Published:Updated:

'ஆயுதத்தைக் கீழே வையுங்கள்; அஹிம்சைப் போர் செய்யுங்கள்‘

மகாத்மா காந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
மகாத்மா காந்தி

பிரிட்டிஷ் மக்கள் ஹிட்லரோடு அஹிம்சைப் போர் நடத்தி மகாத்மாவின் வழியை பின்பற்றியிருந்தால்...?

பாரதா! எவ்வெப்போது உலகில் தர்மம் அழிந்து அதர்மம் அதிகரிக்குமோ, அவ்வப்போது நான் புவியில் ஜனனம் எடுக்கிறேன்” என்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் கூறியிருக்கிறார்.

இன்று உலகில் அதர்மம் அதிகரித்திருக்கிறது, மேலும் மேலும் அது பரவி வருகிறது என்பதில் நமக்கு சந்தேகமில்லை. உலகம் முழுவதையுமே அதர்மம் ஆக்கிரமித்து விடுமோ, தர்மத்துக்கு அணுவளவும் இடமில்லாமல் போய்விடுமோ என்று கூட யோசிக்கும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டது.

ஒரு வேளை, பரமாத்மாவும் தமது வாக்கை நிறை வேற்றித்தான் இருக்கிறாரோ? ஏற்கெனவே, அவர் அவதரித்து விட்டாரோ? நமது அருந்தலைவர் மகாத்மா காந்திதானோ அவர்?

நேற்று இங்கிலாந்து தேசத்தின் மக்களுக்கு மகாத்மா காந்தி விடுத்திருக்கும் வேண்டுகோளைப் பார்த்தால் அப்படித்தான் நமக்குத் தோன்றுகிறது.

”பலாத்கார யுத்தத்தை நிறுத்துங்கள்; அஹிம்சா தர்மத்தை மேற்கொண்டு ஹிட்லருடன் போராடுங்கள்’' என்று காந்தி மகான் ஆங்கில மக்களைப் பார்த்து உப தேசித்திருக்கிறார்.

அன்று கண்ணன் காட்டிய வழிக்கும், இன்று காந்தி மகான் காட்டுகிற வழிக்கும் வெளப்படையான முரண்பாடு இருப்பது உண்மை.” வில்லினை எட்டா! கையில் வில்லினை எடடா! அந்தப் புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திட்டா!” என்று அர்ச்சுனனுக்கு பகவான் உபதேசித்தார்.

இன்றைய தினமோ, மகாத்மா பிரிட்டிஷ் மக்களைப் பார்த்து, கையிலுள்ள ஆயுதத்தைக் கீழே போடுங்கள் என்று உபதேசிக்கிறார்.

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

ஆனால், இந்த இருவகை உபதேசங்களிலும் உள்ள வித்தியாசம் வெளித் தோற்றத்தில் மட்டுமே தவிர, அடிப்படையான விஷயத்தில் இல்லை.

ஏனெனில், மகாத்மா போரையே நிறுத்தி விடச் சொல்லவில்லை ; ஆயுதத்தை மாற்றும்படி தான் சொல்கிறார்.

"பலாத்காரப் போர் வேண்டாம்; அஹிம்சைப்போர் நடத்துங்கள் என்று தான் உபதேசிக்கிறார். யுகத்துக்கு யுகம் மக்கள் மாறுபடுகிறார்கள்; அவர்களுடைய மனோநிலை மாறுதல் அடைகிறது. ஆகையால், தர்மமும் யுகத்துக்கு யுகம் மாறுகிறது.

திரேதாயுகத்தில், பகவான் ஸ்ரீ ராமபிரானாக அவதரித்து, தாமே கையில் வில்லெடுத்து யுத்தம் செய்தார்.

துவாபர யுகத்தில், தாம் ஆயுதம் எடுக்காமல், அர்ச்சுனனை வில்லெடுத்து யுத்தம் செய்யச் சொன்னார்.

அது போலவே இந்த யுகத்தில் இன்னொரு மாறுதல் ஏற்படுவது இயல்பே யல்லவா?

ஆயுதம் வேண்டாம்; அதர்மத்தை அஹிம்சையினாலேயே வெல்லலாம் 11 என்ற உபதேசம், இந்தக் கலியுகத்துக்கேற்ற பகவானுடைய உபதேசம் என்றே ஏன் கொள்ளக்கூடாது? இதுவே கலியுகம் நீங்கிக் கிருத யுகம் தோன்றுவதற்குரிய வழியாக ஏன் இருக்கக் கூடாது?

'ஆயுதத்தைக் கீழே வையுங்கள்; அஹிம்சைப் போர் செய்யுங்கள் என்று கூறும் மகாத்மா காந்தி, இந்த போதனையை பிரிட்டிஷ் மக்களுக்குச் சொல்லுவதுடன் நின்றுவிட உத்தேசமில்லை. அடுத்தாத்து பிராமணா பாம்பைப் பிடி! அல்லித் தண்டுபோல் குளிர்ந்திருக்கும்!" என்று சொல்கிறார் நமது மகாத்மா அல்ல. யோசனையை நீங்கள் ஒப்புக்கொண்டால் என்னாலான சேவையை நானும் செய்யத் தயாராயிருக்கிறேன்கிறார்.

அதாவது, பிரிட்டிஷ் மக்களுடன் தோளோடு தோள் நின்று ஹிட்லருடன் அஹிம்சைப் போர் நடத்த மகாத்மாவும் தயாரா யிருக்கிறார். இதற்கு அவர் ஒரு நிபந்தனையும் போடவில்லை ; இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடு என்று கூடக் கேட்கவில்லை.

மகாத்மாவின் மேற்கூறிய உருக்கமான வேண்டு கோளை, அவரது பரிசுத்த இருதயத்திலிருந்து பொங்கிக் கொண்டு வந்த உண்மை மொழிகளைப் படித்தபோது, நமக்கு மயிர்க் கூச்சு எறிந்தது. அஹா! இப்படியும் ஒரு வேளை நடக்கக் கூடுமா? ஆங்கில மக்கள் மகாத்மாவின் நன்மொழிகளுக்குச் செவிசாயப்பார்களா? அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டு, அஹிம்ஸா முறையைப் பின்பற்றி, ஹிட்லருடன் போர் புரிவார்களா? அப்படிச் செய்தால், எவ்வளவு நன்றாயிருக்கும்? உலகத்துக்கே ஒரு புது வழி காட்டியதாகுமே? என்றென்றைக்கும் இவ்வுலகிலிருந்து பலாத்காரத்தையும், கொடுமையையும் ஒழித்து விடலாமே? " என்று எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணினோம். ஆனால், இவ்வளவும் எட்டாத பேராசைக் கோட்டையாய்ப் போய் விடுமோ என்றும் பயந்தோம்.

அப்படி நாம் பயப்பட்டதன் காரணம், நம்முடைய தாய் காட்டின் நிலைமை தான் என்பதையும் சொல்ல வேண்டி யிருக்கிறது.

இந்த தேசத்தில நாம் மட்டும் மகாத்மா காந்தியை முழு மனதுடன் பின்பற்றியிருந்தோமானால் - அஹிம்சை முறையினாலேயே இந்தியாவின் பூரண சுதந்திரத்தை இதற்குள் நிலை நாட்டியிருந்தோமானால் - நம்முடைய தலைவரான மகாத்மாவின் உபதேசத்தை பிரிட்டிஷார் கௌரவ புத்தியுடன் கேட்பார்கள். ஒரு வேளை அகற்கிணங்க நடக்கவும் முன் வருவார்கள். ஆனால், இப்போது அவர்கள் நமது காந்தி மகானின் போதனையைக் கேட்பார்களா?

அடிமை இந்தியாவின் அடிமைத் தலைவர் பேசுகிறார் ; இதை நாம் கேட்கவாவது? " என்றுதானே நினைப்பார்கள்? " கையாலாகாத கிழடு மனிதர் ; போருக்கு பயந்து கொண்டு இப்படி சரணாகதி அடையச் சொல்கிறார் என்று அவர்களுக்குத் தோன்றுவதும் இயல்பேயல்லவா? " ஜெர்மனியின் ஐந்தாம் படையைச் சேர்ந்தவரோ இந்த காந்தி?" என்று கூட அவர்களில் சிலர் விபரீதமாக நினைத்தால், அதில் வியப்பென்ன இருக்கிறது?

ஆகவே, நமது அருமைத் தலைவரின் பேச்சுக்கு இப்போது பிரிட்டனில் மதிப்பு ஏற்படுமா என்பது ரொம்பவும் சந்தேகமே யாகும். இதற்குக் காரணம் இந்த தேச மக்களாகிய நாம்தான் என்பதை நினைக்கும் போது சொல்ல முடியாத வருத்த முண்டாகிறது.

ஆஹா! நாம் அனைவரும் மட்டும் மகாத்மாவின் ஏக தலைமையை ஒப்புக் கொண்டு, அவர் நடத்திய சத்தியாக் கிரஹப் போராட்டங்களில் ஒரு முகமாய்க் கலந்து கொண்டிருந்தோமானால் 1 இப்போது நம் பாரத நாடு சுதந்திரம் பெற்ற தேசமாக மட்டுமிருந்தால்! - இந்த உலகத்துக்கே ஓர் அதிசயமான புது வழியைக் காட்டிப் பெரும் புகழ் பெற்றிருக்கலாமே!

(07.07.1940 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)