Published:Updated:

வரலாற்று மனிதர்கள் - மகாத்மா காந்தி

Mahatma Gandhi
பிரீமியம் ஸ்டோரி
News
Mahatma Gandhi

‘மக்களை திரட்டுகிற அற்புதத்தை முதன் முதலில் நிகழ்த்தியவர் காந்தி...‘

காந்தியைப்பற்றி ஏழு அவதூறுகள் :

காந்தி என்றதும் என்ன ஞாபகம் வருகிறது உங்களுக்கு ? அவர் ஜாதியை வாழ்நாள் முழுக்க ஆதரித்தார், அவர் போஸ், பகத் சிங்குக்குத் துரோகம் செய்துவிட்டார். அவர் பழமைவாதி, அவர் சிந்தனைகள் இன்றைக்குப் பொருந்தாது, காந்தி தான் இந்தியப்பிரிவினைக்குக் காரணம். எல்லாம் இருக்கட்டும். இதில் எவை உண்மை என்று தேடியிருக்கிறீர்களா ? ஒரே ஒரு பத்து நிமிடங்கள் மனதைத்திறந்து வைத்துக்கொண்டு தேடலாம் வாங்கள்.

காந்தி ஒரு தீவிர இந்து :

காந்தி இந்து மதக்கோட்பாடுகளால் மட்டும் கவரப்பட்டவர் அல்ல. அவர் சமண மதத்தின் கருத்துக்கள், கிறிஸ்துவத்தின் அன்புநெறிகள், இஸ்லாமின் கருத்துக்கள் ஆகியவற்றாலும் செதுக்கப்பட்டவர். எல்லா மதத்தில் உள்ள தீயனவற்றை நிராகரிப்பது நம்முடைய கடமை என்று அவர் கருதினார். கோயில்களுக்கு இவ்வளவு செலவு செய்வது ஏன்? அவை வேசியர் விடுதிகள் போலத்தான் இருக்கின்றன என்றார் அவர். தேவதாசி முறை ஒழிப்புக்கு அவர் குரல் கொடுத்தார். தன்னுடைய ராமன் அயோத்தி ராமனில்லை என்று தெளிவுபடச்சொன்னார். ‘குதாயீத் ராஜ்ஜியம்’ என்று இஸ்லாமியர்கள் முன்னரும், ‘கர்த்தரின் ராஜ்ஜியம்’ என்று கிறிஸ்துவர்கள் மத்தியில் இருக்கும் பொழுதும் சொல்வேன் என்றும் காந்தி குறிப்பிட்டார்.

Mahatma Gandhi
Mahatma Gandhi

காந்தி வர்ணாசிரமத்தை தூக்கிப்பிடித்தவர் :

காந்திக்கு ஜாதி அமைப்பு பற்றிய புரிதல் படிப்படியாக மாறியது என்பதே உண்மை. அவர் ஆரம்பக்காலங்களில் வர்ணாசிரமம் இத்தனை காலம் உயிர்த்திருக்க எதோ காரணம் இருக்க வேண்டும் என்று நம்பினார். எல்லா வர்ணங்களும் சமம் என்று அவர் பேசினார். காலப்போக்கில் தன்னுடைய கருத்துக்களை மாற்றிக்கொண்டார். “அம்பேத்கர் இந்துமதத்தை விட்டுப்போனால் அதற்கு நாமே காரணம். அவ்வளவு அநியாயங்களை நாம் செய்திருக்கிறோம். அவர் செருப்பால் நம்மை அடித்தாலும் திருப்பித்தாக்காமல் வாங்கிக்கொள்ள வேண்டும்.” என்று அவர் சொல்கிறார். பத்தாண்டுகள் விடுதலைப்போரை நிறுத்தி வைத்துவிட்டு ஹரிஜன சேவையில் அவர் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.

ஆலய நுழைவு போராட்டங்களைத் தீவிரமாக முன்னெடுத்தார். குற்றாலத்தில் தீண்டாமையைப் பின்பற்றுவதால் குளிக்க மாட்டேன் என்று கிளம்பினார். கேரளாவின் கொடிய ஜாதிய செயல்பாடுகளைப் பார்த்துப் பைத்தியக்காரர்கள் விடுதி என்றார். ‘கோவிலுக்குள் அரிசனங்களை அனுமதித்தால் மட்டுமே தானும் கோவிலுக்குள் காலடி எடுத்துவைப்பேன்!’ என்று சொல்லி மதுரை கோவிலுக்குச் செல்வதைப் புறக்கணித்தார். அரிசனங்களை அனுமதிக்காத பூரி ஜகநாதர் ஆலயத்துக்குப் போய் வந்த மனைவியிடம் சண்டை பிடித்தார். பீகாரில் நிலநடுக்கத்தில் எண்ணற்ற மக்கள் இறந்த பொழுது தீண்டாமையைப் பின்பற்றியதால் கடவுள் கொடுத்த தண்டனை என்று அறிவித்தார். அவரின் வார்த்தைகளில் அந்த வரிகள் இவை : “பீஹார் பூகம்பப் பேரழிவைப் பொருத்தமட்டில் அது, தீண்டத்தகாதவர்கள் எனச் சொல்கிறோமே, அவர்களுக்கு எதிராக நாம் இதுவரை செய்து வந்ததும், இன்னும் செய்துகொண்டிருப்பதுமான மா பாவத்திற்கான இறைத் தண்டனை என்றே நான்நம்புகிறேன். நீங்களும் இந்த விஷயத்தில் என்னைப்போல “மூடநம்பிக்கை” உள்ளவராக இருக்க வேண்டுமெனவே விரும்புகிறேன்.”

அவரை இந்து சனதானிகள் ஐந்து முறை கொல்ல முயற்சி செய்தார்கள். காஞ்சி சங்கராச்சாரியார் ஆதரவில் அவருக்கு எதிராகப் பத்திரிக்கை வெளியிடப்பட்டது. இந்து மதத்தின் எதிரி என்று காந்தியை எதிர்த்தார்கள்.

“எல்லாரும் ஒரே வர்ணம். யார் என்ன வர்ணம் என்று தீர்மானிக்க நான் யார்.” என்று 1936-ல் காந்தி பதிகிறார். ‘தலித்தை கலப்புத்திருமணம் செய்து கொள்ளாதவர்கள் என்னைப்பார்க்க வராதீர்கள், உங்களுக்கு என் ஆசிகள் இல்லை.’ என்றும் அவர் அறிவித்தார். அண்ணல் அம்பேத்கரை சட்ட வரைவுக்குழுவில் சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றினார் அவர். கேரை தேர்தலில் நிற்பதில் இருந்து காந்தியின் காங்கிரஸ் விலக்கி அம்பேத்கர் உறுப்பினர் ஆவதையும், வரைவுக்குழு தலைவர் ஆவதையும் உறுதி செய்ததை நோக்க வேண்டும்.

காந்தியை கோட்சே கொன்றது சரி; பாகிஸ்தான் உருவாக அவரே காரணம் :

பாகிஸ்தான் ஆறே வருடங்களில் பெறப்பட்டது என்றால் அப்பொழுது பெரும்பாலும் காந்தி சிறையில் இருந்தார் என்பதையும் இணைத்தே பேச வேண்டும். வெள்ளையர்கள் பிரிவினைக்கான விதைகளை மின்டோ-மார்லி சீர்திருத்தங்களின் பொழுதே ஊன்றி இருந்தார்கள். காங்கிரசும் இஸ்லாமியர்களை உள்ளுக்குள் சேர்க்க முயற்சிகளைக் கை விட்டது. கட்சியில் இருந்த வலதுசாரிகளும் ஒரு காரணம். பசுவதையைக் காந்தி எதிர்த்தார் என்றாலும் அதைத் திணிக்கக் கூடாது என்பது அவரின் பார்வையாக இருந்தது. மதம் மாறுவதில் அவருக்கு ஒப்புமை

இல்லையென்றாலும் மதமாற்றத்தை தடை செய்யச் சட்டம் வந்த பொழுது அதை அவர் எதிர்த்தார். கீதையை அகிம்சையைப் போதிக்கும் நூலாகவே அவர் கட்டமைத்தார். இவற்றையெல்லாம் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷத்துக்கு ஜின்னா திருப்பிக்கொண்டார். சோசியலிசம் மக்களைக் காத்துவிடும் மதமெல்லாம் பெரிய சிக்கலில்லை என்று நேரு முதலியோர் நினைத்தார்கள். ஜின்னா இந்து இந்தியாவில் வாழ முடியாது என்கிற எண்ணத்தை உண்டு செய்து வென்றார்.

இந்துத்வாவுக்கு எதிராகக் காந்தி தொடர்ந்து குரல் கொடுத்தார். அவர்களைப் ‘பாசிஸ்ட்கள்’ என்றே அழைத்தார். அவர்களால் பலமுறை கொலை செய்யப்படுவதில் இருந்து தப்பினார். அவர்கள் வலியுறுத்திய வன்முறை சார்ந்த இந்து மதத்தைத் தீவிரமாக நிராகரித்தார்.

“என் குரலை கேட்பவர் யாருமில்லை. நான் இருளில் உழல்கிறேன் என்று காந்தி பிரிவினையை நோக்கி தேசம் நகர்ந்த பொழுது கண்ணீரோடு பதிவு செய்தார்.” ,”என் பிணத்தின் மீது பிரிவினை நிகழட்டும்” என்ற காந்தி, அதற்கு ஒப்புக்கொள்ளும் சூழலுக்குக் கடுமையான வன்முறை மற்றும் கொலைகளால் தள்ளப்பட்டார். ஆனால், மதக்கலவரத்தின் காயங்களை ஆற்ற ஒரே ஆளாக அவரே டெல்லி, வங்கம் என்று எங்கெங்கும் முயன்றார். இறுதியில் இந்துத்துவ வெறியனால் அவர் கொல்லப்பட்டார் என்பதும் வரலாறு.

மதச்சார்பின்மைக்கும், காந்திக்கும் சம்பந்தமில்லை :

1933-ல் இருந்து தன்னுடைய இறப்பு வரை ‘மதச்சார்பின்மை’ என்கிற வார்த்தையைத் தொடர்ந்து காந்தி பயன்படுத்தியவாறே இருந்தார். மதத்தைக் கொண்டு அதன் தவறுகளை நீக்கி தன்னுடைய அரசியலை கட்டமைக்க முயன்ற காந்தி அதே மதம் வெறுப்புக்கான காரணமாக ஆனதை பார்த்து வெறுத்துப்போனார். “என் மதத்துக்காக நான் உயிரையும் கொடுப்பேன். அதே சமயம் இந்த நாட்டின் சர்வாதிகாரி ஆனால் அரசியலும் மதமும் பிரிந்தே இருக்கும். ஒன்றில் இன்னொன்றுக்கு வேலையில்லை!” என்று அவர் அறிவித்தார்.

படேல் சோம்நாத் ஆலயத்துக்கு நிதி திரட்டிய பொழுது அதைப் பழைய காயங்களைக் கிளறிவிடும் என்று கண்டித்தார். அந்த நிதி பிரிவினையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவப் பயன்படட்டும் என்று சொன்னார். கொல்கத்தாவில் கிறிஸ்துவ மிஷினரி நபர்களைப் பார்த்த பொழுது அரசாங்கம் எந்த மத அமைப்புக்கும் உதவி செய்யாது என்று தெளிவுபடுத்தினார். மதங்களுக்கு இடையேயான உரையாடல் தொடர்ந்து நிகழவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அவர் மதச்சார்பின்மை கொண்ட தேசமாகவே இந்தியா இருக்கும் என்றார். அதை நேரு சாதித்துக்காட்டினார்.

காந்தி ஒரு பழமைவாதி, நடைமுறை அறிவற்றவர் :

பெண்கள் இல்லாத சட்டசபையைப் புறக்கணிப்பேன் என்றார் காந்தி. பெண்களை அரசியலில் ஈடுபடுத்தியதில் மிகப்பெரிய பங்கு அவருடையது. ஒத்துழையாமை இயக்கம் தோற்றதும் மக்கள் இன்னமும் கருத்தியல் ரீதியாகத் தயாரில்லை என்று உணர்ந்து அவர்களைத் தயார் படுத்தினார். ஆயுதங்கள் வைத்துக்கொள்ளும் உரிமை மீண்டும் வேண்டுமென்று ஆங்கிலேய அரசுக்கு உப்புச் சத்தியாகிரகப் போரின் பொழுது கோரிக்கை வைத்தார். ‘மக்களை முதன் முதலில் திரட்டுகிற அற்புதத்தைக் காந்தியே நிகழ்த்தினார்.’ என்று ஜோதி பாசுவே புகழாரம்

சூட்டியிருக்கிறார். பெண்கள் ஆண் யாரேனும் வன்புணர்வு செய்ய முயலும் பொழுது தன்னுடைய நகங்கள் முதலியவற்றால் அவனைத்தாக்கி தப்பிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியிருக்கிறார். இந்த நாட்டின் இறையாண்மைக்கு ஒரு கேடு வருமென்றால் ஆயுதம் ஏந்துவதை ஆதரிக்கும் முதல் ஆளாக நானிருப்பேன் என்று அவர் பதிவு செய்தார்.

வெள்ளையனே வெளியேறு இயக்க காலத்தில் அவர் அரச வன்முறைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த பொழுது “மக்களின் வன்முறையைக் கண்டிக்க மாட்டீர்களா?” என்று கேட்கப்பட்டது , “மிகப்பெரிய வன்முறை எதுவோ அதைத்தான் கண்டிக்கிறேன். மக்கள் வேறு வழியில்லாமல் இப்படிச் செயல்பட்டார்கள். அவர்களைக் கண்டிக்க மாட்டேன்.” என்று அவர் தெளிவுபடுத்தினார். லூயிஸ் பிஷருக்கு தந்த பேட்டியில், “நில சீர்திருத்தத்தின் பொழுது முதலாளிகளுக்கு இழப்பீடு தரப்பட மாட்டாது. காவல்துறையைக் கொண்டே அவற்றை மீட்போம்” என்றார். தொழில்நுட்பத்தின் மீது தீவிரமான விமர்சனத்தை வைத்தாலும் அதைப் பயன்படுத்தி மக்களைச் சென்றடையும் நடைமுறை யதார்த்தத்தைத் தான் விடமாட்டேன் என்றவர் அவர்.

Mahatma Gandhi
Mahatma Gandhi

காந்தி பகத் சிங்கை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை :

காந்தி கறாரானவர். அவர் சொல்லி பகத் சிங் ஆயுதம் ஏந்தாத பொழுது அந்தச் செயலைத் தான் ஆதரிக்க முடியாது என்பதில் தெளிவாக இருந்தார். காந்தி இறுதிவரை பகத் சிங்கை காக்க முயன்றதற்கான கடித ஆதாரங்கள் இருக்கின்றன. பகத் சிங்கை தன்னுடைய வழிதவறிப்போன மகன் போலத்தான் காந்தி பாவித்தார். பகத் சிங் ஒரு வீரனின் மரணத்தையே விரும்பினார். கருணை மனு அனுப்பிய தந்தையைக் கடுமையாக அவர் கண்டித்தார் என்பதைக்காணவேண்டும். அதே சமயம் பகத் சிங்குக்கான கருணை மனுவின் இறுதி வடிவத்தைக் காங்கிரஸ்காரரான பகத்சிங்கின் வக்கீல்ஆசப் அலி உருவாக்கிய பொழுது அதைச் சீர்திருத்தி சமர்ப்பிக்கச் செய்தவரே காந்தி தான்.

காந்தி நேதாஜிக்குத் துரோகம் செய்துவிட்டார் :

நேதாஜி காங்கிரஸ் தலைவராகப் பர்மாவில் இருந்த பொழுது ஆக முயற்சி முன்னெடுப்பை துவங்கியவரே காந்தியடிகள் தான். தீவிரவாதப்போக்கை நோக்கி கட்சியைப் போஸ் அவருக்கு எதிராகக் காந்தியை திருப்பியிருந்தது . அவர் ஆக்கிய கட்சி அது. தேர்தலில் போஸ் வென்றதும் அது தன்னுடைய தோல்வி என்று காந்தி சொன்னதற்குப் பிறகு போஸ் தன்னுடைய வழியில் கட்சியை நடத்த முயன்றார். “என்னை ஏற்காதவர்கள் எல்லாரும் வலதுசாரிகள்!” என்று அவர் சொன்னது எதிரிகளை அதிகப்படுத்தியது. கட்சியைக் காந்தி தலைமையேற்கட்டும், என் வழியில் போராட்டம் நடக்கட்டும் என்று போஸ் சொன்னதைக் காந்தி ஏற்கவில்லை. அவர் வழியில் நடக்கட்டும் என்று விட்டுவிட்டார். ஏற்கனவே சில ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியை விட்டு காந்தி விலகியிருந்ததைக் கவனிக்க வேண்டும். போதுமான ஒத்துழைப்பை காங்கிரஸ் குழு தரவில்லை. போஸ் பதவி விலகினார்.

ஆனால்,போரைத்துவங்க தயாரான பொழுது சிங்கப்பூரில் இருந்து “தேசப்பிதா காந்தியின் ஆசிகளைக் கோருகிறேன்!” என்று போஸ் சொன்னார். காந்தியும் விடுதலைப் போராட்ட வீரர்களில் இளவரசர் என்று போஸ் அவர்களைப் புகழ்ந்தார். தன்னுடைய படைப்பிரிவுகளுக்குக் காந்தி,நேரு, ஆசாத பெயரை போஸ் சூட்டினார். இந்திய ராணுவப்படை போரில் தோற்றதும் அதன் கைதிகளைக் காக்கும் பொறுப்பைக் காங்கிரஸ் கட்சியின் வக்கீல்கள் டெல்லி செங்கோட்டையில் முன்னின்று செய்தார்கள் என்பது வரலாறு.

எல்லாவகையான வெறுப்பரசியலையும் நிராகரித்த காந்தி இன்றைக்கு அவசியத்தேவை. காந்தியின் இந்த வரிகள் சரியாக இருக்கும் , “ஜன்னல்களும், கதவுகளும் மூடிகொண்ட வீட்டில் நான் வசிக்க விரும்பவில்லை. உலகின் அனைத்து தேசங்களின், நிலங்களின் கலாசாரக்காற்றுகள் பாயுமாறு திறந்திருக்கும் ஜன்னல்கள் மற்றும் கதவைக்கொண்ட ஒரு வீட்டையே நான் விரும்புகிறேன். அதே சமயம் அவற்றில் எவ்வொன்றாலும் நான் வேரோடு பிடுங்கி எறியப்படுவதை விரும்பவில்லை!”

- பூ.கோ.சரவணன்