Published:Updated:

காந்தியிடமிருந்து உங்கள் குழந்தைகளுக்குச் சொல்ல 5 உயர்ந்த விஷயங்கள்! #Gandhi150

Gandhi
Gandhi

உலகின் பல தலைவர்களால் வியந்து போற்றப்பட்டவர் காந்தி. அவரிடமிருந்து கற்றுக்கொள்ள எத்தனையோ விஷயங்கள் உள்ளன. ஆயினும், அவர் வாழ்வில் நடந்தவற்றில், உங்கள் குழந்தைகளுக்குச் சொல்ல உயர்ந்த ஐந்து விஷயங்கள்.

1. ஒருவருக்கு உதவ வேண்டும் என்றால்...

தென்னாப்பிரிக்காவில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்தபோது, கறுப்பினத்தவர் என்ற காரணத்துக்காக இறக்கிவிடப்பட்டார் காந்தி. அந்தச் சம்பவத்துக்காகவும், தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அவமானத்துக்காகவும் மட்டுமே, இனவெறிக்கு எதிராகப் போராடவில்லை. அங்கே அவரது வழக்கறிஞர் பணிக்கான ஒப்பந்தக் காலம் முடிவடைந்து இந்தியா திரும்பவும் தயாராகிவிட்டார் காந்தி. அந்த சமயத்தில்தான் இந்தியர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானம் ஒன்று அங்குள்ள சட்டப்பேரவையில் வரப்போவதாக அறிந்தார். தாயகம் திரும்பும் தனது திட்டத்தை மாற்றிக்கொண்டு, மற்ற இந்தியர்களுக்காகப் போராட ஆரம்பிக்கிறார்.

Gandhi
Gandhi

``ஒரு பிரச்னை என வரும்போது, உன் வேலை முடிந்துவிட்டது பாதிப்பு இல்லை என்று அதிலிருந்து விலகிவிடக் கூடாது. உன் நண்பர்களுக்கும் அதனால் பாதிப்பு ஏற்படுமா எனப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு உதவ வேண்டும்'' என்று சொல்லுங்கள்.

2. நண்பர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றால்...

காந்தி என்றாலே அன்பானவர் என்று தெரியும். ஆனால், அவரும் பலமுறை கோபப்பட்டுள்ளார். குறிப்பாக, மனைவி கஸ்தூரிபா காந்தியிடம் கோபப்பட்டுள்ளார். அவர் உருவாக்கிய சபர்மதி ஆசிரமத்தில் எல்லோரும் எல்லாப் பணிகளையும் குறிப்பிட்ட நாளில் செய்ய வேண்டும் என்பது விதிமுறை. அந்த வகையில், கழிவறையைச் சுத்தம் செய்யும்முறை கஸ்தூரிபா காந்திக்கு வருகிறது. அதை அவர் மறுத்துவிடுகிறார். இதையறிந்து மனைவியிடம் சண்டையிட்டு, முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறார் காந்தி. தவறு கஸ்தூரிபா பக்கம் இருந்தாலும், ``நீ என் மனைவி. நான் சொல்வதைக் கேட்க வேண்டும் என நினைத்தது தவறு'' என்று மன்னிப்பு கேட்கிறார்.

Albert Einstein
Albert Einstein

குழந்தைகள் குழுவாகச் சேர்ந்து ஏதாவது ஒரு விஷயம் செய்வார்கள். அதில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ``நான் லீடர், நான் போட்ட ரூல்ஸை எல்லோரும் ஃபாலோ பண்ணணும்னு கோபப்படக் கூடாது. அந்த ரூல்ஸ் எதுக்கு? ஏன் செய்யணும்னு புரியவைக்கணும். முக்கியமா, பெண் நண்பர்களை எந்த வகையிலும், குறைந்தவர்களாக நினைத்து பேசக்கூடாது'' என உணர்த்துங்கள்.

3. துஷ்டர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றால்...

தென்னாப்பிரிக்காவில் சாலையில், ஒரு வெள்ளைக்கார நண்பருடன் நடந்துசெல்கிறார் காந்தி. அப்போது, அங்கே இருக்கும் சில வெள்ளைக்கார இளைஞர்கள், இவர்களைப் பார்க்கிறார்கள். அப்போது, கறுப்பினத்தவர்களைக் கண்டாலே வம்புக்கு இழுத்து சண்டைபோட ஒரு கூட்டம் இருக்கும். அதிலும் இவர்கள் இளைஞர்கள். நிச்சயம் வம்புக்கு இழுத்து அடித்துவிடுவார்கள் எனப் புரிந்துகொண்ட வெள்ளைக்கார நண்பர், ``நாம் மாற்றுப் பாதையில் சென்றுவிடலாம்'' என்கிறார். ஆனால் காந்தியோ, ``எதுவும் நடக்காது வாருங்கள்'' என்று தொடர்ந்து நடக்கிறார்.

Gandhi
Gandhi

எதிர்பார்த்தது போலவே அவர்கள் வம்புக்கு வருகிறார்கள். காந்தியோ அவர்களிடம் தைரியமாகப் பேசுகிறார். அவரின் உறுதியைப் பார்த்து, அவர்கள் பின்வாங்குகிறார்கள். துஷ்டர்களைக் கண்டால் தூர விலகு என்பார்கள். ஆனால், ``எல்லாவற்றுக்கும் பயந்துகொண்டிருக்கக் கூடாது. நம்முடைய தேவையற்ற பயம்தான் எதிரியின் பலமாக மாறும். தேவைப்படும் இடத்தில் துணிந்து முன்னேறி நிற்க வேண்டும்'' என்று தைரியம் கொடுங்கள்.

4. ஒரு பொருளை எப்படிக் கேட்டுப் பெறுவது...

காந்தி என்றதும் அகிம்சை, சத்தியாகிரகம் ஆகிய வார்த்தைகளே முதலில் நினைவுக்கு வரும். இம்சை என்றால் துன்புறுத்தல். `அகிம்சை' என்றால் யாரையும் காயப்படுத்தாமல் இருத்தல். நமக்கான உரிமை, நமக்குச் சொந்தமான விஷயம் என்றபோதும், அதைப் பெறுவதற்கு பிறரைத் துன்புறுத்தவோ, காயப்படுத்தவோ கூடாது. உரிய முறையில் போராடியே பெறவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் காந்தி.

Gandhi
Gandhi

பொதுவாகவே, குழந்தைகளிடையே தன் பொம்மை, தன் பொருள் என்ற எண்ணம் இருக்கும். அதை யாராவது எடுத்துக்கொண்டால் சண்டைக்குப் போவார்கள். ``வீட்டில் மட்டுமல்ல, பள்ளி மற்றும் வெளியில் அப்படி நடந்தாலும், தவறு மற்றவர்களிடமே இருந்தாலும், சண்டையிடாமல் அங்குள்ள பெரியவர்களிடம் சொல்லி உன் பொருளைப் பெறவேண்டும்.'' என்று சொல்லுங்கள்.

5. நமது தோற்றம் எப்படி இருக்கவேண்டும் என்றால்...

காந்தி என்றதும் அவரின் எளிமையே எல்லோரின் கண்களுக்குள் வரும். எளிமையான ஆடை, எளிய உணவு என்று வாழ்ந்தவர் அவர். நாட்டையே வழிநடத்தும் தலைவராக இருந்தபோதும், நூல் நூற்பது, ஆசிரமத்தைச் சுத்தம் செய்வது, அங்குள்ள கால்நடைக்குத் தீவனம் கொடுப்பது என எல்லாவற்றையும் செய்தார். ``நமக்கு வசதி இருக்கிறது என்பதற்காக, இஷ்டப்படி செலவழிப்பதோ, நம் வேலையை இன்னொருவரிடம் கொடுப்பதோ கூடாது. நமக்கான தேவைகளை நாமே பார்த்துக்கொள்ள வேண்டும். தவிர, நம்மைச் சுற்றி எளிமையானவர்கள் பலரும் இருப்பார்கள். அவர்கள் நம்மிடம் இயல்பாக நெருங்கிப் பழகும் வகையில் நம் தோற்றமும் செயலும் இருக்கவேண்டும்.'' என்று எடுத்துச் சொல்லுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு