Published:Updated:

கோட் சூட் காந்தியை வேட்டி துண்டுக்கு மாற்றிய அந்த நிகழ்வு! #Gandhi150

காந்தியின் உடைமாற்றத்துக்கு இரண்டு முறை தமிழர்களே காரணமாக இருந்தனர்!

நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி என்றதும், நம் நினைவில் நிற்பது எளிமையான உடையில் வலம் வந்த அவரின் உருவம்தான். அவரது இடைக்கால வாழ்க்கையில் ஏற்பட்ட இந்தத் தோற்றத்தின் பின் ஒரு வரலாறே அடங்கியுள்ளது. அது தமிழரோடு தொடர்புடையது என்பது நமக்குக் கிடைக்கும் பெருமை. காந்தியின் வாழ்க்கையில் தமிழருக்கு என, ஒரு தனி இடம் உண்டு.

Gandhi
Gandhi

சட்டப் பட்டதாரியான கரம்சந்த் காந்தி, வழக்காடும் தொழிலுக்காகத் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றார். அங்கு, இரண்டு இந்திய வணிக நிறுவனங்களுக்கு இடையிலான பிரச்னையைத் தீர்ப்பது காந்தியின் பணியாக இருந்தது. இப்பிரச்னையில் சம்பந்தப்பட்ட ஒரு குஜராத் நிறுவனம் சார்பில் காந்திக்கு தென்னாப்பிரிக்கா செல்ல வேண்டியிருந்தது. இப்பிரச்னையை நீதிமன்றம் செல்லாமலே காந்தி இருதரப்பிலும் பேசி சுமுகமாக முடித்துவிடுகிறார்.

அப்போது அவர், தன் பணிகளுக்கு இடையே முதன்முதலில் செய்த சமூக சேவை, அங்கே இருந்த கரும்புத் தோட்டத்தின் ஒப்பந்தத் தொழிலாளருக்கானது. பெரும்பாலும் தமிழர்களாகவும் அவர்களுடன் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலத்தவரும் குறைவான எண்ணிக்கையில் இருந்தனர். இவர்கள் செய்துவந்த ஒப்பந்தக்கூலி வேலை பரிதாபகரமானது. இவர்கள் கூலித் தொழிலாளிகள் எனும் பெயரில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனர்.

அவர்கள், அந்தப் பணியிலிருந்து விடுபட வேண்டும் என்றால், தனது இடத்தில் வேறு ஒருவரை அமர்த்த வேண்டும். விடுப்பில் செல்லவும் தம் இடத்தில் யாரையாவது பணியமர்த்த வேண்டும். தொழிலாளர் குடும்பத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவர்மீதும் வரி செலுத்தினால்தான் கூலிப்பணியில் தொடர முடியும். இதுபோல், தாங்க முடியாத பல நிபந்தனைகளால் படிப்பறிவும் பணமும் இல்லாத ஏழைக் கூலிகள் வாழ்க்கை நரகமானது. இவர்கள் பிரச்னைகளைக் கேட்பதற்கும், அதிலிருந்து மீட்பதற்கும் எவரும் இன்றி தவித்தனர். இவர்களுக்கு விடிவெள்ளியாக அமைந்ததுதான் காந்தி செய்த முதல் சமூக சேவை. இவர்களுக்கான சேவையுடன் தாம் வந்த பணியையும் முடித்த காந்திக்கு அவரால் பலனடைந்த நிறுவனம் பிரிவு உபசார விழா நடத்தியது. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து காந்தி அங்கேயே தங்க முடிவெடுக்க இதே தமிழ் கூலித்தொழிலாளிகள் காரணமாயினர்.

Gandhi Quotes
Gandhi Quotes

இதனால், தென்னாப்பிரிக்காவில் தொடர்ந்து காந்தி தங்கி சமுதாயப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அப்போது, அந்தத் தமிழர்களின் உடையான வேட்டி இவருக்கு அறிமுகமானது. மேல்நாட்டு பாணியிலான தன் கோட்டுக்கும் சூட்டுக்கும் முன்னால், தன்னை நாடி வரும் ஏழை மக்களின் உடையில் உள்ள பெரும் வேறுபாட்டை உணர்ந்தார். உதவி செய்பவருக்கும் பெறுபவருக்கும் இடையில் நல்ல புரிதல் உருவாக தன் உடை பெரும்தடையாக இருப்பதாக உணர்ந்தார்.

அவ்வப்போது இந்த உடை வேறுபாட்டை குறித்து உடனிருப்போரிடம் பேசவும் செய்தார். அந்த அளவுக்கு மக்களின் மனஓட்டத்தைத் துல்லியமாக அவரால் உணர முடிந்தது. நீண்ட நெடிய மன உளைச்சலுக்குப் பின், அவரால் ஒரு முடிவுக்கு வரமுடிந்தது. 1913-ல் ஒரு நாள் தன்னை வேட்டி ஜிப்பாவுக்கு திடீர் என மாற்றிக்கொண்டார். அன்றுமுதல் தென்னாப்பிரிக்காவில் தமிழர் அடையாளமான வேட்டியை அணிந்து வந்தார். இந்த உண்மையை அறியும் தமிழர்கள் பெருமை கொள்ளும் நிகழ்வாக அது இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தோட்டத் தொழிலாளர்களை அழைத்துப் பேசி, அவர்கள் பிரச்னைகளை அறிந்துகொள்கிறார் காந்தி. இவற்றை மனுவாக எழுதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்புகிறார். இந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டபோது அகிம்சை வழியிலான போராட்டத்திறதுக்கு மக்களைத் தயார்படுத்தினார். தன் ஒத்துழையாமை இயக்கம், அகிம்சை போராட்டம் போன்றவற்றை இங்குதான் தமிழர்கள் மூலமாகச் செயல்படுத்தினார். இந்தக் காலகட்டத்தில் காந்தி தமிழ் மொழியையும் ஓரளவுக்குக் கற்றுக்கொள்கிறார்.

காந்தியின் இந்தச் சேவை, நாளடைவில் ஓர் இயக்கமாக மாறுகிறது. இதற்காகக் காந்தி, ’இந்தியன் ஒப்பீனியன்’ எனும் பெயரில் ஒரு வார இதழையும் தொடங்குகிறார். இது, தமிழ், குஜராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியானது. இதுவே, காந்திக்குக் கிடைத்த முதல் இதழியல் அனுபவம். 1914-ம் ஆண்டில், `கோல்டன் நம்பர் இந்தியன் ஒப்பீனியன்’ என ஒரு சிறப்பு இதழும் வெளியிடுகிறார். அது ஆங்கிலம், குஜராத்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் இருந்தது. இதில், தனக்கு தென்னாப்பிரிக்காவில் உதவியவர்கள் பெயர்களைப் பதிவு செய்தார். பெரும்பாலும், இதில் தமிழர்களே இடம் பெற்றிருந்தனர்.

Gandhi
Gandhi

தென்னாப்பிரிக்காவில் காந்தியின் கொள்கைகளான சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம் போன்றவை உருப்பெற்றன. இந்தக் கொள்கைகளை அவர் முதன்முதலாக நடைமுறைப்படுத்த தமிழர்களே காரணமாக இருந்தனர். அதில் அவருக்கு வெற்றியும் கிடைத்தது. இதைத்தான் பிற்காலத்தில் இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் பயன்படுத்தினார் காந்தி. இந்தியா திரும்பிய பின்னர், நம் நாடு, மொழி, கலாசாரம், பண்பாடு, பழக்க வழக்கம் போன்ற பல முக்கியக் கூறுகளில் வேறுபாடுடையது என உணர்ந்தார் காந்தி, பன்முகத் தன்மை கொண்ட இந்தியா முழுவதும் ஒரு முறையேனும் சுற்றிப் பார்த்தல்தான் தன்நாட்டை நன்கு புரிந்துகொள்ள இயலும் என்று முடிவு செய்தார். அதன் விளைவாகக் காந்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். 1921-ல் அவர் தமிழகத்துக்கும் வந்தார். வழி நெடுகிலும் சராசரி மக்களின் வாழ்க்கை பற்றிய பிம்பத்தை, தன் மனதில் பதித்துக்கொண்டார்.

மணப்பாறை வழியாக மதுரை வந்துசேர்ந்த இம்மகானின் மனதில் தொடர் போராட்டம் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஒருபுறம் செல்வச் சீமான்கள் இங்கிலாந்து பாணியில் மிடுக்கோடும், மறுபுறம் ஏழைகள் மானம் காக்க இடுப்பில் ஒற்றை ஆடையோடு வலம் வருவதையும் கண்டு அவரது மனம் வருந்தியது, பெரும்பான்மை மக்களிடையே கோரத்தாண்டவம் ஆடிய ஏழ்மையைக் கண்டு காந்தியின் நெஞ்சம் வேதனைப்பட்டது. மதுரையில், இரவு ஓய்வின்போது, தீர ஆலோசித்து ஒரு தீர்க்கமான முடிவெடுத்தார். அப்போதே தன் அருகில் இருந்தவர்களிடம் அதைப் பகிர்ந்தும் கொண்டார். மறுநாள், இடுப்பில் ஒரு வேட்டியும் தோளில் ஒரு துண்டுத் துணியோடும் தன் உடையை மாற்றிக்கொண்டார். இது இரண்டாவதும் இறுதி மாற்றமும் ஆகும். இதையே, தன் இறுதிநாள் வரையிலும் கொண்டிருந்தார். தன் எளிய கோலத்திலேயே மக்களை மட்டுமன்றி நாட்டை ஆண்ட ஆங்கிலேய அதிகாரிகள் வரை சந்தித்தார். அவரின் மிகப்பெரிய முடிவுகளையும் இந்த எளிய ஆடையுடனே சாதித்தார். அவரின் எளிய உடை மக்களைக் கவர்ந்ததே அன்றி விலக்கவில்லை. சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லையானால் ஆடை ஒரு தடை அல்ல என்பதை காந்தி வாழ்ந்து நிரூபித்தார். இதுதான் காந்தியின் ‘மேக் இன் இந்தியா’ போலும்.

Gandhi
Gandhi

சுதந்திரத்துக்கு முன்புவரை மக்கள் பிரதிநிதிகளின் உடையும், அந்தஸ்தும் பொதுமக்களிடம் இருந்து பெரிதும் வேறுபட்டிருந்தது. ஜமீன்தார்கள், மிட்டா மிராசுதார்கள், நவாபுகள் போன்ற செல்வந்தர்கள் அப்பதவியில் இருந்தது காரணம். சுதந்திர இந்தியாவில் அவர்கள் அரசியல்வாதிகள் எனப் பெயர் மாற்றம் கொண்டனர். இவர்கள் அரசியல்வாதிகள் என்றானாலும் சமூகசேவை செய்தால்தான் பதவியில் நிலைக்க முடியும் என்பதற்குத் தூண்டுகோலாக அமைந்தார் காந்தி. அவர்கள் எளிமையான உடையாக இன்றுவரை கதர் அணியவும் காரணமாகி விட்டார் காந்தி.

- முனைவர் எஸ்.சாந்தினிபீ

(கட்டுரையாளர் உபியின் அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியர்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு