ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

மடைமாறும் தமிழ் சினிமா! - பெண்களுக்குப் பெருமை சேர்க்கிறதா?

பெண்களுக்குப் பெருமை சேர்க்கிறதா?
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்களுக்குப் பெருமை சேர்க்கிறதா?

பெண்களையே நாயகியாகக் கொண்ட படங்கள் என்பதைத் தாண்டி, ஆண் நாயகர் கள் இருந்தாலும் பெண்களுக்கு முக்கியமான வெளியை அளிக்கும் திரைப்படங்களும் கணிசமாக அதிகரித்துவருவது வரவேற்கத் தக்கது.

சமீபத்தில் சமூக வலைதளத்தில் ஒரு புகைப் படம் வைரலாகி கவனம் பெற்றது. ஒரு திரையரங்கு முகப்பில் பெரிய அளவில் நான்கு திரைப்பட பேனர்கள். நயன்தாரா நடித்த ‘கனெக்ட்’, த்ரிஷா நடித்த ‘ராங்கி’, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘டிரைவர் ஜமுனா’ மற்றும் கோவை சரளா நடித்த ‘செம்பி’. ஹீரோயின்கள் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருந்த இத்தனை திரைப் படங்கள் ஒரே வாரத்தில் வெளியானது ஒரு சாதனை. அதே வாரம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்த ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ மலையாளத் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கும் வெளியாகவிருந்து, தள்ளிப்போனது. வெளி யாகியிருந்தால் மொத்தம் ஐந்து படங்கள்.

`ஸ்த்ரீ பார்ட்’ காலத்தின் தலைகீழான சீரியல் யுகம்

நூற்றாண்டைக் கடந்த தமிழ் சினிமாவில் பெண்களுக்கான இடம் மிகக் குறுகலானது. தமிழ் சினிமாவின் தாயான நாடகத்தில், பெண்களுக்கான இடமே கிட்டத்தட்ட இல்லை. நாடகங்களில் பெண்கள் நடிப்பது கண்ணியக்குறைவு என்ற தவறான நம்பிக்கை ஆழ வேரூன்றியிருந்ததால் ஆண்களே பெண் வேடமிட்டு ‘ஸ்த்ரீ பார்ட்’டாக நடித்தனர். கே.பி.ஜானகியம்மாள், கே.பி.சுந்தராம்பாள் என மிகக்குறைவான பெண்களே நாடகங் களில் தோன்றினார்கள். திரைப்படம் உரு வான பிறகு இந்த நிலை மாறியது என்றாலும் சினிமா என்றாலே ஆண்களால், ஆண்களுக் காக உருவாக்கப்பட்ட கலை ஊடகம் என்பதே இன்றுவரை நிலைமை. சினிமாவில் பெண் என்பவள் தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் என்றால், சீரியல்களில் ஆண்கள் பெயருக்காகச் சேர்த்துக்கொள்ளப்படும் கறி வேப்பிலை. அதனால்தானோ என்னவோ... சினிமா என்னும் ஆண்மைய ஊடகத்துக்கு எதிராக டிவி சீரியல்களை விரும்பிப் பார்த்து ஆதரிக்கும் உளவியல் பெண்களிடம் நிலவுகிறது.

மடைமாறும் தமிழ் சினிமா! - பெண்களுக்குப் பெருமை சேர்க்கிறதா?

பெண்மைய சினிமாவின் ஆரம்பம்

அவ்வப்போது பெண்களை மையப்படுத்தி சினிமாக்கள் வருவது உண்டு. என்றாலும் அது ஒரு டிரெண்டாக மாறியதில்லை. ஆனால் சமீபகாலமாக குறைந்தபட்சம் மாதத்துக்கு ஒரு பெண்மைய சினிமாவாவது வந்து விடுகிறது. இதற்கான முதன்மைக் காரணங்கள் இரண்டு. 2010-க்குப் பிறகு தமிழ் சினிமாவின் முகமே மாறியிருக்கிறது. ‘அஞ்சு பாட்டு, நாலு ஃபைட்டு, அம்மா/தங்கச்சி சென்டிமென்ட், காதலில் முடியும் மோதல்’ என்ற பழைய ஃபார்முலாக்கள் தகர்ந்திருக்கின்றன. உச்ச நட்சத்திரங்களின் படங்களே இந்த ஃபார் முலாக்களில் இருந்து விலக ஆரம்பித்திருக் கின்றன. `பிளாக் ஹியூமர்' படங்கள், சம்பவங் களை முன், பின் மாற்றி நகர்த்தும் `நான் லீனியர்' (non-linear) கதை சொல்லல் என்று வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் தமிழ் சினிமா மாறியிருக்கிறது. க்ளிஷேவான காதல் காட்சிகளும் அதில் அபத்தமான பெண் சித்திரிப்புகளும் பெரிதாக குறைய ஆரம்பித் திருப்பது என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம். பாலியல் காட்சிகளை நுகர்வது இன்று எல்லோருக்கும் எளிதாகிப்போன காரியம் என்பதாலோ என்னவோ ‘அயிட்டம் சாங்’ எனப்படும் கவர்ச்சி நடனமோ ‘கட்டிப் பிடி கட்டிப்பிடிடா’ போன்ற மிட்நைட் மசாலா பாடல்களோ திரைப்படங்களில் இடம்பெறுவது குறைந்திருக்கிறது. அப்படி இடம்பெறும் அயிட்டம் பாடல்களிலும் வழக் கத்துக்கு மாறாக ‘விளக்கை அணைச்சாப் போதும், எல்லா வெளக்குமாறும் ஒண்ணுதான்’ என்று ஆண்களைத் துணிச்சலாக கீழிறக்கு கிறது. சினிமாவில் நடந்த இந்த மாபெரும் மாற்றங்களின் தொடர் விளைவுதான் பெண்மைய சினிமாக்கள் என்று சொல்லலாம்.

அடுத்ததாக, ஓடிடி தளங்கள் பெண்மைய சினிமாவுக்கான பெரிய களத்தை விரித்தது. இன்று எல்லா மொழிப்படங்களையும் நாம் வீட்டிலிருந்தே பார்க்க முடியும். ஆக... ஒரு தமிழ்ப்படம் இன்னொரு தமிழ்ப்படத்துடன் மட்டும் போட்டி போடுவதில்லை. ஒரு மலையாள சினிமாவுடனும், ‘ஸ்குவிட் கேம்’ போன்ற அயல்மொழி வெப் சீரிஸுடனும் போட்டி போட வேண்டிய சூழல். எனவே, புதிய புதிய களங்களுக்கு கிரியேட்டர்கள் மூளையைக் கசக்கினர். இந்தப் போட்டியில் பெண்மைய சினிமா ஊட்டம் பெற்றது. ஓ.டி.டி தளங்களில் அந்த வியாபாரம் சிறப்பாக அமைந்தது, சிவப்புக் கம்பளம் விரித்தது.

ஹீரோயினுக்கு கதை சொல்லும் இயக்குநர்கள்

ஒவ்வொரு காலகட்டத்திலும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற நடிகைகள் இருந்தாலும், அவர்கள் `கனவுக்கன்னி’ என்ற இடத்தைத் தாண்டியதில்லை. முதன்மை யான நாயகர்களின் படங்களில் ரொமான்ஸ் காட்சிகள், டூயட் பாடல்களில் வந்துபோவது மட்டுமே அவர்களுக்காக ஒதுக்கப்பட்டது. அதை மீறி வந்து ‘லேடி சூப்பர் ஸ்டார்’ க்ரீடம் சூடினார் நயன்தாரா. அவர் தந்த வியாபார வெற்றியும் உத்தரவாதமும், தயாரிப்பாளர் களை பெண்மைய சினிமா புராஜெக்ட்களை `டிக்' செய்ய வைத்தன. ரஜினிக்குக் கதை சொல்வது, விஜய்க்குக் கதை சொல்வது போல நயன்தாராவுக்குக் கதை சொல்வது, ஜோதிகாவுக்குக் கதை சொல்வது என்று இயக்குநர்கள் தயாராவது குறிப்பிடத்தக்க ஆரோக்கியமான மாற்றம்.

உடைக்கப்படும் கற்பிதங்கள்

2000-க்கு முன்பு வெளியான தமிழ் சினிமாக்களில் பெண்கள் குறித்த சித்திரிப்புகள் பற்றி சில பார்வைகளைத் தொகுத்துக் கொள்ளலாம். அம்மா சென்டிமென்ட், தங்கை சென்டிமென்ட், தாலி சென்டிமென்ட் என்ற பெயரில் பெண்கள் குடும்ப வன்முறை களைச் சகித்துக்கொள்பவர்களாகவும், ஆண் களுக்காகத் தியாகம் செய்பவர்களாகவுமே காட்சிப்படுத்தப்பட்டார்கள். படித்த, கேள்வி கேட்கும் பெண்கள் திமிருள்ளவர்களாகவும், அவர்களை அடக்குவதே நாயகர்களின் முதன்மைப்பணியாகவும் தமிழ் சினிமா சித்திரித்தது. பெண்களுக்கு அநீதி இழைக்கப் பட்டாலும் அதற்காக வஞ்சம் தீர்ப்பதும் நீதி பெறுவதும் ஆண்களின் கடமையாகவே ஆக்கப்பட்டன. கதாநாயகியை வில்லன் சீண்டும்போது, நாயகன் வந்து காப்பாற்றும் வரை நாயகி கதறிப் புலம்புவதே எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து வரும் வழமை. தன் தங்கை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்டாலோ, தன் தாய்க்கு ‘ஒழுக்கங்கெட்டவள்’ பட்டம் சூட்டப்பட்டாலோ நாயகன்தான் வில்லன்களைப் பழிவாங்கி நீதியை நிலை நாட்டுவார். பெண்கள் தங்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிக்குப் பழிவாங்க வேண்டும் என்றால் அவர்கள் செத்து ஆவியாக மாற வேண்டும். ‘வா அருகில் வா’வில் இருந்து ‘அரண்மனை’ வரை நீண்ட பட்டியலிடலாம். ஆனால், இந்தக் கற்பிதங்களை எல்லாம் சமீ பத்தில் வெளியாகும் பெண்மைய சினிமாக்கள் உடைக்கத் தொடங்கியிருக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளியான பெண்மைய தமிழ் சினிமாக்களில் ‘கார்கி’ திரைப்படத்துக்கு முதன்மை இடத்தை வழங்கலாம். வழக்கமான கதைசொல்லல் முறையிலிருந்து விலகி, புதிய வடிவத்தைக் கையாண்ட ‘கார்கி’, ஆண்கள் சந்தர்ப்பங்களுக் காகக் காத்திருப்பவர்கள் என்பதை அம்பலப் படுத்தியது. தன் தந்தையின்மீது கொண்ட நம்பிக்கையால் அவரைக் காப்பாற்றப் போராடும் ‘கார்கி’, அவரும் ஆதிக்கக்கறை படிந்த ஆண் என்பதை உணர்ந்து, பாதிக்கப் படும் பெண்ணுக்காக நிற்குமிடம் தமிழ் சினிமாவில் முக்கியமானது.

திருத்தங்கள் சில

அதே நேரத்தில் இன்னும் சில விஷயங்களில் படைப்பாளிகள் கவனம்கொள்ள வேண்டும். குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறை அநீதியை சினிமாக்களில் முன் வைப்பது அவசியம் என்றாலும், அது பெண் களை அச்சுறுத்தும் வகையில் மாறிவிடக் கூடாது. ’அஞ்சாதே’, ’யுத்தம் செய்’, ’சைக்கோ’ என்று மிஷ்கினின் பெரும்பாலான படங்கள் ‘படிப்புக்காகவும் வேலைக்காகவும் வெளியில் வரும் பெண்களே உங்களுக்குப் பாதுகாப் பில்லை’ என்று மீண்டும் மீண்டும் அச்சுறுத்து வதும், ரட்சகர் பொறுப்பை ஆண்கள் வசமே வழங்குவதும் ஓர் உதாரணம். மேலும் ‘இது தான் டிரெண்ட்’ என்ற பெயரில் பாலியல் வன்முறை மட்டும்தான் பெண்களின் ஒரே பிரச்னை என்று படங்களாக எடுத்துக் குவிப்பதன் மீதும் எச்சரிக்கை வேண்டும்.

ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் சூழல் வந்தாலே குத்துவிளக்கையோ, ஆப்பிள் நறுக்கும் கத்தியையோ எடுத்து தற்கொலை செய்து கற்புடன் கண்மூட வேண்டும் என்னும் அபத்தத்தில் இருந்து தமிழ் சினிமா வெகுதூரம் விலகி வந்திருப்பது வரவேற்கத்தக்கது. ஒரு பெண்ணின் உடலை வீடியோ பதிவு செய்து மிரட்டினால் அஞ்சி நடுங்கிக் கொலை செய்து, அதை மறைக்க வேண்டும் என்று ‘பாபநாசம்’ சொன்னது. ஆனால் ‘உன் உடலை ஆபாச வீடியோ எடுத்துப் பரப்புவதற்கு நீ வெட்கப்படக்கூடாது. அதை உன்னை அடிபணிய வைக்கும் ஆயுத மாக மாற்றச் சம்மதிக்கக்கூடாது’ என்பதை ‘எதற்கும் துணிந்தவன்’ படம் போகிறபோக்கில் சொன்னது என்றால், ‘அனல் மேலே பனித் துளி’ படம் அழுத்தமாக அடித்துச் சொன்னது.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சாதிப் பிரச்னையை வெளிப்படையாகப் பேசும் தலித் சினிமாக்கள் வருவது வரவேற்கத்தக்கது. ஆனால் அவையும் ‘காலா’, ‘கபாலி’, ‘பரியேறும் பெருமாள்’, ‘அசுரன்’, ‘கர்ணன்’ என்று ஆண்மைய ஹீரோயிச சினிமாக்களாகவே அமைந்திருப்பது விமர்சனத்துக்குரிய அம்சம். அந்த வகையில், அவ்வழக்கத்தின்மீது முதற் கல்லை எறிந்திருக்கிறது ‘விட்னஸ்’ திரைப் படம். மலக்குழி மரணங்கள் என்னும் சமூக அவலத்துக்கான அத்தனை காரணங்களையும் அலசி அதைக் குறிப்பிடத்தக்க படைப்பாக மாற்றியிருப்பதுடன் ‘இந்திரா’ என்னும் தூய்மைப்பணியாளரான பெண்ணையே முதன்மைப்படுத்தியிருப்பதும் பாராட்டத் தக்கது. ரோகிணி இந்தப் பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

மிகச் சமீபத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘ஜெய ஜெய ஜெய ஜெயஹே’ மலையாளப் படத்தின் கதையை ஒத்ததுதான் ‘கட்டா குஸ்தி’ திரைப்படமும். ‘நீண்ட கூந்தலும் பண்பாடு என்ற பெயரில் சுமத்தப்படும் சேலையும் பெண்களுக்குத் தடைகள்’ என்று கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பெரியார் பேசியதைக் காட்சிகளாகவே விரித் திருந்தது ‘கட்டா குஸ்தி’. மேலும் ஹீரோயினைக் காப்பாற்றிவிட்டு ‘என் கடமையைத்தானே செஞ்சேன்’ என்று ஹீரோக்கள் தன்னடக்கம் காட்டும் தமிழ் சினிமாவில், ஹீரோவை ஆபத்திலிருந்து காப்பாற்றும் பெண் என்று மரபை தலைகீழாக்கியிருந்தது குறிப்பிடத் தக்கது. ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில், ‘உங்க பரம்பரை மானம் சண்டையிலதான் இருக்கா?’ என்று மாரியம்மா கேட்டாலும் அது போகிறபோக்கில் கேட்கப்படுகிற கேள்விதான். அதில், கபிலன் என்னும் ஆண், ஆண்கள் நிறைந்த தன் ‘சார்பட்டா பரம்பரை’ யின் மானத்தை நிலைநாட்டப் போராடுகிறான். ஆனால் ‘கட்டா குஸ்தி’ கீர்த்தி போன்ற பெண்கள் தங்கள் திறமையை நிறுவ, தங்கள் சொந்தக் குடும்பத்திடம்தான் முதல் ரவுண்டு குஸ்தி போடவேண்டும் என்பதை அழுத்த மாகச் சொன்ன வகையிலும் ‘கட்டா குஸ்தி’ வரவேற்கத்தக்க படம். என்றாலும் க்ளைமாக்ஸ் காட்சிகளில் வெளிப்பட்ட ‘ஆண்கள் கண் களின் வழியாக பெண்மைய சினிமா’ என்ற குறைபாடு, சுட்டிக்காட்டப்பட வேண்டியது.

கீர்த்தி சுரேஷின் அபாரமான நடிப்பில் வெளியான `சாணிக்காயிதம்' பெண்மைய சினிமாதான் என்றாலும் வன்முறையின் அழகியலைக் கழித்துப்பார்த்தால் எதார்த்தம் மிஞ்சாத சினிமா. ‘நட்சத்திரம் நகர்கிறது’ ரெனே பாத்திரமும் சமீபத்தில் அதிகம் வரவேற்புக்கும் விமர்சனத்துக்கும் உள்ளான பாத்திரம். ஆனால் வெவ்வேறு விதமான அரசியல் விவாதங்களுக்கு அளித்த முக்கியத் துவம் பெண்களின் பிரச்னைகளுக்கு அளிக்கப் படாததால் முழுமையான பெண்மைய சினிமாவாக அதைச் சொல்லிவிட முடியாது.

மடைமாறும் தமிழ் சினிமா! - பெண்களுக்குப் பெருமை சேர்க்கிறதா?

நகர்தலின் திசை

பெண்களையே நாயகியாகக் கொண்ட படங்கள் என்பதைத் தாண்டி, ஆண் நாயகர் கள் இருந்தாலும் பெண்களுக்கு முக்கியமான வெளியை அளிக்கும் திரைப்படங்களும் கணிசமாக அதிகரித்துவருவது வரவேற்கத் தக்கது. இருளர் பெண்ணின் நீதிக்கான போராட்டத்தைச் சொன்ன ’ஜெய்பீம்’, ஊரால் புறக்கணிக்கப்பட்டவனை ஆளாக்கும் பெண்ணைச் சித்திரித்த ’மண்டேலா’, அயல் தேசத்தில் மறைந்த தன் கணவனின் சடலத்துக் காகப் போராடிய ’க/பெ ரணசிங்கம்’, அயல்நாட்டில் படித்துவந்த தன் காதலனிடம் சாதியின் எதார்த்தம் பகிரும் பெண்ணையும், தலித் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை யும் காட்சிப்படுத்திய `நெஞ்சுக்கு நீதி’, மெனோபாஸை கேக் வெட்டிக் கொண்டாடிய `குலுகுலு’, எதார்த்தமான நீதிபதியைக் காட்சிப்படுத்திய `கடைசி விவசாயி’ என்று பல படங்களைப் பட்டியலிடலாம்.

அதே நேரத்தில் ஒட்டுமொத்தமாகத் தமிழ் சினிமாவே மாறிவிட்டது என்பது கற்பனை. சென்ற ஆண்டு அதிகம் வசூலைக் குவித்த படமான ‘விக்ரம்’ முற்றுமுழுக்க ஆண் சினிமா. பார்த்திபனால் சாதனைப்படமாக முன்னிறுத்தப்பட்ட ‘இரவின் நிழல்’ திரைப் படம் பெரும்பான்மையான பெண்களை ஏமாற்றுக்காரர்களாகவும் ஒழுக்கங்கெட்டவர் களாகவும் சித்திரித்தது. `அண்ணாத்த’, `பீஸ்ட்’, `மாஸ்டர்’, `வலிமை’ என்று இன்னும் உச்ச நட்சத்திரங்களின் படங்களில், முன்பைப்போல் இல்லையென்றாலும், பெண்களுக்கான வெளி போதுமான அளவு வழங்கப்படுவதில்லை.

பெண்களை மையப்படுத்தி திரைப்படங்கள் வருவதைப்போல் பெண் இயக்குநர்களின் வருகையும் அதிகரித்திருக்கிறது. வி.பிரியா, மதுமிதா, நந்தினி, ஹலிதா ஷமீம், சுதா கொங்கரா, காயத்ரி (புஷ்கர்), கிருத்திகா உதயநிதி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லெட்சுமி ராமகிருஷ்ணன், சந்திரா என்று இரட்டை இலக்கத்தைத் தொடும் எண்ணிக்கை மகிழ்ச்சி யானது. ஆண் இயக்குநர்களைவிட பெண் களின் வாழ்க்கையை நம்பகமான முறையில் இவர்கள் படமாக்கும் வாய்ப்பு அதிகம். இன்னும் பல தொழில்நுட்பப் பிரிவுகளிலும் பெண்களுக்கான இடம் காலியாகவே இருக் கிறது. பெண்களை முதன்மைப்படுத்தி பேசும் சினிமாக்கள் அதிகரிக்க வேண்டும், அதை பெண்களே இயக்கும் வாய்ப்பும் அதிகரிக்க வேண்டும்.