Published:Updated:

'தீய சக்தி' தினகரன், ஜெ மரண மர்மம், நிஜ வாரிசு! - 'அலேக்' கிருஷ்ணபிரியா #VikatanExclusive

'தீய சக்தி' தினகரன், ஜெ மரண மர்மம், நிஜ வாரிசு! - 'அலேக்' கிருஷ்ணபிரியா #VikatanExclusive
'தீய சக்தி' தினகரன், ஜெ மரண மர்மம், நிஜ வாரிசு! - 'அலேக்' கிருஷ்ணபிரியா #VikatanExclusive

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் அவரோடு 30 வருடங்களாக சசிகலா இருந்தார் என்பது அ.தி.மு.க-வினர் அனைவருக்கும் தெரிந்த விஷயம். சசிகலாவைப் போலவே அதே போயஸ் கார்டனில் தங்கி இருந்து ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் இளவரசி. இந்த இருவரும் இப்போது பெங்களூரு சிறையில் இருக்கும் நிலையில், இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, ஒரு தொண்டு நிறுவனம் மூலம்  சமூகசேவைகளில் ஈடுபட்டு வருகிறார். 

அரியலூர் அனிதா மரணம் அடைந்த போது, 'நீட் தேர்வு வேண்டாம்' என்று சென்னையில் போராட்டம் நடத்தி அ.தி.மு.கவினர் கவனத்தை மட்டுமல்ல தமிழக அரசியல்வாதிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் கிருஷ்ணபிரியா. அவர்தான், கருணாநிதி மறைவின் போது, மெரினாவில் இடம் ஒதுக்காமல் அண்ணா பல்கலைக்கழகம் எதிரில் எடப்பாடி பழனிசாமி அரசு இடம் ஒதுக்கிய போது, வெளிப்படையாகக் கண்டித்தார். 'அம்மா உயிருடன் இருந்திருந்தால், நிச்சயமாக திரு. கலைஞர் அவர்களுக்கு அறிஞர் அண்ணாவிற்கு அருகில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும் என்பது திண்ணம். அம்மாவை அரசியல்வாதியாக மட்டுமே தள்ளி நின்று பார்த்தோர்க்கு இது தெரியவும் வாய்ப்பில்லை' என்று அவரது முகநூலில் பதிவு செய்திருந்தார். அந்த விமர்சனம், அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அவருடன் ஒரு நேர்காணல்.. 

''ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் கருணாநிதிக்கு 'அண்ணா சமாதி' அருகே இடம் கொடுத்திருப்பார் என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?''

''மறைந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களை ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்ற பார்வையில் மட்டும் தள்ளி நின்று பார்த்தவர்களுக்கு, அவரது குழந்தை உள்ளமும், வெள்ளை மனமும், இரக்கச் சுபாவமும், மனிதாபிமானம் மிக்க தன்மையும் பற்றி அறிய வாய்ப்பில்லை. எனக்குச் சிறு வயது முதல், தனிப்பட்ட முறையில் அவரது குணம் தெரிந்ததாலேயே, கலைஞர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுத்திருப்பார் என்று கூறினேன்''.

''உங்கள் குடும்பத்தில் யாருக்கும் டி.டி.வி.தினகரன் கட்சிப் பொறுப்புகளைத் தரவில்லையே.. அதில் உங்களுக்கு வருத்தமில்லையா?''

''யார் அவர்? ஓஹோ அவரா? தற்போது ஞாபகம் வந்துவிட்டது. கடந்த சுமார் 10 வருடங்களுக்கு மேல் அவர் எங்கு இருந்தார் எனத் தெரியாததால் சிறிது ஞாபக மறதி, அவ்வளவே. 'Negative energy' என்று சொல்லக்கூடிய தீய சக்திகளை பற்றிப் பேசுவதில் எனக்கு விருப்பமில்லை. அதனால் அந்த நபரைப் பற்றிப் பேச எதுவும் இல்லை''.

''எடப்பாடி அரசின் இரண்டு ஆண்டு ஆட்சி எப்படி இருக்கிறது?''

''ஆட்சி நடக்கிறதா என்ன?''

''எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரில், ஜெயலலிதா விசுவாசி யார்? என நீங்கள் நினைக்கிறீர்கள்?

''புரட்சித்தலைவி அம்மா அவர்களைப் பற்றி மட்டும் கேட்கிறீர்கள் என்றால், இருவருமே விசுவாசிகள்தான்''.

''ஜெயலலிதா, கருணாநிதி காலத்தில் வெளியே வராத ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் பயணத்தை எப்படி பார்க்கிறீர்கள்?''

''உங்கள் கேள்வியிலேயே பதில் உள்ளது. இருவருமே அவர்களது துறையில் இமயங்கள்தான் என்பதை மறுக்க முடியாது; மறைக்கவும் முடியாது. ஆனால், அரசியல் களத்தில் அசாத்தியத் துணிச்சலும், மனோ பலமும் மிக்கவர்களால் மட்டுமே நீடித்திருக்க முடியும். அவை இவர்களுக்கு அதிகம் இல்லை என்பதே எனது பார்வை''.

''டி.டி.வி.தினகரனுக்கு எதிராக நீங்கள் அரசியல் களத்திற்கு வருவீர்களா?''

''எவருமே 'ஒரு தனி நபருக்கு' எதிராகச் செயல்படவே அரசியல் களம் வருவது என்பது என்னைப் பொறுத்தவரை சிறுபிள்ளைத்தனமான செயல். மக்கள் சேவைக்காகவும், சமுதாயம் நல்லதொரு மாற்றம் காணவேண்டும் என்ற சிந்தனையும், இலக்கையும் கொண்டோர்கள் மட்டுமே அரசியல் களம் காண வேண்டும்''.

''ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு யார்? சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன், ஜெ.தீபா, திவாகரன், கிருஷ்ணபிரியா, விவேக் ஆகியோரில் யாரை ஜெயலலிதா வாரிசு என்று சொல்வீர்கள்? அல்லது வேறு யாரும் உண்டா?"

''மறைந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அவரது 'வாரிசு' என்று எவரையுமே அவர் வாயால் அறிவித்துச்  செல்லவில்லையே. ஆக எவரும் இல்லை''.

''ஆறுமுக சாமி ஆணையத்தின் செயல்பாடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அது சரியான பாதையில் செல்கிறதா?''

''ஏன் இத்தனை நாட்களாக இழுக்க வேண்டும் என்பதே ஒரு கேள்விக்குறியாக உள்ளது. இதுவே புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மரணத்தில் மர்மங்கள் எதுவும் இருக்க முடியாது என்பதைக் காட்டுகிறது''.

''நீங்கள் போட்டுள்ள மூக்குக் கண்ணாடி முதல், உங்கள் செயல்பாடுகள் வரை சமூகவலைதளங்களில்  விமர்சனம் செய்கிறார்களே; அதை எவ்வாறு எடுத்துக் கொள்கிறீர்கள்?''

''விமர்சனங்களைக் கண்டு துவளும் மனநிலை இருந்தால் எந்த ஒரு பெண்ணுமே, எக்காலத்திலும் பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியாது. ஆரோக்கியமான விமர்சனங்களை வரவேற்கும் மனமுதிர்ச்சி அனைவருக்கும் வேண்டும். அதேபோல், கொச்சையான, தரக்குறைவான வார்த்தைகளைப் பிரயோகிப்போரின் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கவும், அவர்களுக்குப் பாடம் கற்றுக்கொடுக்கவும் தயங்கக்கூடாது''. 

சசிகலா குடும்பத்தில் அடுத்த அதிரடி காத்திருக்கிறது!