Election bannerElection banner
Published:Updated:

கந்துவட்டியின் மறுபக்கம்... கோர்ட் உத்தரவைக் கண்காணிக்கத் தவறியது அரசு! #VikatanExclusive

கந்துவட்டியின் மறுபக்கம்... கோர்ட் உத்தரவைக் கண்காணிக்கத் தவறியது அரசு! #VikatanExclusive
கந்துவட்டியின் மறுபக்கம்... கோர்ட் உத்தரவைக் கண்காணிக்கத் தவறியது அரசு! #VikatanExclusive

கந்துவட்டியின் மறுபக்கம்... கோர்ட் உத்தரவைக் கண்காணிக்கத் தவறியது அரசு! #VikatanExclusive

கோர்ட் உத்தரவை மதித்து, கந்துவட்டி தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தால் கந்துவட்டிக் கொடுமையில் சிக்கி, நெல்லையில் இப்படி ஒரு குடும்பமே உயிரை விட்டிருக்காது. ஓர் அரசே, கோர்ட் அவமதிப்பைச் செய்கிறது என்கிறபோது, அதன்விளைவு இப்படித்தான் மோசமாக அமைந்துவிடுகிறது. கோர்ட் சொன்னதை, தமிழ்நாட்டு அரசாங்கம் புறந்தள்ளிவிட்டுச் சென்றதையும், அதனால் விளைந்திருக்கும் பரிதாப சம்பவத்தையும் நாம் புரிந்துகொள்ள, இந்தக் கடித விவகாரம் ஒன்றே போதும்...

கந்துவட்டியின் கொடூரத்துக்குத் தீர்வுகோரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், கடந்த 2013 செப்டம்பரில், அப்போதைய தலைமை நீதிபதி (தற்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி) ராஜேஷ்குமார் அக்ரவாலுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தில், "திருப்பூர் மாவட்டத்தில் கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள்குறித்து தமிழ் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. எனவே, தமிழகத்தில் 2003-ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு கந்துவட்டி தடுப்புச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். இந்தச் சட்டத்தின்கீழ் 2003-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையை அரசிடமிருந்து பெறவேண்டும். கந்துவட்டிக் கொடுமைகுறித்து தகுந்த நடவடிக்கையை ஐகோர்ட்டு மேற்கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார்.

நீதிபதி கிருபாகரன் எழுதிய இந்தக் கடிதத்தையே பொதுநல மனுவாக தன்னிச்சையாக (சூமோட்டோ) வழக்குப்பதிவு செய்த தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், இதுகுறித்துப் பதிலளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறை டி.ஜி.பி., திருப்பூர் போலீஸ் எஸ்.பி., ஆகியோருக்கு அப்போது நோட்டீஸ் அனுப்பினார். மேலும், இந்தவழக்கில் ஐகோர்ட்டுக்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமியை நியமித்து உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கு முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி தன்னுடைய கருத்துகளை அறிக்கையாகத் தாக்கல்செய்தார். அவருடைய அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், "இந்த வழக்கைப் பொறுத்தவரை, தமிழ்நாடு கந்துவட்டி தடுப்புச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்பதுதான். இந்த வழக்குக்குப் பதிலளித்த அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, கந்துவட்டிகுறித்து புகார் வந்தால் போலீஸார் தீவிரமாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். ஆனால், கந்துவட்டி கும்பல் கடன் தொகையை வசூலிக்கக் குண்டர்களைப் பயன்படுத்துகின்றனர். இவர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் போலீஸார் வேடிக்கைப் பார்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. கந்துவட்டி தடுப்புச் சட்டம் குறித்து மக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும்; கந்துவட்டி குறித்த புகார்மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என்பதைக் கண்காணிக்க மாவட்டம் அல்லது தாலுகா அளவில் கமிட்டி அமைக்க வேண்டும் என்று மிகச்சிறப்பான அறிவுரைகளை முத்துக்குமாரசாமி வழங்கியுள்ளார்.   

அதன்படி, கந்துவட்டி தடுப்புச் சட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்பு உணர்வு ஏற்படுத்தும்விதமாக, அனைத்து வகையான ஊடகங்கள், சினிமா தியேட்டர்கள் மூலம் விளம்பரம் வெளியிட வேண்டும். இதற்காகத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் அரசு பயன்படுத்திக்கொள்ளலாம். கந்துவட்டி வசூலிக்கும் நபர்கள்மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும். கந்துவட்டிக் கொடுமை வழக்குகளின் விசாரணையை மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தங்களின் நேரடிக் கண்காணிப்பில் நடத்த வேண்டும். கந்துவட்டி வழக்கில் கோர்ட் மூலம் தண்டனை பெறுபவர்களின் விவரங்களை அவ்வப்போது நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல்செய்ய வேண்டும். இந்த உத்தரவுகளுடன், இந்தவழக்கை பைசல் செய்கிறோம். நாங்கள் பிறப்பித்துள்ள இந்த உத்தரவுகளை அமல்படுத்தி, அதுதொடர்பான அறிக்கையை ஒருவாரத்துக்குள் தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டும். இந்த உத்தரவின் நகல் தமிழக அரசு தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்குப் பதிவுத்துறை அனுப்பி வைக்கவேண்டும்" என்று தெரிவித்தனர்.

இதுபோன்ற உயர்நீதிமன்ற உத்தரவு தமிழகத்தில் நடைமுறையில் இருந்தபோதிலும், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கந்துவட்டிக் கொடுமையால், ஒரு குடும்பமே தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளது.

இந்தத் தீக்குளிப்பு சம்பவத்துக்கான காரணம் என்ன? மிரட்டி கந்துவட்டி வசூலிக்கும் ஆசாமிகள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரை போலீஸார் விசாரிக்கவில்லை. மேலும், கந்துவட்டி வசூலிக்கும் ஆசாமிகளுடன் போலீஸார் கைகோத்து இருந்தனர் என்பதுதானே? இதைக் கண்காணிக்கும் கமிட்டிகள் (அப்படி ஒருவேளை இருந்தால்), அக்குழு ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை? கோர்ட் உத்தரவிட்டதன் அடிப்படையில் கந்துவட்டி தடுப்புச் சட்டம் குறித்து, அனைத்து ஊடகங்கள், சினிமா தியேட்டர்கள் மூலம் விளம்பரங்கள் வெளியிட்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்பு உணர்வு செய்யப்பட்டுள்ளதா? இதற்காகத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனவா? கந்துவட்டி வசூலித்தால் குண்டர்தடுப்புச் சட்டம் பாயும் என்பது வெறும் ஏட்டளவில் இருப்பதால்தான், நெல்லையில் ஒரு குடும்பமே தீக்குளிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதா என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது.

இனிமேலாவது கந்துவட்டி தடுப்புச் சட்டத்தைக் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த அதிகாரிகள் முன்வருவார்களா?!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு