Published:Updated:

சொத்து ஆவணங்கள் - தீ வைப்பு - ஆடி கார் மர்மம்! - கொடநாடு அச்சத்தில் சிறுதாவூர் காவலர்கள் #VikatanExclusive

சொத்து ஆவணங்கள் - தீ வைப்பு - ஆடி கார் மர்மம்! - கொடநாடு அச்சத்தில் சிறுதாவூர் காவலர்கள் #VikatanExclusive
சொத்து ஆவணங்கள் - தீ வைப்பு - ஆடி கார் மர்மம்! - கொடநாடு அச்சத்தில் சிறுதாவூர் காவலர்கள் #VikatanExclusive

கொடநாடு எஸ்டேட்டைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் நடக்கும் மர்மக் காட்சிகளால் அதிர்ந்துபோய் இருக்கின்றனர் அ.தி.மு.கவினர். ‘பங்களாவுக்கு ஆடி காரில் பலர் வந்து செல்கிறார்கள். சசிகலா, இளவரசி பெயரில் இருந்த நிலங்களை ரகசியமாக வேறு பெயர்களுக்கு மாற்றி வருகின்றனர். ‘எங்களுக்கு எதாவது நடந்துவிடுமோ?’ என தினம் தினம் அச்சத்தில் வேலை பார்த்து வருகிறோம்’ என்கின்றனர் ஆயுதப்படைக் காவலர்கள். 

சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா சர்ச்சையில் அடிபட்டது. ‘வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்கான பணத்தைக் கண்டெய்னரில் எடுத்துச் செல்கின்றனர்’ எனத் தேர்தல் ஆணையத்துக்குப் புகார் மனுவை அனுப்பினர் எதிர்க்கட்சித் தலைவர்கள். அடுத்து வந்த சில நாள்களில் திருப்பூர் அருகே 570 கோடி ரூபாய் பணத்துடன் மூன்று கண்டெய்னர்கள் பிடிபட்டன. 'அதில் இருந்தது 570 கோடி மட்டும்தானா?' என்ற கேள்வியும் எழுந்தது. அதற்கான விடையும் இன்னும் தீர்க்கப்படவில்லை. இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார் சசிகலா. “பெங்களுரு சிறைக்கு அவர் சென்ற நாளில் இருந்து தினகரன் கட்டுப்பாட்டில்தான் கொடநாடு எஸ்டேட்டும் சிறுதாவூர் பங்களாவும் இருந்தன. இதனால், சசிகலா குடும்பத்தில் உள்ள மற்ற உறவினர்கள் கொந்தளித்தனர்.

‘தினகரன் எங்களை எல்லாம் ஒதுக்குகிறார். அவர் மட்டுமே அனைத்துக்கும் உரிமை கொண்டாடுகிறார்’ என ஆதங்கப்பட்டபோதும், ‘உங்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்துவிட்டேன். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என சசிகலா வேண்டுகோள் வைத்தபோதும், உறவினர்கள் கேட்கவில்லை. இந்நிலையில், இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் சிறையில் அடைக்கப்பட்ட அதேநாளில், கொடநாடு மற்றும் சிறுதாவூர் பங்களாக்களில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன. "கொடநாடு எஸ்டேட் கொள்ளை முயற்சியில் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்ட நாளில், சிறுதாவூர் பங்களாவுக்கு வெளியில், சில பொருள்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. தீ ஜூவாலையோடு புகை மூட்டம் அதிகமானதைக் கண்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் விசாரித்தபோது, ‘குப்பையைப் போட்டுக் கொளுத்தினோம்' எனக் கூறியுள்ளனர். ஆனால், ‘சம்பவ இடத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட பொருட்களைப் பார்த்தால், குப்பையைக் கொளுத்தியது போலத் தெரியவில்லை' என்கின்றனர் பங்களாவைச் சுற்றியுள்ள பொதுமக்கள். 

திருப்போரூர் பத்திரப் பதிவு அலுவலக ஊழியர் ஒருவரிடம் பேசினோம். “புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற நாளில் இருந்து, சசிகலா-இளவரசி ஆகியோர் பெயர்களில் இருந்த ஆவணங்களை வேறு பெயருக்கு மாற்றும் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. சிறுதாவூர் பங்களா 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதைத் தவிர, சுற்றுவட்டாரப் பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலத்தை வாங்கியிருக்கிறார் சசிகலா. தற்போது ஏக்கருக்கு 3 கோடி ரூபாய் வரையில் விலை போகிறது. இதை மையமாக வைத்துக்கொண்டு அவரது உறவினர்கள் ஆட்டத்தைத் தொடங்கியுள்ளனர். அண்மையில், மிகப் பெரிய சொத்து ஒன்றை பெயர் மாற்றம் செய்வதற்காக, திருப்போரூர் வட்டாட்சியர் ரவிக்குமாரிடம் கேட்டுள்ளனர். ' இப்படியொரு செயலை என்னால் செய்ய முடியாது' என அவர் மறுக்கவும், ' பேப்பரில் சில மாற்றங்கள்தான் செய்ய வேண்டும் என்கிறோம். முடியாவிட்டால், நீங்கள் லீவில் சென்றுவிடுங்கள்' என சத்தம் போட்டுள்ளனர். அவரும் மூன்று நாள்கள் விடுப்பில் சென்றுவிட்டார். இந்த நேரத்தில், வேறு ஒரு வட்டாட்சியரை வைத்து காரியத்தை சாதித்துக் கொண்டார்கள். அலுவலக ஊழியர்களில் டைப்பிஸ்ட் பெண்மணியைத் தவிர, வேறு யாரும் அலுவலகத்தில் இருக்கவில்லை. அந்தப் பெண்மணியிடம் விசாரித்தபோது, ' எனக்கு எதுவும் தெரியாது. அவர்கள் சொன்னதை டைப் செய்தேன்' என்றதோடு முடித்துக்கொண்டார். என்ன சொத்துக்களை மாற்றினார்கள் என்பதை ரகசியமாக வைத்துள்ளனர். ரவிக்குமாருக்கு முன்னதாக ஓம்பிரகாஷ் என்ற வட்டாட்சியர் பணியில் இருந்தார். அவர் காலத்தில்தான் ஏகப்பட்ட சொத்துக்களை சசிகலா வாங்கிக் குவித்தார். தற்போது நடக்கும் பத்திரப்பதிவுகளுக்கு ஆட்சியில் உள்ளவர்களும் துணை போகின்றனர்" என்றார் விரிவாக. 

இது ஒருபுறம் இருக்க, கடந்த சில நாள்களாக பங்களாவைச் சுற்றி நடக்கும் விஷயங்களால் கலவர முகத்துடன் காட்சி அளிக்கின்றனர் ஆயுதப்படைக் காவலர்கள். “தினமும் ஆடி காரில் யார் யாரோ வருகிறார்கள். அவர்களிடம் விசாரிக்கக்கூட முடிவதில்லை. பாதுகாப்புப் பணியில் 150 பேர் இருக்கிறோம். ஆங்காங்கே நான்கு சேர்களைப் போட்டு அமர்ந்திருக்கிறோம். ஒரு டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் தலைமையில் பாதுகாப்புப் பணி என்றாலும், உயர் அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்துக்கு வருவதில்லை. தினமும் காலையில் நான்கு இட்லி கொடுக்கிறார்கள். சில நேரங்களில் குடிக்கத் தண்ணீர் கூட கிடைப்பதில்லை. இரவு நேரத்தில் பயன்படுத்த டார்ச் லைட் கேட்கிறோம். அதையும் கொடுக்க மறுக்கிறார்கள். மழை பெய்தால் ஒதுங்குவதற்கும் இடம் இல்லை. யாராவது நுழைந்தால், செல்போன் மூலமாகவே கேட்டில் இருப்பவர்களுக்குத் தகவல் தருகிறோம். அவர்களும் என்ன ஏது என்று விசாரிக்காமல் உள்ளே அனுமதிக்கிறார்கள். ஆடி காரில் வருகின்றவர்கள் எல்லாம், இளவயதுடையவர்கள். பங்களாவுக்குள் நுழைந்துவிட்டால், என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்டறிய முடியவில்லை. கொடநாட்டைப் போல, எங்களுக்கும் ஏதாவது நடந்துவிடுமோ? என பயத்தில் இருக்கிறோம். 'எங்களை வேறு எங்காவது மாத்துங்க சார்'னு அதிகாரிகளிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறோம். போலீஸ் வேலைக்குப் புதிதாக சேர்ந்திருப்பதால், எங்களை யாரும் கண்டுகொள்வதில்லை. உயிருக்கு பயந்துதான் பங்களா பாதுகாப்புப் பணியில் இருக்கிறோம்" என்கின்றனர் அச்சத்துடன். 

‘ஆள் அரவமற்ற சொத்துக்களுக்கு யார் வாரிசு என்ற போட்டி நடக்கிறதா? யார் பெயரில் சொத்துக்கள் மடை மாற்றப்படுகின்றன? பங்களா வாசலில் என்ன கொளுத்தப்பட்டது? சுற்றிலும் ரியல் எஸ்டேட் வேலைகள் துரிதமாக யார் காரணம்?' என்ற கேள்விகளுக்கு எல்லாம், விடை தெரியாமல் கடந்து போகிறார்கள் காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.கவினர். 

அடுத்த கட்டுரைக்கு