Published:Updated:

இது தமிழர்களுக்குச் சூட்ட வேண்டிய கிரீடம்!

Mahatma Gandhi
பிரீமியம் ஸ்டோரி
News
Mahatma Gandhi

1949-ல் சென்னை வந்த காந்தியடிகள் 'தமிழர்களுக்கு' கொடுத்த சர்டிபிகேட்...!

தமிழ்நாடும் காந்தியடிகளும்!

மைசூர்க் கலைப் பொருட்காட்சியில் கவர்னர் ஜெனால் ராஜாஜி பெண்கள் கூட்டத்தில் நிகழ்த்திய பிரசங்கம் ஒன்றிலே ஓர் உவமக் கதை சொன்னார். தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பைப் போட்டால் அவ்வளவு நீரும் உப்பு நீராகி விடுகிறது. எனினும் உப்பைக் காணவில்லை, "தண்ணீரில் மறைந்து விட்டது. மகாத்மாவின் மறைவும் இப்படித்தான் இருக்கிறது. இவர் மக்கள் மூலம் வாழ்கிறார். ஆகவே மகாத்மாவின் மறைவு குறித்து நாம் துக்கப்படலாகாது ; சாவுக்கு அஞ்சலாகாது. 

 பரஸ்பர அன்புடன், நாணயமாகச் சகோதர உணர்ச்சியுடன் நாம் நடந்து கொண்டால் இந்த நடத்தையிலேயே மகாத்மா வாழ்ந்து கொண்டிருப்பார்; இறக்கவே மாட்டார்!" என்பது ராஜாஜி கூற்றின் சாரம். 

காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருக்கும்போதே. தமிழர்களின் குணாதிசயத்தை அறிந்து விசேஷ அபிமானம் பாராட்டலானார். கூலியாட்களாகவும் தொழிலாளர்களாகவும் அங்கேயிருந்த தமிழர் பலர் தம்முடன் கலந்து அஹிம்ஸைப் போர் புரிந்ததைக் காந்தியடிகள் பெரிதும் பாராட்டியிருக்கிறார், அவர்களைத் 'தமிழ் வீரர்கள்' என்றே மதித்திருக்கிறார். அந்தத் தமிழர்கள் மீதுள்ள அபிமானம் தமிழ் நாட்டுக் காதலாகவும், தமிழ் மொழிக் காதலாகவும் கூட மகாத்மாவின் உள்ளத்தில் தழைத்ததுண்டு. இது குறித்துக் காந்தியடிகளே 'மாடர்ன் ரெவ்யூ' என்ற கல்கத்தா மாளிகையில் ஆங்கிலத்தில் பின் வருமாறு தம் அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறார்.

Mahatma Gandhi
Mahatma Gandhi

 "இந்தக் கிளர்ச்சியில் (ட்ரான்ஸ்வால் கிளர்ச்சியில்) தமிழர்கள் செய்த காரியத்தைப் போல் வேறு எந்த இந்திய ஜாதியும் செய்யவில்லை. ஆதலால் வேறு காரணம் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு என் திருப்தியை நன்கு உணர்த்தவாவது நான் அவர்களுடைய புத்தகங்களை ஊன்றிப் படிக்க வேண்டும். சென்ற மாதம் அவர்களுடைய பாஷையைக் கவனமாகப் படித்து வந்தேன். அதைப் படிக்கப் படிக்க அம்மொழியிலுள்ள அழகு அதிகமாகத் தெரிகிறது. நேர்த்தியான மொழி அது அமுதம் போன்றது. தமிழர்களுக்கிடையே முன்னாளிலும் இந்நாளிலும் அநேக ஞானிகளும் நுண்ணிறிவாளர்களும் இருந்திருக்கிறார்கள். இந்தியா முழுமையும் ஒரே ஜனங்கமாக ஏற்பட வேண்டுமானால், சென்னை மாகாணத்திற்கு வெளியில் உள்ளவர்களும் தமிழ் மொழியைத் தெரிந்துகொள்ள வேண்டும்" என்கிறார். 

சென்னை விஜயம் 

1915ல் ஒரு மாலைப் பொழுதில் காந்தியடிகள் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் தமது வாழ்க்கைத் துணைவியான கஸ்தூரிபாய் அம்மையுடன் வந்திறங்கினார். அந்த நாளிலும் மூன்றாவது வகுப்பு வண்டியில்தான் வந்தார் என்றும், பெரிய குஜராத்தித் தலைப்பாகையுடன் தூய வெள்ளை ஆடை அணித்தவாாய் வட நாட்டுக் குடியானவர் ஒருவர் மனைவியுடன் வருவதுபோல் வந்து சேர்ந்தார் என்றும், காலஞ்சென்ற திரு ஜி. எ. நடேசன் அர்த நினைவுகளை வெளியிட்டு எழுதிய ஒரு கட்டுரையில் கூறியுள்ளார். 

  அந்நாளில் திரு ஜி. ஏ. நடேசன் ஆபீஸீல் அவரது விருந்தாளிகளாகத் தங்கினார்கள் காந்தி தம்பதிகள். திரு. நடேசன் இவர்களுக்காக இரண்டு கட்டில்களும், மெத்தை தைத்த நாற்காலி ஒன்றும், ஒரு மேஜையும், எழுத ஒரு சாய்வு மேஜையும் போட்டிருந்தார். தரையில் கம்பளம் விரித்திருந்தது. காந்தியடிகள் இந்த வசதிகளை உற்று நோக்கியதும் உரக்கச் சிரித்தாராம். இந்த வசதிகளையும் அந்நாளிலேயே அநாவசிய சுக போகங்களாக மதித்தார். அவற்றையெல்லாம் திரு. நடேசன் அப்புறப்படுத்திய பின்பே அந்த அறைகளை உபயோகித்துக்கொள்ள இணங்கினர். 

1915 ஏப்ரல் 21ல் விக்டோரியா பப்ளிக் ஹாலில் சென்னைவாசிகள் டாக்டர் சார் எஸ். சுப்பிரமணிய ஐயர் தலைமையில் கூடி காந்தி தம்பதிகளே வரவேற்றார்கள். காந்தியடிகள் வரவேற்புரைக்குப் பதில் சொல்லும்போது தென்னாப்பிரிக்காவில் சென்னைவாசிகளான தமிழர்கள் செய்த தியாகங்களைத் தம்முடைய தியாகங்களுக்கும் மேலானவையென்று குறிப்பிட்டார். பதினேழு பதினெட்டு வயதுச் சிறுவர்களான நாகப்பனும் நாரயணசாமியும் எத்தனை கஷ்ட கஷ்டங்களையும் அவமானங்களையும் சுமந்து தமிழ்நாட்டின் கெளரவத்தைக் காப்பாற்ற முயன்றார்கள்! பதினேழு வயதுப் பெண்ணான வள்ளியம்மை மாரிட்ஸ்பர்க் சிறையிலிருந்து எலும்பும் தோலுமாக விடுதலை அடைத்து அப்படியே ஜூரம் பிடித்துப் பாயும் படுக்கையுமாகி, மரணம் என்ற அர்த்தப் பெரும் விடுதலையும் பெற்றுவிட்டாள் ஒரே மாதத்தில்!" என்று கூறி, தென்னாப்பிரிக்காவில் மற்ற இந்தியர்களைக் காட்டிலும் தமிழர்களே சட்டமறுப்பில் விசேஷமான பங்கு கொண்டனர் என்றார். 

எட்டு ஆண்டுகளாக நீடித்து நடந்து வந்த அந்தப் போராட்டக் காலத்தில், சிறை செல்லாததே அவமானம் என்று அங்குள்ள சென்னைவாசிகள் கருதினார்களாம். அந்தத் தமிழர்களின் கடவுள் நம்பிக்கையும் தியாகமுமே தமக்கும் அந்த இயக்கத்தில் வழிகாட்டின என்றார். அவர்களுக்குச் சூட்ட வேண்டிய கிரீடத்தைத் தான் சென்னை அப்போது தமக்கும் தமது மனைவிக்கும் அளித்தது என்றார். 

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணிக்கு மகாத்மா மதுரை மீனாட்சி கோயிலில் பிரவேசித்தார். (ஆலயப் பிரவேசச் சட்டம் வருவதற்கு முன்பே மீனாட்சியம்மை கருணை கூர்ந்து கோயிலைத் தன் ஹரிஜன மக்களுக்குத் திறந்து வைத்தாள்! என்பது தமிழகம் மறக்கமுடியாத செய்தி.) கணகண வென்று மணிகள் அடிக்க, மேள வாத்தியங்கள் முழங்க, யானைகள் வீரிடக் காந்திமகான் மீனாட்சி தரிசனம் செய்தாரோ அன்றே தமிழகம் மகாத்மாவையும் தன் கண்கண்ட தெய்வமாகச் தரிசித்தது. அமெரிக்க நூலாசிரியரான ஜான் கந்தர் காந்திஜியைக் குறித்து எழுதும்போது, "ஒரே மனிதர் மகாத்மாவாகவும் அவதார புருஷராகவும், உலகறிந்த ராஜதந்திரியாகவும் இருப்பது மானிட விதிகளை மீறியது" என்கிறார். அதிமானுஷ்ய மேதைகளான வள்ளுவரையும் ஆழ்வார்-நாயன்மார்களையும் சங்கர-ராமானுஜர்களையும் கண்டிருக்கும் தமிழ்நாட்டுக்கோ ஜான் கந்தர் கண்ட புதிர் அன்று காந்திஜி. அந்த மேதைகளிலும் காரியவாதியான காந்தியடிகளை அதிமேதையாகத் தரிசித்திருக்கிறது தமிழ்நாடு.

- விகடன் டீம்

(30.01.1949 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)