Published:Updated:

ரஜினியின் `வெல்விஷர்' பட்டாலியன்.. ஆரம்பத்திலேயே ஆறு பேருக்கு ஸ்கெட்ச்! #VikatanExclusive

ரஜினியின் `வெல்விஷர்' பட்டாலியன்.. ஆரம்பத்திலேயே ஆறு பேருக்கு ஸ்கெட்ச்! #VikatanExclusive
ரஜினியின் `வெல்விஷர்' பட்டாலியன்.. ஆரம்பத்திலேயே ஆறு பேருக்கு ஸ்கெட்ச்! #VikatanExclusive

"எனக்கு ஏதும் தெரியாது என்று நினைக்காதீர். மண்டலத்தைக் கவனிக்கும் அந்த ஆறு பேரை உடனே வீட்டுக்குப்போகச் சொல்லுங்கள். மண்டபத்துக்கு வரக் கூடாது. நான் சென்னை வந்ததும், சில முக்கிய முடிவுகளை அறிவிக்கவிருக்கிறேன்" என்று ரஜினியிடமிருந்து அவசரத் தகவல் வந்ததும், ஆடிப்போய்விட்டனர் மக்கள் மன்ற தலைமை நிர்வாகிகள்.

பிரபல சினிமா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க..ரஜினி நடிக்க... மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் படு வேகமாகப் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. இதே நேரம், ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை அலுவலகம் சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தின் ஒரு பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை முதல் மாடிக்கு மாற்ற டிசைன் போட்டுக்கொடுத்துவிட்டுப்போனார் ரஜினி. அதன்படி, கான்பரன்ஸ் ஹால், தலைமை நிர்வாகிகள் அறைகள்...என்று ஏசி செய்யப்பட்டு இன்டீரியர் டெக்ரேஷன்கள் நடந்து முடிந்தன. ரிப்பன் வெட்டவேண்டியதுதான் பாக்கி!

ரஜினி படப்பிடிப்பு முடிந்து இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் சென்னை திரும்புகிறார். அவர் வந்ததும், குத்து விளக்கு ஏற்றி புது அலுவலகத்தைத் தொடங்க ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. படப்பிடிப்புக்காகச் சென்னையை விட்டு ரஜினி கிளம்பும் முன், மாவட்ட அளவில் டார்க்கெட்டை நோக்கி பூத் கமிட்டிகள் அமைக்க  ஆங்காங்கே மன்றத்தின் புதிய நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்கிறார்களா? என்று தலைமை அலுவலகத்தின் சில நிர்வாகிகளிடம் விசாரித்தாராம். மழுப்பலாக பதில் சொன்ன நிர்வாகிகளின் முகபாவனைகளை கவனித்த ரஜினிக்கு ஏதோ பொறி தட்டியது. அதை அவர் அப்போதைக்கு வெளிக்காட்டவில்லை. ஆனால், அவர்களுக்கே தெரியாமல் மாவட்டங்களில் என்ன உண்மை நிலவரம் என்பதை அறிந்து வர தனக்கு வேண்டப்பட்ட வெல்விஷர் சிலரைத் தேர்தெடுத்து, நேரடி கள ஆய்வு நடத்தி ரிப்போர்ட் அனுப்பும்படி சொன்னாராம். இந்த விவரம் ரகசியமாக நடந்ததால், யாருக்கும் தெரியவில்லை. முக்கியமாக, ரஜினி மன்ற உறுப்பினர்களிடம் அத்துமீறிப் பேசுகிறவர்கள்..அராஜகமாக நடந்துகொள்கிறவர்கள்..மன்ற நடவடிக்கைகளின் அன்றாட நிகழ்வுகளை வெளியில் மீடியாக்களுக்கு லீக் செய்கிறவர்கள்...கோஷ்டிகளை வளர்த்துவிடுகிறவர்கள்...இப்படிச் சில தலைப்புகளை கொடுத்து தகவல் கேட்டிருந்தாராம் ரஜினி. அதற்காக, களம் இறங்கிய வெல்விஷர் பட்டாலியனில் யார்யார் இருந்தார்கள் என்பது ரஜினிக்கு மட்டும்தான் தெரியும். 

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களை மக்கள் மன்ற நிர்வாக வசதிக்காக வெவ்வேறு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். அந்தந்த மண்டலங்களில் பூத் கமிட்டி அமைப்பதில் ஏற்படும் சந்தேகங்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கம்யூட்டரில் பதிவு செய்வது...இப்படியான அலுவல் ரீதியான பணிகளைக் கவனிக்க ஆறு பேரை ராகவேந்திரா மண்டபத்தில் இருந்தபடி கவனிக்க சொல்லியிருந்தார் ரஜினி. இங்குதான் வில்லங்கமே ஆரம்பித்தது. "எனக்கு ஏதும் தெரியாது என்று நினைக்காதீர். மண்டலத்தைக் கவனிக்கும் அந்த ஆறு பேரை உடனே வீட்டுக்குப்போகச் சொல்லுங்கள். மண்டபத்துக்கு வரக் கூடாது. நான் சென்னை வந்ததும், சில முக்கிய முடிவுகளை அறிவிக்கவிருக்கிறேன்" என்று ரஜினியிடமிருந்து அவசரத் தகவல் வந்ததும், ஆடிப்போய்விட்டனர் மக்கள் மன்ற தலைமை நிர்வாகிகள்.

ரஜினி ஏன் கொதித்தார், என்ன நடந்தது? என்று விசாரித்தோம்

முதல்மாடியில் அலுவலகம் ரெடியாகிவிட்டது. கீழ்தள அலுவலகத்தை ரிசப்ஷன் தளமாக மாற்றப்போகிறார்கள். ஸ்கேனிங் மெஷின், கம்யூட்டர்கள் கீழ்தளத்தில் இருக்கும். இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. எங்கள் தலைவரை டென்ஷன் ஆக்கிய சில விவரங்களை நாங்களும் கேள்விப்பட்டோம். டெல்டா மாவட்டம் ஒன்றில் 600 பூத் கமிட்டிகளை அமைத்துவிட்டதாகத் தகவல் கொடுத்தார்கள். அதைத் தலைமை அலுவலகத்தில் இருக்கிற சிலர் ஏற்றுக்கொண்டுவிட்டனர். ஆனால், வெல்விஷர் பட்டாலியன் சென்று கிராஸ் செக் பண்ணியபோது, 100 பூத் கமிட்டிகள்தாம் முழுமையாக முடிக்கப்பட்டிருந்தன. இதைக் கோட்டை விட்டதன் பின்னணியை விசாரித்தபோது அதிர்ச்சிகரத் தகவல் கிடைத்ததாம். வட சென்னையில் நியமிக்கப்பட்ட ஒரு நிர்வாகி பற்றி ஏகப்பட்ட புகார்கள் தலைமைக்கு அனுப்பப்பட்டும், அவை எங்கோ பதுக்கப்பட்டதாம். நோ ஆக்ஷன். ரஜினி கவனத்துக்கும் விவகாரத்தைத் தெரியப்படுத்தவில்லையாம். புகார் அனுப்பியவர்களை சந்தித்த வெல்விஷர் பட்டாலியன் அதையெல்லாம் விசாரித்து தகவல் சேகரித்தாராம்.

அதேபோல், ராகவேந்திரா மண்படத்தின் கும்பலில் கலந்து இந்தப் பட்டாலியனைச் சேர்ந்த சிலர் நின்று, நடப்பதை வேடிக்கைப் பார்த்திருக்கிறார்கள். நாங்கள்தாம் எல்லாம். மண்டல அளவில் எங்களிடம் கேட்டுத்தான் தலைமைக்கு வரவேண்டும். நேரடியாகச் சென்னை வரக் கூடாது...என்பதில் ஆரம்பித்து அதிகார தோரணையில் தலைமை அலுவலக நிர்வாகிகள் பேசியதை கவனித்திருக்கிறார்கள். இவர்கள் தங்களுக்கென தனி ரூட் போட்டு ஆங்காங்கே

கோஷ்டிகளை மண்டலங்களில் உருவாக்கி வருவதாக எழுந்த புகார்கள் பற்றியும் விசாரணை நடந்ததாம். ஒரு நிர்வாகி, வீடு கட்டுகிறாராம். அவருக்கான ஃபர்னிச்சர்களை யார் வாங்கிக்கொடுத்தார்கள்? என்று பார்க்கவும் என்று வெல்விஷர் பட்டாலியனுக்குத் தகவல் வந்ததாம். பசை உள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் சிலருக்கு அன்றாடம் மன்றத்துக்கு வரும் புகார் கடித விவரங்கள் செல்போனில் படிக்கப்படுவதாக மன்ற உறுப்பினர்களின் சந்தேகம். அதுபற்றியும் விசாரிக்கத் தவறவில்லை வெல்விஷர்கள். இப்படி விசாரித்த தகவல்களின் சில பாயின்டுகளை மட்டும் ரஜினியிடம் போனில் சொல்லியிருக்கிறார்கள். கொதித்துப்போன ரஜினி, உடனே மண்டல நிர்வாகிகள் ஆறு பேரை வெளியே போகச் சொல்லிவிட்டார். விரிவான ரிப்போர்ட் தயாராகிவிட்டதாம். ரஜினி வந்ததும், அதை முழுவதுமாகப் படித்து நடவடிக்கை எடுக்கப்போகிறார். பொறுத்திருந்து பாருங்கள் என்கிறார். 

இதைப்பற்றி ரஜினி மக்கள் மன்ற தலைமைப் பொறுப்பாளர் ராஜூ மகாலிங்கம் தரப்பில் விசாரித்தோம். 
வதந்திகளை நம்பாதீர். கீழ்தளத்திலிருந்து முதல் தளத்திற்கு மாறப்போகிறோம். அதற்காக பொருட்களை மாற்றும் வேலையில் இறங்கியிருக்கிறோம். மற்றபடி, ரஜினி கடுமையான உத்தரவு என்பதெல்லாம் வடிகட்டின பொய் என்கின்றனர்.

நெருப்பில்லாமல் புகையுமா? 

அடுத்த கட்டுரைக்கு