Published:Updated:

‘எந்த சலசலப்புக்கும் அசைந்து கொடுக்க மாட்டேன்!’ - தினகரன் தரப்பிடம் எச்சரித்த எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive

‘எந்த சலசலப்புக்கும் அசைந்து கொடுக்க மாட்டேன்!’ - தினகரன் தரப்பிடம் எச்சரித்த எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive
‘எந்த சலசலப்புக்கும் அசைந்து கொடுக்க மாட்டேன்!’ - தினகரன் தரப்பிடம் எச்சரித்த எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive

குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிறுத்தி அ.தி.மு.கவுக்குள் நடந்து வந்த மோதல்கள் முடிவுக்கு வந்துவிட்டன. 'பா.ஜ.கவுக்கு விசுவாசம் காட்டுவதில், கட்சியின் மூன்று அணிகளுக்குள்ளும் போட்டி நிலவியது. 'இப்போது கட்சிக்குள் யாருக்கு செல்வாக்கு'? என்ற மோதல் வலுப்பெற்று வருகிறது. 'கட்சியும் நான்தான்; ஆட்சியும் நான்தான்' எனத் தொண்டர்கள் மத்தியில் வெளிக்காட்டி வருகிறார் எடப்பாடி பழனிசாமி" என்கின்றனர் அ.தி.மு.கவினர். 

பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சசிகலாவை சந்தித்தார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. அங்கு, 'குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக' தகவல் வெளியானது. இதைப் பற்றி பின்னர் பேட்டியளித்த தம்பிதுரை, 'பா.ஜ.க ஆதரிப்பது எனக் கட்சி எடுத்த முடிவு என்பது சசிகலாவையும் சேர்த்து உள்ளடக்கியதுதான்' என்றார். அதேநேரம், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து, பா.ஜ.கவை ஆதரிக்கும் முடிவை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த அணுகுமுறை தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களிடம் கொந்தளிப்பை உருவாக்கியது. இதைப் பற்றி கருத்துக் கூறிய வெற்றிவெல் எம்எல்ஏ, 'சசிகலாவிடம் இருந்து அறிக்கை வராது என்று கருதி, இவர்கள் பா.ஜ.க வேட்பாளரை ஆதரிக்கும் முடிவை எடுத்திருக்கலாம். சசிகலாவை தம்பிதுரை சந்தித்துவிட்டு வந்த பிறகுதான், பா.ஜ.க ஆதரவு நிலைப்பாடு எடுக்கப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா, துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர். இதில் எந்தப் பிரச்னையும் இல்லை' எனத் தெரிவித்தார். 

இதுகுறித்து, எடப்பாடி பழனிசாமி ஆதரவு கொங்கு அ.தி.மு.க பிரமுகர் ஒருவரிடம் பேசினோம். "சசிகலா ஆதரவு எம்எல்ஏ-க்கள் பலரும், 'சசிகலா குடும்பம் சொல்வதைத்தான் பழனிசாமி கேட்டு செயல்படுத்துகிறார்' என நம்பிக் கொண்டிருக்கின்றனர். உண்மை அதுவல்ல. தன்னை பலப்படுத்திக் கொள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்திக் கொண்டு வருகிறார் பழனிசாமி. குடியரசுத் தலைவர் தேர்தலை முன்வைத்து, தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் பேசி வருவதை, அவர் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. அவரைப் பொறுத்தவரையில், 'பா.ஜ.க வேட்பாளரை ஆதரிக்குமாறு பிரதமர் என்னிடம் கேட்டார். பன்னீர்செல்வத்திடம் அமித் ஷா ஆதரவு கேட்டார். தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினிடம் வெங்கைய நாயுடு பேசினார். அந்தவகையில் பார்த்தால், பிரதமர் என்னை மதித்துப் பேசுகிறார். அதற்கு நான் மதிப்பளிக்க வேண்டும். தேவையற்ற கருத்துகளை சிலர் கூறுவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. என்னை யாரும் மிரட்டிப் பணிய வைக்க முடியாது. தேவையற்ற சலசலப்புகளுக்கெல்லாம் அசைந்து கொடுப்பேன் என யாரும் எதிர்பார்க்க வேண்டாம்' என கடுமையாகக் கூறிவிட்டார். இஃப்தார் விருந்திலும் சசிகலா ஆதரவு எம்எல்ஏ-க்கள் முன்வைத்த கோரிக்கைகளை அவர் ஏற்கவில்லை. 'பா.ஜ.கவுக்கு ஆதரவு இல்லை' என சசிகலா தரப்பினர் வெளிப்படையாக அறிவிக்க முடியாத சூழல் உருவாகியது. காரணம். அவர்கள் பக்கம் உள்ள ஆதரவு, வெளிப்படையாக அம்பலமாகியிருக்கும் என்ற அச்சம்தான். இதையறிந்து, தினகரன் வலிய வந்து அறிக்கை வெளியிட்டார்" என்றவர், 

"பிரதமர் மீது எடப்பாடி பழனிசாமி பாசம் காட்டுவதற்கு வேறு ஒரு காரணமும் உள்ளது. 'மீண்டும் பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்க வேண்டும்' என பிரதமரிடம், பா.ஜ.கவுக்கு வேண்டப்பட்ட சிலர் தூது சென்றபோது, அந்தக் கோரிக்கையை பிரதமர் நிராகரித்துவிட்டார். எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர்வதையே, மோடியும் விரும்புகிறார். காரணம், 'சசிகலா குடும்பத்தை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த, அவரால் முடியும்' என பா.ஜ.க நிர்வாகிகள் நம்புகின்றனர். தொடக்கத்தில் பன்னீர்செல்வத்தை அவர்கள் வெகுவாக நம்பினர். சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலாவை முன்னிறுத்தியதையும் புதுமைத் தலைவி என விளம்பரம் கொடுத்ததையும் பா.ஜ.க மேலிடம் ரசிக்கவில்லை. அதனால்தான், பன்னீர்செல்வத்தைக் கைவிடும் சூழல் ஏற்பட்டது. இதைப் புரிந்துகொண்டு செயல்பட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவது; புதிய அறிவிப்புகளை வெளியிடுவது என ஆட்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். நேற்று திறக்கப்பட்ட போரூர் மேம்பாலத்துக்கும், எம்.ஜி.ஆர் பெயரைச் சூட்டினார். இதன்மூலம், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இடையே தன்னைக் காட்டிக் கொள்ள முயல்கிறார். கட்சி அதிகாரத்திலும் தன்னையே முன்னிலைப்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கிறார்" என்றார் விரிவாக. 

"குடியரசுத் தலைவர் தேர்தலை, தினகரன் நம்பியதற்கு ஒரே காரணம். ' மத்திய அரசின் நெருக்குதலால் போடப்பட்ட வழக்குகளில் இருந்து விடுதலை ஆவோம்' என்ற நம்பிக்கைதான். அதற்கேற்ப, எம்எல்ஏ-க்களில் 34 பேர் தினகரனை ஆதரித்தனர். இந்த ஆட்டத்தையும் எடப்பாடி பழனிசாமி கலைத்துவிட்டார். அவரை வழிக்குக் கொண்டு வரும் வகையில், பல்வேறு ஆட்கள் மூலம் தினகரன் தூது அனுப்பியும் எதற்கும் எடப்பாடி பழனிசாமி அசைந்து கொடுக்கவில்லை. 'எடப்பாடி பழனிசாமி வந்துவிட்டால் போதும். அடுத்த அரை மணி நேரத்தில் ஓ.பி.எஸ்ஸை வரவழைப்பேன்' என தினகரன் தரப்பினர் உறுதியாகக் கூறினர். எதுவும் எடுபடவில்லை. இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை ஆய்வு செய்யும் மனுவின் மீதான நீதிபதிகளின் கருத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் சசிகலா. “இந்த விவகாரத்தில் மத்திய அரசு சட்டரீதியாக உதவி செய்யும்' எனவும் நம்பிக் கொண்டிருக்கிறார் சசிகலா. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பாராமுகமும் கட்சி பல துண்டுகளாக சிதறிக் கொண்டிருப்பதையும் அதிர்ச்சியோடு கவனித்துக் கொண்டு வருகின்றனர் மன்னார்குடி குடும்ப உறுப்பினர்கள். டெல்லி லாபி மூலம் அரசியல்ரீதியாக சில நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும், ‘ரிவியூ மனுவின் தீர்ப்பையொட்டியே, தங்கள் குடும்பத்துக்கான எதிர்காலமும் உள்ளது' எனவும் கவலையோடு அவர்கள் விவாதித்து வருகின்றனர்" என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.