பேருந்து நிலையம், ரயில் நிலையம், கோயில்கள் மற்றும் சாலையோரம் திரியும் குழந்தைகள் உட்பட, பலதரப்பட்ட பிச்சைக்காரர்களிடம், அவர்களின் பிரச்னைகள் என்னவென்று நம்மில் பலர் கேட்பதில்லை.
இப்படிப்பட்ட நிலையில், பிச்சைக்காரர்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன,ர் ‘அட்சயம்’ அமைப்பின் இளைஞர்கள். ஈரோடு மற்றும் நாமக்கல்லை மையமாகக்கொண்டு தற்போது இயங்கிவரும் இந்த அமைப்பை வழிநடத்தி வருகிறார், நவீன் குமார். கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் அவரைச் சந்தித்துப் பேசினோம்.
பிச்சைக்காரர்களுக்குக் காசு தருவது சரியா?
“நான், கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது, வீட்ல எனக்கு செலவுக்குத் தரும் காசை, ரோட்ல இருக்கிறவங்களுக்குத் தானமா போடுவேன். ஒருநாள், அவங்க அந்தக் காசை வெச்சு, சரக்கு அடிக்கிறாங்கன்னு தெரிஞ்சதும் ரொம்பவே கோபம் வந்துச்சு. சின்ன வயசுல இருந்தே விவேகானந்தர், அப்துல் கலாம் எனப் பலரின் புத்தகங்களைப் படிச்சதாலோ என்னவோ, பிச்சைக்காரர்களுக்காக ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. உடனே, நண்பர்கள்கிட்ட இதுபற்றிச் சொன்னதும், அவங்க கொடுத்த ஐடியாதான் இந்த அமைப்பு. 2014-ல் கவர்மென்ட்ல பதிவுசெஞ்சு, இந்த அமைப்பை ஆரம்பிச்சோம்.
கடந்த மூன்று வருஷத்துல 190 பிச்சைக்காரர்களை அதிலிருந்து மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு தந்திருக்கோம். எங்க குழுவுல மொத்தம் 1,900 பேர் உறுப்பினரா இருக்காங்க. பெரும்பாலான உறுப்பினர்கள் இளைஞர்களே. வாரம்தோறும் ஊர்முழுக்க கேம்ப் நடத்தி, பிச்சைக்காரர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கி உதவிகள் செய்றோம். பொதுவா, பிள்ளைகள் தங்களின் பெற்றோரை ஒழுங்கா பார்த்துக்காம இருக்கிறது பிச்சைக்காரர்கள் உருவாவதற்கு ஒரு காரணம். எங்க அமைப்பின் இளைஞர்கள், இதுபோன்ற பிரச்னைகளை முன்னின்று கேட்பதுடன், தேவையான உதவிகளைச் செய்றதால, வாழ்க்கையை எப்படி வாழணுங்கிறத அவங்களும் கத்துக்கிறாங்க. இளைஞர்கள் நினைச்சா எதையும் சாதிக்க முடியும். இதுவும் அதுபோலத்தான்.
மறுவாழ்வு முகாம்
கடந்த அக்டோபர் மாதம் 7 மற்றும் 8-ம் தேதிகளில், ‘யாசகர்களுக்கான மறுவாழ்வு முகாமை' ஈரோட்டில் நடத்தினோம். ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகரன், மாவட்ட எஸ்.பி., சிவகுமார், மாநகராட்சி ஆணையாளர் சீனி அஜ்மல்கான் போன்றோர் அந்த முகாமைத் தொடங்கி வைத்தார்கள். முகாமில், யாசகர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி, கவுன்சலிங் வழங்கி, அவரவர் விருப்பப்படி விடுதிகளுக்கோ, அல்லது அவர்களின் வீட்டுக்கோ அனுப்பிவெச்சோம்.
இதுவரை பல விருதுகளை வாங்கியிருக்கோம். தற்போது, சிறந்த சமூக சேவகர் என்ற விருதை அமைச்சர் செங்கோட்டையன் எங்களுக்கு வழங்கியுள்ளார். 'இனிமே, எப்போதும் பிச்சைக்காரர்களுக்கு காசோ, பணமோ போடாதீங்க. முடிஞ்சா அவங்களுக்கு உணவு, உடை கொடுங்க. நாங்க செய்யும் செயல்களை மற்ற இளைஞர்களும் பொதுமக்களும் பின்பற்றினால், யாசகர்கள் இல்லா தமிழ்நாடு மட்டுமல்ல; இந்தியாவையே உருவாக்கலாம்" என்றார்.