அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

“புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் அந்த எலிய!”

“புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் அந்த எலிய!”
பிரீமியம் ஸ்டோரி
News
“புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் அந்த எலிய!”

அதே பீகாரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், கமலா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் 500 பேர் பலியானார்கள்.

`டாம் அண்ட் ஜெர்ரி’, ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மான்ஸ்டர்’ எனத் திரைப்படங்களில் எலி செய்யும் சேட்டைகளைப் பார்த்துச் சிரித்திருப்போம். உண்மையில் எந்த அளவுக்கு எலிகள் சேட்டை செய்கின்றன... இதையே சாக்காக வைத்து எந்தெந்தச் சம்பவங்களிலெல்லாம் நம் போலீஸாரும், அரசியல்வாதிகளும் `எலி’ மீது பழி சுமத்தித் தப்பித்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் சில ஃபன் உதாரணங்களுடன் பார்ப்போம்!

கஞ்சா போதை எலி!

உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா போலீஸார் கஞ்சா வேட்டை நடத்தி ரூ.60 லட்சம் மதிப்புள்ள 581 கிலோ கஞ்சாவைக் கைப்பற்றினார்கள். கூடவே, கடத்தலில் ஈடுபட்ட ஆசாமிகளையும் நீதிமன்றத்தில் கொண்டுவந்து நிறுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, `எல்லாம் சரி, பிடிபட்ட கஞ்சா எங்கே?’ என்று கேட்டுவிட்டார். அடுத்த வாய்தாவில் முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு, நீதிபதியிடம் அறிக்கை ஒன்றை நீட்டியிருக்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். அதைப் படித்துப் பார்த்து அதிர்ந்துபோயிருக்கிறார் அந்த நீதிபதி. அப்படி அதில் என்ன இருந்தது என்கிறீர்களா... `யுவரானர், எங்கள் காவல் நிலைய ஸ்டோர் ரூமில் எலித் தொல்லை ஜாஸ்தி. நாங்கள் கைப்பற்றிய 581 கிலோ கஞ்சாவையும் அந்த எலிகள் சாப்பிட்டுவிட்டன. எனவே, அவற்றை எங்களால் ஆதாரமாகச் சமர்ப்பிக்க முடியவில்லை!’

“புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் அந்த எலிய!”

இதே போன்ற ஒரு சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் நடந்திருக்கிறது. 145 கிலோ கஞ்சாவைப் பிடித்துவிட்டு, வெறும் 100 கிலோ கஞ்சாவை மட்டுமே கணக்கு காட்டியிருக்கிறது போலீஸ். “மீதமுள்ள 45 கிலோ கஞ்சா எங்கே?” என நீதிபதி கேட்க, “அதை எலி தின்னுட்டு போயிடுச்சு யுவரானர்” என்று அளந்துவிட்டிருக்கின்றனர் ஜார்க்கண்ட் காவல்துறையினர்.

`ஒன்லி ஒயின்’ ஊட்டி எலி!

நீலகிரி மாவட்டம், கூடலூர் காளம்புழா பகுதியின் டாஸ்மாக் மதுக்கடை, கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த ஆண்டு பல நாள்களாகப் பூட்டிவைக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு முடிந்து கடையைத் திறந்து பார்த்தால் ஒயின் பாட்டில்களெல்லாம் காலி! “பீர், ரம் பாட்டில்களையெல்லாம் விட்டுவிட்டு, ஒயின் பாட்டில்களை மட்டும் சரித்து, சுமார் 12-க்கும் மேற்பட்ட ஒயின் பாட்டில்களின் மூடிகளைத் துளையிட்டு முழுவதுமாகக் குடித்துத் தீர்த்திருக்கின்றன எலிகள்” என்கிறார்கள் கடை ஊழியர்கள். ஒயினாவது பரவாயில்லை... ஹரியானாவில் காணாமல்போன, 29 லிட்டர் கள்ளச் சாராயத்தையும் எலிகளின் கணக்கிலேயே ஏற்றிருக்கிறார்கள் போலீஸார்.

“புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் அந்த எலிய!”

பீகாரில் மதுவிலக்கு சட்டம் அமலுக்கு வந்த பிறகு, ஃபாரின் சரக்கு உட்பட 9 லட்சம் லிட்டர் மது பாட்டில்களைக் கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தைக் காவல்துறையினரே குடித்துவிடுவதாகக் குற்றச்சாட்டு எழ, பறிமுதல் செய்யப்பட்ட எல்லா மது பாட்டில்களையும் காவல்துறை தலைமை அலுவலகத்தில் வந்து ஒப்படைக்க வேண்டும் என உயரதிகாரிகள் திடீர் உத்தரவு பிறப்பித்தனர். வசமாக மாட்டிக்கொண்டதை உணர்ந்த காவல்துறையினர், `இருக்கவே இருக்கிறான் நம்ம தேல்பத்ரி சிங்’ என்ற பாணியில், `ஃபாரின் சரக்கு உட்பட எல்லா சரக்குகளையும், எலிகளே குடித்துவிட்டன’ என்று கைகாட்டிவிட்டார்கள்.

ஊழல் எலி... டீமானிடைசேஷன் எலி!

அதே பீகாரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், கமலா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் 500 பேர் பலியானார்கள். இந்த விவகாரத்தால் ஆளும் நிதிஷ் குமார் அரசைக் கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சியினர், வெள்ளத் தடுப்புச்சுவர்களை முறையாகப் பராமரிக்காமல் ஊழல் செய்துவிட்டதாகக் குற்றம்சாட்டினர். அதற்கு மாநில நீர்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் அளித்த பதில் வேற லெவல்! “ஆற்றங்கரையோர வெள்ளத் தடுப்புச்சுவர்களில் எலிகள் ஓட்டை போட்டதுதான் வெள்ளத்துக்குக் காரணம்” என்று எலிமீது ஊழல் பழிபோட்டார் அவர்.

“புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் அந்த எலிய!”

அஸ்ஸாம் மாநிலம், லாய்புலி கிராமத்தில் எஸ்.பி.ஐ வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம் இயந்திரத்தில் கார்டை நுழைத்து பட்டனைத் தட்டினால், கீச்சு மூச்சு என்று சத்தம்தான் வந்ததே தவிர, பணம் வரவில்லை. அதைப் பழுது நீக்க வந்த வங்கி அதிகாரிகளுக்குக் காத்திருந்தது துன்ப அதிர்ச்சி. ஏ.டி.எம்-மைத் திறந்தவுடன், அதில் வைக்கப்பட்டிருந்த 500, 200 ரூபாய் பணக்கட்டுகளெல்லாம் துண்டு துண்டாகப் பறந்திருக்கின்றன. கிட்டத்தட்ட, 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கப் பணத்தை, எலிகள் சகட்டுமேனிக்கு கொறித்துப் போட்டிருந்தன. இந்தச் செய்தி மாநிலம் முழுக்கப் பரவ, `இது டீமானிடைசேஷனின் இரண்டாவது பாகம்’ என மோடியுடன் எலியை ஒப்பிட்டு கலாய்த்துத் தள்ளிவிட்டார்கள் நெட்டிசன்கள்.

நகைத் திருட்டு... தீ வைக்கும் எலி!

மும்பையில் வசித்துவரும் சுந்தரி என்பவர் நகைகளை அடமானம் வைப்பதற்காக வங்கிக்குச் செல்லும் வழியில், ஆதரவற்ற குழந்தைகளுக்கு `வடபாவ்’ வாங்கிக் கொடுத்திருக்கிறார். வங்கிக்குப் போன பிறகுதான் தெரிந்தது, குழந்தைகளிடம் வடபாவ் பைக்கு பதிலாக நகைப்பையை மாற்றிக் கொடுத்துவிட்டோம் என்பது. குழந்தைகள், அந்தப் பையைக் குப்பையில் வீசிவிட்டோம் என்று சொன்னதால், போலீஸ் உதவியுடன் அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வுசெய்தார்கள். அப்போது, குப்பையிலிருந்து நகைப் பையை சாக்கடைக்குள் இருக்கும் தங்கள் வசிப்பிடத்துக்குள் எலிகள் இழுத்துச் சென்றது தெரியவந்தது. பிறகு ஒருவழியாக தூய்மைப் பணியாளர்களைக்கொண்டு சாக்கடையை அலசி ஆராய்ந்து, எலிகளின் பொந்தைக் கண்டுபிடித்து அதிலிருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை மீட்டிருக்கிறார்கள்!

ஹைதராபாத்திலுள்ள ஒரு கார் சர்வீஸ் நிலையம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில், சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று கார்கள் எரிந்து நாசமாகின. இது பற்றி விசாரணை செய்த தீயணைப்புத்துறை மற்றும் இன்ஷூரன்ஸ் அதிகாரிகள் மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறி வழக்கை முடித்துவைத்தனர். ஆனால், தீ விபத்தின் பின்னணியில் ஓர் எலி இருந்திருக்கிறது என்ற உண்மை ஆறு மாதங்களுக்குப் பின்னர் அலுவலகத்தின் சிசிடிவி கேமராவை ஆய்வுசெய்தபோதுதான் தெரியவந்தது. சம்பவத்தன்று அலுவலகத்தில் பூஜை நடத்துவதற்காக ஊழியர்கள் அகல் விளக்கேற்றியிருக்கின்றனர். இரவில் அலுவலகம் மூடப்படும்போது அதை அணைக்காமல் மறந்து அப்படியே விட்டுச் சென்றிருக்கின்றனர். எண்ணெய் வாசனையால் கவரப்பட்ட எலி ஒன்று, அந்த அகல் விளக்கைத் தூக்க முடியாமல் தூக்கிச் சென்று, அருகிலிருந்த சேர்மீது போட்டிருக்கிறது. அந்த சேர் தீப்பிடித்து எரிந்து, பக்கத்திலிருந்த பொருள்களுக்கும் தீ பரவ ஒட்டுமொத்த அலுவலகமே தீக்கிரையாகியிருக்கிறது.

அப்புறம் என்ன, `புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் அந்த எலிய!’