Published:Updated:

காந்தி வழி நடப்போம்

மகாத்மா காந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
மகாத்மா காந்தி

”ஆன்ம சக்திக்கு முன் வேறு எந்த மிருக பலமும் நிற்க முடியாது” என்பதை எடுத்துப் புகட்டியவர் காந்தி மகாத்மா.

க்டோபர் மாதம் இரண்டாந்தேதியை பாரததேசமெங்கும் காந்தி ஜயந்தியாக நாம் கொண்டாடுகிறோம். சத்தியத்தின் ஜோதியாகவும் கருணையின் கடலாகவும், அன்பின் வடிவமாகவும் அவதரித்த அண்ணலைப் போற்றி வணங்குகிறோம். 'வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்த மகாத்மா நீ வாழ்க ' என்று வாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறோம்.

அவர் அருளால்தான் இந்த நாடு அடிமைத் தளையிலிருந்து நீங்கி, புது வாழ்வு பெற்றது. இன்று பாரெல்லாம் பாரதத்தின் புகழ் ஓங்கி நிற்பதும் அவரால்தான். புத்தரும் காந்தியும் அவதரித்த மண்ணில் பிறந்தோம் என்பதனால் தான், நமக்குத் தனிப் பெருமை. செல்வச் சிறப்பிலோ, தொழில் வளத்திலோ, படைபலத்திலோ அணுகுண்டு ஆக்கத்திலோ நாம் மற்ற மேல் நாடுகளுக்கு ஈடாக மாட்டோம். அப்படி இருந்தும் நம் வாக்கு உலக அரங்கில் மதிப்புப் பெற்றுள்ளது என்றால், அதற்குக் காரணம் நமது ஆன்ம பலம்தான். அதைப் புதையல் எடுத்த தனம் போல, நமக்கு மீண்டும் எடுத்துப் புகட்டியவர் காந்தி மகாத்மா.

மிகப் புராதனமான நமது பண்பாட்டின் அடிப்படையே இந்த ஆன்மிக சக்திதான் என்பதை அறிந்தார் காந்திஜி. உலக வரலாற்றில் பெரும் பெரும் வல்லரசுகளும், நாகரிகங்களும் தோன்றி உருத்தெரியாமல் மறைந்து விட்டன. ஆனால் எவ்வளவோ பேரிடிகளைத் தாங்கியும் இந்திய நாகரிகம் மட்டும் அழியாமல் நிலைத்து நிற்கிறது என்றால் அதற்கு இந்த ஆன்ம பலம்தான் காரணம். ஆன்ம சக்திக்கு முன் வேறு எந்த மிருக பலமும் நிற்க முடியாது.

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

சத்தியம், அகிம்சை, அன்பு, எளிய வாழ்க்கை ஆகிய உன் குணங்களே, ஆன்ம சக்தியை உருவாக்குபவை. இந்தப் பண்புகள் குன்றி வந்ததாலேயே பாரத நாடு சக்தியிழந்து அடிமைப்பட்டது என்பதைக் கண்டார் மகாத்மா. அது மீண்டும் தன் ஆத்ம பலத்தைப் பெறப் பாடுபட்டார். சத்தியத்தையும் அகிம்சையையும் அன்போடு கலந்து போதித்தார். அவரே அவற்றின் உருவாக நின்று வழிகாட்டினார். ஒற்றுமையை வளர்த்தார். தியாக உணர்ச்சியைத் தூண்டி விட்டார். உள்ளத் தூய்மையை ஒளி வீசச் செய்தார். அதன் சக்திக்கு முன் நிற்க முடியாமல் அந்நியர்களும் அடி பணிந்தனர். எதிர்ப்பை வென்றார்; எதிரியை அன்பராக்கினார். பாரத நாடு சுதந்திரம் அடைந்தது.

இன்று நாம் சுதந்திரமடைந்து பதினோரு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. நமக்கு சுதந்திரத்தை வாங்கித் தந்த அண்ணலை நாம் இன்னும் மறக்கவில்லை. அவரை வாயாரப் புகழுகிறோம். மனமார வாழ்த்துகிறோம். சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.

ஆனால் அவர் காட்டிய அன்புப் பாதையில் சத்தியத்தையும் அகிம்சையையும் துணையாகக் கொண்டு நாம் செயலாற்றுகிறோமா? உள்ளத் தூய்மையோடு நடக்கிறோமா? சகோதரத்துவமும் சகிப்புத் தன்மையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தம்மிடம் இயங்குகிறதா? இன்று காந்திஜி நம்மிடையே இருந்தால் நாம் செய்வதையெல்லாம் அவர் ஆமோதிப் பாரா? நாம் போகும் பாதை சரி என்று ஒப்புக் கொள்வாரா என்று ஒரு கணம் சிந்திப்போம்.

அரசியலில் சிக்குண்ட நாம் படும் அவதியை நாவால் சொல்லி முடியாது. அது மனித உள்ளத்தையே பாழாக்கி விடும் தன்மை பெற்றது. அதன் சுழலில் நாம் சிக்குண்டு மேலான பண்புகளை மறந்து விடுகிறோம். பாந்திஜி காட்டிய பாதையிலிருந்து விலகிச் சென்று கொண்டே வருகிறோம்.

சுயநலம் நம்மை அதிகமாக ஆட்கொள்ள ஆரம்பித்து விட்டது. துவேஷம், வெறுப்பு போன்ற உணர்ச்சிகளுக்கு அதிகம் வசப்பட்டவர்களாகிறோம்.

காந்திஜி போதித்த சத்தியத்தை இப்போது ' சத்தியமேவ ஜயதே வன்று பொறிக்கப்பட்ட அரசாங்கத்தின் சின்னத்தில் மட்டுமே காண முடிகிறது. அரசியல் (மேடைகளில் அது உருத்தெரியாமல் மாறித் தோற்றமளிக்கிறது).

அடுத்தபடியாக அகிம்சை. இந்த வார்த்தையின் பொருளே இப் போது மாறிவிட்டது. சத்தியாக்கிரகம், சாத்வீகப் போர் என ஆரம்பிப்பதெல்லாம் பலாத்காரத்தில்தான் முடிகின்றன. கல்லெறி, தடியடி, துப்பாக்கிப் பிரயோகம் இவைகளின் நடுவே அகிம்சை அகப்பட்டுக் கொண்டு இம்சைப்படுகிறது.

தேர்தல் போட்டாப் போட்டிக்கு நடுவே சிக்கிக் கொண்டு அன்பும் நேர்மையும் அவதிப்படுகிறது. மொழி வெறியிலே சகிப்புத் தன்மை குழி தோண்டிப் புதைக்கப்படுகிறது. எளிய வாழ்க்கையை எல்லோரும் பிறருக்குப் போதிக்கிறோம். சொந்த விஷயத்தில் கடைப்பிடிப்பதில்லை. ஐந்தாண்டுத் திட்டத்தில் இயந்திரங்கள் வாங்குவதிலும் ஆலைகள் அமைப்பதிலும் உள்ள அவசரத்தில், காந்தி மகாத்மாவின் நிர்மாணத்திட்டத்தைப் பற்றிச் சிந்திக்க நேரமேது? குடிசைத் தொழிலுக்கு ஆதரவுதான் எது? அந்த இயந்திரக் கூச்சலில் அவர் குரலே நம் காதில் கேட்பதில்லை.

மேல் நாடுகளின் நடைமுறையைப் பார்த்து அதையே காப்பியடிக்கும் மனோபாவம் நாளுக்குநாள் நம்மிடை வளர்ந்து வருகிறது. பிறரை வருக்குப் போகச் சொல்லிவிட்டு, நாம் பிறராய் மாறி வருகிறோம். எது கிடைத்தாலும், எவ்வளவு கிடைத்தாலும், நமக்குத்திருப்தி ஏற்படுவதில்லை. எளியவனைப் பார்த்து இரக்கப்படுவதற்குப் பதில் மேலேயுள்ளவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுகிறோம். இதனால்தான் எவ்வளவோ அபிவிருத்தி வேலைகள் நடந்தும், நாட்டில் மன நிறைவோ, மகிழ்ச்சிக் கறியோ தென்படுவதில்லை. நாம் எங்கே செல்கிறோம் என்பது நமக்குத் தெரியாத வேகத்தில் செல்கிறோம்.

இந்த நிலை அகன்று தெளிவு ஏற்பட வேண்டுமென்றால், நம் பண்பாடு நிலைக்க வேண்டுமானால், நாம் காந்திஜியின் போதனைகளை நினைவூட்டிக் கொள்ள வேண்டும். வழி தவறிச் சென்று விட்டால், பிறகு விமோசனமில்லை. திக்குத் தெரியாத காட்டில் தவிக்க வேண்டியதுதான். நாம் போகும் வழி அவர் காட்டிய பாதைதானா என்பதை ஆராய்ந்து அவ்வப்போது ஆத்ம சோதனை செய்து கொள்ள வேண்டும்.

(05.10.1958 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)