Published:Updated:

காந்தி காட்டும் காந்திய வழி

Mahatma Gandhi
பிரீமியம் ஸ்டோரி
News
Mahatma Gandhi

ஜெயகாந்தன் ஒரே கட்டுரை எத்தனை Perspective தர்றார் பாருங்க!

“. . . He shuns oratorical effect or, rather never thinks about it; and shrinks unconsciously from the great popular demonstrations organised in his honour.  Literally “ill with the multitude that adores him,” he distrusts majorities and fears “ mobocracy ” and the unbridled passions of the populace. He feels at ease only in a minority, and is happiest when, in meditative solitude, he can listen to the “still small voice ’’ within . . .

- மகாத்மாவைப் பற்றி ரொமெய்ன் ரோலந்து.

துரையில் காந்தி ஜெயந்தி, காமராஜ் 70-வது பிறந்த தின விழா இரண்டும் ஒன்றாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் வெள்ளம் சித்திரைத் திருவிழாவின்போது இவ்வளவு திரளுமா என்று எனக்குத் தெரிய வில்லை. கும்பமேளா மாதிரி இருந்தது.

ஒர் எதிர்க் கட்சிக்கு, இந்தியா முழுவதும் சரிந்து போன இந்தப் பழைய காங்கிரஸுக்கு இங்கே மக்கள் மத்தியில் இவ்வளவு செல்வாக்கு இருப்பதற்குக் காரணம் காந்திஜி கூட அல்ல; திரு. காமராஜரே என்று எனக்குப் புரிகிறது. இது காமராஜருக்கும் புரிந்திருக்க வேண்டும். அதனால்தான் அவரது விழாப் பேச்சின்போது ‘இந்த விழா தேசப் பிதாவின் பிறந்த நாள் விழா. என் பெயரிலும் கொண்டாடப்படுகிறது’ என்று மிகவும் தன்னடக்கத்துடன் கூறினார் காமராஜர்.

Mahatma Gandhi
Mahatma Gandhi

இந்த மக்களின் ஆர்வமும் எழுச்சியும், தூய்மையான எளிமையான காந்தியத்தின்பால் திரும்ப வேண்டும் என்பது காமராஜ் அவர்கள் மனத்தின் உட் கிடக்கை என்று எனக்குப் புரிந்தது.

திரு. காமராஜ் தமது பேச்சில், நாம் காந்தியப் பாதையை விட்டு விலகி வந்ததுதான் நமது துன்பங்களுக்கும், தேசிய வாழ்வில் ஏற்பட்டுள்ள அவலங்களுக்கும் காரணம் என்று அடிக்கடி குறிப்பிட்டு வருகிறார். காந்தியப் பொருளாதாரக் கொள்கையை நாம் கை விட்டு விட்டோமே என்று கூட அவர் வருந்தினார்.

அந்த விழாவில் நானும் கலந்து கொண்டு, திரு. காமராஜை மனம் திறந்து பாராட்டி எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன். இத்தனை லட்சம் மக்கள் இவர் மீது நம்பிக்கை கொண்டிருக்கையில், அரசு, அதிகாரம், பதவி என்கிற இன்றைய அரசியல் மாயைகளிலிருந்து மக்களை விடுவித்து ‘என்னிடம் வாருங்கள்- உங்களுக்கு ரட்சிப்பு உண்டு' என்று அழைத்துக் கொண்டு காந்திய வழியில் இவர் செல்ல வேண்டும் என்று எப்போதும் நான் கூறி வருகிற வேண்டுகோளை அங்கேயும் விடுத்தேன்.

அந்த மக்களையும் அவர்களது உற்சாகத்தையும் பார்த்தபோது நான் உணர்ச்சி வசப்பட்டுப் போனேன். எந்தத் தனி மனிதனின் பேராலும் இதுபோல் இன்று மக்களைத் திரட்ட முடியாது என்பதை நான் கண்டறிந்தேன். விழா மிகச் சிறப்பாக, மிகப் பிரும்மாண்டமாக நடந்தேறியது! இவற்றுக்கெல்லாம் மூலகாரணரான திரு. ப. நெடுமாறனைப் பார்த்த போது அக்காலத்தில் காந்திய நெறியில் ஒரு தொண்டராகக் காமராஜ் இப்படித்தான் சேவை புரிந்திருப்பார் என்று எனக்குத் தோன்றியது. - இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் இந்த விழா என்னை இது பற்றி நிறையவே யோசிக்க வைத்தது. இப்படியொரு கும்பலைக் கூட்டி தமது பலத்தையும் மக்கள் மத்தியில் தங்களுக்கிருக்கிற ஆதரவையும் காட்டுவதற்கும் தாங்ளே உணருவதற்கும் தமிழ் நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு இது ஒர் அரசியல் அவசியமாக இருக்கலாம். ஆனால் இப்படியொரு திருவிழாக் கூட்டத்தை வைத்துக் கொண்டு காந்திய வழியில் காந்திய வழியில் செல்லுவது எங்ஙனம்?

மகாத்மா காந்தியடிகள் இது மாதிரியான விழாக்கைளையோ, பெருந்திரளான கும்பலையோ நம்பியதில்லை. அப்படி நடப்பதை அவர் தவிர்த்தே வந்திருக்கிறார். அவர் ஒவ்வொரு தனி மனிதனையும் நேரிட சந்திக்காமலே அவனிடம் ஆத்ம ரீதியான தொடர்பு கொண்டார். மனிதர்களைக் கும்பலாகத் திரட்டி அதை ஒரு பலமாகக் காட்டுவது அரசியலில் வன்முறைக்கு வழிவகுக்கும் என்று அவர் அஞ்சினார். எதிரியை மிரட்டுகின்ற ஒரு முறை என்று அதனை அவர் அறிந்திருந்தார்.  மகாத்மா செல்லுமிடமெல்லாம் மக்கள் வந்து அவரைத் தரிசிப்பர். அவரிடம் வந்து கூடுவர். அங்கே அவர் மக்களுக்கு மனச் சாந்தியும் ஆன்மிக ஒழுக்கமும் ஏற்படுத்த பிரார்த்தனையும், பஜனும் செய்வார். எனவே அது கும்பல் அல்ல.

Mahatma Gandhi
Mahatma Gandhi

கும்பலைத் திரட்டித் தமது பலத்தைக் காட்டுவதே வன்முறை அரசியலாரின் வழியாகும். அதுவும் வரைமுறையற்ற கும்பல் கூட்டியவர்களின் விருப்பத்துக்கு மாறாகவே வன்முறை வழியில் திரும்பிவிடும்.கூட்டியவர்கள் பொறுப்பிலிருந்து ஒதுங்கிக் கொள்ளவே நேரிடும். ஜனநாயகத்தின் பேரால் பாசிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இன்று இந்தியாவில் பரவிவரும் சுயநல அரசியல் வாதிகளும் இந்த முயற்சியில் நிறையவே இறங்கி ஆதாயமும் அடைந்திருக்கின்றனர்.

கும்பல் எப்போதும் கொக்கரிக்கும்; எந்த நேரமும் எந்த விடத்திலும் ஏதேனும் ஒரு காரணம் கண்டு அது அணை உடைத்துப் பாய்வதற்கு மோதிக் கொண்டேயிருக்கும். அதனைத் திருப்திப் படுத்துவதற்கே தாம் அதை விடவும் பெருங்குரல் கிளப்பி அதை உற்சாகப்படுத்தியாக வேண்டும். இதனைப் பார்க்கையில் சாத்தியத்துக்கும் இம் முயற்சிகளுக்கும் சம்பந்தமாவது ஏற்படுத்த முடியுமா என்பது எனக்குச் சந்தேகமாயிருக்கிறது.

காந்தியம் என்பது ஒது சித்தாந்தம் மட்டுமல்ல, அது ஒரு நடைமுறை. அது ஒரு மார்க்கம். காந்திஜி தனது லட்சியமாகவும், தனது வழியாகவும் தானே வாழ்ந்தார். அந்த ஒரே வழியை விடுத்து வேறு வழிகளில் அதனை அடைய முடியாது.

இன்றுள்ள ஆட்சியின் மீதும், மதுரையில் அண்மையில் நடந்த ஆளுங்கட்சியினர் நடத்திய விழா மீதும் கொண்ட அதிருப்தி-அல்லது அதற்கு நிகரான பலப்பரீட்சை என்கிற எதிர்மறை உணர்ச்சிகளே இந்தக் கட்டத்துக்கே காரணம் எனின் தலைவர் காமராஜ் அதற்காகப் பெருமகிழ்ச்சி அடைய முடியாது.

சரி. ஏதோ அவசியம் கருதி - அரசியல் கருதி - இந்தக் கூட்டத்தை நாம் கூட்டியிருக்கலாம். ஆனால் இதுவே காங்கிரஸின், காந்தியத்தின், காமராஜின் லட்சியமாகி விட முடியாது; கூடாது!

 - ஜெயகாந்தன்

 (15-10-1972 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)