Published:Updated:

“இலங்கையில் இனப்போர் தொடர்கிறது!” - சண்மாஸ்டர் பேட்டி

விகடன் விமர்சனக்குழு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“இலங்கையில் இனப்போர் தொடர்கிறது!” - சண்மாஸ்டர் பேட்டி
“இலங்கையில் இனப்போர் தொடர்கிறது!” - சண்மாஸ்டர் பேட்டி

- சக்திவேல்,

பிரீமியம் ஸ்டோரி

ஈழ மண்ணில் சிவில் இயக்கங்களைக் கட்டமைப்பதிலும் மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைப்பதிலும் ஈடுபட்டுவருபவர், மனித உரிமைச் செயற்பாட்டாளரான சண்மாஸ்டர் என்கிற விஜேந்திரகுமார். இலங்கையில் இருந்தபடியே போர்க்குற்ற ஆதாரங்களைச் சேகரித்து, ஐ.நா மன்றத்துக்கு அனுப்பி அதிர்வலைகளை ஏற்படுத்தியவர். ராஜபக்சேவின் ஆட்சிக் காலத்தில் இலங்கையிலிருந்து தப்பித்து, சிறிது காலம் தலைமறைவாக இருந்து, 2014-ன் இறுதியில் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தார். அவரைச் சந்தித்து உரையாடினோம்.

“இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள திடீர் அரசியல் நெருக்கடியை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“தற்போது அங்கு சிங்களத் தலைவர்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. இதில், இன அழிப்புப் போரை நடத்திய ராஜபக்சேவும் அப்போதைய ராணுவ அமைச்சர் மைத்ரியும் ஒரு பக்கம் நிற்கின்றனர். ‘அந்தப் போரின் வெற்றிக்கு வழி அமைத்துக் கொடுத்தவன் நானே’ என்று சொல்லும் ரணில் மற்றொரு பக்கம் நிற்கிறார். ராஜபக்சேவுக்கும் ரணிலுக்கும் பெரிதாக வித்தியாசம் எதுவும் இல்லை.”

“இலங்கையில் இனப்போர் தொடர்கிறது!” - சண்மாஸ்டர் பேட்டி

“மைத்ரிபால சிறிசேனாவின் நான்கு ஆண்டு ஆட்சி, தமிழர்களுக்கு ஏதேனும் பலன் அளித்ததா?”

“ ‘நல்லாட்சி’, ‘நல்லிணக்கம்’ என்ற நான்காண்டு நாடகம் இப்போது அம்பலப்பட்டுள்ளது. தமிழர்களின் பொருட்டு சர்வதேச மனித உரிமைச் சட்டங்களையும் அரசமைப்புச் சட்டத்தையும் மீறி வந்தவர்கள், இப்போது அவர்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியில் அரசமைப்பைக் காலில் போட்டு மிதிக்கின்றனர். சிங்கள அரசியலின் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நிலையே இதுவென்றால், சிங்கள ராணுவத்தின் பிடியில் இருக்கும் எம் மக்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்.’’

“இலங்கையில் யார் ஆட்சி அமைப்பது என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக, சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாறியிருப்பது நம்பிக்கை அளிக்கும் சூழல்தானே?”

“இப்போது மட்டுமல்ல. 2015-லும்கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன்தான் ரணில் - மைத்ரி கூட்டாட்சித் தொடங்கியது. நான்கு ஆண்டுகால ஆட்சியையும் முடித்துவிட்டார்கள். இதனால், எங்கள் மக்களுக்கு என்ன கிடைத்தது? ஆட்சிகள் மாறின, ஆட்கள் மாறினார்கள். கோரிக்கைகள் அப்படியே உள்ளன. தமிழர்களின் பிரதிநிதிகளாகிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செய்ய வேண்டியதை செய்யத் தவறியதால்தான், போர் முடிந்து ஒன்பது ஆண்டுகளாகியும் எம் மக்களின் நிலை மாறவில்லை. இப்போதேனும், சிங்களப் பேரினவாத சக்திகளுக்கு இடையே எழுந்துள்ள முரண்பட்ட அரசியல் சூழலைப் பயன்படுத்தி, இன அழிப்புக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் எம் மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டும்.”

“வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் ஆரம்பித்துள்ள ‘தமிழ் மக்கள் கூட்டணி’ அதைச் சாதிக்குமா?”

“விக்னேஷ்வரனைக் காலத்தின் குரலாகவேப் பார்க்கிறோம். இன அழிப்பைத் தண்டிக்க பன்னாட்டு நீதி விசாரணையும், அரசியல் தீர்வு காண பொது வாக்கெடுப்பும் கோரி வடக்கு மாகாண சபையில் அவர் தீர்மானம் இயற்றினார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள், ‘உள்நாட்டு விசாரணை’ என்று குழப்பிக்கொண்டிருந்தபோது, அவரால்தான் எம் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலான தீர்மானம் இலங்கை மண்ணிலேயே நிறைவேறியது. அதேநேரம், எம் மக்களின் துயரங்களின் பக்கம் நின்று நீதிக்காகச் செயல்படும் கட்சிகளால் மட்டுமே மக்களுக்குப் பலனுண்டு. அப்படிச் செயல்படாத கட்சி எதுவாயினும், அதை மக்கள் ஒதுக்கித் தள்ளுவார்கள்.”

“இலங்கையில் இனப்போர் தொடர்கிறது!” - சண்மாஸ்டர் பேட்டி

“இலங்கையில் போர்க் காலம் தொடங்கி இப்போதுவரை, பல்லாயிரக்கணக்கில் மக்கள் காணாமல் போயிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. அவர்களின் நிலை என்ன?”

“அவர்கள் காணாமல் போனோர் அல்ல, இலங்கை அரசப் படைகளால் காணாமல் ஆக்கப்பட்டோர். சுமார் 40,000-க்கும் மேற்பட்டோர் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என்பதே தெரியவில்லை. ராணுவத்திடம் சரணடைந்த தமிழ் இளைஞர்களும் குழந்தைகளும்கூட காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். சர்வதேசப் போர் விதிமுறைகள் மீதும், சர்வதேச சமூகத்தின் மீதும் நம்பிக்கை வைத்தே அவர்கள் சரணடைந்தனர். ஆனால், இன்றைக்கு அவர்கள் எங்கே? சர்வதேச சமூகத்தையும் பாதிக்கப்பட்ட மக்களையும் ஏமாற்றவே இலங்கை அரசாங்கம் ‘காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம்’ திறந்துவைத்துள்ளது. ஆனால், 600 நாள்களைக் கடந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலையறிய பன்னாட்டு பங்கேற்புடன் கூடிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.”

“முள்ளிவாய்க்கால் துயரம் நிகழ்ந்து ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்னும் நீதிபெற முடியவில்லையே?”

“கொலை செய்தவன் தன்னைதானே விசாரித்துக்கொண்டால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் உள்நாட்டு விசாரணை என்று இலங்கை அரசு சொல்லிக்  கொண்டிருப்பதும். தவறிழைத்த ஒரு ராணுவ வீரன்கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை. லட்சக்கணக்கில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விடவோ, ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தவோ சிங்கள தலைவர் ஒருவரும் முன்வரவில்லை.”

“அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை மன்றம் கூடுகிறது. இந்த அமர்விலாவது பன்னாட்டு விசாரணைக்கான சாத்தியங்கள் ஏற்படுமா?”

“இலங்கைக்குக் கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்துவிட்ட நிலையில், நடக்கவிருக்கும் இந்தக் கூட்டத்தொடர் மிக முக்கியமானது. இலங்கை, தாமே முன்மொழிந்து நிறைவேற்றிக்கொண்ட தீர்மானத்தைக்கூட நடைமுறைப்படுத்தவில்லை. தமிழர்கள், பன்னாட்டு விசாரணை வேண்டி உலகத்தின் மனசாட்சியைத் தட்டித் திறக்க வேண்டும். இந்தியா எங்களுக்கு ஆதரவாக ஐ.நா மனித உரிமை மன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். அப்போதுதான், பன்னாட்டு விசாரணை சாத்தியமாகும்.”

“இலங்கையில் இனப்போர் தொடர்கிறது!” - சண்மாஸ்டர் பேட்டி

“இலங்கை அரசியல் சூழல் மோசமாக இருக்கும் நிலையில், அங்கிருக்கும் ஈழ மக்களின் இப்போதைய நிலை என்ன?”

“போருக்குப் பின்பான இந்த ஒன்பது ஆண்டுகளில் எம் மக்கள்மீது திட்டமிட்ட கட்டமைப்பு ரீதியான இன அழிப்பு தொடர்கிறது. தமிழர் தாயகமான வட கிழக்கை, பிரதேச ரீதியாக மாற்றிவருகிறது இலங்கை அரசு. இன்னொருபுறம் தமிழர் தொல்லியல் வரலாற்றுச் சான்றுகளை அழித்தல், தமிழ் மக்களின் வரலாறு, பண்பாடு, வாழ்வியலோடு பிணைந்த தமிழ்ப் பெயர்களை மாற்றுதல், தமிழர் பிரதேசங்களில் புத்த விகாரைகளை நிறுவுதல் எனப் பண்பாட்டு ரீதியான இன அழிப்பு நடக்கிறது. இன்றுவரை சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். தமிழர் தாயகங்களில் போதைப் பொருட்கள் சிங்கள ராணுவத்தால் இறக்குமதி செய்யப்படுகிறது. அங்கு தமிழ்ப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்கூட பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன.

“ ‘தமிழர்ப் பகுதிகளில் ராணுவத்தை விலக்கி வருகிறோம்’ என்று இலங்கை அரசு கூறுகிறதே?” 

“அது உண்மையல்ல. எங்கள் தாயகமெங்கும் சிங்கள ராணுவம் நிலைகொண்டுள்ளது. போர்தான் முடிந்துவிட்டதே, சுமார் 30 மில்லியன் டாலரை ராணுவத்துக்கு ஒதுக்கவேண்டிய தேவை என்ன? தமிழர்ப் பகுதிகளை ராணுவ மயமாக்குவது முழுநேரப் பணியாகத் தொடர் கிறது. ராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இன்றும் சத்தமில்லாமல் இனப்போர் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.”

“ஈழ மண்ணில் தமிழர்களின் ஜனநாயகரீதியான போராட்டங்களும் ஒடுக்கப்படுகின்றனவா?”

“ஆமாம். ஆனாலும், பறிக்கப்பட்ட நிலங்களைத் திருப்பித் தரக்கோரியும் காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத் தரக்கோரியும் எமது மக்கள் உறுதியுடன் போராடி வருகின்றனர்.”

“இந்திய அரசு என்ன செய்ய வேண்டும்?”

“முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டது தமிழர்களின் போராட்டம் மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்பும்தான். தமிழர்கள் வலிமையாக இருந்தவரை இந்தியாவுக்கு எதிரான எந்த சக்திகளும் இப்பகுதியில் காலூன்றவில்லை. ஆனால், விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பிறகு அது கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. இந்திய அரசு இதை எல்லாம் இந்த நேரத்திலாவது நினைத்துப் பார்ப்பது நல்லது. தமிழர்களை ஜனநாயகரீதியில் வலுப்படுத்தவாவது இந்திய அரசு முனைய வேண்டும்”.

படம்: வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு