Published:Updated:

மகாத்மாவின் மனம் கவர்ந்த மகாத்மா

மகாத்மா காந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
மகாத்மா காந்தி

சாஸ்திரியாரும் காந்திஜியும் ஒரே ஆண்டில் பிறந்தவர்கள்.

1946 - ம் ஆண்டு ஜனவரியில் ஒரு நாள் ஜெனரல் ஆஸ்பத்திரி ஸ்பெஷல் வார்டில் முன் அறிவிப்பு எதுவுமின்றி காந்திஜி இரு ஆசிரமம் பெண்களுடன் பிரவேசித்தார். தம் நன்மதிப்பைப் பெற்ற வரும், தம் சகோதரன் பன் 31) கருதப்பட்டவருமான (மகாகனம் ஸ்ரீனிவாச) சாஸ்திரியாரை காந்திஜி கண்கள் தேடின. ஆஜானு பாகுவாக தலைப்பாகையுடன் ராஐ களையுடன் விளங்கும் உருவம், வாடி உருக்குலைந்து படுக்கையில் இருப்பதைக் காண காந்திஜியின் கண் கலங்கியது.

காந்திஜியைக் கண்டவுடன் சாஸ்திரியார் எழுந்திருக்க முடியாமல், பிரயாசையுடன் படுக்கையில் உட்கார்ந்து காந்திஜியின் கைகளைப் பிடித்துக் கொண்டு-

“உங்கள் அருகில் வந்து உங்களை அன்புடன் கட்டிக் கொள்ள வேண்டும் என்று ஆசையாயிருக்கிறது. ஆனால், என்னால் அசையக் கூட முடியவில்லையே!” என்றார்.

காந்திஜி, சாஸ்திரி அருகில் குனிந்து அவரை ஆசுவாசப் படுத்தினார்.

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

சாஸ்திரியார் ஹீனஸ்வரத்துடன் -

“உங்களிடம் ஒன்று சொல்ல நீண்ட நாட்களாகவே விரும்பினேன் உலகில் அமைதி நிலவ மற்றொரு சந்தர்ப்பம் கை தவறிப் போய் விட்டது. மணமகள் இல்லாமல் திருமணம் நடத்துவது போல, நீங்கள் இல்லாமல் சமாதானம் நிலவச் செய்வது பற்றி மகாநாடு கூட்டிப் கொண்டிருக்கிறார்கள். மனித குலத்தின் நன்மைக்காக உங்களைத் தவிர யாரால் திறமையாக வாதாட முடியும்?

“உங்களை சமாதான மகாநாட்டிற்குத் தேர்ந்து அனுப்பாததன் மூலம் இந்தியா கடமை தவறி விட்டது. அவர்களாகக் கூப்பிடா விட்டாலும் நீங்கள் அவசியம் அம்மகா நாட்டிற்குச் செல்ல வேண்டும். அம் மகாநாட்டில் நீங்கள் பங்கு பெற்றாலே போதும்”.

காந்திஜி - இந்த உடம்பு நிலையில் ஏன் இதைப் பற்றி எல்லாம் கவரைப்படுகிறீர்கள்? நான் தங்களுடன் அரசியலைப் பற்றிப் பேச வரவில்லையே!

சாஸ்திரி - இந்த உடம்பு நிலையில் ஏன் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படுகிறீர்கள்? நான் தங்களுடன் அரசியலைப் பற்றிப் பேச வரவில்லையே!

காந்திஜி சிரித்துக் கொண்டே “உங்களுடைய இந்த நிலைமையில் லாயக்கில்லை தான்“ என்றார்.

மகாத்மா காந்தி மதுரை, பழநி முதலிய இடங்களுக்குச் சென்று விட்டு ஒரு வாரம் கழித்து ( ஜனவரி 30 - ந் தேதி ) மீண்டும் சாஸ்திரி யாரை ஆஸ்பத்திரியில் சந்தித்தார்.

சாஸ்திரியார் நன்றிப் பெருக்குடன் கூறியதாவது : “இவ்வளவு அலுவல்களுக்கிடையேயும் என்னை வந்து பார்த்ததன் மூலம் என்னைப் பெரிதும் கௌரவித்திருக்கிறீர்கள். என் சகோதரர்கள், புத்திரர்கள், மற்றும் உறவினர்கள் எல்லாரையும் விட நீங்கள் எனது நெருங்கிய உறவினர், ஏதோ ஒரு சக்தி மூலம் நாம் இருவரும் பிணைந்தோம். நம் நட்புக்கு இதுதான் காரணம் என்று எதையுமே சொல்ல முடியாது. கோகலே நாம் ஒன்று சேர காரணமாக இருந்திருக்கிறார், இதற்கு மேல் நான் எதுவும் பேச விரும்பவில்லை. மறுபடியும் உங்களை எங்கே காணப் போகிறேன்?” என்றார் குரல் தழு தழுக்க.

மகாத்மா மிக உறுதி படைத்தவர்தான். நண்பரின் இவ்வார்த்தைகள் அவரை உலுக்கிவிட்டன. பிரிய மனமில்லாமல் ஆஸ்பத்திரியை விட்டுச் சென்றார், அதன் பின் அவ்விருவரும் சந்திக்கவே இல்லை. இந்த சந்திப்பிற்கு இரண்டு மாதங்கள் கழித்து சாஸ்திரியாரும் இரண்டு வருடங்கள் கழித்து (அதே ஜனவரி 30-ல்) காந்திஜியும் நம்மை விட்டுப் பிரிவார்கள் என்று யார் எதிர்பார்த்தார்கள்!

காந்திஜிக்கு 1924 - ல் பூனாவிலுள்ள ஸஸூன் ஆஸ்பத்திரியில் சஸ்திர சிகிச்சை நடைபெற விருந்தது. மயக்க மருந்து கொடுப்பதற்கு முன் உங்களுக்கு யாரையாவது பார்த்துப் பேச வேண்டுமா?” என்று டாக்டர்கள் காந்திஜியைப் பார்த்துக் கேட்டனர்.

“ஆமாம்! சாஸ்திரியாரைப் பார்க்க வேண்டும்” என்று பதில் வந்தது.

அரசியலில் இருவரும் பின்பற்றிய வழிகள் ஒன்றுக்கொன்று நேர்மாறானவை. ''எங்களுக்கிடையே அரசியல் துறையில் வேறுபாடுகள் இருந்த போதிலும் எங்கள் மனம் இரண்டும் ஒருமித்திருந்தன. அவருடைய தேசபக்தி, மற்ற தேசபக்தனுடைய தேச பக்திக்கும் எள்ளளவேனும் குறைந்ததல்ல” என்று மகாத்மா காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.

அரசியல் உலகிலே மகாகனம் ஸ்ரீனிவாச சாஸ்திரியாரின் பிரவேமும் உழைப்பும் பெருமை மிகுந்தவை. அக்காலத்தில் அரசியலில் பெயர் எடுக்க பிரபலமாக உள்ள கட்சிக்கு ஒத்து ஊதுவதும், கூட இருந்து கோஷம் போடுவதும் சுலபமான வழிகள். ஆனால், பொது ஜன செல்வாக்கும் மதிப்பும் பெற்றுள்ள கட்சியை நேர்மை எதிர்த்து அக்கட்சியின் குறைபாடுகளை எடுத்துக் கூறும் தைரியம் சாஸ்திரியார் ஒருவருக்கே இருந்தது.

ஆகையால் தான் காந்திஜியின் நன்மதிப்பை அவர் எப்போதும் பெற்றிருந்தார். சாஸ்திரியாரின் உண்மையான உள்ளப் போக்கை காந்திஜி மட்டுமே நன்றாக அறிந்திருந்தார் என்று சொன்னால் மிகையாகது.

சாஸ்திரியாரும் காந்திஜியும் ஒரே ஆண்டில் பிறந்தவர்கள். காந்திஜி பிறப்பதற்கு பத்து நாட்கள் முன்பு சாஸ்திரியார் பிறந்தார். இவ்விருவர் நூற்றாண்டு விழாவும் இந்த ஆண்டிலேயே கொண்டாடப்படுவது மிக்க விசேஷம். இதிலிருந்து கூட இவர்கள் நட்பின் விரேஷத்தை உணரலாம்.

இவர்கள் இருவரும் முதன் முதலில் சந்தித்தது 1915-ல், காந்திஜி தென் ஆப்பிரிக்காவிலிருந்து தாய் நாட்டுக்குத் திரும்பிய பின் தமிழ் நாட்டுக்கு முதல் தடவையாக விஜயம் செய்தார். ஜி. ஏ. நடேசன் காந்திஜியை வரவேற்று தம் விருந்தினராக உபசரித்தார். இவர் மூலமே சாஸ்திரியார் காந்திஜியின் நண்பரானார்.

மகாகனம் சாஸ்திரியார் காந்திஜியுடன் தஞ்சை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடிக்குச் சென்றார். தென்னாப்பிரிக்கா சத்யாக்கிரகத்தில் உயிர் நீத்த வள்ளியம்மை, நாகப்பன் இவர்களுடைய சொந்த ஊர் தரங்கம்பாடி. இவர்கள் குடும்பத்தினரை சந்திக்க மகாத்மா விரும்பியதால் இந்த பிரயாணம் ஏற்பாடு செய்யப் இதற்கான முழுப் பொறுப்பை ஏற்றவர் சாஸ்திரியார் தான்.

1920 - ம் ஆண்டு காந்திஜி தமது ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்த போது சாஸ்திரியார் அவ்வியக்கத்தைப் பலமாகத் தாக்கி, அதை நடத்தக் கூடாது என்று கருத்து தெரிவித்தார். எனினும் இவர்கள் நட்பு இதனால் சிறிதும் பாதிக்கப்படவில்லை.

இருவருமே கோபாலகிருஷ்ண கோகலேயை தங்கள் குருவாகக் கொண்டவர்கள். “கோகலேயின் பிரதான சீடனாக நானே இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் சாஸ்திரியார் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டு விட்டார். அந்தப் பதவிக்கு தகுதியுள்ளவர்தான். ஆகவே, மனமார விட்டுக் கொடுக்கிறேன்.“ என்று காந்திஜி ஒரு சமயம் குறிப்பிட்டார்.

தம் வழியை குறை கூறுபவர் என்ற போதிலும் முக்கியமான விஷயங்களில் காந்திஜி, சாஸ்திரியாரைக் கலந்து பேசத் தவறியதில்லை.

1946 - ம் ஆண்டு காந்திஜி கடைசி தடவையாக சென்னைக்கு வந்திருந்த சாஸ்திரியாரை ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் போய்ச் சந்தித்தார். இந்த சந்திப்பு பற்றி காந்திஜி எழுதியதாவது:' நோயுற்று படுக்கையில் இருந்த போதும் அவர் பேச்செல்லாம் இந்தியாவைப் பற்றியும், அதன் பண்பைப் பற்றியுமேதான். சாஸ்திரி யார் அவற்றிற்கெனவே வாழ்ந்து உயிர் நீத்தார். ' '

(1969-08-17 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)