Published:Updated:

இன்னும் எத்தனை நாள்கள் உயிர்பிழைத்திருக்கும் எண்ணூர்? #SpotVisit #VikatanExclusive

இன்னும் எத்தனை நாள்கள் உயிர்பிழைத்திருக்கும் எண்ணூர்? #SpotVisit #VikatanExclusive

இன்னும் எத்தனை நாள்கள் உயிர்பிழைத்திருக்கும் எண்ணூர்? #SpotVisit #VikatanExclusive

இன்னும் எத்தனை நாள்கள் உயிர்பிழைத்திருக்கும் எண்ணூர்? #SpotVisit #VikatanExclusive

இன்னும் எத்தனை நாள்கள் உயிர்பிழைத்திருக்கும் எண்ணூர்? #SpotVisit #VikatanExclusive

Published:Updated:
இன்னும் எத்தனை நாள்கள் உயிர்பிழைத்திருக்கும் எண்ணூர்? #SpotVisit #VikatanExclusive

சலீமா பாட்டியிடமிருந்து இந்தக் கதையைத் தொடங்கலாம். வெயில் மிகக் கடுமையாக இருந்தது. வியர்வையின் ஈரத்தோடு, முகம் முழுக்க எரிச்சலோடு நிழலைத் தேடிக்கொண்டிருந்த போது, கூரைகள் உடைந்து போயிருந்த வீட்டின் முன் உட்கார்ந்து துணி துவைத்துக் கொண்டிருந்த சலீமா பாட்டியைப் பார்த்தேன். அங்கிருந்த சிறு மர நிழலில் ஒதுங்கி நின்றேன். சலீமா பாட்டியிடம் பேசுவதற்கு முன்னர் இங்கு வந்ததன் நோக்கம் என்னவென்பதைச் சொல்லிவிடுகிறேன்..

இது எண்ணூர் பக்கம் இருக்கும் "அத்திப்பட்டு புதுநகர்" எனும் இடம். இன்னும் விவரமாகச் சொல்லவேண்டுமென்றால், எண்ணூரின் பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், வடசென்னை அனல்மின் நிலையம், வள்ளூர் அனல்மின் நிலையம் அமைந்திருக்கும் பகுதியின் மையம். இன்னும் விவரமாகச் சொல்ல வேண்டுமென்றால் அத்திப்பட்டு, புதுநகர் ரயில்நிலையம் எதிரில். இன்னும் இன்னும் விவரமாகச் சொல்ல வேண்டுமென்றால், எண்ணூர் கழிமுகத்திற்கு நீர்பாயும் வழி. பாயும் நீர் அரசு நிறுவன ஆக்கிரமிப்பால், தடுத்து நிறுத்தப்பட்டு, போக இடமில்லாமல் தேங்கிக் கிடக்கும் இடம். நெடுந்தூரம் பெரும் காதலோடு பயணித்து, தன் காதலனிடம் சேரும் அந்தப் பெண்ணை ஆணவப்படுகொலை, அலட்சியப்படுகொலை, ஆதிக்கத்திமிர்ப் படுகொலை, அதிகாரத் திமிர்ப் படுகொலை செய்யப்பட்ட இடம். கொசஸ்தலை ஆறு, வங்காள விரிகுடாவில் சேர்வதைத் தடுத்து நிறுத்திய பகுதி. 

சரி...நான் இங்கு வந்ததன் காரணம் என்ன?

"கொசஸ்தலை ஆறு நொடிக்கு 1,25,000 கன அடி நீரை வெளியேற்றுகிறது. இது அடையாறு மற்றும் கூவம் ஆறுகளின் ஒருங்கிணைந்த நீர் வெளியேற்றும் ஆற்றலைவிட அதிகம். 2015ல் அடையாற்று வெள்ளத்தையே நம்மால் சமாளிக்க முடியவில்லை. எண்ணூரில் இதுபோன்ற நிலை ஏற்பட்டால் சென்னையின் முக்கியப் பகுதிகள்  'நீர்க் கல்லறையாக' மாறும் வாய்ப்புகள் அதிகம். " 

இந்த விஷயத்தை சூழலியலாளர் நித்தியானந்த் ஜெயராம் பல மாதங்களாகத் தொடர்ந்து சொல்லி வருகிறார். சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரைப் பகுதியை, அதன் முக்கியத்துவத்திற்கு ஏற்ப CRZ 1, CRZ 2, CRZ 3, CRZ 4 என்று பிரிக்கும். இதில் எண்ணூர்ப் பகுதி CRZ 1 யின் கீழ் வருகிறது. இங்கு அரசு நிறுவனங்களே எப்படியான ஆக்கிரமிப்புகளைச் செய்துள்ளன, கொசஸ்தலை ஆற்றைக் கொல்ல என்ன மாதிரியான சீர்கேடுகளைச் செய்கின்றன, காமராஜர் துறைமுக விரிவாக்கப் பணிக்காகப் பொய்யான வரைபடத்தை உருவாக்கியதோடு அல்லாமல், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அது குறித்து கேட்டதற்கே பொய்யான தகவல்களைச் சொல்லி, பின்னர், உண்மையை ஒப்புக்கொண்டு நம் எல்லோரையும் முட்டாள்களாக்கப்பட்ட கதைகளை ஏற்கெனவே நம் தளத்தில் நாம் பதிந்துள்ளோம். (படிக்க இங்கே க்ளிக் செய்யவும்). 

இதோ, நாம் இப்போது இங்கு வந்திருப்பது... நீர்வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறோம், அதனால் பாதிப்புகள் என்று சொல்கிறோம். அது உண்மையிலேயே என்னவென்பதை, பார்ப்பதற்கு

கடந்த இரண்டு நாள்களாக இந்தப் பகுதியில் பெய்த குறைந்த அளவு மழை கொசஸ்தலை ஆற்றின் வேகத்தைக் கூட்டியுள்ளது. அது கழிமுகத்தை அடையமுடியாதபடி ஆக்கிரமிப்புகள் எப்படி இடையூறாக இருக்கின்றன என்பதை நேராகப் பார்க்க முடிந்தது. அத்திப்பட்டு புதுநகர் மக்கள் வாழும் பகுதி முழுவதும் நீர் தேங்கியுள்ளது. அது நீர் தேங்குவதற்கான இடமல்ல. அந்த நீர் சரியாகப் பாய்ந்து கழிமுகத்தை அடைந்தால் அங்கு அது தேங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை. அந்தத் தேங்கிய நீரின் வழிப் பயணித்தோம். அத்திப்பட்டு புதுநகர் ரயில்நிலையம் அருகே கீழே சுரங்கத்தில் இரண்டு ஓட்டைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதன் வழியாக அது "பரவல்" (Natural Flood Plain) பகுதியை அடையுமாம். ஆனால், தேங்கியிருக்கும் நீரின் அளவையும், அது பரவலுக்குப் பாய்வதற்கான அந்த வழியையும் பார்த்தால் இதில் எப்படி, அவ்வளவு நீர் வரும் என்ற கேள்வி மிக யதார்த்தமாக எழும். மேலும், அந்த நீர் வழிகளிலும் அடைப்புகள் ஏற்பட்டு, நீர் போக இடமில்லாமல் இந்த எளிய மக்களின் குடியிருப்புகளில் அப்படியே தேங்கியுள்ளது. 

"பரவல்" பரந்து, விரிந்திருந்தது. முழுவதுமாக நீர் நிறைந்திருந்தது. அதை அப்படியே நிமிர்ந்து பார்த்தோமானால், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலிய நிறுவனங்களின் காம்பவுண்ட் சுவர், ஏதோ சீனப் பெருஞ்சுவர் போல் அதை இடைமறித்து நின்று கொண்டிருந்தது. அந்தத் தேங்கிய நீரையும், அதையொட்டிக் கட்டப்பட்டிருக்கும் அந்த நிறுவனத்தையும் பார்க்கிற எந்த சாமானியனுக்கும்  அதிர்ச்சியாக இருக்கும். "எப்படிய்யா இங்க இதைக் கட்டினாங்க" என்ற கேள்வி யாருக்கும் எழும். 

எண்ணூர் பரவல் பகுதியும், அதைத் தடுத்து நிற்கும் "எண்ணூர் பெருஞ்சுவரும்"...

தேங்கும் நீர் "சீனப் பெருஞ்சுவர்" கட்டியிருக்கும் நிறுவனங்களுக்குள் புகாது. ஆனால், இந்தப் பக்கம் இருக்கும் மக்களின் குடிசைகளுக்குள் புகும். தார்ச்சாலை அல்லாத, மண் சாலைகளைக் குட்டைகளாக்கும். இப்போது அங்கு அப்படித் தானிருக்கிறது. கொளுத்தும் வெயிலில் தேங்கியிருக்கும் அந்தச் சொதசொதப்பான நீரில்தான் அவர்கள் நடந்து போய்வருகிறார்கள்.

 டெங்குவிற்கு தினம், தினம் உயிர் போய்க்கொண்டிருக்கும் சூழலில் அங்கு அதைத் தாண்டிய கொடிய உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கும் எண்ணத்தோடு கோடிக்கணக்கான கொசுக்கள் பறந்துகொண்டிருக்கின்றன. பாம்புகளும், புழுக்களும் மிகச் சாதாரணமாக நெளிந்துகொண்டிருக்கின்றன. 

இங்கு இன்னொரு குதர்க்கமான கேள்வி எழலாம், இவர்கள் ஏன் நீர்நிலையை ஒட்டிய பகுதிகளில் குடியிருக்கிறார்கள்?

இவர்கள் எல்லோரும் நெய்தல் நிலத்தின் பிள்ளைகள். 1990 களில் வடசென்னை அனல்மின் நிலையம் கட்டப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் வாழ்ந்து வந்தவர்கள் இவர்கள். அந்த நிறுவனம் கட்டப்படுவதற்காக அரசாங்கம் இவர்களை அங்கிருந்து, இந்தப் பகுதிக்குத் தூக்கியெறிந்தது. மீனவர்கள் கரையில் குடிசைப் போட்டுக்கொண்டார்கள். இங்கிருப்பவர்கள் எல்லாம் உப்பளங்களைப் போட்டு வந்தவர்கள். அன்று அவர்கள் உப்பளம் போட்ட, மீன் பிடித்த, படகோட்டிய இடங்களில்தாம் இன்று அரசின் நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நீர் வழித்தட ஆக்கிரமிப்பை சூழலுக்கு எதிரான சூழ்ச்சியாக மட்டுமே பார்க்க முடியாது. இது ஒரு தலைமுறையின் வீழ்ச்சியும் கூட. உப்பளங்களும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளும் இல்லாததால் அதை நம்பி, அதைச் சார்ந்து செய்து வந்த தொழில்களிலிருந்து விலக்கப்பட்டு இன்று கிடைக்கும் கூலி வேலைகளைச் செய்து வருகிறார்கள். 

சாம்பல் கழிவுகள் 

இது ஒரு பிரச்னை. அடுத்ததாக மற்றுமொரு பெரும் பிரச்னையும் இந்தப் பகுதி மக்களுக்கு மட்டுமல்ல, மொத்த சென்னை மக்களுக்குமே இங்கிருக்கும் நிறுவனங்களால் ஏற்படுத்தப்படுகின்றது. வடசென்னை அனல்மின் நிலையம் மற்றும் வள்ளூர் அனல்மின் நிலையம் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்படும் "சாம்பல் மண்" கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது. மேலும், இச்சாம்பல் மண்ணைக் கொட்ட உருவாக்கப்பட்டிருக்கும் குளமும் கொசஸ்தலை ஆற்றின் போக்கைப் பாதிக்கிறது. ஏற்கெனவே சீர்கெட்டுப் போயிருக்கும் அந்தப் பகுதியில் புதிதாக இன்னும் இரண்டு அனல்மின் நிலையங்களுக்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தன. 

இது எப்படி சென்னைக்கு ஆபத்தாக இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால், கடந்த சுனாமியின்போது சென்னையைக் காப்பாற்றிய விஷயங்களில் எண்ணூர் கழிமுகப் பகுதிக்கு முக்கியப் பங்குண்டு. ஆனால், இன்று அதற்கான வாய்ப்புகளே கிடையாது. ஒருவேளை கடல் கொந்தளித்துப் பேரலைகளாக உள்ளே நுழைந்தால், அது போக வழியில்லாமல் நேராக மக்கள் வாழும் பகுதியைத்தான் சூறையாடும். 

குழாயில் வெடிப்பு ஏற்பட்டு சாம்பல் கழிவு வெளியேறுகிறது

எண்ணூர் பகுதிக்குள் நுழைவதே ஓர் அபாயகரமான பகுதிக்குள் நுழைவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. 4 அனல்மின் நிலையங்கள், அதன் கோபுரங்களிலிருந்து வெளியேறும் புகை மேகக்கூட்டம் போல் படர்கிறது. அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகளைச் சுமந்து செல்லும் குழாய்கள் குறுக்கும், நெடுக்குமாகப் பாய்ந்துகொண்டிருக்கின்றன. பல இடங்களில் அந்தக் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே அந்தச் சாம்பல் கழிவுகளோடு கூடிய நீர், நன்னீர் நிலைகளில் கலக்கின்றன. இதுமட்டுமல்லாமல், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலிய நிறுவனங்களின் மிகப் பெரிய டேங்குகள், அதிலிருந்து வரும் எல்.பி.ஜி. கேஸை சுமந்து செல்லும் குழாய்கள், அருகே இருக்கும் காமராஜர் துறைமுகம், அங்கு சரக்குகளை ஏற்றவும் இறக்கவும் வரும் ஆயிரக்கணக்கான டேங்கர் லாரிகள், மாசுபட்ட நீர்நிலைகள், வடிகால் இல்லாமல் வசிப்பிடப் பகுதிகளில் குட்டையாகத் தேங்கி நிற்கும் நீர், அதில் ஊறும் புழுக்கள், பாம்புகள், கொசுக்கள், பூச்சிகள்... இவை எல்லாவற்றையும் பார்த்து, தன் மொத்தக் கோபத்தையும் அடக்கிக்கொண்டு அலைகளால் கரையைத் தொட்டுக்கொண்டிருக்கும் கடல். இப்படித்தானிருக்கிறது எண்ணூர்.

நித்தியானந்த் ஜெயராம்: 

" சில வருடங்களுக்கு முன்பு வரை எண்ணூர் பகுதியில் மட்டும் 37 கால்வாய்கள் இருந்திருக்கின்றன. ஆனால், இன்று விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே இருக்கின்றன. ஏற்படுத்தப்படும் மிக மோசமான இயற்கைச் சீர்கேடுகளால் இந்தப் பகுதியே பெரும் அபாயத்தில் இருக்கிறது. சென்னை என்றால் ஆட்சியாளர்களுக்குத் தென்சென்னை மட்டும்தான் தெரிகிறது. வடசென்னையும், வடசென்னைவாசிகளும் அவர்கள் கண்களுக்கே தெரிவதில்லை. இந்த இடமும் சரி, இந்த மக்களும் சரி... ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில் இன்விஸிபிள்  (Invisible) தாம் ." 

கயிறு போட்டுக் கட்டி வைத்திருக்கும் தன் பழைய கண்ணாடியைச் சரிசெய்தபடியே, துணி துவைத்துக்கொண்டிருந்தார் சலீமா பாட்டி. நானாக எதுவும் கேட்கும் முன்பே,

"கீழ விழுந்து, விழுந்து இடுப்பெல்லாம் வலிக்குது தம்பி. சும்மா, சின்னதா மழை தூறினாக் கூட தண்ணீ தேங்கிடுது. கண்ணு வேற சரியா தெரியமாட்டேங்குது. தெரியாம எங்கேயாவது கால் வச்சிடுறேன். வழுக்கி விழுந்திடுறேன். போன மழையில புடுங்கிட்டுப் போன கூரைய... இன்னும் சரி பண்ண முடியில... எந்நேரமும் தண்ணி, கொசு, பாம்புகள்ன்னு கஷ்டமான ஜீவனும்தான். என்ன பண்றது... வாழ்ந்துதானே ஆகணும். எம் பொண்ண வேற பார்த்துக்கணும். அடியே... சோப்புத் தீர்ந்து போச்சு உள்ளருந்து எடுத்தாடீ..." என்று சலீமா பாட்டி சொல்லிவிட்டு திரும்பி தன் வீட்டு வாசலை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அந்தத் தண்ணீரில் தன் பாவாடையைத் தூக்கியபடி கூரையில்லாத அந்த வீட்டைக் கடந்து கையில் சோப்போடு வந்து தந்தார் அந்தப் பெண். நாம் அமைதியாக இருப்பதைக் கண்டு,

"எம் பொண்ணுதான் தம்பி. கொஞ்சம் புத்தி சுவாதீனமில்லை அதான்..." என்று சொன்னபடி தொடர்ந்து துணி துவைக்கத் தொடங்கினார். 

மாலை நேரம் எண்ணூரைக் கடந்து, சென்ட்ரலைக் கடந்து மவுன்ட் ரோடைத் தொட்டோம். புதியதோர் உலகில் நுழைந்தது போன்ற உணர்வு. சுவாசம் கொஞ்சம் சீரானது போன்ற உணர்வு. 

எண்ணூரின் அழிவை என் தலைமுறையில் பார்த்துவிடுவேனோ என்கிற அச்சம் மட்டும் மிச்சமிருந்தது. இன்னும் இருக்கிறது.