அரசியல்
அலசல்
Published:Updated:

வண்டலூர் பூங்காவில் தொடரும் விலங்குகளின் உயிரிழப்பு... ஊழியர் பற்றாக்குறைதான் காரணமா?

வண்டலூர் பூங்கா
பிரீமியம் ஸ்டோரி
News
வண்டலூர் பூங்கா

வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்காக அரசு சார்பில் ஆண்டுக்கு சுமார் 10 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது.

இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவான வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளின் இறப்பு அதிகரித்துவருவது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த ஜூன் 27-ல் கூட ஒரு சிங்கம் உயிரிழந்திருக்கிறது. இப்படி, கடந்த ஆறு மாதங்களில் எட்டு விலங்குகள் உயிரிழந்திருக் கின்றன. பூங்காவில் அவ்வப்போது வனவிலங்குகள் திருட்டும் நடக்கின்றன. என்னதான் பிரச்னை என்று விசாரித்தோம்...

வண்டலூர் பூங்காவில் தொடரும் விலங்குகளின் உயிரிழப்பு... ஊழியர் பற்றாக்குறைதான் காரணமா?

விலங்குகளையும் விட்டுவைக்காத கொரோனா

சுமார் 1,490 ஏக்கர் பரப்பளவுள்ள வண்டலூர் பூங்காவில் சிங்கம், புலி, வெள்ளைப்புலி, சிறுத்தை, யானை, முதலை, காண்டாமிருகம், பல பறவை இனங்கள் என 2,000-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் பராமரிக்கப்படுகின்றன. ஆண்டுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கும் பூங்கா இது.

மனிதர்களைத் தாக்கிய கொரோனா, விலங்குகளையும் விட்டுவைக்கவில்லை. பேரிடர் காரணமாக மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்காவில், சிங்கம் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதில் இரண்டு சிங்கங்கள் உயிரிழந்தன. அதே காலகட்டத்தில் புலி, வெள்ளைப்புலி, நெருப்புக்கோழி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உயிரிழந்த செய்தி, விலங்குகள் ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சிறுத்தை, வெள்ளைப்புலி, வரிக்குதிரை, காட்டுப்பன்றி, சிங்கம் உள்ளிட்ட மேலும் எட்டு விலங்குகள் உயிரிழந்திருக்கின்றன.

வண்டலூர் பூங்காவில் தொடரும் விலங்குகளின் உயிரிழப்பு... ஊழியர் பற்றாக்குறைதான் காரணமா?

ஊழியர் பற்றாக்குறையா?

அரியவகை உயிரினங்களைத் திருடி, அதிக விலைக்கு வெளிநாட்டுக்கு விற்பனை செய்யும் கும்பலிடமிருந்தும் இந்தப் பூங்கா தப்பவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்கப் பகுதியில் காணப்படும் அரிய வகையைச் சேர்ந்த ஒரு ஜோடி அணில் குரங்குகளைக் கூண்டின் கம்பியை வெட்டித் திருடிச் சென்றனர். இதுபோலவே, முன்பு காட்டுக்கோழி, புள்ளிப்புறா, வெள்ளைக் கிளி போன்ற பல பறவைகள் திருட்டுப்போன சம்பவங்களும் நடந்ததுண்டு.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்காக அரசு சார்பில் ஆண்டுக்கு சுமார் 10 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. நுழைவுக் கட்டணம் போன்றவற்றிலிருந்து 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் வருகிறது. அரசு நிர்ணயித்தபடி, இங்கு 11 இரவு நேரக் காவலர்களும், 45 விலங்கு பராமரிப்பாளர்களும் பணியில் இருக்க வேண்டும். ஆனால் நான்கு இரவு நேரக் காவலர்களும், 19 விலங்கு பராமரிப்பாளர்களுமே பணியாற்றுகிறார்கள். இது போன்ற பல முக்கியப் பணிகள் உட்பட 100-க்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் இருப்பதாகப் பூங்காவின் ஆண்டறிக்கையே தெரிவிக்கிறது.

ராமச்சந்திரன்
ராமச்சந்திரன்

சிகிச்சை அளித்தோம், ஆனால்...

வண்டலூர் உயிரியல் பூங்கா குறித்து, வனத்துறைச் செயலாளர் சுப்ரியா சாஹூவிடம் பேசினோம். ``அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த ஆறு மாதங்களில் இரு சிங்கங்கள், இரண்டு சிறுத்தைப்புலிகள், ஒரு புலி, ஒரு கரடி, ஒரு வரிக்குதிரை உட்பட எட்டு விலங்குகள் உயிரிழந்துள்ளன. உடல்நலம் சரியில்லாத விலங்குகளுக்கு TANUVAS (Tamil Nadu Veterinary and Animal Sciences University) நிபுணர்கள் மற்றும் பூங்காவின் கால்நடை மருத்துவக் குழுவுடன் இணைந்து சிறந்த சிகிச்சை அளிக்கப் படுகிறது. இந்த விலங்குகள் அனைத்தும் நீண்டகால நோய் அல்லது முதுமையின் காரணமாக உயிரிழந்துள்ளன. இதில், பல விலங்குகள் காட்டில் வாழும் ஆயுட்காலத்தைவிட அதிக ஆண்டுகள் வாழ்ந்திருக்கின்றன. அதற்குப் பூங்கா ஊழியர்களின் சிறந்த பராமரிப்பு மட்டுமே காரணம். இங்கு திருடப்பட்ட விலங்குகள் காவல்துறையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளன. பணியாளர்களின் பணி ஓய்வு காரணமாக 85 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இந்தப் பணியிடங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களைப் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பேரிடர் காரணமாக உயிரியல் பூங்கா மூடப்பட்டு, கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்த நிலையில் அரசு 6 கோடி ரூபாய் நிதி வழங்கியது. இந்தியாவிலேயே முதன்மையான உயிரியல் பூங்கா என்ற இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன” என்று கூறினார்.

சுப்ரியா சாஹூ
சுப்ரியா சாஹூ

காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை!

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் பேசியபோது, ``வண்டலூர் பூங்காவில் விலங்குகள் கொரோனாவால் பாதித்த சமயத்தில், தமிழ்நாடு முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டார். இந்தப் பூங்காவை மேம்படுத்த அரசு சார்பில் அனைத்து வகையான உதவிகளும் தொடர்ந்து செய்யப்பட்டுவருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற வனத்துறை ஆலோசனைக் கூட்டத்தில், இந்த உயிரியல் பூங்காவில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வனத்துறை காலிப் பணியிடங்களையும் விரைந்து நிரப்ப அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்” என்றார்.

விலங்குகளின் பாதுகாப்பை அரசு உறுதிசெய்யும் என்று நம்புவோம்!