Published:Updated:

"இரண்டு அஞ்சலைகளின் கதையும்…ஓர் எரிந்த வீடும்!" - இது காட்டுல இருக்கறவங்க கதை

"இரண்டு அஞ்சலைகளின் கதையும்…ஓர் எரிந்த வீடும்!" - இது காட்டுல இருக்கறவங்க கதை
News
"இரண்டு அஞ்சலைகளின் கதையும்…ஓர் எரிந்த வீடும்!" - இது காட்டுல இருக்கறவங்க கதை

முன் குறிப்பு: இங்கு நீங்கள் படிக்கப்போவதை உங்கள் ஃபேஸ்புக் டைம்லைனில் தீவிர விவாதமாக நிச்சயம் பார்த்திருக்க முடியாது.

அஞ்சலை 1:

தன்னுடைய வயது என்ன என்று தெரியாத அஞ்சலையிடமிருந்து இதைத் தொடங்குவதுதான் சரியாக இருக்கும். சென்னையின் கிழக்குக் கடற்கரைச்சாலை வழியாக புதுச்சேரி செல்லும் வழியில் புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள காலாபேட்டில் வசிக்கிறார் அஞ்சலை. வசிக்கிறார் என்று சொல்வதைவிடவும் கிடக்கிறார் என்பதுதான் சரியாக இருக்கும்.முகத்தின் சுருக்கங்களை வைத்து நாமாகத் தோராயமாய், ``என்ன பாட்டி, உங்களுக்கு ஒரு 90 வயசு இருக்குமா?" என்று கேட்டால், ``இருக்கும்... படிக்கத் தெரிஞ்சிருந்தா, வயசைச் சரியாச் சொல்லிடமாட்டோமா!" என்கிறார்.

வசிப்பதற்கான வீடு என்று எதுவும் இல்லை. அவர் இந்தத் தேசத்தின் குடி என்பதற்கான ஆதாரமாக அவரிடம் ரேஷன் கார்டு மட்டுமே இருக்கிறது. அதனால், கிடக்கிறார் என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும். மேலும், அரிசி பற்றாக்குறைப் பிரச்னையால் ரேஷன் அரிசி வழங்குவதும் அரசால் நிறுத்தப்பட்டுவிட்டதால் இவர்களது சிவப்பு நிற ரேஷன் அட்டைக்குக் கிடைத்த அரிசியும் தற்போது கேள்விக்குறி. சோறும், வீடும் இல்லாத அஞ்சலை அம்மாள் வருடம் தவறாமல் தேர்தல் சமயத்தில் ஓட்டு மட்டும் போடுகிறார். தேர்தலில் ஓட்டுப் போடுவது அனைவருடைய உரிமை என்கிற விழிப்புஉணர்வெல்லாம் அவருக்கு இல்லை. ஆனால், `வசிக்க இருப்பிடம் கொடுத்தால்தான் ஓட்டு' என்று ஒருமுறைப் பிடிவாதமாகச் சொன்னதற்காக, சில கட்சி சார்ந்த நபர்களால் உடலில் ஒட்டுத் துணியில்லாமல் நிற்கவைத்து அடிக்கப்பட்டிருக்கிறார். அதனால் சோறு இல்லையென்றாலும் ஓட்டுப்போட மட்டும் அவர் தவறுவதில்லை. ``சோறு இல்லாம இருந்திடலாம்; மானமில்லாம இருக்க முடியுமா?" என்கிறது பற்களற்ற வாயிலிருந்து தட்டுத்தடுமாறிப் புறப்படும் அஞ்சலையின் குரல்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அஞ்சலை 2:

நாற்பது வயது; ஒரு மகன் மற்றும் நான்கு மகள்கள் என ஐந்து பிள்ளைகளுக்குத் தாய் என்கிற அறிமுகத்துடன் நம்மிடம் பேசுவதற்கு அமர்கிறார் அஞ்சலை. ஐந்தாவது பெண் பிறந்ததும் விட்டுச் சென்றுவிட்ட கணவனைப் பற்றியெல்லாம் இந்த அஞ்சலை பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. வண்டிகள் போய்வரும் சாலையோரமாகவே அமர்ந்திருக்கிறார். ``இதோ இப்படியேதான் படுத்திருப்போம்” என்று அவர் காண்பிக்கும் இடத்தில் மண்தரை மட்டும்தான் இருக்கிறது. அங்கேயே படுத்திருந்துவிட்டு விடிந்ததும் எழுந்து எதிரில் இருக்கும் முந்திரிக் காட்டுக்குள் முந்திரி பொறுக்கச் சென்றுவிடுகிறார். அதற்குக் கிடைக்கும் கூலியில் வாங்கும் அரிசியில் அரைவேளைக் கஞ்சி குடிக்கலாம். முந்திரிப் பழம் கைகொடுக்காத காலங்களில் எலி, கீரி, அணில்தான் உணவு. சில நேரங்களில் பட்டினி.

ஒருவேளை படிக்கச் சென்றிருந்தால் தற்போது பத்தாவது படித்துக் கொண்டிருந்திருக்கலாம் என்று அனுமானிக்கக் கூடிய உயரத்தில் இருக்கிறான் அவரது மகன் முருகன். வீட்டுக்காகப் படிப்பை நிறுத்திவிட்டான். ``நான் எப்பவாவது கூலி வேலை கிடைச்சா போவேன்-க்கா, 300 ரூபா தருவாங்க. ஆனா, குடும்பத்துல ஒம்பது பேரு இருக்கோமே எப்படிப் பத்தும்” என்கிறான். முதல்நாள் வாங்கிச் சாப்பிட்ட உணவின் விலை (ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து) ஒருநொடி கண்முன் வந்து சென்றது. மகள்களில் இருவரை உறவினர் ஒருவர் வீட்டிலும், மற்ற இருவரைத் தெரிந்தவர்கள் வீட்டிலும் தங்க வைத்திருக்கிறார் அஞ்சலை. நள்ளிரவில் சாலையில் செல்லும் சில `உத்தமர்கள்' உறங்கிக் கொண்டிருக்கும் பெண்களின் அருகில்வந்து படுத்துக்கொள்வதுதான் அதற்குக் காரணம். இதைப்பற்றி போலீஸில் புகார் கொடுக்கச் சென்றால் காவல்நிலையத்தில் ஓரமாகச் சில மணிநேரம் உட்கார வைத்துவிட்டுத் திருப்பி அனுப்பிவிடுவதாகச் சொல்கிறார். மற்றபடி அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை எனத் தெரிகிறது. Every Vote counts என்பதால் தேர்தல் பிரசாரத்தின்போது மட்டும் இவர்களை, மெயின்ரோட்டுக்கு அழைத்து நூறு ரூபாய் தருவார்கள் என்று சொல்கிறார். 

குடிக்கத் தண்ணீரும், உண்ண உணவும், வசிக்கக் குடிசையும் மறுக்கப்பட்டவர்களிடம் ஓட்டுக்காக நூறு ரூபாய் வாங்குவது குற்றம் என்று சட்டம் பேசுவது மனசாட்சியற்ற செயலாகப்பட்டது. ஊருக்கு வெளியே காட்டுப் பகுதியில் ஒதுக்கப்பட்ட அஞ்சலைகளுக்கு மருத்துவமனைகளும் மறுக்கப்பட்ட விஷயமாக இருப்பதால் அவரிடம் பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் என எதுவும் தற்போது இல்லை. மேற்கொண்டு படிக்க பிள்ளைகளின் சாதிச் சான்றிதழ் அவசியம் என்று கேட்கும் பள்ளிக்கூடத்துக்கு என்ன பதில் சொல்வதென்று அவருக்குத் தெரியவில்லை. அஞ்சலையின் பெண்களுக்காவது மருத்துவமனைகள் மறுக்கப்படாமல் இருக்கட்டும். 

எரிந்த வீட்டில் இரண்டு பேர்:

நீலாவும், பச்சையப்பனும் தங்களின் கடமைகளை முடித்துவிட்ட அன்றாடங்காய்ச்சிகள். தங்களுடைய பெண்களை அசலூரில் மணமுடித்துக் கொடுத்துவிட்ட இவர்களுக்குப் பாதுகாப்பாக உறங்குவதற்கு நான்கு சுவர் சூழ்ந்த ஒரு குடிசையும், வயிற்றை நிரப்பிக்கொள்ள கூலி வேலையில் கிடைக்கும் நூறு அல்லது இருநூறு ரூபாயும் போதுமானதாக இருக்கிறது. அஞ்சலை படுத்து உறங்கும் மண் தரைக்கு அருகிலேயே இருக்கும் நீலாவின் வீட்டில் தற்போது எஞ்சியிருப்பதெல்லாம் குடிசையைத் தாங்கிப் பிடிப்பதற்காக நட்டுவைத்த கழிகள் மட்டும்தாம். நம்மைப் பார்த்ததும் எரிந்துபோன வீட்டைச் சுற்றிக்கொண்டு வருகிறார் நீலா. 

அவர் கையில் எல்லோருக்குமாகச் சேர்த்துச் சமைத்த குழம்பும் கொஞ்சம் சோறும் இருக்கிறது. ``நானும், இவரும் (அருகில் இருக்கும் பச்சையப்பனைக் காண்பித்து...) முந்திரிக் காட்டுக்குப் போயிட்டு சாயங்காலம் அஞ்சு மணிக்கு வெளிய வந்து பார்த்தோம். வீடு மொத்தமும் எரிஞ்சிக்கிட்டு இருந்தது. யாரோ ரோட்டுல போறவங்கதான் வீட்ட கொளுத்திட்டுப் போயிருக்கணும்” என்கிறார். எரிந்துபோன வீட்டின் ஓரமாய் ஒரு கும்மட்டி அடுப்பு மட்டும் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. மற்றபடி... வீடு இழந்தவர்களைப் பார்க்க அரசுத் தரப்பிலிருந்து யாரும் எட்டிப் பார்க்கவில்லை. பார்க்கும் நமக்கு மனம் கனத்தாலும், ரேஷன் கார்டும், ஆதார் அட்டையும் தவிர எதுவுமே கிடைக்கப் பெறாதவர்களுக்கு வீடு கருகிய நிலையில் கிடப்பது அவ்வளவு பெரிய வலியொன்றும் ஏற்படுத்தவில்லை என்பது அப்பாவித்தனமாய்ச் சிரித்து நம்மை வழியனுப்பி வைத்த நீலாவின் முகத்தில் தெரிந்தது. 

(பி.கு) நீலாவும், அஞ்சலைகளும் முப்பது வருடங்களுக்கும் மேலாகப் புதுச்சேரியில் இருக்கும் பழங்குடிகள். 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பட்டியல் சட்ட திருத்தத்தின்படி, இருளர்கள், குரும்பர்கள் என இவர்கள் வகைபிரிக்கப்பட்டாலும் தங்களை `காட்டுல இருக்கறவங்க' என்றே பொதுவாகக் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். சாதிகள் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாத டிஜிட்டல் திருநாட்டில் இவர்கள் இன்னமும் எஞ்சியிருக்கிறார்கள்.

(பி.பி.கு)  சமூக விடுதலை கிடைக்காமல் சட்டம் கொடுக்கும் சுதந்திரத்தை மட்டும் வைத்துக்கொண்டு, மக்களால் என்ன செய்துவிட முடியும்? - டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்.