Published:Updated:

Karunanidhi: கருணாநிதி ஒரு கருத்தியல் ஆயுதம்! ஏனென்றால்...

கருணாநிதி

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்ததின சிறப்புக் கட்டுரை!

Karunanidhi: கருணாநிதி ஒரு கருத்தியல் ஆயுதம்! ஏனென்றால்...

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்ததின சிறப்புக் கட்டுரை!

Published:Updated:
கருணாநிதி
ஓய்வெடுக்காமல் உழைத்தவர் இங்கே ஓய்வெடுக்கிறார்'. -
கருணாநிதி தன் கல்லறையில் எழுதச் சொல்லி விரும்பிய வாசகம்.
ஓய்வுக்கு இப்போது ஓராண்டு.

தன் அரசியல் வாழ்க்கையில் நற்பேறுகளைவிட கெடுவாய்ப்புகளை அதிகம் சந்தித்தவர் கருணாநிதி. ஒடுக்கப்பட்ட சிறுபான்மைச் சாதியிலிருந்து வந்த அவர் தி.மு.க.வின் தலைவரானதும் தமிழக முதல்வரானதும் சரித்திர சாதனைகள். அப்போது அண்ணாவின் தளகர்த்தர்களாக, தமிழிலும் ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்ற பலர் இருந்தபோது, கிராமப்புறத்திலிருந்து வந்து பள்ளிப்படிப்பை முடிக்காத கருணாநிதி தலைமைப் பொறுப்பை அடைய முடிந்தது என்றால், அதற்குக் காரணம் அவருடைய களச்செயல்பாடுகளும் தொண்டர்களுடனான நெருக்கமும் தன்னை நிறுவிக்காட்டிய செயற்பாடுகளும்தான். ஆனால் தமிழக முதல்வராகி மூன்றே ஆண்டுகளில் அவர் நெடுநாளைய நண்பர் எம்.ஜி.ஆர் அரசியல் எதிரியானார். 13 ஆண்டுக்காலம் அவர் ஆட்சிக்காலத்தில் கருணாநிதி வனவாசத்தை அனுபவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Karunanidhi
Karunanidhi

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்பும் அவர் நிதானமாக அரசியல் செய்யும் வாய்ப்பை காலம் வழங்கவில்லை. யாரும் எதிர்பார்க்காதபடி ஜெயலலிதா அரசியல் எதிரியின் இடத்தை நிரப்பினார். பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட மூர்க்கமும் வன்மமும் நிறைந்த அரசியல் எதிரியான ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் கருணாநிதிக்கு வழங்கிய மரியாதையைக்கூட வழங்கத் தயாராக இல்லை. தான் முதல்வராகும்போதெல்லாம் கருணாநிதி கொண்டுவந்த பல திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தினார். கருணாநிதியைச் சிறையில் தள்ளுவதை வன்மத்துடன் செய்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கருணாநிதி பலமுறை முதல்வராக இருந்தபோதும் இரண்டுமுறை அவர் ஆட்சி கலைக்கப்பட்டது. ஈழப்பிரச்னைக்காகத் தி.மு.க. கொடுத்த விலைகள் அதிகம். இரண்டில் ஒருமுறை ஆட்சி கலைக்கப்பட்டதற்குக் காரணமே ஈழப்பிரச்னைதான். ராஜீவ்காந்தி கொலையின்போது தி.மு.க.வினரின் உடைமைகள் தாக்கப்பட்டன. ஜெயின் கமிஷனில் தி.மு.கவின் மீது குற்றம் சாட்டப்பட்டது. இத்தனை விலைகளைத் தந்தாலும் தி.மு.க, இலங்கையில் நடைபெற்ற இறுதியுத்தத்தின்போது எடுத்த நிலைப்பாடுகளின் காரணமாக கருணாநிதி, `வாழ்நாள் தமிழினத் துரோகி'யாக சிலரால் இன்னும் சித்திரிக்கப்படுகிறார். கருணாநிதி ஆட்சிக்காலத்தின்போது எல்லாம் `விடுதலைப்புலிகள் ஊடுருவல்; சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது; கருணாநிதி ஆட்சியைக் கலைக்க வேண்டும்' என்று அறிக்கைகள் கொடுத்து நெருக்கடி கொடுத்த ஜெயலலிதா, `பிரபாகரனைக் கைது செய்ய வேண்டும்' என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா, 'போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்' என்று பொன்மொழி உதிர்த்த ஜெயலலிதா சிலரால் `ஈழத்தாய்' எனக் கொண்டாடப்பட்டார். அதுதான்! கருணாநிதி தன் வாழ்க்கையில் நற்பேறுகளைவிட கெடுவாய்ப்புகளை அதிகம் சந்தித்தார். அவருடைய கொள்கைகள், நிலைப்பாடுகள், செயற்பாடுகள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல. ஆனால் காரணமே இல்லாத வெறுப்பு கருணாநிதியின்மீது பலருக்கு இருந்தது. பாமர மக்கள் முதல் படித்த மேட்டுக்குடிகள் வரை அவரை வெறுத்தனர். அதற்கு ஆழமான சமூக, அரசியல் காரணங்கள் உள்ளன.

Karunanidhi
Karunanidhi

ஆனால் அவருடைய இறுதிக்காலம் அவருடைய உழைப்புக்கும் நிகழ்த்திய சாதனைகளுக்கும் அறிவுக்கூர்மைக்கும் கிடைத்த மரியாதையாக இருந்தது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் தொடங்கி அவர் இறுதி ஊர்வலம் நடந்த நாள் வரை கருணாநிதி கலை, இலக்கிய, அரசியல் தளங்களில் நிகழ்த்திய சாதனைகள் குறித்து மீண்டும் மீண்டும் ஊடகங்கள் பேசின. இன்னும் சொல்லப்போனால் முதல்முறையாகப் பேசின. தமிழக இளைஞர்களுக்குக் கருணாநிதி என்னும் வியப்புக்குரிய மனிதரின் ஆளுமை உணர்த்தப்பட்டது.

13 ஆண்டுக்காலம் ஆட்சிப்பொறுப்பில் இல்லாதபோது கருணாநிதி போர்க்குணமிக்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் என்றால் அதற்குக் காரணம் அவருடைய 'உயிரினும் மேலான உடன்பிறப்புகளும்', கருணாநிதிக்கும் அவர்களுக்கும் இடையிலான காதலையொத்த உறவும்தான். இடையில் தி.மு.க, கார்ப்பரேட் நிறுவனமாக மாறிவிட்டது; தொண்டர்களுக்கு மரியாதை தரப்படவில்லை என்றெல்லாம் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் கருணாநிதி தொண்டர்களின் தலைவர்தான், உடன்பிறப்புகளின் உயிரினும் மேலானவர்தான் என்பதை தொண்டர்கள் நிரூபித்தனர். காவிரி மருத்துவமனை வாசலில் கூடிய தி.மு.க. தொண்டர்கள் கண்ணீர் வடித்து பிரார்த்தனைகள் செய்யவில்லை. 'எழுந்து வா தலைவா' என்று முழக்கமிட்டு, தன் தலைவனுக்கு ஆணையிட்டனர். கருணாநிதியின் வரலாறு சொல்லப்படும்போதெல்லாம் உடன்பிறப்புகளின் 'எழுந்து வா தலைவா' முழக்கமும் பதிவு செய்யப்படும். அவர் இறந்தபிறகும் போராட்ட வாழ்க்கை முடியவில்லை. `அண்ணா சமாதியில் அவருக்கு இடம் கிடைத்தது' என்ற நீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பெற்றதும், ஸ்டாலின் தி.மு.கவின் முன்னணித் தலைவர்களின் கைகளைப் பிடித்து நெகிழ்ந்ததும் கொள்கையும் அன்பும் சரிவிகிதத்தில் கலந்த சரித்திரப்பதிவுகள். எத்தனையோ காதலர்கள் தாங்கள் கொடுத்த காதல் வாக்குறுதிகளை மரணத்துக்குப் பின் நிறைவேற்றிய காவியங்களைப் படித்திருக்கிறோம். ஆனால் `அண்ணா நான் வரும்போது நீ இரவலாகக் கொடுத்த இதயத்தைக் கொண்டுவந்து உன்னிடம் சமர்பிப்பேன்' என்று கருணாநிதி தன் தலைவனுக்காக எழுதிய இரங்கற்கவிதை வரி நிஜமாக வேண்டும் என்பதற்காக, கருணாநிதியின் உடன்பிறப்புகள் மட்டுமல்ல ஒட்டுமொத்தத் தமிழகமும் வேட்கையில் துடித்ததும் அதற்காக சட்டப்போராட்டம் நடத்தி வெற்றிபெற்று நிகழ்ந்ததும் தமிழகம் தன் கண்முன்னே பார்த்த காப்பியச்சுவை. இலக்கியமாய் வாழ்வதுகூட எளிது. ஆனால் பல இலக்கியங்கள் படைத்த கருணாநிதி, தன் மரணத்தையும் இலக்கியமாக மாற்றிவிட்டு மறைந்தார்.

கருணாநிதியின் சாதனைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் அவருடைய முக்கியமான சாதனை பழந்தமிழர் உணர்வை தமிழர்களுக்கு விதைத்ததோடு பழைமைவாதத்தில் மூழ்கிவிடாமல் அதை நவீனத்துடன் சரிவிகிதத்தில் கலந்த தன்மை. உலகம் முழுக்கவே தொன்மங்களை நினைவூட்டும் வரலாற்று முயற்சிகள் உண்டு. ஆனால் பழந்தமிழர் பெருமிதங்களை முன்வைத்தபோது அதை மதமாகவோ பாசிசமாகவோ மாற்றாமல் அதை சமத்துவம், தேசியம், சமூகநீதி போன்ற நவீனச் சிந்தனைகளுடன் இணைத்த பெருமை தி. மு.க.வுக்கு உண்டு. தமிழின உணர்வு, திராவிடத் தேசியம் பேசியபோதும் அதை பாசிசமாக மாற்றாமல் நெகிழ்வுத்தன்மையுடைய ஒன்றாக முன்வைத்தார் அண்ணா.

வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் முன்பிருந்த நிலையை மாற்றுவதுதான் நவீனம் என்று வரையறுத்தால் நவீன தமிழ் சினிமாவை உருவாக்கியவர் கருணாநிதி என்று சொல்லலாம். 'நவீன இலக்கிய அளவுகோல்களின்படி கருணாநிதி எழுத்தாளரே அல்ல' என்று நிராகரிக்கும் நவீன எழுத்தாளர்கள், திரைத்துறையில் இயங்கும் வாய்ப்பு கிடைக்கும்போது அவர்களால் கருணாநிதியின் வசன உயரத்தை எட்ட முடியவில்லை என்பதைப் பார்க்கிறோம். திரைமுகத்தை மாற்றியதில் கருணாநிதிக்கு முக்கியப் பங்கு உண்டு. 'பராசக்தி' என்ற ஒரு திரைப்படம் பகுத்தறிவு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, புலம்பெயர்தலின் வலி, விதவைக்கொடுமை, கல்வியின் மூலம் நவீனப் பெண் உருவாக்கம் தொடங்கி பிச்சைக்காரர்களுக்கான உரிமைகள் வரை பேசியது. நாடகம், சினிமா என்னும் இரண்டு நவீன கலை வடிவங்களிலும் பல சாதனைகளை நிகழ்த்திக்காட்டினார் கருணாநிதி.

Karunanidhi: கருணாநிதி ஒரு கருத்தியல் ஆயுதம்! ஏனென்றால்...

`தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதொழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை' என்னும் திருக்குறளுக்குப் பலரும் உரை எழுதியுள்ளனர். ஆனால் பெரும்பாலும் `தெய்வத்தைக்கூட தொழாமல் கணவனைத் தொழக்கூடிய ஒரு பத்தினிப்பெண், பெய் என்று சொன்னால் மழை பெய்யும்' என்றுதான் உரை எழுதியுள்ளனர்.

பாவேந்தர் பாரதிதாசன்கூட இந்தக் குறளை அடிப்படையாக வைத்து ஒரு கதைப்பாடலை எழுதியிருப்பார். அதிலும்கூட, `பெய்யென பெய்யும் மழை' என்பதை, `தலைவி சொன்னதும் தலைவன், இல்லாதவர்களுக்கு ஈயும் கொடைமழை' என்றே உருவகித்திருப்பாரே தவிர, பத்தினிப்பெண்ணுக்கான வரையறையை மாற்றவில்லை.

Karunanidhi
Karunanidhi

ஆனால் கருணாநிதி தன் திருக்குறள் உரையில், 'இயற்கையாக, சுயவிருப்பத்துடன் சுதந்திரமாகப் பெய்யாமல், ஒருவர் பெய் என்று சொன்னவுடன் பெய்யும் மழை எப்படி அடிமைத்தனம் நிரம்பியதோ அதேபோல்தான் கடவுளைக்கூட தொழாமல் கணவனைத் தொழும் பெண்ணும் அடிமைத்தனம் நிரம்பியவள்' என்ற பொருளில் உரை எழுதி, நவீனச் சிந்தனையை நிறுவினார். அவருடைய 'குறளோவியம்' முழுக்கவே இத்தகைய நவீனச் சிந்தனையைக் காணலாம்.

கலை, இலக்கியத் தளங்களுடன் கருணாநிதியின் நவீனம் நின்றுவிடவில்லை. அரசியல் தளங்களிலும் விரிவடைந்தது. இன்று தமிழகத்தில் காணப்படும் சாலைகள், பூங்காக்கள், பாலங்கள் போன்ற உள்கட்டமைப்பு, ஆரம்ப சுகாதார மையம் தொடங்கி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வரையிலான சுகாதாரக் கட்டமைப்பு எனப் பல நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி, கருணாநிதியின் பங்களிப்புகள். குறிப்பாக ஐ.டி. துறையில் தமிழக இளைஞர்கள் பலர் பங்குபெற்றதற்கான அடித்தளத்தை நீண்டகாலத்துக்கு முன்பே அவர் உருவாக்கினார்.

Karunanidhi
Karunanidhi

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம், சிதம்பரம் கோயிலைத் தீட்சிதர்களிடமிருந்து மீட்டது, கலப்புத் திருமணத் தம்பதிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, கலப்புத் திருமணம் செய்வோருக்கு உதவித்தொகை, கலப்புத் திருமணம் என்றால் இருவரில் ஒருவரில் தாழ்த்தப்பட்டவராக இருக்கவேண்டும் என்ற வரையறை, இலங்கை அகதிக்குழந்தைகளும் தமிழகத்தில் கல்வி பெற வாய்ப்பு, கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு, நுழைவுத்தேர்வு ரத்து, பொறியியலில் தமிழ்வழிக்கல்வி, முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை ஆகியவை தமிழர்கள் முன்னேறிய நவீன வாழ்க்கையை வாழ்வதற்காக கருணாநிதி உருவாக்கித் தந்த திட்டங்கள். தி,மு,க,வினரின் படைப்புகளிலும் மேடைப்பேச்சுகளிலும் ஆணாதிக்கக்கூறுகள் இருந்தன. பெரியாரிடமிருந்து அவர்கள் விலகிய முக்கியப் புள்ளி இது. ஆனால் பெண்களுக்கான சொத்துரிமை, உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு போன்றவற்றின் மூலம் பெண்கள் கல்வி கற்க, வேலைபெற, வாழ்வாதாரத்தை உருவாக்கிக்கொள்வதற்கான வாய்ப்புகளை கருணாநிதி உருவாக்கினார். கருணாநிதியின் பல அரசியல் முயற்சிகள் நீதிமன்றங்களாலும் மத்திய அரசாலும் அவரது அரசியல் எதிரிகளாலும் கருத்தியல் எதிரிகளாலும் முறியடிக்கப்பட்டன. இதனால் தமிழர்கள் இழந்தது அதிகம்.

மாநில அரசின் அதிகாரம் வரம்புக்குட்பட்டதே என்பதை உணர்ந்த அவர் தொடர்ந்து மாநில சுயாட்சிக்காகக் குரல் கொடுத்தார். தேசிய அரசியலில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தபோது அதை நிராகரிக்காமல் மாநிலங்களின் உரிமைகளை மதிக்கும் மதிப்பீடுகளை தேசிய அரசியலில் உருவாக்க முயன்றார். இந்திராகாந்தியின் எமெர்ஜென்சிக்கு எதிராகத் தன்னந்தனித் தலைவராய் கருணாநிதி போராடியது ஒரு ஜனநாயக வரலாறு. காவிரி நடுவர்மன்றம், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து, மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமலாக்கத் துணைநின்றது என்று தேசிய அரசியலிலைத் தன் அரசியல் இலக்குகளை எட்டுவதற்குப் பயன்படுத்தினார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மாநில அரசுகளின் உரிமைகளை மதிக்கும், நெகிழ்வுத்தன்மையுடைய கூட்டணி அரசுகளை உருவாக்கும் முயற்சிகளில் அவர் பங்கு இருந்தது.

அவருடைய எழுத்துநடை என்பது மாறவில்லை. நிச்சயமாக அவர் நவீன எழுத்தாளரல்ல. ஆனால் நவீன இலக்கியங்கள், விமர்சனங்களை அவர் தொடர்ந்து வாசித்துக்கொண்டுதான் இருந்தார். 'பெரியார் ?' என்ற தன் குறுநூலை வாசிக்க வேண்டும் என்று கருணாநிதியின் உதவியாளர், தன்னை இரவில் தொடர்புகொண்டதை அ.மார்க்ஸ் பதிவு செய்திருக்கிறார். கருணாநிதியைச் சந்தித்தபோது, `` `கோவேறு கழுதைகள்' நாவலைவிட `செடல்' முக்கியமான படைப்பு' என்று அவர் சொன்னதாக இமையம் பதிவு செய்திருக்கிறார். வைரமுத்து முதல் இமையம் வரை அவர் வாசித்திருக்கிறார்.

'திராவிடக் கட்சிகளில் இடைநிலைச்சாதிகளின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. தலித் மக்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் இல்லை' என்பது சிறுபத்திரிகைகளில் தலித் எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் முன்வைத்த குற்றச்சாட்டு. இதுகுறித்து கருணாநிதி எங்கும் எதிர்வினை செய்ததில்லை என்றாலும் `மாவட்ட அளவில் நியமிக்கப்படும் மூன்று துணைப்பொதுச்செயலாளர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்டவராகவும் ஒருவர் பெண்ணாகவும் இருக்கவேண்டும்' என்ற விதியைத் தி.மு.க.வில் கொண்டு வந்ததன்மூலம், இத்தகைய விமர்சனங்களை அவர் படித்தார் என்று யூகிக்கலாம்.

`மரணதண்டனை எதிர்ப்பு' என்னும் நிலைப்பாட்டை வலியுறுத்தினார். சாதி, வர்க்கம் போன்றவற்றை மையப்படுத்திய அரசியலைத் தாண்டியும் விளிம்புநிலை மக்களுக்கான உரிமைகள் பேசப்பட்ட காலமிது. இதைப் பேசியவர்கள் அறிவுத்தளத்தில் செயற்பட்ட சிறுபான்மையினரே. ஆனால் அதை வெகுமக்கள் தளத்தில் சட்டவடிவம் கொடுத்தது கருணாநிதியின் முக்கியப் பங்களிப்பு. திருநங்கைகளுக்கான நலவாரியம் உருவாக்கியது, உடல் ஊனமுற்றவர்கள் என்று அழைக்கப்பட்டவர்களை `மாற்றுத்திறனாளிகள்' என்று அழைத்ததோடு அவர்களுக்கான நலத்திட்டங்களை உருவாக்கியது ஆகியவை அவரது நவீனச் சிந்தனைகளின் விளைச்சல்.

கணினி பயன்பாட்டுக்கு வந்தபோது, கருணாநிதி தானாகவே முன்வந்து கணினி கற்றுக்கொண்டார். ஃபேஸ்புக் என்னும் சமூகவலைதளத்துக்கு வந்த முதல் அரசியல் தலைவரும் கருணாநிதிதான். காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக்கொண்ட நவீன உணர்வுதான் அவரை உயிரோட்டத்துடன் இயங்கவைத்தது.

Karunanidhi: கருணாநிதி ஒரு கருத்தியல் ஆயுதம்! ஏனென்றால்...

இன்று கருணாநிதி இருந்திருந்தால் அண்ணா குறித்த ஒரு வெப் சீரிஸுக்கு வசனம் எழுதியிருப்பார்; ட்விட்டரில் கமல்ஹாசன் எழுதும் கவிதைகளுக்கு பகடிக் கவிதைகள் எழுதி பதில் சொல்லியிருப்பார்; 'சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம்' என்று உளறிய எடப்பாடியை எள்ளி நகையாடியிருப்பார், 370 பிரிவு நீக்கத்தை எதிர்த்து, காஷ்மீரத்துச் சிங்கம் ஷேக் அப்துல்லாவுடனான தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு மாநில சுயாட்சி குறித்த அறிக்கை விடுத்திருப்பார், `ஓ.பி.ரவீந்திரநாத்தின் செயற்பாடுகள் எப்படி?' என்று ஏதாவது பத்திரிகையாளர் கேட்டால், `அந்தப் பெரியகோழியைத்தான் பாராளுமன்றத்திலேயே பஞ்சாரத்தில் அடைத்துவிட்டாரே பாலு' என்று நகைச்சுவை ததும்ப பதில் அளித்திருப்பார். அந்தக் கலைஞரைத்தான் நாம் இப்போது இழந்திருக்கிறோம்.

கருணாநிதி ஓய்வெடுத்தாலும் அவருடைய பேச்சுகளோ எழுத்துகளோ கருத்தியலோ ஓய்வெடுக்கப்போவதில்லை. ஏனெனில் கருணாநிதி ஒரு கருத்தியல் ஆயுதம்!

'கலைஞரின் கலைப்பயணம்' தொடரில் இருந்து...

" 'உலகம் சுற்றும் வாலிபன்' படப்பிடிப்புக்காக எம்.ஜி.ஆர். அவர்கள் வெளிநாடு சென்றபோது, விமான நிலையம் சென்று அவரை வழியனுப்பி வைத்தார் கருணாநிதி. அதுகுறித்து அப்போது வெளிவந்த பிரசித்தி பெற்ற கலைத் துறை ஏடான 'பொம்மை' இதழில், எம்.ஜி.ஆர். எழுதியிருந்த கட்டுரையின் ஒரு பகுதி வருமாறு...

"அண்ணா அவர்கள் வந்திருந்து முன்பு மாலை அணிவித்த அதே விமானக் கூடத்தில், அண்ணாவைத் தேடினேன். அண்ணா இல்லை என்பது எனக்குத் தெரியாதா? நன்கு தெரியும் ஆனாலும், உள்ளத்திலிருந்த எண்ணம், அண்ணா வந்து என்னை வாழ்த்தி வழியனுப்ப வேண்டுமே என்பதுதான். நான் அந்தப் பேராசையோடு சுற்றிலும் பார்த்தேன். சுற்றியலைந்த கண்களுக்கு முன் அதோ வருகிறார்! இதோ, அருகில் வந்துவிட்டார்! போலீஸ் அதிகாரிகள் அவரை என் அருகில் அழைத்து வர உதவினார்கள். ஆமாம். கலைஞர் கருணாநிதியின் உருவில் அண்ணா என்னைத் தேடி வந்தார்! அண்ணாவைப் போல் என்னைவிட வயதில் மூத்தவரில்லாவிடினும், அண்ணாவுக்குரிய தகுதியைப் பெற்ற கலைஞர் என் கழுத்தில் மாலையை அணிவித்தார். நான் உணர்ச்சிவயப்பட்டிருந்தபோதே அவர் தன்னைச் சமாளித்துக் கொண்டு, அதிகாரிகளுக்குக் கட்டளை இட்டார், வண்டியை நேராக விமானத்துக்கு அருகில் கொண்டு செல்லும்படி!"

கலைஞர் கருணாநிதி எழுதிய இந்தத் தொடரை APPAPPO ஆப்பில் முழுவதும் படிக்கலாம்! -> http://bit.ly/KalaignarKalaipayanam