Published:Updated:

‘என்னை இப்படி அசிங்கப்படுத்துவதா?’ - வைகுண்டராஜனுக்கு எதிராகக் கொதிக்கும் சகோதரர் #VikatanExclusive

எஸ்.மகேஷ்
‘என்னை இப்படி அசிங்கப்படுத்துவதா?’ - வைகுண்டராஜனுக்கு எதிராகக் கொதிக்கும் சகோதரர் #VikatanExclusive
‘என்னை இப்படி அசிங்கப்படுத்துவதா?’ - வைகுண்டராஜனுக்கு எதிராகக் கொதிக்கும் சகோதரர் #VikatanExclusive

வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜனுக்கும் அவரது அண்ணன் குமரேசனுக்கும் இடையே நடந்துவரும் மோதல் எரிமலையாக வெடித்துள்ளது. 'குமரேசன், மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாலேயே எங்களைக் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பிவருகிறார்' என்று வி.வி.மினரல்ஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதைக் குமரேசன் மறுத்தததோடு, 'என்னை இப்படி அசிங்கப்படுத்துவதா...' என்று வைகுண்டராஜனுக்கு எதிராகக் கொந்தளித்துள்ளார்.

வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் என்றதும் தாதுமணல் ஏற்றுமதித் தொழில்தான் நினைவுக்கு வரும். விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. வி.வி.மினரல்ஸுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து வைகுண்டராஜனின் அண்ணன் குமரேசனும் அரசுக்கு புகாராக அனுப்பிவந்தார். இந்தச் சூழ்நிலையில், வைகுண்டராஜனுக்கும் குமரேசனுக்கும் நடந்துவந்த மோதல் பூதாகரமாக வெடித்துள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து வைகுண்டராஜனின் சொந்த ஊரான திசையன்விளை அருகில் உள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தினர் கூறுகையில், "எங்கள் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா நாடாருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு ஐந்து குழந்தைகளும் இரண்டாவது மனைவிக்கு ஆறு குழந்தைகளும் பிறந்தன. முதல் மனைவி குழந்தைகளில் ஒருவர்தான், குமரேசன். இரண்டாவது மனைவி மகன்தான் வைகுண்டராஜன். சுப்பையா நாடார் உயிரோடு இருக்கும்போதே அவரது குடும்பத்தில் சொத்துப் பிரச்னை ஏற்பட்டது. இதனால், குமரேசனுக்கு சேரவேண்டிய சொத்துகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. சுப்பையா மறைவுக்குப் பிறகு, குமரேசனுக்கும் வைகுண்டராஜனுக்கும் மோதல் மேலும் வலுத்தது.


வைகுண்டராஜனிடமும் குமரேசனிடமும்  குடும்பத்தினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திலேயே குமரேசனுக்கு முக்கியப் பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களுக்காக குமரேசன் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு, வி.வி.மினரல்ஸுக்கு எதிராக குமரேசன் செயல்பட்டுவருகிறார். அவ்வப்போது, வி.வி.மினரல்ஸ் குறித்த தகவல்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்துவதுண்டு. தற்போது, வி.வி.மினரல்ஸ் நிறுவனம் செயல்படாததால், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை பறிபோனது. வி.வி.மினரல்ஸ் குறித்து குமரேசன் தொடர்ந்து குற்றம் சாட்டிவருகிறார். இதனால், வைகுண்டராஜனுக்கும் குமரேசனுக்கும் நடந்த மோதல் எரிமலையாக வெடித்துள்ளது" என்றனர்.

இதுகுறித்து வி.வி.மினரல்ஸ் தரப்பில் பேசியவர்கள், "வைகுண்டராஜன், தன் குடும்பத்தினரை அரவணைத்து வருவது எல்லோருக்கும் தெரியும். குமரேசனைக்கூட நன்றாகத்தான் வைகுண்டராஜன் கவனித்துக்கொண்டார். ஆனால், குமரேசனின் செயல்பாடுகளால் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திலிருந்து அவர் ஒதுக்கிவைக்கப்பட்டார். தொழில்போட்டி காரணமாகவும் அரசியல் காரணத்துக்காகவும் வைகுண்டராஜன் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுக்களை குமரேசன் பரப்பிவருகிறார்.  குமரேசன் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், அதையெல்லாம் நாங்கள் வெளியில் சொல்வதில்லை.

கடந்த 2015-ம் ஆண்டு, மதுரை உயர் நீதிமன்றத்தில் குமரேசன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த வழக்கு, நீண்டகாலமாக நடந்துவருவதால், நான், ஸ்கிசோஃப்ரினியா என்ற மனப்பித்து நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்கு சிகிச்சை பெற்றுவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்க்கும்போது, அவருக்கு ஏற்பட்டுள்ள மனப்பாதிப்பால்தான் வி.வி.மினரல்ஸ் குறித்த தவறான தகவல்களைப் பரப்புகிறாரோ... என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது. வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்குத் தடைவிதிக்கப்படவில்லை. குடோன்களில் இருந்து தாதுமணலை வெளியில் கொண்டு செல்லும் போக்குவரத்துக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது.வி.வி.மினரல்ஸ் நிறுவனம்மீது அரசு எடுத்த நடவடிக்கைகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எங்களைப் பொறுத்தவரை, விதிமுறைகளுக்குட்பட்டு செயல்பட்டுவருகிறோம்" என்றனர்.

இதுகுறித்து குமரேசனிடம் பேசினோம், "வைகுண்டராஜன் தரப்பினர் என்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பிவருகின்றனர். எனக்கு மனநோய் இருப்பதாக அவர்கள் சொல்வது உண்மை இல்லை. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். நான் மனநோயாளியாக இருந்தால், உங்களிடம் தெளிவாக  இப்படிப் பேச முடியுமா" என்றார் ஆவேசத்துடன்.