்திகை தீப விழா என்கிறது தேவி மகாத்மியம். அந்த விழாவுக்குச் சிறப்பு சேர்க்கும் திருத்தலம் திருவண்ணாமலை. திருக்கார்த்திகை தீபத் திருநாள் நெருங்கிவரும் இந்தத் தருணத்தில், நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை குறித்த அபூர்வத் தகவல்கள் இங்கே உங்களுக்காக!

சிவபக்தியில் சிறந்த பிருங்கு முனிவர் தினமும் சிவனாரை மட்டுமே வலம் வந்து வணங்குவார். ஒருநாள், கயிலையில் பார்வதியும் உடன் இருந்தாள். அப்போதும் ஒரு வண்டின் உருவம் எடுத்து சிவத்தை மட்டுமே வலம் வந்து வழிபட்டார் பிருங்கி.

அவர்மீது கோபம் கொண்ட சக்திதேவி, தன் அம்சமான சக்தியை முனிவரின் தேகத்திலிருந்து பறித்துக்கொண்டாள். இதனால் வலுவிழந்த முனிவருக்குச் சிவனார் அருள்பாலித்த கதையை நாமறிவோம். அதேநேரம், ஈசனிடமிருந்து எவரும் தன்னைப் பிரித்தறியா நிலையை அடையவேண்டும் என்று சித்தம் கொண்டாள் உமையவள். அதன் பொருட்டு பூலோகம் வந்து கடும் தவம் புரிந்தவள், சிவபெருமானின் திருமேனியில் இடபாகம் பெற்றது தீபத் திருநாளில்தான்.

அன்னை பார்வதியாள் ஒருமுறை இறைவனின் கண்ணைப் பொத்தி அருள்விளையாடல் புரிய, அந்தக் கண நேரத்தில் பிரபஞ்சம் இருண்டுபோனது. உயிர்களை இருட்டில் தவிக்க விட்ட பாவம் நீங்க சக்தி தவமிருந்த இடமே திருவண்ணாமலை. ஈசனின் திருக்காட்சியை சக்தி கண்ட இடம் `நேர் அண்ணாமலை’ எனும் திருக்கோயில்; நாள் திருக்கார்த்திகை தினம்.

புனுகுப்பூனை ஒன்று ஈசனுக்குப் புனுகு சமர்ப்பித்துத் திருவண்ணாமலையில் வழிபட்டதாம். அதன் பலனாக அந்தப் பூனை, மறுபிறவியில் அயோத்தி மன்னன் ஹேமாங்கதனாகப் பிறந்தது. நன்றி மறவாத ஹேமாங்கதன், ஆயுள் முழுவதும் திருவண்ணாமலை வந்து புனுகுச் சட்டம் சாத்தி வழிபட்டான். தீபவிழாவையொட்டி `புனுகுச் சட்ட வைபவம்’ சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

உலகிலேயே மிகப்பழைமையான மலைகளில் திருவண்ணாமலையும் ஒன்று. இதன் வயது 260 கோடி ஆண்டுகள் என்பார்கள். கிருத யுகத்தில் நெருப்பு மலை யாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், இந்தக் கலியுகத்தில் மருந்து மலையாகவும் விளங்குகிறது திருவண்ணாமலை என்கின்றன புராணங்கள்.

`மண்ணும் நமசிவாயம் மலையும் நமசிவாயம்’ - திருவண்ணாமலை தரிசனம்

மலையின் உயரம் சுமார் 2,665 அடிகள். கிழக்கில் மலை ஒன்றாக அமைந்து அதாவது ஏகமுக தரிசனம் தந்து `இறைவன் ஒருவனே’ என்கிறது. தென்திசையில் இரு சிகரங்கள் தென்பட இருமுகமாக சிவசக்தி தரிசனத்தைக் காட்டுகிறது. மேற்கில் மும்முக தரிசனம் அதாவது சோமாஸ்கந்த வடிவைக் காட்டுகிறது. அதேபோல், ஈசான்ய திசையில் ஈசனின் ஐந்து முகங்களைக் காட்டி அருள் செய்கிறது அண்ணாமலை!

மலையின் மீது ஏறினால் குகை நமசிவாயர், குருநமசிவாயர், விருபாட்சி தேவர் போன்ற ஞானியர்கள் தவமிருந்த குகைகளை தரிசிக்கலாம். பீம தீர்த்தம், அருட்பால் தீர்த்தம், சித்தன் தீர்த்தம் என 81 சுனைகள் மலையில் உள்ளன. சோணை நதி, கோணநந்தி ஆறு, கும்ப நதி போன்றவை உற்பத்தியான மலையும் இதுவே.

சுமார் 24 ஏக்கர் பரப்பளவுடன், 9 ராஜ கோபுரங்கள், 6 பிராகாரங்கள், எண்ணற்ற சந்நிதிகள், இரண்டு திருக்குளங்கள் எனப் பரந்து விரிந்து திகழ்கிறது அண்ணாமலையார் ஆலயம். ராஜகோபுரம் தாண்டி கிளிக்கோபுரம் அருகில் தீபதரிசன மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தை மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் 1202-ம் ஆண்டில் எழுப்பினார். இதனால் மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் அழைப்பர். இங்குதான் மகாதீபம் ஏற்றுமுன், பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர்.

மகப்பேறு இல்லாத வல்லாள மகாராஜனுக்கு மகனாக ஈசனே எழுந்தருளி, இன்றும் மாசி மகத்தன்று அவனுக்கு ஈமக்கிரியைகள் செய்யும் அற்புதத் தலம் இது. இங்கு, தீபத் திருநாளன்று கரும்புத் தொட்டில் சுமந்து வேண்டிக்கொண்டால், விரைவில் பிள்ளை வரம் கிடைக்கும்.

`மண்ணும் நமசிவாயம் மலையும் நமசிவாயம்’ - திருவண்ணாமலை தரிசனம்

குந்திதேவி பிள்ளை வரம் பெற்றதும், அருணகிரியாருக்காகக் கந்தன் தூணைப் பிளந்து வந்ததும், அருணகிரியார் கிளி ரூபமாக இருந்து கந்தரநுபூதி பாடி அருளியதும் இந்தத் தலத்தில்தான்.

அண்ணாமலையாருக்கு வேறுபல சிறப்புப் பெயர்களும் வழங்கப்படுகின்றன. அவை: லிங்கோத்பவ மூர்த்தி, இமய லிங்கம், பிரம்ம லிங்கம், விஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர், அர்த்த நாரீஸ்வரர், கல்யாணசுந்தரர், அருணாசலேஸ்வரர், ஈசான லிங்கம், சிதம்பரேஸ்வரர், அக்னி லிங்கம், சம்புகேஸ்வரர், சனாதனேஸ்வரர், நாரதேஸ்வரர், சனந்தேஸ்

வரர், வால்மீகிஸ்வரர், சனகேஸ்வரர், வியாச லிங்கம், வசிஷ்ட லிங்கம், குபேர லிங்கம், வாமரிஷீஸ்வரர், சகஸ்ர லிங்கம், கௌசிகேஸ்வரர், குத்சரிஷீஸ்வரர், வைசம்பாதனேஸ்வரர், வருண லிங்கம், தும்புரேஸ்வரர், காசி லிங்கம், சத லிங்கம், விக்ரபாண்டீஸ்வரர், வாயு லிங்கம்.

கல்வெட்டுகளில் திருவண்ணாமலை ஆண்டார், திருவண்ணாமலை மகாதேவர், திருவண்ணாமலை ஆழ்வார், அண்ணாநாட்டு உடையார் என்று இவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலையில் அருளும் செந்தூர விநாயகர் வித்தியாசமானவர். சம்பந்தாசுரன் எனும் அசுரனை, விநாயகர் வதம் செய்தபோது, அவனது ரத்தத்தில் இருந்து பல்லாயிரம் அசுரர்கள் உருவாகினர். இதைத்தடுக்க விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார் எனப் புராணம் சொல்கிறது. சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, தீபத் திருநாள் மற்றும் தை மாதத்தில் பௌர்ணமி ஆகிய நான்கு நாள்கள் இந்த விநாயகருக்குச் செந்தூரம் சாத்துகின்றனர்.

`மண்ணும் நமசிவாயம் மலையும் நமசிவாயம்’ - திருவண்ணாமலை தரிசனம்

ஆலயத்தில், சர்வஸித்தி விநாயகர் சந்நிதியின் வடக்குப் பக்கம் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தின் தென்மேற்குப் பகுதியில் பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி உள்ளது. இங்கு ரமண மகரிஷி பல காலம் தங்கி, தவம் இருந்தார் என்று வரலாறு சொல்லும். இந்தச் சந்நிதி, ‘பரோசா தலையார்காண்’ என்ற வெளிநாட்டுப் பெண்மணி தலைமையில், சென்னை ஜே.எச். தாராபூர் அவர்களால் புனர் நிர்மாணம் செய்யப்பெற்று 14.5.1949-ல் கவர்னர்ஜெனரலாக இருந்த ராஜாஜியால் திறந்து வைக்கப்பட்டது.

கோயில்களில் பொதுவாக தெய்வத் திருமேனிகளை அஷ்ட பந்தனம் முறையில் பிரதிஷ்டை செய்வர். ஆனால், இங்கு சுவர்ண பந்தன முறை கையாளப்பட்டுள்ளது.

அருணாசலேஸ்வரர் கோயில் வளாகத்தில் அண்ணாமலையாரின் பாதம் அமைந்துள்ளது. இதற்கு தினமும் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெறுகின்றன.

அண்ணாமலையே லிங்கமாக வணங்கப்படுகிறது. அதனால் எப்போதும் எங்கிருந்தும் இந்த மலையை தரிசித்து அருள்பெறலாம். மலையே லிங்கமாக, மழையே அபிஷேகமாக, வானவில்லே திருவாசியாக, இடி-மின்னலே நாதமாக, நட்சத்திரங்களே பூக்களாக, சூரிய சந்திரர்களே திருவிளக்காகத் திகழ்கின்றனவாம்!

திருவண்ணாமலையின் கிரிவலப் பாதை, சுமார் 14 கி.மீ. தூரம் கொண்டது. அஷ்ட லிங்கங்கள், ஆதி அண்ணாமலை, நேர் அண்ணாமலை, சந்திர சூரிய லிங்கங்கள், 16 விநாயகர் கோயில்கள், 7 முருகன் கோயில்கள், வலது கையில் லிங்கம் ஏந்தி அருளும் ஆதிகாமாட்சி கோயில் என மொத்தம் 99 திருக்கோயில்களைக் கொண்ட தெய்விகக் கிரிவலப்பாதை இது. எண்ணற்ற தீர்த்தங்களும், ஞானியர்கள் திருமடங்களும் அமைந்துள்ளன.

`மண்ணும் நமசிவாயம் மலையும் நமசிவாயம்’ - திருவண்ணாமலை தரிசனம்

அண்ணாமலையை தினமும் வலம் வரலாம் என்றாலும், பெளர்ணமி கிரிவலம் விசேஷம் என்கின்றன ஞானநூல்கள். ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களின் எல்லா நாள்களுமே கிரிவலத்துக்கு உகந்தவையே. கிரிவலம் நடந்தே செல்லவேண்டும், வாகனங் களில் செல்லக்கூடாது. மலையை தரிசித்தபடியே வலம் வரும் வகையில், கிரிவலப் பாதையின் இடப்பக்கமாகவே பயணிப்பது சிறப்பு.

இறைவனை தியானித்தபடியே `அண்ணா மலைக்கு அரோகரா’, ‘நமசிவாய’ என சிவநாமங்களை மனதில் சொல்லியபடி நடக்க வேண்டும். எந்த இடத்திலும் அசுத்தம் செய்யாமல் நடக்கவேண்டும். அதேபோல் அடிமேல் அடியெடுத்து வைத்து பொறுமையுடன் வலம் வருவது சிறப்பு.

சித்தர்கள் பலரும் அரூபமாக நம்மோடு நடப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதால், குறுக்கும் நெடுக்கும் செல்லாமல் பயபக்தி யோடு கிரிவலம் வரவேண்டும். தீபத் திருநாளில் கிரிவலம் வருவது மிகவும் சிறப்பு.

மொத்தம் 14 நாள்கள் கொண்டாடப்படும் தீபத்திருவிழா, கிராம தேவதை வழிபாட்டுடன், அதாவது துர்கை அம்மனின் புறப்பாட்டுடன் தொடங்கும். திருவிழாவின் 7-ம் நாள் திருத்தேர் பவனியும், 10-ம் நாள் தீபத்திரு

விழாவும் இங்கு விசேஷம். 20 லட்சத்துக்கும் மேலான மக்கள் கூடும் தமிழகத்தின் பிரமாண்ட விழா இது.

தீபத்திருநாளில் மகா தீபஜோதியாய் அருளும் அந்த மகாதேவனை தரிசித்து வணங்குபவர்களும் அவர்களின் ஏழேழு தலைமுறை சந்ததியும் வாழ்வாங்கு வாழ்வார்கள் என்கின்றன ஞானநூல்கள். நாமும் நமது வாழ்க்கை ஒளிர, தீபத் திருநாளில் அண்ணாமலையாரை தரிசித்து வழிபடுவோம்; கிரிவலம் வந்து வரம் பல பெறுவோம்.