Published:Updated:

ஊழிக்கால வேதனை

Mahatma Gandhi
பிரீமியம் ஸ்டோரி
News
Mahatma Gandhi

காந்தி மகான் மார்பிலே பாய்ந்த குண்டு அத்தனை ஹிருதயங்களையும் துளைத்தது!

பிரளயகால அந்தகாரத்தில் உலகம் மூழ்கிற்று. இந்த பயங்கரமான இருளானது புறத்தோடு மட்டுமின்றி எண்ணற்ற கோடி ஜீவராசிகளின் உள்ளங்களிலேயும் ஊடுருவிப் பாய்ந்தது. ``இனி என்ன ஆகும்?" என்ற பீதி எங்கும் ஜனித்து ஒரு ஆட்டமே ஆட்டியது.

பாண்டிய நாட்டிலே வைகையின் வெள்ளத்தை அணை போட வந்த பரமனை மன்னன் பிரம்பினால் ஒரு தட்டுத் தட்ட அண்டமெங்கும் அந்த அடி பட்டதாகக் கதை. பாமர மக்களுக்குப் பரந்தாமனாக விளங்கிய காந்தி மகான் மார்பிலே பாய்ந்த குண்டு ஐந்து கண்டங்களிலுள்ள அத்தனை ஹிருதயங்களையும் துளைத்தது; மூர்ச்சை போட வைத்தது; மீண்டெழுந்து கண்ணீர் விடச் செய்தது.

Mahatma Gandhi
Mahatma Gandhi

பாரத மாதாவின் அலறல் - துயரமும் ஏக்கமும் தோய்ந்த தீனக் குரல் - கேளாமலே கேட்கிறது! ஒவ்வொரு நெஞ்சையும் உருக வைக்கிறது. கதி கலங்க வைக்கிறது. காந்திஜியைப் போன்ற அவதார புருஷர் இதுவரை ஜனனமாகியிருக்கிறாரா? இனிதான் எப்போது ஜனனமாவார்? காணக் கிடைக்காத பொருளை, குற்றமற்ற ஒரு மஹா புருஷனை, துன்பமும் துவேஷமும் நிறைந்த உலகில் நல்வழி காட்டத் தோன்றிய ஒரு அவதார மூர்த்தியை நாம் இழந்துவிட்டோம். அதுவும் எப்படி? எந்த மக்களின் கதிமோட்சத்திற்காக அவர் பாடுபட்டாரோ, அந்த மக்களின் கையினாலேயே அவர் உயிர் இழக்க நேர்ந்து விட்டது! ஏசுநாதருக்குத் தோன்றியது போல, அமெரிக்க பிதாவான அப்ரஹாம் லிங்கனுக்கு நேர்ந்தது போல, மஹாத்மாஜியின் ஒப்புவமையற்ற துாய வாழ்க்கையின் இறுதியும் நடந்து விட்டது. உலக க்‌ஷேமத்துக்காக வாழ்ந்தவர், அந்த லக்‌ஷியத்திலேயே தமது உயிரைத் துறந்தார்.

துயரங்களிலே அடக்க முடியாத துயரம் இது. நஷ்டங்களிலே ஈடு செய்ய சாத்தியமில்லாத நஷ்டம் இது. தபோ பலத்தினால், ஸத்தியத்திலும் அஹிம்ஸையிலும் கொண்டுள்ள உறுதியினால், மகாத்மா அற்புதங்களை இயற்றினார். உடலை அழிக்கும் அணு குண்டு; மகாத்மாஜியின் ஆத்ம சக்தி மனத்திலுள்ள வெறியையும் பொறாமையையும் துவேஷத்தையும் மட்டுமே தகிக்க வல்லது என்பது பன்முறைகள் நிரூபிக்கப்பட்டது. முன்பு வங்கத்திலே காந்திஜி சுற்றுப் பிரயாணம் செய்த சமயத்திலே நச்சுப்பை தாங்கிய ஒரு கரு நாகம், ஸாத்வீக மூர்த்தியின் அருகே வந்து படமெடுத்து ஆனந்த தரிசனம் செய்துவிட்டு வணக்கமாகத் திரும்பிச் சென்றதாகக் கேள்விப் பட்டோமே! அந்தக் கொடிய ஸர்ப்பத்தினிடமிருந்தாவது யம ரூபத்திலே மகாத்மாவின் உயிரை மாய்க்க வந்த துர்ஜனன், கொல்லாமை என்னும் பாடத்தைத் தெரிந்து கொண்டிருக்கலாகாதா?

காந்திஜியின் வாழ்க்கை, அவரது லக்‌ஷியம், அவரது உபதேசங்கள் கொள்கைகள் ஒன்றும் வீணாகலாகாது; வீணாகவும் முடியாது. இன்று அந்த மஹா புருஷரின் மறைவுக்காகப் பொங்கியிருக்கும் பெருந் துயரத்திலே நிலவும் ஒற்றுமை மனித வர்க்கத்தின் ஒவ்வொரு காரியத்திலும் பிரதிபலிப்பதே அவருடைய ஆத்மாவின் சாந்திக்குச் சிறந்த மார்க்கமாகும்.

காந்திஜி மறைந்து விட்டார். இனி அவரின் குரலைக் கேட்க முடியாது; மதுரமான சிரிப்பைக் காண முடியாது. துணை இருக்கிறார் என்று உணர முடியாது. அவர் காட்டிய வழிகளும், செய்துள்ள உபதேசங்களும் மட்டுமே நமது பலம். அந்த பலத்தைச் செவ்வனே உபயோகித்துக் கொள்வதைத் தான பொறுத்திருக்கிறது நம் தேசத்தின் பிற்காலம்.

இப்போது உலகம் இருண்டிருக்கிறது. மகாத்மாவின் லக்‌ஷியங்களை உலகம் ஏற்று நடந்தால், இதே இருள், விடியுமுன் தோன்றும் இருளாகவே இருந்து, அஹிம்ஸையும் ஸத்யமும் நிலவும் ஜோதிமயமான தேவலோகம் ஒன்று உதயமாக முடியும்.

(08.02.1948 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)