Published:Updated:

‘அண்ணாவுக்கு எம்.ஜி.ஆர்; உங்களுக்கு ஓ.பன்னீர்செல்வம்!’ - எடப்பாடி பழனிசாமிக்கு உளவுத்துறையின் நம்பிக்கை #VikatanExclusive

‘அண்ணாவுக்கு எம்.ஜி.ஆர்; உங்களுக்கு ஓ.பன்னீர்செல்வம்!’ - எடப்பாடி பழனிசாமிக்கு உளவுத்துறையின் நம்பிக்கை #VikatanExclusive
‘அண்ணாவுக்கு எம்.ஜி.ஆர்; உங்களுக்கு ஓ.பன்னீர்செல்வம்!’ - எடப்பாடி பழனிசாமிக்கு உளவுத்துறையின் நம்பிக்கை #VikatanExclusive

‘அண்ணாவுக்கு எம்.ஜி.ஆர்; உங்களுக்கு ஓ.பன்னீர்செல்வம்!’ - எடப்பாடி பழனிசாமிக்கு உளவுத்துறையின் நம்பிக்கை #VikatanExclusive

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் தரப்பினரும் தி.மு.க முன்னணி நிர்வாகிகளும் நடத்தும் ஒவ்வோர் ஆலோசனைக் கூட்டத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது கொங்கு வட்டாரம். ‘தினகரன் தரப்பில் உள்ள எம்.எல்.ஏ-க்களும் கொங்கு அமைச்சர்களிடம் பேசி வருகின்றனர். ஆட்சிக்கு சிக்கல் வந்தாலும், அனுதாப அலையில் மாபெரும் வெற்றி பெறுவார் எடப்பாடி பழனிசாமி' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

அண்ணா தி.மு.க-வுக்குள் நடக்கும் உள்கட்சி மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. அ.தி.மு.க ஆட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டதால், வாக்கெடுப்பு நடத்துமாறு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் மனு கொடுத்தனர். இதன்பேரில் எந்த முடிவும் எடுக்கப்படாததால், இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, தமிழக அரசியல் சூழல்குறித்து கடிதம் கொடுத்துள்ளனர் தி.மு.க, சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகளின் பிரதிநிதிகள். இதுகுறித்து பதில் அளித்த சி.பி.ஐ கட்சியின் டி.ராஜா, ‘தமிழக ஆளுநரின் செயல்பாடு கேள்விக்குறியாக உள்ளது. தமிழக அரசியல் சூழலுக்கேற்ப முடிவெடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தினோம்' எனத் தெரிவித்தார். இந்நிலையில், அ.தி.மு.க-வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 12-ம் தேதி சென்னை, வானகரத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக, இன்று காலை முதல் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுடன் தீவிர ஆலோசனையில் இருக்கிறார் முதல்வர் பழனிசாமி. இன்று நடந்த ஆலோசனையில் கடலூர், திருச்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார் முதல்வர். அ.தி.மு.க-வில் உள்ள உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கு நிர்வாகிகளின் கையெழுத்துடன் பொதுக்குழு நடந்தால் மட்டுமே செல்லுபடியாகும் என்பதால், ஆதரவைத் திரட்டும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது கொங்கு மண்டலம். 

முதல்வரின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நம்மிடம் பேசிய ஆளும்கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர், “தினகரனுக்கும் திவாகரனுக்கும் இடையிலேயே ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. ‘கட்சியின் தலைமைப் பதவி கிடைத்தால் போதும்’ என தினகரன் நினைக்கிறார். ‘அதிகாரம் கையைவிட்டுப் போய்விடக் கூடாது’ என்ற மனநிலையில் திவாகரன் இருக்கிறார். எனவேதான், கட்சித் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார்கள். ஆனால், இந்தக் குடும்பத்துக்கு எள் முனையளவும் இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதில் முதல்வர் தரப்பு உறுதியாக உள்ளது. அனைவரையும் அரவணைத்துச் செல்லலாம் என முடிவெடுத்து, சேர்த்துக் கொண்டாலும் ஒரே மாதத்தில், 'முதல்வர் பதவியை விட்டுக் கொடு' என வந்து நிற்பார்கள் என நம்புகிறார். இவர்களை ஏற்றுக்கொண்டால், மக்கள் மத்தியில் தற்போதுள்ள செல்வாக்கு அடியோடு  போய்விடும் என மாநில உளவுத்துறை எச்சரிக்கை அறிக்கை கொடுத்திருக்கிறது. தற்போதுள்ள சூழலில் தேர்தல் வந்தாலும், 30 சதவிகித ஓட்டுக்கள் தனக்கு கிடைக்கும் என நம்புகிறார் பழனிசாமி. எனவேதான், ‘எந்தச் சூழ்நிலையிலும் சமரசம் இல்லை' என சசிகலா உறவுகளிடம் உறுதியாகக் கூறிவிட்டார். 

தினகரன் தரப்பினரின் பிரசாரத்தில் முக்கியமான ஒன்று கொங்கு மண்டலத்தை எரிச்சல்படுத்தியிருக்கிறது. பலநேரங்களில், 'சசிகலா நியமித்த எடப்பாடி பழனிசாமி' என்று கூறுவதையே கொங்கு வட்டாரத்தினர் ரசிக்கவில்லை. 2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, நிரூபிக்கப்பட்ட தலைவராக ஜெயலலிதா இருந்தார். அவர்தான் முதல்வர் என மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், வழக்கின் காரணமாக அவரால் பதவியில் தொடர முடியவில்லை. பத்தாவது இடத்தில் இருந்த பன்னீர்செல்வத்தைப் பதவிக்குக் கொண்டு வந்தார். அதேநேரம், சசிகலா நிரூபிக்கப்பட்ட தலைவர் அல்ல. அவருக்கு ஓட்டுப் போட்டு இந்த ஆட்சியை மக்கள் தேர்வு செய்யவில்லை. சசிகலா இன்னும் நிரூபிக்கப்படாத தலைவர்தான். பன்னீர்செல்வம் போய்விட்டால், அடுத்து நம்பர் ஒன் சாய்ஸ் எடப்பாடி பழனிசாமிதான். அன்றைக்கு பழனிசாமியை முன்னிறுத்தாமல் இருந்திருந்தால், ஆட்சியை அமைத்திருக்கவே முடியாது. எனவே, ‘தினகரன் தரப்பினரின் பூச்சாண்டியைப் பார்த்து பயப்பட வேண்டியதில்லை. ஒன்று அரசு கவிழும்; இல்லாடிவிட்டால் தேர்தல் வரும். தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியே வெற்றி பெறும்’ என கொங்கு மண்டல நிர்வாகிகள் நம்புகின்றனர். 

இந்தக் கருத்தில் எடப்பாடி பழனிசாமியும் உறுதியாக இருக்கிறார். மத்திய உளவுத்துறை கொடுத்த அறிக்கையிலும், ‘உங்கள் மீது எந்தவித நெகட்டிவ் இமேஜும் கிடையாது. உங்களுடன் பன்னீர்செல்வம் வந்தது பிளஸ்தான். அண்ணாவுக்கு எம்.ஜி.ஆர் போல, உங்களுக்கு பன்னீர்செல்வம்தான் பெரிய பலம். அ.தி.மு.க-வின் உயிர்நாடியாக கொங்கு வட்டாரம் இருக்கிறது. சராசரி ஓட்டைவிட அ.தி.மு.க-வுக்கு இங்கு அதிக வாக்குகள் கிடைக்கும். ஆட்சியே கவிழ்ந்தாலும், அனுதாப ஓட்டுக்கள் வரும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர, சசிகலா குடும்பத்தை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என பா.ஜ.க தலைமை நினைக்கிறது. தமிழ்நாட்டில் சசிகலா குடும்பத்தை எதிர்ப்பதன் மூலமாக, வேறு சில சமூகங்களிடம் நற்பெயரை வாங்க முடியும் என நினைக்கின்றனர். மதவாத அரசியல் தமிழகத்தில் எடுபடாது. எனவே, முலாயம் சிங் யாதவ், சவுதாலா ஆகியோருக்கு எதிராகத் திட்டம் வகுத்து வென்றது போல, தமிழகத்தில் கணிசமான இடங்களில் வெல்ல வேண்டும் என்பதில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது. அதற்கேற்ப, எடப்பாடி பழனிசாமியை வளர்த்துவிடுகிறது பா.ஜ.க தலைமை” என்றார் விரிவாக.

அடுத்த கட்டுரைக்கு