அலசல்
Published:Updated:

டார்கெட் வைத்து அபராதம்... திணறும் வாகன ஓட்டிகள்... புலம்பும் போக்குவரத்து காவல்துறை!

போக்குவரத்து காவல்துறை
பிரீமியம் ஸ்டோரி
News
போக்குவரத்து காவல்துறை

நாங்க மட்டும் என்ன சார் வேணும்னேவா அபராதம் விதிக்குறோம்... அரசாங்கம் கண்ணை மூடிக்கிட்டு சட்டம் போடுது. நாங்களும் பலபேரை பாவம் பார்த்து மன்னிச்சுதான் விடுறோம்.

போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராதத் தொகையை, பல மடங்கு அதிகரித்து கடந்த 2019-ம் ஆண்டு, புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது மத்திய பா.ஜ.க அரசு. காலதாமதமாக இந்தச் சட்டத் திருத்தத்தை ஏற்று, கடந்த அக்டோபர் 19-ம் தேதி அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. இந்த நிலையில், `எங்கள் வருமானத்தையெல்லாம் அபராதம் என்ற பெயரில் அரசாங்கங்களே பிடுங்கிக்கொண்டால், எப்படித்தான் வாழ்க்கை நடத்த முடியும்?’ எனப் பொரிந்து தள்ளுகிறார்கள் மிடில் கிளாஸ் மக்கள்.

இன்னொரு பக்கம் மக்கள் கோபத்துக்கு நேரடியாக ஆளாகும் போக்குவரத்துக் காவலர் களும் மன உளைச்சலில் புலம்பித் தவிக்கிறார்கள். முன்னதாக, ரூ.100, 500, 1,000 என விதிக்கப்பட்டுவந்த பழைய அபராதத் தொகைகள் ரூ.1,000, 5,000, 10,000 என உயர்த்தப்பட்டிருக்கின்றன. இதனால், பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்துக் காவலர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்படுவதும், இது சம்பந்தமான வீடியோக்கள் இணையத்தில் பரவி கொந்தளிப்பை ஏற்படுத்துவதும் தொடர்கிறது.

ஆனால், `போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் பொதுமக்கள்மீது புதிய அபராதம் விதிப்பதில் காவல்துறையினர் மனிதாபிமான அடிப்படையில்தான் செயல்படுவதாக’ தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்திருக்கிறார். அதேபோல, போக்குவரத்துக் காவல்துறையினரும், ‘பொதுமக்களிடம் அதிக அபராதம் வசூலிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமில்லை, அவர்கள் சட்டம்-ஒழுங்கை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை’ என்கிறார்கள்.

இந்தப் பிரச்னை பற்றிக் கருத்தறிய களமிறங்கினோம்.

டார்கெட் வைத்து அபராதம்... திணறும் வாகன ஓட்டிகள்... புலம்பும் போக்குவரத்து காவல்துறை!

அடாவடி அபராதம்... ஆத்திரத்தில் வாகன ஓட்டிகள்!

ஆட்டோ ஓட்டுநர் சிவா, ``ஏற்கெனவே தனியார் வாகன சேவை நிறுவனங்களால் வருமானம் குறைந்து நிற்கிறோம். சவாரி பிடிப்பதே குதிரைக்கொம்பாக இருக்கும் நிலையில், சில சமயங்களில் கூட்டமில்லாத சாலையில் சிக்னலைத் தாண்டிவிட்டால் ரூ.1,000 அபராதம் போடுகிறார்கள். நிச்சயம் சிக்னலை மீறுவது தவறுதான். ஆனால், எங்களின் ஒரு நாள் வருமானமே 1,000 ரூபாயைத் தாண்டாது. ‘காசை வைத்துவிட்டு வண்டியை எடு’ என்று மிரட்டினால், நாங்கள் எங்கே போவது. மூன்று பேருக்கு அதிகமாகப் பயணிகள் ஏறினால் தலைக்கு ரூபாய் 200 அபராதம் என்கிறார்கள். ஆனால், அரசுப் பேருந்துகளில் அதிக அளவு கூட்டத்தை ஏற்றி, உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டு போகிறார்களே... அதற்கெல்லாம் ஃபைன் இல்லையா... எங்களால் அபராதத்தைக் கடன் வாங்கியா கட்ட முடியும்?” என்றார் வேதனையுடன்.

உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர், ``படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல்தான் இந்த வேலைக்கு வந்தோம். கஸ்டமருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டுச் சென்று வருவதற்குள் `நோ பார்க்கிங்’ என்றுசொல்லி ஃபைன் போட்டு வண்டியைத் தூக்கிச்செல்கிறார்கள். பார்க்கிங் செய்வதற்கு மாற்று ஏற்பாட்டைச் செய்யாமல், ஃபைன் போடுவதால் மட்டும் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப்போகிறது?” என விரக்தியுடன் கேள்வி எழுப்பினார்.

கனரக சரக்கு வாகன ஓட்டுநர்கள் சிலர், ``தொலைதூரம் பயணிப்பதால் பேன்ட் அணிந்துகொண்டு வாகனங்கள் இயக்குவது சிரமம். காக்கிச் சட்டை அணிந்து வசதிக்காகக் கைலி கட்டிக்கொண்டால், `ஏன் சீருடையில் இல்லை’ எனக் கூறி 500 ரூபாய் அபராதம் போடுகிறார்கள். டோல்கேட் கட்டணக் கொள்ளை போதாதென்று, விதவிதமான அபராதங்களைக் கொண்டுவந்து எங்களை வதைக்கிறார்கள்” என்றனர்.


``கழுத்தை அறுத்துக்கிட்டு சாகுறேன்!”

இதைத் தொடர்ந்து போக்குவரத்து காவல் அதிகாரிகள் அபராதம் விதிக்கும் பாயின்ட்டுகளுக்குச் சென்று ஸ்பாட்டில் என்ன நடக்கிறது என்று நோட்டமிட்டோம்.

ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில் கொட்டும் மழையில், நோ என்ட்ரியில் வந்த ஒரு பெண்ணுக்கு ரூபாய் 1,000 அபராதம் விதித்துக் கொண்டிருந்தார் போக்குவரத்துக் காவலர் ஒருவர். அவரிடம், ``தற்போது பணம் இல்லை, நான் ஆன்லைனில் அல்லது கோர்ட்டில் கட்டிக்கொள்கிறேன்’’ என அந்தப் பெண் பலமுறை சொல்லியும், அதிகாரி அவரின் வாகனத்தை விடாமல் ``இது ஸ்பாட் ஃபைன். இப்போதே கட்டியாக வேண்டும். Paytm டௌன்லோடு பண்ணி, இப்பவே கட்டுங்கள்” எனக் கறார் காட்டிக்கொண்டிருந்தார்.

அண்ணாசாலையின் ஒரு முக்கியச் சந்திப்பில், ஹெல்மெட் அணியாமல் வந்த இருவரை நிறுத்தி, உடனடியாகக் கையில் தயாராக வைத்திருந்த அபராத ஸ்லிப்பைக் கொடுத்தார் ஒரு டிராஃபிக் காவலர். ஸ்லிப்பைப் பார்த்த மறுகணமே தலையில் அடித்தபடி ``ஐயோ ஏழாயிரமா... இது என்ன சார் நியாயம்... பிளேடைக் கொடுங்க நான் கழுத்தை அறுத்துக்கிட்டு சாகுறேன்” என்று ஒப்பாரிவைக்கத் தொடங்கினார். `ஹெல்மெட் போடலை, லைசென்ஸும் கையில இல்லை. வேற என்ன பண்றது... எடு ஏழாயிரத்தை’ என பதிலளித்தார் அந்த அதிகாரி.

டார்கெட் வைத்து அபராதம்... திணறும் வாகன ஓட்டிகள்... புலம்பும் போக்குவரத்து காவல்துறை!

அடுத்தடுத்து சென்னையில் விசிட் அடித்த பல டிராஃபிக் பாயின்ட்டுகளிலும் இதே நிலைதான். சிலர், ``முதல்ல ரோடே குண்டும் குழியுமா கிடக்கு. இதுனால ஆக்சிடென்ட் நடக்காதா?”, ‘‘அரசியல்வாதிங்க வண்டியை நிறுத்தி எப்பவாச்சும் சோதனை பண்றாங்களா?”, “ஆக்சிடென்ட்டைத் தடுக்குறதைவிட, எங்க பணத்துமேலயே குறியா இருக்கீங்களே”, “முதல்ல உங்க காவல்துறையினரே ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுகிறார்களா?” எனச் சரமாரியாகக் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர்.

``உயரதிகாரிங்ககிட்ட கேவலப்படணும் சார்!”

போக்குவரத்துக் காவலதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ``நாங்க மட்டும் என்ன சார் வேணும்னேவா அபராதம் விதிக்குறோம்... அரசாங்கம் கண்ணை மூடிக்கிட்டு சட்டம் போடுது. நாங்களும் பலபேரை பாவம் பார்த்து மன்னிச்சுதான் விடுறோம். சிலர் எங்கமேலயே கோவத்தை நேரடியா காட்டிடுறாங்க. வெளியேதான் சார் யூனிஃபார்ம் போட்ட அதிகாரி. ஃபைன் அமவுன்ட் குறைஞ்சா மேலதிகாரிங்க கிட்ட கேவலப்படணும். சிங்கிள் டிஜிட்ல கேஸ் ரெஜிஸ்டர் காட்டுனா, ‘நாலு எஸ்.ஐ நின்னுக்கிட்டு என்னையா கிழிக்குறீங்க?’னு கேட்பாங்க. ‘டெய்லி டார்கெட்’ கொடுத்து ஃபைன் போடச் சொன்னா நாங்க என்ன பண்ணுவோம் சார்?” என்று அதிரவைத்தனர்.

கபில் குமார் சரட்கர்
கபில் குமார் சரட்கர்

`டெய்லி டார்கெட்’ குறித்து மேலும் வினவினோம். ``ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு டார்கெட்! `நோ என்ட்ரி’, `நோ ஹெல்மெட்’னு எந்தப் பிரிவுல அதிகமா கேஸ் போடணும், எதை ஃபோகஸ் பண்ணணும், எந்த ஜோன்ல அபராதம் விதிக்கணும்னு ஒரு லிஸ்ட் அனுப்புவாங்க. அதை ஃபாலோ பண்ணணும்” என்று சொல்லி ஒரு வாட்ஸ்அப் பக்கத்தைத் திறந்துகாட்டினார். அதிலிருந்த லிஸ்ட்டைப் பார்த்து அதிர்ச்சியடைந்தோம். மேலும், ``ஒரு பாயின்ட்டில் நான்கு எஸ்.ஐ நின்றால் தலா ஒருவருக்குக் காலையில் 25, மதியம் 25 என 50 கேஸ் போடணும். நான்கு பேருக்கும் சேர்த்து ஒரு நாளுக்கு 200 கேஸ் கணக்கு காட்டணும். இதுல கட்சிக்காரங்களோட வாகனங்கள் விதி மீறினாலோ, அவர்களுக்கு அபராதம் விதித்தாலோ நம் வேலைக்கு வேட்டுவைப்பார்கள்” என்றார்கள் அவஸ்தையுடன்.

இது குறித்து கமிஷனர் கபில் குமார் சரட்கரிடம் விளக்கம் கேட்டபோது, “டார்கெட் வைத்து அபராதம் வசூலிப்பதாகச் சொல்ல முடியாது. அது, ஒவ்வொரு காவல் நிலையத்துக்குமான இண்டிகேஷன். ஒரு காவலர் தோராயமாக எத்தனை வழக்குகள் போட முடியும் என `ரஃப் ஸ்டடி’ செய்திருக்கிறோம். 32 கேட்டகரி விதிமீறல்களையும் கருத்தில் கொள்கிறார்களா என்று கண்காணிக் கிறோம். மற்றபடி டார்கெட் வைத்து அபராதம் வசூலிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்வதில்லை. மேலும் ஒரு நாளைக்கு 8,000 வழக்குகள் பதிகிறோமென்றால், அத்தனை பேருக்கு விழிப்புணர்வு வழங்கியிருக்கிறோம் என்றுதான் பார்க்க வேண்டும். பெரும்பாலான வாகன ஓட்டிகள் தெரிந்தே போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுகிறார்கள். அவர்களின் தவறுக்குச் சிறிய தண்டனைதான் இந்த அபராதம். உடனடி அபராதம் கட்ட வேண்டும் எனக் கட்டாயமில்லை. அப்படி உத்தரவும் இல்லை. ஹெல்மெட் அணியாத காவலர்கள்மீது அபராதத்துடன் துறைரீதியிலான நடவடிக்கையும் எடுக்கப்படும். வாகன ஓட்டிகளுடன் ஏற்படும் பிரச்னைகளைச் சரிவரக் கையாளவும், லஞ்சப் புகாரைத் தடுக்கவும் போக்குவரத்துக் காவலர்களுக்கு ‘Body Cam’ கொடுத்திருக்கிறோம்” என்றார் விரிவாக.

இந்தியாவிலேயே சாலை விபத்துகளால் உயிர்ப்பலி அதிகம் நடப்பது தமிழ்நாட்டில்தான். அதைக் கட்டுப்படுத்த கடுமையான விதிகள் தேவைதான். ஆனால், சாலைப் பாதுகாப்பைவிட அபராத வசூலில் மட்டுமே போலீஸ் கவனம் செலுத்துவது ஏற்புடையதல்ல. மக்களும் தங்கள் பொறுப்பை உணர வேண்டும்!

44 ஆயிரம் வழக்குகள்... ரூ.3.86 கோடி அபராதம்!

புதிய சட்டம் அமலுக்கு வந்த முதல்நாளில், சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 2,500 பேர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, சுமார் 15 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. கடந்த அக்டோபர் 21 முதல் நவம்பர் 10 வரையிலான 21 நாள்களில் மொத்தம் 44,463 வழக்குகளும், சுமார் 3,86,45,865 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. 17,442 வழக்குகளில் 1,20,31,775 ரூபாயை ஃபைனாக வசூலித்திருக்கிறது சென்னை பெருநகரப் போக்குவரத்துக் காவல்துறை!