Published:Updated:

"என் புள்ளை எங்கிட்ட வந்திடுவான்னு இப்போதான் முழு நம்பிக்கை வந்திருக்கு!" - அற்புதம்மாள்

"என் புள்ளை எங்கிட்ட வந்திடுவான்னு இப்போதான் முழு நம்பிக்கை வந்திருக்கு!" - அற்புதம்மாள்
"என் புள்ளை எங்கிட்ட வந்திடுவான்னு இப்போதான் முழு நம்பிக்கை வந்திருக்கு!" - அற்புதம்மாள்

"என் மகனின் கரங்கள் மற்றும் கன்னங்களை பிடிச்சுக் கொஞ்சணும்; ஆனந்தக் கண்ணீர் வடிக்கணும். அவன் நிரந்தரமா விடுதலையாகி, என்கிட்ட வந்துசேரும் நாளுக்காகக் காத்திருக்கேன்."

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், நளினி, முருகன், பேரறிவாளன் உட்பட 7 பேர் சிறையில் உள்ளனர். தங்களை விடுதலை செய்யக்கோரி மத்திய மற்றும் மாநில அரசிடமும் நீதிமன்றத்திடமும் பல கட்டங்களாகப் போராடி வருகின்றனர். 27 ஆண்டுகளாக நடைபெறும் இந்த வழக்கில், பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து மாநில அரசே முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தன் மகன் பேரறிவாளனின் விடுதலைக்காக 27 ஆண்டுகளாகப் போராடிவரும் அற்புதம்மாள், இதுக் குறித்து நம்மிடம் பேசினார்.

"ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எந்தத் தப்புமே செய்யாத என் புள்ளை சிறையில் இருக்கான். தன் வாலிப பருவத்தை அனுபவிக்கலை; இளமையை இழந்துட்டான். உடல்நிலை சரியில்லாம சிறையில் ரொம்ப கஷ்டப்படறான். எனக்கும் வயசாகிட்டே போகுது. இதுநாள் வரை என் புள்ளைக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டுட்டேன். நிறைய நல் உள்ளங்களின் ஆதரவுதான் எங்களை வழிநடத்திட்டு இருந்துச்சு. இந்த 27 வருடங்களில் நீதிமன்றம், கருத்தரங்குகள், போராட்டம்னு என் கால்கள் ஓடிட்டே இருந்துச்சு. உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு, எங்களுக்கு ஆறுதலையும் நிம்மதியையும் கொடுத்திருக்கு. என் புள்ளை என்கிட்ட வந்திடுவான்னு முழு நம்பிக்கை வந்திருக்கு" என்று நெகிழ்கிறார் அற்புதம்மாள். 

``நேற்றைய இரவு உங்களுக்கு எப்படிக் கழிந்தது?"

``போதும் சாமி. நானும் புள்ளையும் பட்டபாடுகள். எங்களின் இத்தனை ஆண்டுக்கால போராட்ட வாழ்க்கையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதைப் பிறரால் எப்படி உணரமுடியும்னு தெரியலை. பல தடைகளைக் கடந்து, என் புள்ளையின் விடுதலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்துச்சு. இன்னிக்குத் தீர்ப்பு வருவது முன்கூட்டியே தெரியும். தீர்ப்பு எப்படி வருமோனு எனக்குள் பதற்றம். நேற்று இரவிலிருந்து மனசுல பல எண்ணங்கள் ஓடிகிட்டே இருந்துச்சு. தூக்கமே வரலை. எப்போ விடியும்னு வீட்டுக்கும் வாசலுக்கும் நடந்துட்டே இருந்தேன். எங்க வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள்தாம் அதிகம். அது பெரும்பாலும் பொய்த்துப்போனதுதான் அதிகம். இந்த முறை அப்படி நடந்துடக் கூடாதுனு நினைச்சேன். காலையில் 9 மணிக்கெல்லாம் டிவியைப் பார்க்க உட்கார்ந்துட்டேன். 10 மணியைக் கடந்ததும், அதீத பதற்றமும் பயமும் வந்துருச்சு. செய்தி சேனல்களை மாற்றி மாற்றிப் பாத்துட்டிருந்தேன். எங்களின் உணர்வுகள், கவலைகள், வேதனைகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குப் புரிஞ்சிருக்கு. என் புள்ளை உட்பட 7 பேரையும் விடுதலை செய்யலாம்னு சிறப்பான தீர்ப்பை வழங்கியிருக்காங்க. கடைசியில நீதி வென்றிருக்கு.

2013-ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அம்மா, என் புள்ளை உட்பட 7 பேரையும் விடுதலை செய்யும் அறிவிப்பை வெளியிட்டாங்க. அதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டாங்க. அதன்பிறகு தமிழக அரசை அணுகும்போதெல்லாம், `வழக்கு நீதிமன்ற நிலுவையில் இருக்கு'னு சொல்லிட்டே இருந்தாங்க. இனி தாமதிக்கவோ, தயங்கவோ முடியாது. ஜெயலலிதா அம்மா வழியில் செயல்படும் அரசு, அவர் எடுத்த முடிவுபடியும் உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படியும் உடனே ஏழு பேரையும் விடுவிக்கும் முயற்சியைச் செய்யணும். ஆளுநரை அணுகி, என் புள்ளையை விடுவிக்கச் செய்யணும். அது நடக்கும்னு நம்பிக்கை இருக்கு. நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். நீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம்.

தீர்ப்பு வெளிவந்ததிலிருந்து பலரும் தொடர்புகொண்டு வாழ்த்துச் சொல்றாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இனியும் என் பிள்ளையின் விடுதலையில் எந்த முட்டுக்கட்டையும் வரக் கூடாது. அறிவு (பேரறிவாளன்) என் வீட்டுக்கு நிரந்தரமா வரணும். இனியாவது என் புள்ளைக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கணும். ரொம்பப் போராடிட்டோம்பா. தமிழக மக்கள் எல்லோரும் எங்களுக்கு உறுதுணையா இருக்கணும். என் குழந்தையின் கரங்கள் மற்றும் கன்னங்களைப் பிடிச்சுக் கொஞ்சணும்; ஆனந்தக் கண்ணீர் வடிக்கணும். அவன் நிரந்தரமா விடுதலையாகி, என்கிட்ட வந்துசேரும் நாளுக்காகக் காத்திருக்கேன்" என்றவர் குரல், கண்ணீரால் நெகிழ்கிறது.

அடுத்த கட்டுரைக்கு