Published:Updated:

காந்தியின் போராட்டம் குறித்து முன்னாள் நிதியமைச்சர் மது தாண்டவதே சொல்வது என்ன?

Gandhi
News
Gandhi ( Vikatan )

காந்தி இந்தியாவை ஜனநாயகப் பாதைக்குக் கைப்பிடித்து அழைத்துச் சென்றவர். உலக அரசியலில் திருப்பு முனையாக அமைந்தவர்.

“காந்தியின் அகிம்சை வழியிலான இந்திய விடுதலைப் போராட்டம்தான், சுதந்திரத்தில் ஏற்பட்ட காலதாமதத்திற்கான காரணம். இந்தியா, நேதாஜியின் வழியைத் தேர்ந்தெடுத்திருந்தால் அதன் சுதந்திர வாசத்தை எப்போதோ முகர்ந்திருப்போம்“ என 2019-லும் அண்ணா நகரின் வீதியில் கூடி நின்று விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள், சில இளைஞர்கள். இத்தனைக்கும் அவர்கள் இந்தியாவின் அரசியல் வரலாறு அறியாதவர்கள் அல்ல... இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 395 பிரிவுகளையும் மனப்பாடமாகச் சொல்லக்கூடிய திறன் படைத்த, ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயாராகி வருபவர்கள்தான். உண்மையில், இது அவர்களின் கருத்து மட்டுமல்ல... இந்தக் கருத்தை ஆமோதிப்போர் இந்தியா நெடுகிலும் பரவிக்கிடக்கத்தான் செய்கின்றனர்.

Gandhi
Gandhi

காரணம், காந்தியின் சாத்வீகம் அவர்களுக்குச் சலிப்பைத் தரலாம்; அவரின் மௌனங்கள், மேடைப்பேச்சுகள் கொஞ்சம் சாதாரணமாகக்கூடத் தோன்றலாம். என்ன செய்ய? உலக சினிமா என்ற பெயரில் ஜாக்கி சானின் ஆக்‌ஷன் படங்களைப் பார்த்துப் பழகிய கண்கள், உலகத்தார் புகழ்ந்து பாராட்டிய ‘பதேர் பாஞ்சாலி’யைப் புறக்கணிக்கத்தானே செய்வார்கள்? ஆனாலும், அவர்களுக்குச் சில செய்திகளைச் சொல்லவேண்டிய கட்டாய நேரம் இது. காரணம், இன்று காந்தியின் 150-வது பிறந்த தினம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அந்தக் கதைகளைச் சொல்வதற்கு முன்னால், இங்கு ஞாபகப்படுத்த வேண்டிய இரண்டு வரலாற்றுப் பக்கங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, காந்தி இறப்பதற்கு 11 மாதங்ளுக்கு முந்தையது; மற்றொன்று, காந்திக்கு 19 வயதாகும் தறுவாயில் நடந்தேறியது.

1947-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கூடியிருந்தது இங்கிலாந்து நாடாளுமன்றம். அப்போதுதான் இந்தியாவுக்கு 1948-க்குள் சுதந்திரமளிக்க இருப்பதாக அறிவிப்பை வாசித்திருந்தார் அட்லி. அந்தத் தருணத்தில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் வரிசையில் அமர்ந்து, இந்தத் தீர்மானத்தை எதிர்த்தவர் வின்சென்ட் சர்ச்சில். காரணம், இந்தியாவுக்குச் சுதந்திரம் அளித்து என்ன ஆகிவிடப்போகிறது? அவர்களால், இந்த நாட்டை நிர்வகிக்க முடியாது என்பதுதான் வின்சென்ட் சர்ச்சிலின் கருத்தாக இருந்தது. இது, காந்தி இறப்பதற்கு 11 மாதங்களுக்கு முந்தையது.

Gandhi
Gandhi

1888-ம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இந்தியாவைப் பற்றியான உரையாடலை நிகழ்த்திக்கொண்டிருந்தார், சர் ஜான் ஸ்டார்ச்சி. அவர் பல ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டத்தில் வசித்தவர். இந்திய கவர்னர் ஜெனரலின் ஆலோசகராகவும் இருந்தவர். அவர் இந்தியாவைப் பற்றிக் குறிப்பிடும்போது, “இந்தியா என்ற ஒரு நாடு இதுவரை இருந்ததும் இல்லை; இதற்கு மேல் உருவாகப்போவதுமில்லை. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் எல்லாம் ஒன்றிணைந்து ஒரு புதிய நாடு உருவாகினால் உருவாகுமே தவிர, இந்தியா என்ற ஒரு நாடு உருவாவதற்கான வாய்ப்பில்லை. காரணம், ஐரோப்பிய கண்டத்தில் ஸ்பெயினுக்கும், ஸ்காட்லாந்துக்கும் இடையேயான வேற்றுமைகளைவிட, பஞ்சாப்புக்கும், வங்காளத்திற்கும் இடையேயான வேற்றுமைகள் அதிகம்.” என்றார் சர் ஜான் ஸ்ட்ராச்சி. இது, காந்திக்கு 19 வயதானபோது நடந்தேறியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவைதான் அன்றைய ஐரோப்பாவுக்கு இந்தியாவின் மீதான மதிப்பீடுகளாக இருந்தன. ஆனால், அந்தக் கருத்தாக்கத்தை எல்லாம் சுக்குநூறாக உடைத்தெறிந்து இந்தியா எனும் ஓர் ஒற்றை நாட்டை உருவாக்கியவர், காந்தி. ஆனால், இன்றும் அவர் பழிச் சொற்களுக்குத்தான் ஆளாகி வருகிறார். காந்தியைப் போராடத் தெரியாதவர் என்கிறார்கள், இன்று புரட்சி பேசும் சிலர். காந்தி ஓர் ஆங்கிலேயரின் அடிமை என்கிறார்கள், வரலாறு படிக்காத பலர். ஆயுதம் ஏந்துவதுதான் வீரமா, ஏன் எதிர்ப்புகள் எளிமையானதாக அமையக்கூடாதா என்ன? உரக்கப்பேசத் தெரிந்தவர்தான் சிறந்த தலைவர் என்றால், கடந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த தலைவர் ஹிட்லர்தான். ஆனால், காந்தியின் சாத்வீக ரீதியிலான போராட்டங்கள் இவையனைத்தையும்விட வலிமையானது.

Gandhi
Gandhi
Vikatan Infographics
Gandhi
Gandhi
Vikatan Infographics

1930-கள்தான் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் திருப்பு முனையாக அமைந்த காலமாகும். அப்போதுதான் உப்பு சத்தியாகிரகத்தைக் கையிலெடுத்தார் காந்தி. சர் ஜான் ஸ்ட்ராச்சியின், ‘இந்தியா’ என்ற புத்தகத்தில் இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் வசூலித்த வரிபற்றியான தகவல்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. அதில், 1886-87-க்கான நிதியாண்டில் மட்டும் இந்தியாவிலிருந்து உப்பு மீதான வரியின் மூலமாக வசூலிக்கப்பட்ட தொகை மட்டும் 66,58,000 ரூபாய். இதுதான் பிற்காலத்தில் உப்பு சத்தியாகிரகமாக உருவெடுக்க வழிவகுத்தது. 1930 மார்ச் 12-ம் தேதி தன்னுடைய சபர்மதி ஆசிரமத்தில் இருந்து வெறும் 78 நபர்களோடு தன்னுடைய சத்தியாக்கிரகத்தைத் தொடங்கினார், காந்தி. இந்த நெடும்பயணத்தின் தொலைவு என்பது 241 மைல்கள். இவற்றைக் கிலோ மீட்டராக மாற்றினால் 385 கி.மீ. இங்கு கவனிக்க வேண்டியது, இந்த அர்ப்பணிப்பு பயணத்தைத் தொடங்கிய போது காந்திக்கு வயது 61.

காந்தி இந்த நடைப்பயணத்தைத் தொடங்கிய வேளையில், ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட மூத்த தலைவர்களும்கூடக் கொஞ்சம் நம்பிக்கையற்றவர்களாகத்தான் இருந்தனர். ஆனால், இந்தப் பயணத்தின் ஒவ்வொரு நாள் முடிவிலும் காந்தியின் பேச்சைக் கேட்க பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். இது, நாடு முழுவதும் பரவலானது. சாதாரண பொதுமக்கள் இந்தப் போராட்டத்தைக் கையில் எடுத்தனர். இந்தியாவின் மேற்கு மூலையான தண்டியில் காந்தியின் தலைமையில் போராட்டம் நடந்துகொண்டிருக்கையில், கிழக்கே வங்காளத்திலும், தெற்கே வேதாரண்யத்திலும் உப்பு சத்தியாக்கிரகம் அரங்கேறிக் கொண்டிருந்தது.

Gandhi
Gandhi

உப்பு சத்தியாக்கிரகம் என்பது வெறும் உப்பு தயாரிக்கும் போராட்டமாக மட்டும் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால், அதன் அரசியல் என்பது வேறு. இந்தியா அடிமைப்படுத்தப்பட்டதற்கான காரணம், வரி வசூல் மூலம் கிடைக்கும் வருவாய். அது உப்புகளுக்கு அதிகப்படியான வரி விதிக்கப்பட்டிருந்த காலகட்டம். அப்படி அரசுக்கு ஆதாரமாக விளங்கக்கூடிய வரி வசூலுக்கு எதிராகக் கலகம் செய்வதைவிட எந்தப் போராட்டமுறை சிறந்ததாக இருந்து விடமுடியும்?

ஆகஸ்ட் 8, 1942-ம் நாள் கோவலியா டேங்க் மைதானத்தில் ( Gowalia Tank Maidan, Bombay ) நடந்துகொண்டிருந்தது, காங்கிரஸ் கட்சியின் கூட்டம். அந்தக் கூட்டத்தில் மௌனமான குரலின் வழியாகப் பேசிக்கொண்டிருந்தார், காந்தி. அந்தக் கூட்டத்தில் காந்தியின் புகழ்பெற்ற பேச்சான ’செய் அல்லது செய்து மடி’ என்ற பெரு முழக்கத்தின் வாயிலாக வெள்ளையனே வெளியேறு போராட்டத்தைத் தொடங்கிவைத்தார் காந்தி.

பிற்காலத்தில் தன்னுடைய வாழ்வின் அனுபவங்களை, ’டயலாக் வித் லைப்’ ( Dialouge with life ) எனும் புத்தகமாக எழுதினார், வி.பி.சிங்கின் ஆட்சிக் காலத்தில் நிதித்துறை அமைச்சராக இருந்தவரும் இந்தியாவின் மூத்த அரசியல்வாதியுமான மது தாண்டவதே. அவர் இந்த நிகழ்வுகளைப் பற்றிக் குறிப்பிடும் போது, “என் இளமைக் காலத்தில் புரட்சி இயக்கங்களின் மீது ஆர்வம் கொண்டவனாக இருந்தவன் நான். ஆனால், கோவலியா டேங்க் மைதானத்தில் காந்தியின் பேச்சைக் கேட்ட பிறகு அவரால்தான் இந்தியா எனும் நாட்டை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்தமுடியும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது” என்றார்.

இந்த எண்ணம் மது தாண்டவதேக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதுமாகப் பலருக்கும் இதே எண்ணம்தான் உருவாகியது. அதனால், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் வாயிலாகப் பல லட்சம் பொதுமக்கள் கைதுசெய்யப்பட்டனர்.

காந்தியின் வழிமுறைகள் என்பது எளிமையானவையாக இருக்கலாம். ஆனால், அவைதான் அனைவரையும் ஒன்றிணைந்து போராட வைத்தன. சுதந்திரத்திற்கான போராட்டங்கள் என்பது வெறும் 24 பேர் துப்பாக்கிகளின் துணைகொண்டு நிகழ்த்திக் காட்டுவதல்ல. இந்த வழியில் சுதந்திரம் அடைந்த நாடுகளும் பிற்காலத்தில் ஜனநாயகத்துக்கு எதிரான முறையில்தான் ஆட்சிகளை அமைத்துக் காட்டின.

காந்தி
காந்தி

ஆனால், காந்தி இந்தியாவை ஜனநாயகப் பாதைக்குக் கைப்பிடித்து அழைத்துச் சென்றவர். உலக அரசியலில் திருப்பு முனையாக அமைந்தவர். அவரின் அரசியல் நகர்வுகள் என்பது ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா என மூன்று கண்டங்களில் நேரடியாகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. 1893 முதல் 1914 வரை அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்தில் நேட்டாலிலும், டிரான்ஸ்வாலிலும் ஆரம்பித்த போராட்டங்கள்தான் அந்தக் காலத்தில் உலகின் பாதியை ஆட்சி செய்துவந்த பிரிட்டனையே அதிர்வடையச் செய்தன. 1915 முதல் இந்தியா சுதந்திரமடையும் வரையில் அவர் நடத்திய சத்தியாகிரகம் பிரிட்டிஷாரின் பீரங்கிக் குண்டுகளைவிட வலிமையானவை. உலக அரசியல் வரலாற்றில் பின்னாட்களில் மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, ஆங்சன் சூகி என உலகப் புகழ்பெற்ற தலைவர்கள் எல்லாம் தங்களின் வழிகாட்டியாக அறிவித்தது, காந்தியைத்தான்.

காந்தியைத் தேடித்தேடி எழுதித்தீர்த்த ராமச்சந்திர குஹா, காந்தியின் போராட்ட முறைபற்றி குறிப்பிடும்போது, “சர்வாதிகார முறையில் இருந்து ஜனநாயகத்துக்கு மாறிய சுமார் ஐந்து டஜன் நாடுகளைப்பற்றி ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 70 சதவிகிதத்துக்கு மேற்பட்ட இடங்களில் சர்வாதிகார ஆட்சிகள் வீழ்ந்ததற்கு ஆயுதம் தாங்கிய எதிர்ப்புகள் காரணமல்ல; மாறாக, இந்த இந்தியச் சிந்தனையாளர் கண்டுபிடித்த புறக்கணிப்பு, வேலை நிறுத்தம், உண்ணாவிரதம், இன்னபிற போராட்ட முறைகளே காரணம் எனத் தெரியவந்துள்ளது” எனத் தன்னுடைய ‘தென்னாப்பிரிக்கவில் காந்தி’ என்ற புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார். தன்னாட்சிக்காக ஜனநாயக முறையில் போராட்டத்தை முன்னெடுக்கும் எல்லா தேசங்களுக்கும் காந்திதான் தேசப் பிதா. அதை, இந்த உலகம் அறிந்துதான் வைத்திருக்கிறது. அதற்கு ஓர் உதாரணம்தான் ‘அரேபிய வசந்தம்’ என அழைக்கப்பட்ட எழுச்சியின்போது எகிப்து, ஏமன் போன்ற நாடுகளின் போராட்டக்காரர்கள் காந்தியின் புகைப்படங்களை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டது.