Published:Updated:

``அவரோட வாழ ஆசைதான்... ஆனா, சொசைட்டி தடுக்குதே!” டிராஃபிக் ராமசாமி மனைவி #VikatanExclusive

``எல்லாமே சீக்கிரம் மாறிடும்டி. நீ வேணா பாரு. நாம கண்ண மூடுறதுக்குள்ளே நிறைய மாற்றம் நடந்திருக்கும்.''

``அவரோட வாழ ஆசைதான்... ஆனா, சொசைட்டி தடுக்குதே!” டிராஃபிக் ராமசாமி மனைவி #VikatanExclusive
``அவரோட வாழ ஆசைதான்... ஆனா, சொசைட்டி தடுக்குதே!” டிராஃபிக் ராமசாமி மனைவி #VikatanExclusive

மாலை 6 மணி. தியாகராயர் நகரின் அந்த வீட்டுக்குள் பக்தி மணம் கமழ்கிறது. பூஜை அறையில் தீபம் ஏற்றிவிட்டு வெளியேவரும் விஜயா, ``நீங்க அஞ்சு முப்பதுக்கு வந்துடுவேள்னு அப்பா சொன்னார். ஆனா, மணி ஆறு ஆகிடுத்து. உங்களுக்கு முன்னமே வர்றேன்னு சொன்ன அப்பாவும் இன்னும் வரலை. இதுதான் சொசைட்டி. என்னதான் அவாள் தொண்டை கிழிய கத்தினாலும் வீதியில இறங்கிப் போராடினாலும் இந்த சொசைட்டியைத் திருத்த முடிஞ்சுதா. போராட்டம், சிறை வாழ்க்கைன்னு அம்மாவையும் என்னையும் விட்டுத் தனியா வாழ்றது மட்டும்தான் மிச்சம். அம்மா உடம்பு சரியில்லாதவா. அஞ்சு மணிக்கெல்லாம் மாத்திரை போட்டுட்டு தூங்கிடுவா. அப்பா வர்றார்னு சொன்னதால உட்கார்ந்துட்டே இருக்கா. அப்பா வரட்டும். ரெண்டுல ஒண்ணு கேட்கறேன்” - டிராஃபிக் ராமசாமியின் மகள் விஜயா குரலில் ஆதங்கம் கொட்டுகிறது. 

நாற்காலியில் அமர்ந்திருந்த டிராஃபிக் ராமசாமியின் மனைவி சகுந்தலா அம்மா, ``ஏண்டி அவாள்ட்ட புலம்பிட்டிருக்கே. ஆம்படையான்னா வீட்டுக்குள்ளேயே இருந்துட முடியுமா. வெளிய நாலு இடத்துக்குப் போய் வந்துட்டுதானே இருப்பா. நம்மளோட இருக்கிறதுக்கு அந்த மனுஷாளுக்கு குடுப்பினை இல்லே. பொதுசேவை, அநியாயத்தை தட்டிக் கேட்கிறேன்னு கௌம்பிட்டார். அவரைச் சொல்லி ஒண்ணும் ஆகப்போறதில்லே. எல்லாம் சி.எம்-ஆ இருந்த ராஜாஜியைச் சொல்லணும்” என்கிறார்.

சகுந்தலா அம்மா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ``என்ன, ராஜாஜி பேரெல்லாம் கேட்குது” என்றபடி உள்ளே வருகிறார் டிராஃபிக் ராமசாமி. ``என்னடி எப்படி இருக்கே? வேளா வேளைக்கு மாத்திரை மருந்து எடுத்துக்கிறியா? விஜயா ஒண்ண நல்லா பாத்துக்கிறாளோ” என மனைவியின் அருகில் சென்று நலம் விசாரிக்கிறார்.

``எனக்கென்ன நான் நல்லாத்தான் இருக்கேன். உங்க சொசைட்டி எப்படி இருக்கு? எல்லாத்தையும் சரிபண்ணிட்டேளா. உங்க போராட்டத்துக்குப் பலன் கிடைச்சிடுச்சா?” எனக் கேட்டதும் சிரிக்கிறார், டிராஃபிக் ராமசாமி.

``எல்லாமே சீக்கிரம் மாறிடும்டி. நீ வேணா பாரு. நாம கண்ண மூடுறதுக்குள்ளே நிறைய மாற்றம் நடந்திருக்கும். என்னைப் பற்றி எடுத்திருக்கும் படம் திரைக்கு வந்ததும், நிறைய மக்களிடம் நாம போய் சேர்ந்துடுவோம்” என நம்பிக்கையோடு சொல்கிறார்.

``நீங்க `டிராஃபிக் ராமசாமி' படத்தின் இசை வெளியீட்டு விழாவைப் பார்த்தீங்களா? உங்களைப் பற்றி சார் ரொம்பப் பெருமையா பேசியிருந்தாங்க. அதைப் பற்றி என்ன நினைக்கறீங்க?” என்று சகுந்தலா அம்மாவிடம் கேட்டோம்.

``நான் அதைப் பற்றி சொல்றதுக்கு என்ன இருக்கு. எனக்குக் கல்யாணம் ஆகும்போது 14 வயசு. இவாளுக்கு 18. கல்யாணம் முடிஞ்ச மறுநாளே தனிக்குடித்தனம் வந்துட்டோம். கணவன் மனைவியா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு எப்படி வாழணும்னுகூட தெரியாது. அடிக்கடி சண்டைகளும் பிரச்னைகளும் வரும். அப்போவெல்லாம் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் விட்டுக்கொடுத்துப் போயிருக்கோம். நானும் அவாளும் மாறி மாறி கோபத்துல அடிச்சுக்குவோம். செத்த நாழி கழிச்சு அணைச்சுக்குவோம். 1952 - 54 வரையிலான ராஜாஜியின் மந்திரி சபையில் இருந்த வெங்கடசாமி நாயுடுவுக்கு இவாதான் பி.ஏ. அப்போதான் ராஜாஜி கொள்கைகள் மேலே ஈர்ப்பு வந்திருக்கு. அப்பறம் பின்னி மில்லுல ஆபீஸ் பாயா வேலைக்குச் சேர்ந்து அசிஸ்டென்ட் மேனேஜர் லெவலுக்கு வந்தா. அவாளோட திறமைதான் அந்த இடத்துக்குக் கொண்டுவந்துச்சு” என்கிறவர் குரலில் பெருமிதம்.

டிராஃபிக் ராமசாமி இடைமறித்து, ``ஏண்டி, என்னைப் பற்றி இவ்வளவு பெருமையா பேசுறியே. நீ மட்டும் எனக்குக் குறைஞ்சவளா. அந்தக் காலத்திலேயே ஆங்கிலேய கம்பெனி வேலைக்குப் போய் என்னையும் சேர்த்துப் பார்த்துக்கிட்டவ நீ. உண்மையைச் சொல்லணும்னா, நான் இந்த இடத்துல இருக்கிறதுக்குக் காரணமே நீதானேடி” என்றதும் சகுந்தலா அம்மாவின் முகத்தில் புன்னகை.

``ஆமா, இந்தப் புகழ்ச்சிக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே. நீங்க இப்படிப் பேசிட்டிருந்தா, நான்தான் உங்கக்கிட்ட இருந்து பிரிஞ்சு வாழ்றதா வந்தவா நினைக்கப்போறா. அப்போதைக்கு நடந்த கலவரம் எல்லாம் அவாளுக்குத் தெரியாது இல்லியா” என்கிறார்.

ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள அன்பும் காதலும் வார்த்தைகளில் நிறைந்துள்ளது. ஒருவரை மற்றொருவர் விட்டுக்கொடுக்காமலேயே பேசுகிறார்கள். ஆனாலும், எது இருவரையும் பிரித்துவைத்துள்ளது?

``பின்னி மில்லுக்கு வேலைக்குப் போயிட்டுருந்தப்போ 1972-ல் வெள்ளம் வந்துச்சு. ஊரே வெள்ளத்துல மூழ்கினப்போ மில்லையும் மூடிட்டாங்க. அப்புறம், மும்பை டாடா மில்லில் வேலை கிடைச்சது. இவா என்னைவிட்டு தொலைதூரத்துக்குப் போறதை நான் விரும்பலை. `உங்க கை செலவுக்கு மாசம் 500 ரூபாய் தந்துடறேன். நீங்க என்னோடவே இருந்திடுங்கோ'னு சொல்லிட்டேன். பிறகுதான் இவா பொதுசேவையில் இறங்கினா. அப்புறம்தான் எங்களுக்குள்ளே இடைவெளி அதிகமாச்சு. போராட்டம்... போராட்டம்... போராட்டம்... இது மட்டுமே இவா கண்ணுக்குத் தெரிய ஆரம்பிச்சது. மனைவியும் மகளும் இருக்கிறதையே மனுஷன் மறந்துட்டார். பொண்ணு கல்யாணத்திலேயே மூணாவது மனுஷன் மாதிரி கலந்துகிட்டார். அதெல்லாத்தையும்விட அடிக்கடி போலீஸ் வீட்டுக்கு வர ஆரம்பிச்சாங்க. ஒரு பொண்ணை வெச்சிருக்கோம். போலீஸ் வீட்டுக்கு வர்றதெல்லாம் நல்லாவா இருக்குன்னு கேட்டா, பொதுவாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணம்னு சொல்லிடுவா. ரோட்டுல போராட்டம் பண்ணும்போது, போலீஸ் அடிச்சுடறாங்க. மக்களுக்காகப் போராடுறேன்னு எதுக்கு அடி வாங்கிட்டு வரணும். மனசு வலிச்சுது. அவா வெளியில கௌம்பினாலே என்ன நடக்குமோனு உள்ளுக்குள்ளே பதற்றமா இருக்கும். ஒருமுறை, மீன்பாடி வண்டிகளுக்கு எதிரா போராடினதுக்கு அடிச்சுப் போட்டுட்டாங்க. நாலு நாளா மனுஷா வீட்டுக்கே வரலை. பொண்ணைக் கூட்டிட்டு ஒவ்வொரு ஹாஸ்பிட்டலா அலைஞ்சேன். இந்த அரசாங்கமும் சரி, பொதுமக்களும் சரி, தான் பண்ற தப்புக்கெல்லாம் யார் மேலேயாவது பழியைப் போட்டு தப்பிச்சிடுது. அந்தப் பழிக்கு இவா பலியாகிடுறா. பொறுக்க முடியாம எங்களுக்குள்ளே சண்டை  அதிகமாச்சு. அதான், இவாளே வீட்டைவிட்டு கௌம்பிப் போயிட்டா. 10 வருஷம் ஆகுது. தனியாத்தான் இருக்கேன்” என்கிற சகுந்தலா அம்மாவின் கண்களில் நீர் வழிய, துடைத்துவிடுகிறார் டிராஃபிக் ராமசாமி.

``எனக்கு மக்கள் சேவைதான் முக்கியம். இன்னைக்கு இல்லாட்டாலும், என்னைக்காவது ஒருநாள் இந்த சொசைட்டி மாறும்னு நம்பிக்கை இருக்கு. என்னால் எதுக்கு மனைவிக்கும் துன்பம்னு பிரிஞ்சு இருக்கேன். ரெண்டு பேரும் உடம்பால்தான் தனியா இருக்கோமே தவிர, மனசளவுல ஒண்ணாவே வாழ்ந்துட்டிருக்கோம்” என்கிற டிராஃபிக் ராமசாமியைப் பார்த்து, ஆதங்கத்தோடு ஒரு கேள்வியை முன்வைக்கிறார் சகுந்தலா அம்மா. 

``உங்களுக்கு இந்தச் சமூகம் முக்கியம். ஆனா, உங்களுக்காக இந்தச் சமூகம் என்ன பண்ணிடுச்சு? உங்களையும் என்னையும் பிரிச்சுதான் வெச்சிருக்கு. நீங்க இன்னும் எத்தனை வருஷம் போராடினாலும், இந்த சொசைட்டியைத் திருத்தவே முடியாது. நீங்க வேணா வெளியில் போய், `என் மனைவி எனக்கு மேன்மையானவள்'னு சொல்லிக்கலாம். ஆனா, எனக்கு அப்படி இல்லை. இனியாவது அடிக்கடி என்னை வந்து பாருங்கோ” எனச் செல்லமாக கணவரை அதட்டுகிறார்.

மனைவியின் தோள் மேல் கை போட்டு மெள்ள அணைக்கிறார் டிராஃபிக் ராமசாமி. ஒரு போராளியின் காதல், அங்கே கவிதையாக வெளிப்படுகிறது.