Published:Updated:

காந்திக்கு 'தேசத்தந்தை' பட்டம் கொடுத்த தமிழ்நாடு!

மகாத்மா காந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
மகாத்மா காந்தி

காந்தி’ என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டதும் தமிழகத்தில்தான் தெரியுமா?

பெரியோர்களே... தாய்மார்களே! - 33

னக்கு முன்னால் தலைப்பாகை அணிந்து உட்கார்ந்து இருந்த இளைஞனின் முகத்தைப் பார்த்து பாரிஸ்டர் காந்தி திடுக்கிட்டார். காரணம், அவனது முன் பல் இரண்டும் உடைந்து வாயில் இருந்து ரத்தம் வழிந்துகொண்டு இருந்தது.

வேதனை சூழ்ந்த அந்த நேரத்திலும் சம்பிரதாயத்தை அவன் விடவில்லை. தென்னாப்பிரிக்காவில் அடிமைக் கூலிகள், ஆதிக்க மனிதர்களைப் பார்த்தால், தான் அணிந்திருக்கும் தலைப்பாகையை எடுக்க வேண்டும். கோட் சூட் அணிந்த காந்தியைப் பார்த்ததும் அவன் தலைப்பாகையை கழற்றி கையில் வைத்துக்கொண்டான்.

என்ன பிரச்னைக்காக வந்தேன் என்று அவன் சொல்லத் தொடங்குவதற்கு முன்னால் குறுக்கிட்ட காந்தி, ‘‘உனது தலைப்பாகையை முதலில் உன் தலையில் கட்டு’’ என்று கட்டளையிட்டார். வந்தவனுக்குப் பாதிப் பிரச்னை தீர்ந்துவிட்டது போல திருப்தி ஏற்பட்டது. வந்தவன் பேச ஆரம்பித்தான். காந்திக்கு அவன் மொழி புரியவில்லை. காந்திக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த குமாஸ்​தாவுக்கு அந்த இளைஞன் சொன்னது புரிந்தது. ரத்தம் ஒழுக வந்திருந்தவன் ஒரு தமிழன். காந்தியின் குமாஸ்தாவும் தமிழன்.

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

தான் ஒரு வெள்ளையரிடம் வேலை பார்ப்ப​தாகவும், அவர் தன்னை அடித்து விட்டதாகவும் தனக்கு அவரிடம் இருந்து மாற்றி வேறொரு வெள்ளையரிடம் கூலி வேலை வாங்கித்தர வேண்டும் என்பதே அந்த இளைஞனின் வேண்டுகோள். இந்த வழக்கை காந்தி எடுத்து நடத்தினார். அடித்த வெள்ளையன், இளைஞனை அதன் பிறகும் துரத்தித் துரத்தித் துன்புறுத்தினான். அந்த இளைஞன் பின்வாங்கவே இல்லை. வழக்கின் இறுதியில் அந்த வெள்ளையருக்குத் தண்டனை தரப்பட்டது. ஒரு கூலித் தொழிலாளி தான் எடுத்துக்கொண்ட லட்சியத்துக்காக இறுதிவரைக்கும் போராடியதைப் பார்த்து அவனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார் காந்தி. அந்த இளைஞனின் பெயர் பாலசுந்தரம்.

‘தமிழ்’ என்ற மொழி பற்றியும், ‘தமிழர்’ என்ற இனம் பற்றியும் காந்திக்கு முதலில் அறிமுகம் செய்தவர் பாலசுந்தரம். தென்னாப்பிரிக்காவுக்கு வந்து அடிமைகளாய் சேவகம் செய்த தமிழர்கள் அனைவரையும் காந்தி அரவணைக்க ஆரம்பித்தது அதன்பிறகுதான். தனக்குப் பின்னால் பெரிய கூட்டம் திரளத் தயாராக இருக்கிறது என்பதை உணர்ந்த காந்தி, தென்னாப்பிரிக்காவிலேயே தொடர்ந்து தங்க முடிவெடுத்தார். அப்போது கஸ்தூரிபா இந்தியாவில் இருந்தார். அவரைத் தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் செல்ல இந்தியா வந்த காந்தி, முதன்முதலாக
1896-ம் ஆண்டு  தமிழகத்தைப் பார்க்க வந்தார். தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் அடையும் துன்பத்தைத் தமிழ்நாட்டுக்குச் சொல்ல வந்தார். அன்று காந்திக்கு வயது 27. துடிப்பு மிக்க இளைஞர். சாதாரண வழக்கறிஞர். காந்தி கடைசியாக 1946-ம் ஆண்டு தமிழகம் வந்தார். அப்போது அவருக்கு வயது 77. இறுதியில் தேசத் தந்தையாகவும், மகாத்மாவாகவும் மாறி இருந்தார். இடைப்பட்ட இந்த 50 ஆண்டுகளில் 20 முறை தமிழ்நாட்டைத் தேடி காந்தியின் கால்கள் நகர்ந்து வந்தன.

முதல்முறை வந்தபோது சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் ஒரே ஒருநாள் மட்டுமே பேசினார். ஆனால், 14 நாட்கள் சென்னையில் தங்கி இருந்தார். சென்னையில் அன்று மிகமிக உயர்தர உணவு விடுதியாக இருந்தது பக்கிங்காம் ஹோட்டல்.  சென்னை மத்திய புகை வண்டி நிலையத்துக்கு அருகில் இருந்துள்ளது. 14 நாட்களும் அவர் தங்கியிருக்க செலுத்திய கட்டணம் 1896-ல் 7,440 ரூபாய். அப்படியானால் காந்தி, அன்று எப்படி வசதியாக இருந்திருக்கிறார் எனப் பாருங்கள். தென்னாப்பிரிக்க இந்தியர் பிரச்னை பற்றி, ஒரு புத்தகத்தை எழுதி சென்னையிலேயே ஓர் அச்சகத்தில் அச்சடித்து இங்கேயே விநியோகித்து முடித்து விட்டுத்தான் கிளம்பினார்.

அன்றைய சென்னையில் ஏராளமான வித்தைக்காரர்கள் தெருவில் வித்தை செய்து கொண்டிருந்ததைப் பார்த்ததாகவும், அவர்​களுக்கு, தான் காசு போட்டதாகவும் காந்தி எழுதி இருக்கிறார். இன்று வந்தால், அந்த வித்தைக்காரர்கள் கட்சி நடத்திக்கொண்​டிருப்பதாகவும், அவர்களே மற்றவர்களிடம் இருந்து பணத்தைப் பறித்துக்கொண்டு இருப்ப​தாகவும் எழுதுவார்.

தென்னாப்பிரிக்கா சென்ற காந்தி 20 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் நிரந்தர​மாகத் தங்க 1915-ல் நாடு திரும்பினார். அப்போது தமிழகம் வந்தார். மத்திய புகைவண்டி நிலையத்தில் காந்தியை வரவேற்க முதல் வகுப்பு பெட்டி அருகே காத்திருந்தார்கள். காந்தியைக் காணோம். ஆனால், இந்த வண்டியில் காந்தி வருகிறார் என்பதை காவல் துறை உறுதிப்படுத்தியது. அந்தக் காலத்தில் ஓர் இடத்துக்கு மிகமிக முக்கியமானவர் வருகிறார் என்றால், 12 போலீஸ்காரர்களை அனுப்புவார்கள். அதாவது 12 போலீஸ்காரர்கள் ஒரே இடத்தில் நின்றால், வி.ஐ.பி ஒருவர் வரப்போகிறார் என்று பொருள். அன்றும் 12 போலீஸ்காரர்கள் நிறுத்தப்பட்டு இருந்​தார்கள். தென்னாப்பிரிக்காவில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியவர் என்பதால், காந்திக்கு அந்த முக்கியத்துவம் தரப்பட்டு இருந்தது. கூட்டமும், போலீஸும் ஏமாற்றம் அடைய மூன்றாம் வகுப்பு பெட்டியில் இருந்து காந்தியும், கஸ்தூரிபாயும் இறங்கினார்கள். காந்தி அடிகளாகவே காட்சி அளித்தார்.

காந்தியின் கோலம் அப்போது மாறியிருந்தது. பேன்ட், சட்டை, கோட் பறந்துவிட்டன. சட்டை, தலைப்பாகை, பஞ்சகச்சமாகக் கட்டப்பட்ட வேட்டியே அவரது உடை ஆனது. காந்திக்கு மாலை அணிவித்துக் கூட்டமாக அழைத்து வருகிறார்கள். கையில் பாத்திரத்தை வைத்துப் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்த ஒருவர், காந்தியைப் பார்த்ததும் தனது பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு வணங்கி இருக்கிறார். வண்டியை இழுத்துச்சென்ற ஓர் இஸ்லாமிய முதுமைத் தொழிலாளி கையெடுத்து வணக்கம் வைக்கிறார். இதைக் குறிப்பிட்ட  ‘சுதேசமித்திரன்’ நாளிதழ், ‘அவதார புருஷன் வந்துள்ளார்’ என்று எழுதி இருக்கிறது. 1920-க்குப் பிறகு தான் வட இந்தியாவில் காந்தியின் புகழே பரவுகிறது. ஆனால், அதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே ‘அவதார புருஷன்’ என்று இனம்கண்டது தமிழகம்.

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரிக்கு எதிரில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. கட்டடத்தில், சென்னை மாணவர்கள் ஒரு வரவேற்பு கொடுத்தார்கள். சின்னச்சாமி என்ற மாணவன் ஒருவன், வரவேற்பு இதழை வாசித்தான். காந்தியை வரிசையாகப் புகழ்ந்து விட்டு இறுதியில், ‘‘இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது உங்களைத் தேசத் தந்தை நிலைக்கு உயர்த்துகிறது’’ என்றான். காந்திக்கு தேசத்தந்தை பட்டம் கொடுத்ததும் தமிழ்நாடுதான்.

அப்போது சந்தித்த மாணவர்கள், ‘‘உங்கள் ஆசிரமத்தில் நாங்கள் சேரத் தயாராக இருக்கிறோம்’’ என்றார்கள். ‘‘நான் இன்னும் ஆசிரமம் தொடங்கவில்லையே’’ என்றார் காந்தி. ‘‘தொடங்கினால் வந்து சேவை செய்யத் தயாராக இருக்கிறோம்’’ என்றார்கள். இங்கிருந்து திரும்பிப் போன காந்தியை ஆமதாபாத்தில் ஆசிரமம் தொடங்கத் தூண்டியவர்கள் இவர்கள். இதைத் தொடங்கும்போது 25 பேர் இருந்தார்கள். அதில் 13 பேர் தமிழர்கள்.

பிரிட்டிஷாருக்கு எதிராக ஒத்துழை​யாமை இயக்கம், நாடு தழுவிய ஹர்த்தால் நடத்த வேண்டும் என்ற எண்ணம் காந்திக்கு வந்ததே அவர் சென்னையில் இருந்தபோதுதான். ரெளலட் சட்டம் அமல் ஆன அன்று சென்னையில் கஸ்தூரிரங்க ஐயங்கார் வீட்டில் தங்கி இருந்தார். சட்டத்தை எதிர்த்து என்ன செய்வது என்று யோசனை செய்தார். நாடு முழுக்க ஒரே நேரத்தில் ஹர்த்தால் நடத்த வேண்டும் என்று அன்று இரவு முடிவுக்கு வந்தார் காந்தி. இதைத்தான்  ‘ஒரு கனவு’ என்ற கட்டுரையாக எழுதினார்.  காந்திக்கு கனவு வந்தது 1919 மார்ச் 23-ம் நாள். ஏப்ரல் 6 முதல் 13 வரை இந்தியா முழுக்க ஹர்த்தால் மற்றும் பிரார்த்தனை நடத்த வேண்டும் என்று சென்னையில் இருந்துதான் அறிவித்தார்.

‘காந்தி’ என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டதும் தமிழகத்தில்தான். ‘‘நீங்கள் கதர் உடுத்தச் சொல்கிறீர்கள். கதர் துணி கிடைக்கவில்லையே, என்ன செய்வது” என்று எல்லா இடங்களிலும் சொன்னார்கள். ‘‘கதர் இல்லாவிட்டால் இடுப்புத் துணியையாவது கதரால் உடுத்துங்கள்” என்று பதில் அளித்த காந்திக்கு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. சட்டை, வேட்டி, தலைப்பாகை ஆகிய மூன்று துணிகள் நமக்கு எதற்கு என்று நினைத்தார். மதுரைக்கு வந்தவர் முதல் நாள் முழு உடையோடு இருந்தார். மறுநாள் கூட்டத்துக்கு வரும்போது வேட்டி தவிர, வேறு துணி இல்லை. காந்தியை அரையாடை பக்கிரி ஆக்கியதும் தமிழ்நாடு தான்.

இந்தியாவுக்கு விடுதலை வழங்கப் போகிறோம் என்ற முடிவை பிரிட்டிஷ் அரசு காந்திக்குச் சொன்னதும் சென்னையை வைத்துத்தான். பிரிட்டிஷ் பார்லிமென்ட் குழுவைச் சேர்ந்த இருவர் அவசரமாக சென்னை வந்து 1946 ஜனவரி 23-ம் நாள் காந்தியைப் பார்க்க வந்தார்கள். தனது அந்தரங்கச் செயலாளர் பியாரிலாலைக்கூட வெளியே போகச் சொல்லிவிட்டு, அவர்களோடு பேசினார் காந்தி. ‘ஓராண்டுக்குள் இந்தியாவுக்கு விடுதலை வழங்கத் தயாராகி விட்டோம்’ என்ற தகவல் காந்திக்குச் சொல்லப்பட்டது. சுதந்திரத்துக்கு முன்பு ஜனவரி 26-ம் நாளை நாம் சுதந்திர உறுதி மொழி ஏற்பு நாளாகக் கொண்டாடி வந்தோம். அன்றைய தினம் சென்னை இந்தி பிரசார சபாவில் பேசிய காந்தி, ‘‘அடுத்த ஆண்டு இதே நாளில் சுதந்திர தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டிருக்க மாட்டோம்’’ என்று சொன்னார். அதாவது, ‘சுதந்திரத்தை அடைந்திருப்போம்’ என்ற பொருளில் காந்தி பேசினார். இந்தியா முழுக்க தீயாகப் பரவியது இந்தத் தகவல்.

இதைச் சொல்லிவிட்டு மதுரை போன காந்தி மீனாட்சியையும், பழனி முருகனையும் தரிசித்தார். போகும் வழியில் திடீரென ஒரு கிராமத்துக்குள் காந்தி போனார். வந்திருப்பவர் யாரென்று அந்தக் கிராமத்துப் பெண்ணுக்குத் தெரியாது. வீட்டுக்குள் போய் முறுக்கு எடுத்து வந்து தட்டில்வைத்து காந்தியிடம் கொடுத்தார். ‘ஓ முறுக்கு’ என்று அதைப் பார்த்ததும் காந்தி கத்தி விட்டார். ‘தென்னாப்பிரிக்காவில் தமிழர்களிடம் எனக்குப் பிடித்தது முறுக்கும் இட்லியும்’ என்று காந்தி சொல்ல, ‘‘இப்போது இதை இழந்து விட்டேன். என்னுடைய வாழ்க்கையில் இப்படி எத்தனையோ இழந்திருக்கிறேன்’’ என்று பழனியில்வைத்து கண்ணீர்விட்ட காந்தியை இரண்டே ஆண்டுகளில் இழந்தோம்.

காந்தியை மதம் தின்றது. எனினும் அந்த மதவெறிக்கு இன்னமும் செரிக்கவே இல்லை!

(04.11.2015 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் இருந்து...)